Published:Updated:

``கமல், கெளதம் மேனன்கிட்ட சொன்ன `தசாவதாரம்' எப்படி என்கிட்ட?'' - கே.எஸ்.ஆர் #12YearsofDasavathaaram

கமல் ஹாசன் ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார்

10 கெட் அப்களில் கமல்ஹாசன் நடித்து சாதனை படைத்த `தசாவதாரம்' படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேசினேன்.

``கமல், கெளதம் மேனன்கிட்ட சொன்ன `தசாவதாரம்' எப்படி என்கிட்ட?'' - கே.எஸ்.ஆர் #12YearsofDasavathaaram

10 கெட் அப்களில் கமல்ஹாசன் நடித்து சாதனை படைத்த `தசாவதாரம்' படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேசினேன்.

Published:Updated:
கமல் ஹாசன் ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார்

``தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரனுக்கு நானும், கமல் சாரும் ஒரு படம் பண்றதா ஒப்பந்தமிருந்தது. எப்பவேணாலும் அந்த ப்ராஜெக்ட்டைத் தொடங்கலாம்னு கதை யோசிச்சிட்டு இருந்தோம். இதற்கிடையில நான் ஐதராபாத்ல அஜித்தோட `வரலாறு' பட ஷூட்டிங்ல இருந்தேன். அப்போ ஒருநாள் மதியம் லன்ச் டைம்ல கமல் சார்கிட்ட இருந்து போன். `` `தசாவதாரம்' படத்தோட டைட்டில். மொத்தம் பத்து ரோல்"னு சொன்னார். உடனே நான் `படம் சூப்பர் ஹிட் சார்'னு சொன்னேன். ``கதையே சொல்லல. அதுக்குள்ள எப்படி படம் ஹிட்னு சொல்றீங்க?"னு கேட்டார். ``நீங்க ஒரு ரோல்ல நடிச்சாலே, அந்த கேரக்டர்ல என்னயிருக்குனு பார்க்க மக்கள் தியேட்டர் வருவாங்க. இதுல பத்து கெட்அப் இருக்கு. நிச்சயம் படம் ஹிட்"னு சொன்னேன். `அப்படியா, கதையெல்லாம் ஃபிக்ஸ் பண்ணல. ஒரு ஐடியா வந்துச்சுனு சொன்னேன். அதுவும் இதை கெளதமுக்குதான் சொல்லலாம்னு இருக்கேன்'னு சொன்னார். ``ஓ எனக்குனு நினைச்சிட்டேன் சார். ஆல் தி பெஸ்ட்"னு சொல்லிட்டு வெச்சிட்டேன். அஞ்சு நாளைக்கு அப்புறம் திரும்பவும் கமல் சார்கிட்ட இருந்து போன். ``நீங்க ஆசைப்பட்ட மாதிரி இந்த ப்ராஜெக்ட் உங்களுக்கு வந்திருச்சு"னு சொன்னார். `என்ன சார்'னு கேட்டேன். ``இல்ல, கெளதம் சிட்டி ஸ்டைல்ல ஒரு கதை வெச்சிருக்கார். அதுக்கு அவர் ரெடியா இருக்கார்"னு சொன்னார். சரினு சந்தோஷமா நான் தசாவதாரத்துக்குள்ள வந்துட்டேன். முதல்ல இந்தப் படத்தோட பட்ஜெட் 15 கோடியா இருந்தது. போகப்போக 40 கோடி ரூபாய்கிட்ட வந்துடுச்சு. இருந்தும், ஆஸ்கர் ரவிசந்திரன் சார் ``நல்லா வந்தா போதும்"னு சொன்னார். வேற யாராவது இருந்திருந்தா ஓடி போயிருப்பாங்க. தட்டிக் கொடுத்து வேலை வாங்கினார். நாங்க கேட்டதெல்லாம் ரெடி பண்ணிக் கொடுத்தார். தெலுங்குல தாசிரி சார் வாங்கி வெளியிட்டார். அவருக்கு பெரிய நன்றியைச் சொல்ல வேண்டிய தருணமிது'' - எமோஷனலாகப் பேச ஆரம்பித்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` `தசாவதாரம்' படம் வந்து பன்னிரண்டு வருஷம் ஆகிடுச்சு... இப்பவும் படம் கனெக்ட்டடா இருக்கு... உங்களுக்கு இந்த ஃபீல் எப்படியிருக்கு?''

