Published:Updated:

``அஜித், சிம்பு, விக்ரம், ஆர்யா...`கோ' லிஸ்ட் ரொம்பப் பெருசு!''- கதை சொல்லும் கே.வி.ஆனந்த் #9YearsOfKo

`கோ' ஜீவா
`கோ' ஜீவா

அஜித் நடிக்கிறார், சிம்பு நடிக்கப்போகிறார் என ஸ்கூப் செய்திகள் ரவுண்டு கட்டி அடித்தன. உண்மையில் நடந்தது என்ன? கதை உருவானதில் இருந்து படமானது வரை அத்தனையும் சொல்கிறார், இயக்குநர் கே.வி.ஆனந்த்.

`கோ’ திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து 10-ம் ஆண்டு ஆரம்பமாகிறது. சூர்யாவை வைத்து `அயன்' எனும் சூப்பர்ஹிட் படம் கொடுத்த பிறகு கே.வி. ஆனந்த் இயக்கிய படம் என்பதால், இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு கதை விவாதம் தொடங்கிய நாளிலிருந்தே ஏகத்துக்கும் எகிறிப்போனது. அஜித் நடிக்கிறார், சிம்பு நடிக்கப்போகிறார் என ஸ்கூப் செய்திகள் ரவுண்டு கட்டி அடித்தன. உண்மையில் நடந்தது என்ன? கதை உருவானதில் இருந்து படமானது வரை அத்தனையும் சொல்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

``நான் இயக்கிய முதல் படமான `கனா கண்டேன்’ படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்தாலும் பெரிய ஹிட் ஆகல. அதனால, இரண்டாவது படத்தை ஒரு பெரிய ஹிட் படமா கொடுக்கணும்னு, நானும் எழுத்தாளர்கள் சுபாவும் சேர்ந்து எழுதின கதைதான் `அயன்’. நாங்க நினைச்ச மாதிரியே `அயன்’ சூப்பர் ஹிட். அதனால மூன்றாவது படத்துக்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகிடுச்சு. நான் ஆரம்ப காலத்துல பத்திரிகையில போட்டோகிராஃபரா வேலைபார்த்தவன். அதனால, மீடியா அனுபவங்களை வெச்சு ஒரு படம் பண்ணலாம்னு யோசிச்சு `கோ’ கதையை எழுதினோம். இந்தக் கதையை எழுதுறதுக்கு முன்னாடி ஒரு இளம் சமையல் கலைஞன் (செஃப்) கதையை எழுதியிருந்தோம். ஒரு ரெஸ்ட்டாரன்ட் வெச்சிருக்கிற இளம் செஃப், அவர் மேல க்ரஷா இருக்கிற ரெண்டு பொண்ணுங்கன்னு அந்தக் கதை போகும். அந்தக் கதையைப் படமா பண்ணாததனால, அதில் இருந்த ரொமான்ஸ் சீனையெல்லாம் `கோ’ கதைக்கு மாத்திக்கிட்டோம். `கோ’ கதையை எழுதி முடிச்ச சமயத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனம், `அஜித்தோட கால்ஷீட் எங்களுக்கு கிடைச்சிருக்கு. அவருக்கு கதை சொல்றீங்களா’னு கேட்டாங்க. அப்போ நான், `என்கிட்ட ஒரு கதை இருக்கு. ஆனால், அது அஜித்தோட மாஸ் லெவலுக்கு இருக்காது’னு அவங்ககிட்ட சொல்லிட்டேன்.

ஜீவா - கார்த்திகா
ஜீவா - கார்த்திகா

அடுத்து, கார்த்திகிட்ட கதையைச் சொன்னோம். கால்ஷீட் பிரச்னையால் அவரால பண்ண முடியலை. அதுக்கடுத்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார், `என்கிட்ட சிம்பு கால்ஷீட் இருக்கு. அவரை வெச்சு படம் பண்ணலாமா’னு கேட்டார். நானும் `கோ’ கதைக்கு சிம்பு சரியா இருப்பார்னு அவருக்கு கதை சொல்லி, அவரும் ஓகே சொல்லிட்டார். அவரையும் ஹீரோயின் கார்த்திகாவையும் வெச்சு போட்டோஷூட்டும் பண்ணிட்டோம். அடுத்த வாரம் சீனாவுல பாட்டு ஷூட் பண்றதுக்கான வேலைகள் எல்லாமே முடிஞ்சிருந்த நிலையில், சிம்புவால் இந்தப் படத்தில் நடிக்க முடியாத சூழல் வந்திடுச்சு. நான் உடனே தயாரிப்பாளர்கிட்ட, `சார் நாம இந்த படமே பண்ண வேணாம்’னு சொல்லிட்டேன். அதுக்கு அவர், `சார் உங்களுக்காகத்தான் இந்தப் படத்தையே நான் பண்றேன். நீங்க யாரை ஹீரோவா கமிட் பண்ணினாலும் ஓகே. நான் இந்தப் படத்தைப் பண்றேன்’னு சொன்னார்.

