Published:Updated:

சூர்யாவுக்கு, இயக்குநர் ஹரியின் அட்வைஸ்... அப்ப `அருவா'?!

Suriya - Hari
Suriya - Hari

சூர்யாவுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் இயக்குநர் ஹரி!

சூர்யாவின் ஒற்றை அறிவிப்பு தமிழ் சினிமா உலகையே பரபரக்க வைத்திருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சூரரைப் போற்று' படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. கொரோனா லாக்டெளன் காரணமாக வெளியாகவில்லை. இந்நிலையில் தனது தயாரிப்பில், தன் மனைவி ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' படத்தை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்து, புது ட்ரெண்டை உருவாக்கிய சூர்யா, இப்போது அவர் நடித்திருக்கும் 'சூரரைப் போற்று' படத்தையே நேரடி ஓடிடி ரிலீஸுக்குக் கொடுத்திருக்கிறார். வரும் அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைமில் 'சூரரைப் போற்று' வெளியாகும் என்ற இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் சூர்யாவுக்கு எதிராகத் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்திவருகிறார்கள்.

இந்நிலையில், இயக்குநர் ஹரி சூர்யாவின் செயல்பாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள். ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்.

இயக்குநர் ஹரி அறிக்கை
இயக்குநர் ஹரி அறிக்கை

சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தியேட்டர் என்கிற கோயிலில் இருந்தால்தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளில் கற்பனைக்கும் உழைப்பிற்கும் ஒரு அங்கீகாரம். தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால் சினிமா இருக்கும்வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்" என்று சொல்லியிருக்கிறார்.

ஏற்கெனவே, சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகவிருக்கும் 'அருவா' திரைப்படம் நடக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில், இவரின் இந்த அறிக்கை அந்த சந்தேகத்துக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. இதுதொடர்பாகப் பேச இயக்குநர் ஹரியை தொடர்புகொண்டோம். அவரது மொபைல் அலுவலகத்தில் இருப்பதாகவும் அவர் வெளியில் சென்றிருப்பதாகவும் கூறினர். சிறிதுநேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டபோது போன் ஸ்விட்ச் ஆஃப்.

அடுத்த கட்டுரைக்கு