``12 வருஷம் ஆனதே எனக்குத் தெரியல. கமல் சார்கிட்ட இருந்து போன் வந்தது. `தசாவதாரம் ரிலீஸ் ஆகி 12 வருஷம் ஆகிடுச்சு. உங்களுக்கு வாழ்த்துச் சொல்லலாம்னு கூப்பிட்டேன்'னு சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. கிட்டத்தட்ட அரைமணிநேரம் ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம். யாரெல்லாம் இந்த ப்ராஜெக்ட்ல இருந்தாங்கனு பேசுனோம். ரெண்டு பேருமே மாறி மாறி நன்றி சொல்லிக்கிட்டோம். இந்தப் படத்தோட டிஸ்கஷனின்போது சுஜாதா சார் எங்க கூட இருந்தார். கிரேஸி மோகனும் இருந்தார். நான் பண்ண `நாட்டாமை', `முத்து', `படையப்பா'னு நிறைய படங்கள் காலத்தைக் கடந்து நிக்குது. இதெல்லாம் நினைச்சு பார்க்குறப்போ சந்தோஷமா இருக்கு. அப்போ இதெல்லாம் நடக்கும்போது எங்களுக்கு சந்தோஷப்பட நேரமில்ல. ஏன்னா, அடுத்தடுத்த படங்கள்னு ஓடிட்டே இருந்தோம். இப்போ, இந்த லாக்டெளன்ல பழைய நினைவுகளை நினைச்சிப்பார்க்குறது மனசுக்கு ஒரு சந்தோஷத்தைக் கொடுக்குது.''

``ஒரு கேரக்டர்னால ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகள் பல மாசம் போகும். இதுல 10 கேரெக்டர்... ப்ரீ ப்ரொடக்‌ஷன் அனுபவம் எப்படியிருந்தது?''

``முதல்ல ஒவ்வொரு கேரக்டரோட லுக் எப்படியிருக்கணும்னு கம்ப்யூட்டர்ல உட்கார்ந்து வொர்க் பண்ணி அவுட்புட் எடுத்துப் பார்த்தோம். உதாரணத்துக்கு, `அவ்வை சண்முகி' படத்துக்குக் கமல் சாரோட தோற்றதுக்கு அவரோட அம்மா போட்டோவைக் கையிலே எடுத்துட்டு அதுல இருக்குற மாதிரியே கமலுக்கு மேக்கப் போட்டு உருவாக்கினோம்.. அதேமாதிரி இந்தப் படத்துக்கு எங்களுக்கு தெரிஞ்ச பாட்டி, தாத்தா தோற்றத்தை உருவகப்படுத்திப் பார்த்தோம். கலிஃபுல்லா கான், ஷிங்கன் நராஹஸினு ஒவ்வொரு கேரக்டரும் எப்படியிருக்கணும் நாங்க டிசைன் பண்ணிட்டு அமெரிக்காவுக்கு ப்ரொஸ்தெட்டிக் மேக்கப்காக அனுப்பி வெச்சோம். அமெரிக்கால ரெடி ஆனதுக்கு அப்புறம் எப்படி வந்திருக்குனு பார்க்க நானும், கமல் சாரும் அங்கே போனோம். 28 நாள்கள் அங்கேயே இருந்தோம். ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு கெட்டப் போட்டு போட்டோஷூட் நடத்தினோம். எங்களுக்கு சரியா இருந்தா ஓகே சொல்லிருவோம். இல்லனா எங்கே சரி பண்ணணும், எங்கே குறைக்கணும்னு பேசிட்டு அதுக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணச் சொல்லுவோம். இந்த வேலைகள்லாம் நடக்கும்போதே கதை விவாதமும் கூடவே நடக்கும்.''