அவர் இப்படி சொன்னதுக்கு அப்பறம், நான் வேற ஹீரோவை கமிட் பண்ணலாம்னு விக்ரம்கிட்ட கதை சொன்னேன். விக்ரமுக்கும் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. அடுத்த வாரமே சீனாவுல ஷூட் பண்றதுக்கும் ஓகே சொல்லிட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே மூணு தயாரிப்பாளர்கிட்ட அட்வான்ஸ் வாங்கி வெச்சிருந்ததனால, அவர்களில் ஒருத்தரோடுதான் இந்தப் படத்தை பண்ண முடியும்னு சொல்லிட்டார். ஆனால், என்னை நம்பி `நீங்க எந்த ஹீரோவை வேணும்னாலும் கமிட் பண்ணுங்க’ன்னு சொல்லிட்டு அங்க ஒரு தயாரிப்பாளர் காத்துட்டு இருந்ததனால, விக்ரமை வெச்சி படம் பண்ண முடியல. என் போனை எடுத்து நான் பதிவு பண்ணி வெச்சிருந்த நடிகர்கள் நம்பர் எல்லாத்தையும் வரிசையா பார்த்துட்டு இருந்தப்போ, ஆர்யா நம்பர் வந்துச்சு. ஆர்யாவுக்கு கால் பண்ணேன்; அவர் போனை எடுக்கலை. மறுபடியும் நம்பர்களைப் பார்த்திட்டு இருந்தப்போ, ஜீவா நம்பர் வந்துச்சு. அவருக்கு கால் பண்ணி, கதை சொல்லணும்னு சொல்லி டைம் வாங்கிட்டேன்.

கே.வி.ஆனந்த்
கே.வி.ஆனந்த்

ஜீவாவும் கதை கேட்க வந்தார். ஆனால், அவரோட முகத்தைப் பார்க்கும்போது ஒரு ஆர்வமே இல்லாமல் வந்த மாதிரி இருந்துச்சு. ஏன்னா, நானும் சிம்புவும் படம் பண்ணப்போறதை அதிகாரபூர்வமா அறிவிச்சிருந்தனால, அந்தப் படத்தில் வேற ஒரு சின்ன ரோலுக்காக நம்மை கூப்பிடுறாங்கன்னு நினைச்சிட்டே வந்திருப்பார் போல. நானும் அவர்கிட்ட, `படத்துல நீங்க ஒரு போட்டோகிராஃபர்’னு ஆரம்பிச்சு முதல் பாதி வரைக்கும் கதையைச் சொன்னதும் ஜீவா என்கிட்ட, `சார், படத்துல நானே இவ்வளவு விஷயங்கள் பண்ணினால், சிம்பு என்ன பண்ணுவார்’னு கேட்டார். அப்போதான் சிம்புவால இந்தப் படத்தில் நடிக்க முடியாத சூழல். அதான், வேற ஹீரோவை வெச்சு பண்ணலாம்னு உங்ககிட்ட கதை சொல்றேன்னு நான் சொன்னதும்தான், ஜீவாவுக்கு விஷயமே புரிஞ்சது. அதுக்கப்பறம் ஆர்வத்தோடு கதை கேட்டுட்டு படத்தில் நடிக்கிறதுக்கு ஓகே சொல்லிட்டார்.

அடுத்து, `ஜீவாவுக்கு அட்வான்ஸ் கொடுக்கிறதுக்காக அவரோட அப்பா ஆர்.பி.செளத்ரி சாரைப் பார்க்கப்போறேன். நீங்களும் வர்றீங்களா'னு தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேட்டார். அவர் பெரிய தயாரிப்பாளராச்சே; போய் பார்க்கலாம்னு நானும் போனேன். அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, `படத்தோட பட்ஜெட் என்ன’ன்னு கேட்டார். அதுக்கு தயாரிப்பாளர், `இயக்குநர் 12 கோடி சொல்றார். நான் ஒரு 13 கோடி வரைக்கும் செலவு பண்ணலாம்னு இருக்கேன்’னு சொன்னதும், செளத்திரி சார் ஷாக்காகிட்டார். `ஜீவா என் பையன்தான். இருந்தாலும் நானும் உங்களை மாதிரி கஷ்டப்பட்டு வந்த தயாரிப்பாளர்ங்கிற முறையில் சொல்றேன். என் பையனை வெச்சு 8 கோடி வரைக்கும் படம் பண்ணலாம்; அதுக்கு மேல பணம் போட்டால் நஷ்டமாகிடும்’னு சொன்னார். அதுக்கு தயாரிப்பாளர், `சார் இது உங்க பையன் படம் மட்டுமில்ல. `அயன்’ டீமோட அடுத்த படம். தைரியமா செலவு பண்ணலாம்’னு சொன்னார். இப்படி பல திருப்பங்களுக்குப் பிறகுதான் ஹீரோ கமிட்டானார்.

