Published:Updated:

`போலீஸை பெருமைப்படுத்தி படங்கள் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன்!' - இயக்குநர் ஹரி

இயக்குநர் ஹரி, நடிகர் சூர்யா
இயக்குநர் ஹரி, நடிகர் சூர்யா

காவல்துறையினரை பெருமைப்படுத்தும்விதமாக இயக்குநர் ஹரி சாமி, சாமி 2, சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கூடுதல் நேரம் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, தந்தை ஜெயராஜையும் மகன் பென்னிக்ஸையும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

மனித உரிமைகளை மீறி கொடூரமான செயல்களில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்களது குடும்பத்துக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர். தேசிய அளவில் தற்போது இந்தச் சம்பவம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அறிக்கை
அறிக்கை

சமூக வலைதளங்களில் காவல்துறையினரை அதிகமாக பெருமைப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களுக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அதிகமான போலீஸ் படங்களை எடுத்த இயக்குநர் ஹரி இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், `சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரேவழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்தத் துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையைப் பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக இன்று மிகவும் வேதனைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். காவல்துறையினரை பெருமைப்படுத்தும் விதமாக இயக்குநர் ஹரி சாமி, சாமி 2, சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாத்தான்குளம்: `உழைப்பைத் தவிர வேறெதுவும் தெரியாதுண்ணே!' -உதயநிதியிடம் கலங்கிய சகோதரி

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்குக்கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவுக்கு நிகழ்ந்த போலீஸாரின் `லாக்கப் அத்துமீறல்’ காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல். `இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம்’ என்று கடந்து செல்ல முடியாது.

ஒருவேளை இருவரின் மரணமும் நிகழாமல் போயிருந்தால், போலீஸாரின் இந்தக் கொடூர தாக்குதல் நம் கவனம் பெறாமலேயே போயிருக்கும். தங்கள் மரணத்தின் மூலம் தந்தை மகன் இருவரும் இந்தச் சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கி இருக்கிறார்கள். இந்தக் கொடூர மரணத்தில், தங்களுடைய கடமையை செய்யத் தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், ``இதேபோல, `தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது’ என்கிற நம்பிக்கையை அரசாங்கமும் நீதி அமைப்புகளும் மக்களிடம் உருவாக்க வேண்டும். மாறாக, நமது `அதிகார அமைப்புகள்’ அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன. கொரோனா யுத்தக் களத்தில் முன்வரிசையில் நிற்கிற காவல்துறையினருக்கு தலை வணங்குகிறேன். அதேநேரம், அதிகாரத்தைப் பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள். இனிமேலும் இதுபோன்ற `அதிகார வன்முறைகள்' காவல்துறையில் நிகழாமல் தடுக்க, தேவையான மாற்றங்களை, சீர்திருத்தங்களை அரசும் நீதிமன்றமும், பொறுப்பு மிக்க காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்துமேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சாத்தான் குளம் சம்பவம்: `5  நிமிடம், 80 கி.மீட்டர், 20 லட்சம்!'- மிரட்டும் நம்பர்ஸ், மிரளும் போலீஸ்!
அடுத்த கட்டுரைக்கு