`` `தசாவதாரம்' படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் கமல். நீங்கள் இயக்குநர். கதை விவாதம் நடந்தப்போ இயக்குநரா உங்களுக்கு சில காட்சிகளில் மாற்றம் பண்ணாலாம்னு தோணியிருக்கும்ல... கமல்கிட்ட நீங்க அப்படி எதுவும் மாற்றங்கள் சொன்னீங்களா?''

Kamal Haasan and KS Ravikumar
Kamal Haasan and KS Ravikumar

``முதல்ல, சுஜாதா சார்கூட கதை டிஸ்கஷன் போச்சு. அவர் சொன்னதைக் கேட்டுட்டு நானும், கிரேஸி மோகனும் உட்கார்ந்து பேசிட்டு இருப்போம். அப்புறம், கமல் சார்கூட தனியா டிஸ்கஷன் போகும். ஒரு கட்டத்துக்கு அப்புறம் நாலு பேரும் சேர்ந்து பேசினோம். முதல்ல, கதை சின்னதா ஆரம்பிச்சு அப்புறம் பெருசா போயிருச்சு. ரொம்ப சுவாரஸ்யமா இருந்ததுனால எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டோம். படத்தோட வசனம் எழுதுறதுக்கு முன்னாடி திரைக்கதை மட்டும் எழுதி முதல்ல கமல் சார் அனுப்பி வெச்சார். அப்போ, திரைக்கதையைப் படிச்சிட்டு எனக்குத் தோணின விஷயங்களை எப்படி அவர் முன்னாடி சொல்றதுன்னு எனக்குத் தெரியல. உடனே ஒரு லெட்டரா எழுதிடுவோம்னு பத்துப் பக்கத்துக்கு ஒவ்வொரு பாயின்ட்டா எழுதினேன். இதுல, எனக்குள்ள இருந்த அத்தனை சந்தேகங்களையும் தெளிவா கேட்டிருந்தேன். இந்த லெட்டர் எழுதினப்போ கிரேஸி மோகன் பக்கத்துல இருந்தார். `ஓ... இதையெல்லாம் நீங்க அவர்கிட்ட சொல்லப் போறீங்களா... இதைப் பார்த்துட்டு அவருக்கு கோபம் வரப் போகுது'னு சொல்லிட்டே இருந்தார். `நமக்கு என்ன தோணுதோ அதைச் சொல்லுவோம். அவர் அதுக்கு அப்புறம் என்ன பண்ணாலும் ஓகே. முதல்ல, நாம கன்வின்ஸ் ஆகணும். அப்போதான் ஆடியன்ஸ் படம் பார்த்துட்டு கன்வின்ஸ் ஆவாங்க'னு சொன்னேன். நான் எழுதுன லெட்டரைப் படிச்சிட்டு கமல் சார் கோபமாகிட்டார். அவர்கிட்ட இருந்து பதில் லெட்டர் ரொம்ப கோபமா வந்திருந்தது. உடனே அவரைப் பார்க்க நான் நேரா கிளம்பிப் போயிட்டேன். `சார் நான் க்ளாசிக் டைரக்டர் கிடையாது. பி அண்ட் சி ஆடியன்ஸூக்குப் படம் எடுக்குற டைரக்டர். என் அறிவுக்கு எட்டுன வரைக்கும் நான் கேட்டிருக்கேன். என்னை கன்வின்ஸ் பண்ணுங்க. இதுக்காக ப்ராஜெக்ட் கெட்டுற கூடாது. கோபமெல்லாம் வேண்டாம்'னு சொல்லிட்டு வந்துட்டேன். அதுக்கு அப்புறம் என்னை கன்வின்ஸ் பண்ற மாதிரி திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியிருந்தார் கமல் சார்.''