கோ
கோ

ஹீரோ கேரக்டருக்கு மட்டுமில்லாமல், அஜ்மல் நடிச்ச கேரக்டருக்கும் பல நடிகர்கள்கிட்ட கதை சொன்னேன். முதலில் சொன்னது, சசிக்குமார்கிட்டதான். அவர் நடிச்சா இந்த கேரக்டர் ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கும்னு எனக்கு தோணுச்சு. ஆனால், அவரால இந்தப் படத்தை பண்ண முடியாதுனு சில காரணங்கள் சொன்னார். அதுவும் ரொம்ப நியாயமா இருந்துச்சு. அடுத்து, `அஞ்சாதே’ படத்தில் ஹீரோவா நடிச்ச நரேன்கிட்டேயும், `உன்னாலே உன்னாலே’ படத்தோட ஹீரோ வினய்கிட்டேயும், கணேஷ் வெங்கட்ராம் கிட்டயும் சொன்னேன். அவங்களாலும் நடிக்க முடியாமல் போச்சு. அப்புறம்தான் அஜ்மல்கிட்ட சொல்லி ஓகே பண்ணேன்.

அதுமட்டுமில்லாமல், `அயன்’ ஹிட்டுக்கு அப்புறம் ஹாரிஸ் ஜெயராஜை வெச்சே இந்தப் படத்தையும் பண்ணலாம்னு அவர்கிட்ட கதை சொன்னேன். அவரும் கதையைக் கேட்டுட்டு, `சார் இளைஞர்கள் அரசியலுக்கு வர்ற மாதிரி பல படங்கள் வந்திடுச்சு. இது கொஞ்சம் கிளிஷேவான சப்ஜெக்ட். நீங்க வேற கதை பண்ணலாமே’னு சொல்லிட்டு, அட்வான்ஸ் வாங்குறதையும் தவிர்த்திட்டார். அப்புறம் ஒரு நாள், ஹாரிஸுக்கு நெருக்கமான இயக்குநரான அன்வரை ஒரு நிகழ்ச்சியில் பார்க்கும்போது இந்த சம்பவத்தைச் சொன்னேன். அன்வர் ஹாரிஸ்கிட்ட பேசின பிறகு ஆனந்த் சார், எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்களுக்காக இந்தப் படத்தில் வேலைபார்க்கிறேன்’னு சொல்லி கமிட்டானார்.

கவண்
கவண்

இந்த மாதிரியான சம்பவங்கள் `கோ’ படத்துக்கு மட்டும்தான் நடந்துச்சுனு சொல்ல முடியாது. நான் எடுத்த எல்லாப் படங்களிலுமே இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கும். அது ஏன்னா, நான் ஸ்கிரிப்ட் ரெடியானதுக்கு அப்புறம்தான் இதில் யார் நடிச்சா நல்லா இருக்கும்னு யோசிப்பேன். அந்தக் கதைக்கு யார் சரியா இருப்பாங்களோ அவங்களை வெச்சுத்தான் படம் பண்ணுவேன். `கவண்’ படத்தோட கதையை முதலில் விஜய்கிட்டத்தான் ஏ.ஜி.எஸ் நிறுவனம் சொல்லச் சொன்னாங்க. ஆரம்பகாலத்தில் இருந்தே விஜய் எனக்கு நெருக்கமானவரா இருந்தாலும், `இது விஜய்க்கான கதை இல்லை. விஜய் சேதுபதிக்கான கதை. அவர் நடிச்சால்தான் நல்லாயிருக்கும்’னு சொன்னேன். சினிமாவைப் பொறுத்தவரைக்கும் எது வேணும்கிறதுல தெளிவா இருக்கிறதைவிட, எது வேணாம் என்பதில் தெளிவா இருக்கணும். அதுனால, எனக்கு இந்த அலைச்சல் பழக்கப்பட்டதுதான்.’’

``உங்களுடைய பத்திரிகை அனுபவத்தை எப்படியெல்லாம் `கோ’ ஸ்கிரிப்டுக்குள் கொண்டு வந்தீங்க?"

