சினிமா
Published:Updated:

“பதுங்குகுழி மருத்துவமனையே கதைக்களம்!”

சல்லியர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சல்லியர்கள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ராஜேந்திர சோழன் படைப் பிரிவில் போர் மருத்துவப் பிரிவும் இருந்திருக்கு

‘மேதகு’ ஏற்படுத்திய பரபரப்புக்குப் பிறகு ‘சல்லியர்கள்’ எனக் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் தி.கிட்டு. முதல் படத்திலேயே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆரம்ப வரலாறு சொல்லியதில் அழுத்தமாய்க் கவனம் பெற்றவர்.

‘‘எனக்கு கமர்ஷியலாகப் படம் பண்றதைவிட வரலாற்றின் சில பக்கங்களைப் பதிவு செய்வதே முக்கியம்னு தோணுச்சு. தமிழ்ச் சமூகத்திற்குச் சொல்லவேண்டியதை எடுப்பதில்லை, அல்லது, சொல்லாமல் தாமதிக்கிறோம்னு பட்டது. உண்மையான வரலாற்றைத் திரைப்படம் மூலம் சொன்னால் சாதி மதத்தால் பிரிந்துகிடக்கும் தமிழர்களை ஒன்றுகூட்ட வாய்ப்பிருக்கிறது. ஈழப்போராட்டம் பற்றிய எவ்வளவோ உண்மைகள் மீதமிருக்கின்றன. கசப்பான உண்மைகள் இன்னும் மறைந்துகிடக்கின்றன. அதன்படிதான் தலைவர் விடுதலையை முன்னிறுத்தி நடத்தி ஆயுதம் எடுத்த சூழலை ‘மேதகு’வில் சொன்னேன். உலகம் எங்கும் தமிழ் மக்கள் பாராட்டு தெரிவித்த பிறகு எனக்கு இப்போது பொறுப்பு கூடிவிட்டது. அதை உணர்ந்து இப்போது ‘சல்லியர்கள்’ வெளிவருகிறது.’’

“பதுங்குகுழி மருத்துவமனையே கதைக்களம்!”
“பதுங்குகுழி மருத்துவமனையே கதைக்களம்!”
“பதுங்குகுழி மருத்துவமனையே கதைக்களம்!”

`` ‘சல்லியர்கள்’ திரைப்படமும் ஈழம் தொடர்பான திரைப்படம்தானா?’’

‘‘ஆமாம். போர்முனையில் சிகிச்சை தந்த மருத்துவர்கள் பற்றிய கதை. சமரசம் இல்லாமல் களமுனையில் நின்று மருத்துவர்கள் பணிபுரிந்தார்கள். ஈழத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் என் கற்பனையையும் கலந்து கதையை உருவாக்கியிருக்கிறேன். எப்போதும் போர் நடக்கும் இடத்திற்குக் கொஞ்சம் தள்ளி பதுங்குகுழி மருத்துவமனை இருக்கும். இருபதிற்கு முப்பது அளவில் எல்லா வசதிகளும் கொண்டு அந்தப் போர்ச்சூழலிலும் இயங்கிக் கொண்டிருக்கும். அந்தப் பதுங்குகுழி மருத்துவமனையின் பரபரப்பு நிமிடங்கள் இதில் பதிவாகியிருக்கின்றன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ராஜேந்திர சோழன் படைப் பிரிவில் போர் மருத்துவப் பிரிவும் இருந்திருக்கு. நெஞ்சில் குத்துப்பட்ட ஈட்டி முனைகளைப் பறித்து, தையல் போட்டு மருத்துவப் பணி ஆற்றியவர்களை ‘சல்லிய கிரியை செய்பவர்கள்’ என்று அழைத்திருக்கிறார்கள். அந்தப் பணியைச் செய்தவர்களை ‘சல்லியன் மருத்துவன்’ என்று அழைத்ததாகக் கல்வெட்டுகளில் தகவல்கள் இருக்கின்றன. இதையெல்லாம் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அதை முன்மாதிரியாகக் கொண்டு ‘சல்லியர்கள்’ என்று தலைப்பு வைத்திருக்கிறேன்.

அதிகமும் இதில் பதுங்குகுழிகளைப் பற்றிப் பேசியிருக்கேன். இது உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களைப் பற்றிய கதைதான். இதுதான் நடந்தது, இப்படித்தான் நடந்ததுன்னு உண்மைகளைச் சொல்லியிருக்கேன். என் நண்பர் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இதை நடிகர் கருணாஸிடம் சொல்லப்போக, அவர் அழைத்துக் கதை கேட்டார். நான் கதையைச் சொல்லிக்கொண்டே இருக்கும்போது நிறுத்தி எனக்கு அட்வான்ஸ் கொடுத்து, படத்தை ஆரம்பிக்கச் சொல்லிவிட்டார் கருணாஸ்.’’

“பதுங்குகுழி மருத்துவமனையே கதைக்களம்!”
“பதுங்குகுழி மருத்துவமனையே கதைக்களம்!”
“பதுங்குகுழி மருத்துவமனையே கதைக்களம்!”

``இதிலும் பிரபாகரன் வருகிறாரா?’’

‘‘இல்லை. இதில் தலைவரின் தரிசனம் கிடையாது. தணிக்கைத்துறையின் அனுமதி பெற்றுத்தான் படம் வெளியாகும். மருத்துவராக சத்தியா தேவி என்பவர் நடித்திருக்கிறார். தஞ்சையைச் சேர்ந்தவர். மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர், நடிக்க வந்துவிட்டார். சில தமிழ்ப் படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருந்த நடிகர் மகேந்திரன் இதில் நேர்மறை கதாபாத்திரத்தில் டாக்டராக வருகிறார். அப்பா கேரக்டரில் கருணாஸ் நடித்திருக்கிறார். நிறைய உழைப்பையும், ஆராய்ச்சியையும், எதுவும் தவறு நேர்ந்து விடக்கூடாது என்ற அக்கறையையும் ‘சல்லியரி’ல் போட்டிருக்கிறேன்.’’

“பதுங்குகுழி மருத்துவமனையே கதைக்களம்!”
“பதுங்குகுழி மருத்துவமனையே கதைக்களம்!”
“பதுங்குகுழி மருத்துவமனையே கதைக்களம்!”

``இதற்கான படப்பிடிப்பை எங்கே நடத்தினீர்கள்?’’

‘‘சிவகங்கை மாவட்டத்தில் நடந்தது. கருணாஸ் தோட்டத்திலேயே மிகப்பெரிய பதுங்கு குழி வெட்டி அதற்கான செட் போட்டு எடுத்தோம். எல்லோருமே புதுமுகங்கள்தான். போர்க்காட்சிகள் நம்பகத்தன்மையுடன் எடுக்கப்பட்டிருக்கின்றன. எழுதும்போது கமர்ஷியலாக இருக்கணும்னு எதையும் எழுதவில்லை. எழுதியதையும் உணர்ந்ததையும் உண்மையையும் மட்டுமே படமாக்கினேன். மறந்துபோன, மறக்கடிக்கப்பட்ட வரலாற்றின் சில சமீபத்திய பக்கங்களைப் பார்க்க உங்களை அழைக்கிறேன்’’

நம்பிக்கையுடன் பேசுகிறார் கிட்டு.