``படம் முழுக்க அறிவியலுக்கும், ஆன்மிகத்துக்குமான உரையாடல் நடந்துட்டே இருக்கும். நீங்க படத்துல எதை முதன்மையா சொல்ல வந்தீங்களோ அதைச் சொல்லிட்டீங்கனு நினைக்குறீங்களா?''

``படத்துல முதன்மையா சயின்ஸ் பற்றிச் சொல்லணும்னு கமல் சார் நினைச்சார். கடவுள் பற்றிச் சொல்லணும்னு நான் நினைச்சேன். ரெண்டுமே மிக்ஸானதுதான் `தசாவதாரம்'. ஏன்னா, `கடவுள் இல்லமா சயின்ஸ் இல்ல'னு நான் சொல்லுவேன். `சயின்ஸ்தான் கடவுள்'னு கமல் சார் சொல்லுவார். ரெண்டு விஷயத்தையுமே படத்துல சரியா சொல்லிட்டோம்னு நினைக்குறேன்.''

``படத்துல முக்கியமான வசனம் `கடவுள் இல்லைனு சொல்லலை... இருந்தா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன்'... இதை முதல்முறையா படிக்கும்போது என்ன தோணுச்சு?''

`` `சூப்பர் டயாலக்'னு தோணுச்சு. படத்துல வர்ற ஆண்டாள் கேரக்டர்தான் என்னோட வாதம். ஏன்னா, எனக்குக் கடவுள் பக்தி உண்டு. அதனால, நான் சொல்ல வேண்டிய விஷயத்தை அசின் கேரக்டர் மூலமா கேள்வி கேட்க வெச்சேன். கமல் சாரும் அவருக்கு ஏத்த மாதிரி பதில் சொல்லிட்டார். `இத்தனை பேர் சுனாமில அழிஞ்சிட்டாங்களே... இவ்வளவு பேரை அழிச்சவர் பேர்தான் கடவுளா?'னு கமல் வாதம் வைக்க, `இத்தனை பேரோட நிறுத்திட்டாரே. வைரஸ் வெளியே வந்து இந்த உலகமே அழிஞ்சிருந்தா.. அதனாலதான் சுனாமி வர வெச்சு இதோட நிறுத்திட்டார்'னு இன்னொருபக்கம் பக்கம் அசின் சொல்ற மாதிரியிருக்கும். படத்துல இந்த வசனம் மாதிரி நிறைய பன்ச் வெச்சிருப்பார் கமல் சார். கிரேட்டான மனிதர் அவர். சினிமாவுக்காகவே பிறந்தவர்.''

karunanidhi, Jackie Chan, Amitabh Bachchan and Kamal Haasan
karunanidhi, Jackie Chan, Amitabh Bachchan and Kamal Haasan

``படத்துல `அனு'னு ஒரு குரங்கு வைரஸ் பாதிப்பால செத்துடும். வைரஸ் பரவுனா ஒரு அணுவும் மிஞ்சாதுனு சொல்ற மாதிரியா இது?''

``கடவுள் நேசனா சொல்லணும்னா `அவனின்றி ஒரு அணுவும் அசையாது'னு நான் சொல்லுவேன். கமல் சார், `வைரஸ் வந்துட்டா ஒரு அணுவும் இருக்காது'னு சொல்றார். இந்த ரெண்டுமே ஒண்ணுதான். `நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாம்'னு சொல்ற மாதிரிதான். நிறைய விஷயங்கள் நுணுக்கமா யோசிச்சு யோசிச்சு எழுதுவார் கமல். அவர் டயலாக்ஸ் எழுதுறப்போ பக்கத்துல இருப்பேன். எழுதுனதை படிச்சுக் காட்டுவார். படிச்சுக் காட்டிக்கிட்டே பேப்பர்ல திருத்த ஆரம்பிச்சிடுவார். ஒருத்தவங்ககிட்ட சொல்லிட்டு இருக்கும்போதே அவருக்கு பெட்டரா தோணுச்சுனா உடனே நோட் பண்ணிக்குவார். இப்படி செதுக்கி செதுக்கித்தான் இந்தப் படத்தைப் பண்ணோம். இதுவரைக்கும், நான் எடுத்த படங்களோட திரைக்கதை நான் மட்டும்தான் பண்ணியிருக்கேன். டயலாக்ஸ் யாராவது எழுதினாக்கூட நானொரு வெர்ஷன் எழுதுவேன். ஆனா, இந்தப் படத்துல டைரக்‌ஷன் மட்டும்தான் நான் பண்ணேன். கமல் சார், `கதை, திரைக்கதை, வசனம்' எழுதி பத்து கேரக்டர்ல நடிக்கவும் செஞ்சிருந்தார். சரியா சொல்லணும்னா, கமல் சார் இல்லைனா `தசாவதாரம்' படத்துல ஒரு அணுவும் அசைஞ்சிருக்காது.''

