சினிமா
Published:Updated:

கிராமத்தைத் தேடி வருபவனது கதை!

காரி படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
காரி படத்தில்...

சில உண்மை நிகழ்வுகளையும் அசல் மனிதர்களையும் இதில் நீங்கள் பார்க்க முடியும்

‘‘ஒவ்வொரு மனுஷனும் ஒரு கதை... அவனோட ஆசை, நிராசை, கனவுகள், கொண்டாட்டம் எல்லாத்தையும் பொத்தி வச்சிருக்கிற அனுபவமும் அழகுமே எழுதி மாளாது. சினிமாவாக எடுத்தும் தீராது. எழுதுவதும் படிப்பதும் படம் எடுப்பதும் நமக்குள் ஒரு மாற்றத்தை நிகழ்த்தணும். இந்த ‘காரி’ படமும் அப்படிப்பட்டதுதான். இது கிராமத்துக்கதைதான். கிராமத்தைத் தேடி வர்ற ஒருத்தனைப் பற்றிய கதைதான் இந்தப் படம்’’ - நிதானமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ஹேமந்த். இயக்குநர் கோகுலின் சீடர்.

கிராமத்தைத் தேடி வருபவனது கதை!
கிராமத்தைத் தேடி வருபவனது கதை!

‘‘நாயகன் நகரத்தில்தான் இருக்கிறான். அவனுக்கு கிராமத்திற்கு வர வேண்டிய சூழல் வருகிறது. நாம் நம் வேர்களை இழந்து விட்டுத்தான் இங்கே இருக்கிறோம். நிஜமான கிராமம் இன்னமும் வெளியே வரவில்லை. சூழலே கதை சொல்கிற படமாக இது இருக்கும். எனக்கு படத்தில் மண்ணின் வாசமும் மனிதனின் சாயலும் இருக்கணும். புது மழை பெய்த மாதிரி வாசனையை படம் பார்க்கும்போதே உணரணும். என்னோட நாயகன் இந்த கிராமத்திற்குள் வந்து நல்ல மாற்றங்களுக்குக் காரணமாகிறான். ரத்தமும் சதையுமாக ஒரு கதையைச் சொல்ல முயற்சி எடுத்திருக்கேன். கிராமத்தில் இருக்கிறவர்கள், தாண்டி வந்தவர்கள் எனப் பலரும் இந்தக் கதையில் வருவார்கள்.”

கிராமத்தைத் தேடி வருபவனது கதை!
கிராமத்தைத் தேடி வருபவனது கதை!
கிராமத்தைத் தேடி வருபவனது கதை!

``கிராமத்துப் படம் என்பதால்தான் சசிகுமாரா?’’

‘‘அவரே அப்படித்தான். சென்னைதான் அவர் தொழிலின் மையமாக இருக்கிறது. ஆனால் மதுரையின் தாமரைப்பட்டியில்தான் அவர் வசிக்கிறார். அவரால் கதையின் தன்மையைப் புரிந்து கொள்ள முடிந்தது. படம் சரளமாகப் போவதற்கு வேண்டிய நடிப்பை வழங்கினார். படத்தில் எதையும் போதிக்கவில்லை. ஆனால் நல்ல விஷயங்களை முழக்கமாக இல்லாமல், விதைத்திருக்கிறோம். அப்படியான இடங்களில் சசிகுமார் நிதானமும் கூர்மையுமாக நடித்திருக்கிறார். பார்வதி அருண் நாயகியா நடிச்சிருக்காங்க. தெலுங்கிலும் மலையாளத்திலும் நடிச்சிட்டு இங்கே அறிமுகம். நல்ல உயரத்திற்குப் போவதற்கான இடங்கள் இருக்கு. பாலாஜி சக்திவேல்தான் காரியை வளர்க்கிறார். மிகச் சிறந்த நடிகராக அவர் இதில் உருவெடுக்கிறார். கிங்ஸ்லி சென்னையிலிருந்து கிராமம் வரை சசியைப் பின்தொடர்கிறார். இதுவரை காமெடி நடிகராக மட்டுமே பார்த்தவரை இந்தப் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் பார்க்கலாம். தெலுங்கு நடிகர் நாகிநீடுவிற்கு முக்கியமான கதாபாத்திரம். ஆடுகளம் நரேன், ஜேடி சக்கரவர்த்தி இவர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள். சில உண்மை நிகழ்வுகளையும் அசல் மனிதர்களையும் இதில் நீங்கள் பார்க்க முடியும்.’’

கிராமத்தைத் தேடி வருபவனது கதை!

``மற்ற தொழில்நுட்பக்கலைஞர்கள் பற்றிச் சொல்லுங்க...’’

“இமான்தான் இசை. நாங்க ஓகே பண்ணிட்டால்கூட விடாமல் இன்னும் மெருகேற்றி மேலும் அழகாக்கிவிடுவார். கணேஷ் சந்திராதான் கேமிரா. இவ்வளவு விஷயங்களும், ஒரு நல்ல தன்மையான படமும் செய்யக் காரணமாக இருந்தவர் தயாரிப்பாளர் லட்சுமண்குமார். அவருக்கு என் நன்றிகள்.’’