கோ
கோ

``நான் பத்திரிகைத்துறையில் வார இதழ்களில்தான் வேலை பார்த்தேன். ஆனால், `கோ’ படத்தில் வருவது தினசரி செய்தித்தாள். ரெண்டுக்கும் வேற வேற வொர்க்கிங் ஸ்டைல். டெய்லி நியூஸ் பேப்பர்களில் வேலைபார்க்கிறவங்க ரொம்பவே பரபரப்பா இருப்பாங்க. அந்தக் களத்தில் நான் வேலைபார்த்தது இல்லை. அதனால், முதலில் அவங்களோட வொர்க்கிங் ஸ்டைல் எப்படி இருக்கும்னு ஒரு நாள் முழுக்க, ஒரு டெய்லி நியூஸ் பேப்பர் ஆபீஸுக்குப் போய் பார்த்தேன். அப்படி பல விஷயங்களைப் பார்த்து, அதையெல்லாம் ஸ்கிரிப்ட்டிற்குள் கொண்டுவந்தேன். அதுமட்டுமில்லாமல், என்னுடைய கதைகள் எல்லாமே நியூஸ் பேப்பரில் இருந்து எடுத்ததுதான். கந்துவட்டி கொடுமையும் தண்ணீர் தட்டுப்பாடும் இருந்தப்போ, அதை வெச்சு நானும் எழுத்தாளர்கள் சுபாவும் எழுதிய கதைதான் `கனா கண்டேன்’. வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த பொருள்களைக் கடத்திட்டுவருவது; இங்க இருந்து போதைப் பொருள்களை வெளிநாட்டுக்கு கடத்திட்டுப் போவதுனு அடிக்கடி இந்த மாதிரியான செய்திகள் பேப்பரில் வரும். அதை வெச்சுதான் `அயன்’ கதை எழுதினோம். ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் வாழ்க்கையை ஒரு புத்தகத்தில் படித்ததற்குப் பிறகுதான் `மாற்றான்’ கதையை எழுதினோம். வீடியோ கேம்ஸ் மேல அடிமையாகி, அதுனால தற்கொலைகள் பண்ணிக்கிறாங்கனு செய்திகள் வந்தப்போ, எழுதின கதைதான் `அனேகன்’. டி.வி சேனல்களோட தாக்கம் அதிகமானப்போ, அவங்க எப்படி ஒரு செய்தியை கையாளுறாங்கன்னு எழுதின கதைதான் `கவண்’. அப்படி பேப்பர்ல பார்த்த விஷயங்களை வெச்சுதான் `கோ’ கதையும் எழுதினோம்.’’

`` `கோ’ படத்தில் நடிக்க முடியாமல் போனவர்கள், படம் ரிலீஸான பிறகு உங்களிடம் பேசினார்களா?"

ko
ko

``படம் பார்த்துட்டு சிம்பு போன் பண்ணிப் பேசினார். `படம் ரொம்ப நல்லாயிருந்துச்சு சார். என்னைவிட ஜீவாதான் இந்தக் கதைக்கு ரொம்ப பொருத்தமா இருந்தார். ஏன்னா, க்ளைமேக்ஸில் வில்லனை நல்லவனாக்கிட்டு, தான் எதுவுமே பண்ணாத மாதிரி அடுத்த நாள் தன்னோட வழக்கமான வேலையை ஹீரோ பார்க்கிற மாதிரி நான் நடிச்சிருந்தால், அது செட்டாகியிருக்குமானு தெரியலை. ஜீவாவுக்கு அது சரியா இருந்துச்சு’னு சொன்னார். அப்புறம் `காப்பான்’ சமயத்தில்தான், `கோ’ படத்தோட கதையை ஜீவாவுக்கு சொல்றதுக்கு முன்னாடி உங்களுக்கு சொல்லத்தான் கால் பண்ணினேன்; நீங்க எடுக்கலை’ங்கிற விஷயத்தை ஆர்யாகிட்ட சொன்னேன். அதுக்கப்புறம் ஆர்யா என் போனை மிஸ் பண்றதேயில்லை. தப்பித்தவறி மிஸ் பண்ணிட்டாலும், `சார் ஏதாவது முக்கியமான விஷயமா’ன்னு கொஞ்ச நேரத்தில் அவரே போன் பண்ணிடுவார். அதுமட்டுமில்லாமல், ``சார், இனிமேல் ஏதாவது முக்கியமான விஷயமா நீங்க எனக்கு போன் பண்ணி நான் எடுக்கலைனா, ஒரு மணி நேரம் வெயிட் பண்ணிட்டு அடுத்த ஆளுக்கு போன் பண்ணுங்க சார்’'னு சிரிச்சிக்கிட்டே சொன்னார்.’’

அடுத்த கட்டுரைக்கு