``கமல்சாரை ஒரு தீர்க்கதரிசின்னு சொல்லுவாங்க... வைரஸ்தான் `தசாவதாரம்' படத்தோட மையம். இப்ப கொரோனா வைரஸ் பரவல் இருக்குற இந்த நேரத்துல கமல் பற்றிய கருத்தை எப்படிப் பார்க்குறீங்க?''

``கமல் சார் ஒரு தீர்க்கதரிசிதான். இதை அவர்கிட்ட சொன்னா ஒத்துக்கவே மாட்டார். அவர் நிறைய படிக்கிறார். வெவ்வேற மொழிப் படங்கள் நிறைய பார்க்குறார். உலகத்தைப் பற்றி நிறைய தெரிஞ்சு வெச்சிருக்கார். அதனாலதான், `அன்பே சிவம்' படத்துல சுனாமி பற்றிப் பேசியிருப்பார். இப்போ நடந்திட்டு இருக்குற வைரஸ் பிரச்னையைப் பார்க்குறப்போ `தசாவதாரம்' படத்துல கமல் சார் சொன்னது ஞாபகத்துக்கு வரும். வுகான்ல கொரோனா வைரஸ் வெளியே வராம தடுத்திருந்தா இன்னைக்கு உலகம் முழுக்க இது பரவியிருக்காது இல்லையா? காலத்தை எப்பவும் கணிக்கக்கூடியவர் கமல் சார். பாலசந்தர் சார் அப்போ படம் பார்த்துட்டு `இருபது வருஷத்துக்கு அப்புறமும் இந்தப் படத்தைப் பற்றிப் பேசுவாங்க'னு சொன்னார். அதுதான், இப்போ நடந்துட்டு இருக்கு.''

``படத்துல நிறைய இடத்துல மூணு, நாலு கமல் ஒண்ணா இருக்குற மாதிரியிருக்கும். இந்த ஷாட்டை எல்லாம் எப்படி எடுத்தீங்க?''

``ஒரே ஷாட்ல கோவிந்த், பல்ராம் நாயுடு, கலிஃபுல்லா கான், ஷிங்கன் நராஹஸி, ஃபிளெட்சர்னு நிறைய கேரக்டர்ஸ் இருந்திருக்காங்க. இந்தப் படத்துலயே கொஞ்சம் ஈஸியா ஷூட் பண்ணது ரங்கராஜன் நம்பி போர்ஷன்தான். அதுவே ஈஸினு சொன்னா மத்த போர்ஷன்ஸ்லாம் எடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்னு பார்த்துக்கங்க. அஞ்சு கேரக்டரும் பேசணும், நிக்கணும், துப்பாக்கி காட்டுறப்போ அலறணும், இதையெல்லாம் சரியா கொண்டு வந்து ரியாக்‌ஷன் காட்டணும்னு பயங்கர சவாலா இருந்தது. ஒரு நாள்ல ஒரு கேரக்டர் மட்டும்தான் ஷூட் பண்ணுவோம். ஏன்னா, ஒருமுறை ப்ரொஸ்தெட்டிக் மேக்கப் போட்டுட்டா அதை எடுத்துட்டு இன்னோரு மேக்கப் போடவே முடியாது. மேக்கப்பைக் கலைக்க முழுக்க முழுக்க ஆல்கஹால் யூஸ் பண்ணுவாங்க. மேக்கப்பை எடுக்கும்போதே முகத்துல டாட் டாட்டா இரத்தம் இருக்கும். எரிச்சல் அதிகமா இருக்கும். கமல் சார் வலி தாங்கமா கத்துவார். `No pain No gain'னு அவரே சொல்லுவார். கமல் சார் இல்லாம மத்த கேரக்டர் எல்லோரையும் டயலாக் பேசச் சொல்லி மிட், வைட், லாங், மூவிங்னு மொத்தமா ஷாட் எடுத்து வெச்சிருவோம். அடுத்தநாள் முழுக்க செட்ல புளூ மேட் போட்டுடுவோம். ஆர்ட்டிஸ்ட் யாருமே இருக்க மாட்டாங்க. முதல்நாள் மத்த ஆர்டிஸ்ட்ஸ் நின்ன இடத்துல மார்க் போட்டு வெச்சிருப்போம். கலிஃபுல்லா கேரக்டருக்கான ஷூட்டிங் நடக்குதுனா அந்த கேரக்டர் உயரத்துக்கு ஏத்த மாதிரி மார்க் பண்ணி வெச்சிருவோம். ஆர்ட்டிஸ்ட் எல்லாருமே மார்க் பண்ண உயரத்தைப் பார்த்துட்டு டயாலக்ஸ் பேசியிருப்பாங்க. முதல் நாள் கலிஃபுல்லா டயலாக்ஸை நான் பேசியிருப்பேன். மறுநாள் இந்த ரெக்கார்ட்டிங் சவுண்ட் போட்டு காட்டுவோம். இப்படித்தான் எங்களோட ஷூட்டிங் நடந்தது. சுனாமி காட்சி எடுத்தப்போ 13 லேயர் பயன்படுத்தினோம். அதேமாதிரி ரங்கராஜன் நம்பி கேரக்டருக்கு கிராஃபிக்ஸ் வேலை அதிகம் இருந்தது. 1000 பேர் வரைக்கும் ஒரே ஃப்ரேம்ல காட்டணும். அப்புறம் தண்ணிக்குள்ள எடுக்குற சீன்ஸுக்கு வேற மாதிரியான வேலைகள்னு நிறைய உழைப்பைக் கொடுத்திருக்கோம். படத்தோட ஷூட்டிங் மொத்தம் 127 நாள்கள் நடந்துச்சு. தமிழ்ல டப்பிங்கை நாலு நாள்ல கமல் சார் முடிச்சிட்டார். இந்திலயும் எல்லா கேரக்டருக்கும் கமல் சாரே டப் பண்ணார். இதுக்கு மட்டும் ஒருவாரம் ஆச்சு.''

Asin and Hema Malini
Asin and Hema Malini

``எடிட்டிங்ல `படையப்பா' அஞ்சு மணிநேரப் படமா வந்திருந்ததுன்னு சொல்லியிருந்தீங்க. `தசாவதாரம்' ஒரிஜினலா எவ்வளவு மணி நேரப் படமா இருந்தது?''

``ஒவ்வொரு சீன் எடுக்கும்போதும் நான் ஃபுட்டேஜை நோட் பண்ணிப்பேன். கமல் சாரும், ஒவ்வொரு சீனுக்கும் மினிட்ஸ் போட்டுக்கிட்டே இருப்பார். அதனால எக்ஸ்ட்ரா ஃபுட்டேஜ் எதுவும் எடுக்கல. 1000 அடி வேணா எக்ஸ்ட்ரா இருந்திருக்கலாம். அதுவும் ட்ரிம் பண்ணப்போ போயிருச்சு. எந்த சீனையும் தேவையில்லாம எடுத்துட்டு எடிட்டிங்ல தூக்கிப் போடல. என்னைவிட எடிட்டிங்ல அதிகமா கஷ்டப்பட்டது கமல் சார்தான்.''

``படத்தோட ஃபைனல் அவுட்புட் பார்த்துட்டு கமல் என்ன சொன்னார்?''

``ரெண்டு பேரும் ஒண்ணாதான் உட்கார்ந்து பார்த்தோம். படம் முடிஞ்சதும் எதுவுமே பேசமா கமல் சார் எழுந்து போயிட்டார். `என்னடா எதுவுமே சொல்லலையே'னு யோசிச்சிட்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சி `சாயங்காலம் ஆபீஸுக்கு வாங்க'னு சொல்லிட்டு போனை வெச்சிட்டார். `நிறைய கரெக்ஷன்ஸ் இருக்கும் போல'னு நினைச்சிக்கிட்டேப் போனேன். பார்த்தா ரோலக்ஸ் வாட்சை எடுத்து என் கையில கட்டி விட்டார். இதை வாங்குறதுக்காகத்தான் எதுவும் சொல்லாமா எந்திருச்சு போயிருக்கார்னு அப்போதான் தெரிஞ்சது. இதுதான் இந்தப் படத்துக்காக எனக்குக் கிடைச்ச முதல் விருது. ஆனா, இன்னும் சில போர்ஷன்ஸ் நல்லா பண்ணியிருக்கலாம்னு எனக்குள்ள தோணும். ஏன்னா, கிராஃபிக்ஸ் வேலைகளையெல்லாம் பேங்காக்ல கொடுத்திருந்தோம். அவங்க இன்னும் ஒருவாரம் டைம் கேட்டாங்க. ஆனா, ஏற்கெனவே நிறைய நேரம் கொடுத்துட்டதால, எங்களால் இன்னும் கொடுக்க முடியல. ரிலீஸ் தேதி வேற ஃபிக்ஸ் பண்ணிட்டோம். இன்னும் ரெண்டு வாரம் டைம் இருந்திருந்தா இன்னும் நல்லா பண்ணியிருப்போம்.''

``இந்தப் படத்துக்காக இயக்குநரா உங்களுக்குப் பெரிய அங்கீகாரம், விருதுகள் எதுவும் கிடைக்கலன்ற வருத்தமிருக்கா?''

``என்னோட முதல் படமான `புரியாத புதிர்' காட்டிலும் ரெண்டாவது படமான `சேரன் பாண்டியன்' நல்ல ஹிட். `இனி நீ கமர்ஷியல் இயக்குநர்'னு நானே எனக்குள்ள முத்திரை குத்திக்கிட்டேன். அப்போதில் இருந்து இப்போ வரைக்கும் அப்படித்தான் இயங்கிட்டும் இருக்கேன். விருதுக்காக நான் படம் எடுத்ததில்ல. ஆனா, சில விருதுகளும் கிடைச்சிருக்கு. சிலர், இந்தப் படத்துக்காக எனக்கு விருது கிடைக்கும்னு சொன்னாங்க. ஆனா, எந்த விருதும் கிடைக்கல. ஆனா, ஆஸ்கர் விருது கிடைச்ச மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. படத்தை நாகேஷ் சார், மனோரமா ஆச்சி, கே.பி சார்னு எல்லோருக்கும் கமல் சார் போட்டுக் காட்டினார். நைட் ஷோ. படம் முடிச்சிட்டு விடியற்காலை 3 மணிக்குத்தான் வீட்டுக்குப் போனேன். காலையில 6.45 மணி. `பாலசந்தர் சார் வீட்டுக்கு வந்திருக்கார்' னு கூப்பிட்டாங்க. உடனே, எந்திருச்சு கீழ ஓடினேன். அஞ்சு நிமிஷம் வரைக்கும் கட்டிப்பிடிச்சிட்டே, `என்னடா பண்ணியிருக்கீங்க, ரெண்டு பேரும் சேர்ந்து... நானே உன்கிட்ட இருந்து கத்துக்கணும் போலடா'னு சொன்னார். அவர் கால்ல விழப் போனேன். அவர் விழவே விடல. `யு ஆர் கிரேட் மேன்'னு சொன்னார். இதுக்கு மேல என்ன விருது வேணும்.''