Published:Updated:

"ஈரோடு செளந்தர் மீசைக்காரன்... ரொம்ப ரோசக்காரன்!" - நெகிழும் கே.எஸ்.ரவிக்குமார்

ஈரோடு செளந்தர்
ஈரோடு செளந்தர்

மறைந்த இயக்குநர் ஈரோடு செளந்தர் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

'சேரன் பாண்டியன்', 'நாட்டாமை', 'பரம்பரை', 'சமுத்திரம்' ஆகிய படங்களின் கதாசிரியரும் 'சிம்மராசி', 'முதல் சீதனம்' ஆகிய படங்களின் இயக்குநருமான ஈரோடு செளந்தர் இன்று மதியம் உடல்நலக் குறைவால் காலமானார். விசாரித்தபோது அவருக்கு சில வருடங்களாக சிறுநீரகப் பிரச்னை இருந்தது தெரியவந்தது.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் 'சேரன் பாண்டியன்', 'புத்தம்புது பயணம்', 'நாட்டாமை', 'பரம்பரை', 'சமுத்திரம்' என ஐந்து படங்களுக்கு கதாசிரியராகப் பணியாற்றி இருக்கிறார் ஈரோடு செளந்தர். இந்தப் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்கள். 'சேரன் பாண்டியன்', 'நாட்டாமை' ஆகியவை மிகப்பெரிய ஹிட் அடித்தன. தனக்கும் ஈரோடு செளந்தருக்குமான நட்பைப் பகிர்ந்துகொள்கிறார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

ஈரோடு செளந்தர்
ஈரோடு செளந்தர்

" 'புரியாத புதிர்' என்னுடைய முதல் படம். அதை தயாரிச்சது ஆர்.பி.செளத்ரி சார். அந்தப் படம் வெளியானப்பிறகு, என்னை அவருடைய ஆபீஸுக்கு கூப்பிட்டு செளந்தரை அறிமுகப்படுத்தி வெச்சு 'இவர் ஒரு அண்ணன் - தம்பி கதை வெச்சிருக்கார். சூப்பரா இருக்கு கேளுங்க'னு சொன்னார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்தக் கதைக்கு திரைக்கதை எல்லாம் எழுதி எடுத்தோம். அதுதான் 'சேரன் பாண்டியன்'. படம் பெரிய ஹிட். அப்புறம், உடனே 'புத்தம்புது பயணம்' பண்ணோம். அதுவும் செளந்தருடைய கதை. நான் திரைக்கதை, வசனம் எழுதி செளத்ரி சார் தயாரிச்சு வெளியான படம்.

அடுத்து, என்னுடைய பத்தாவது படமான 'நாட்டாமை'க்கு நானும் செளந்தரும் சேர்ந்தோம். படம் பயங்கர ஹிட்டாச்சு. தெலுங்கு, கன்னடம், இந்தினு ரீமேக்காச்சு. அப்புறம், பெரிய கேப் விழுந்திடுச்சு. அவன் ரொம்ப கோபக்காரன். அப்பப்போ என்கிட்ட கோபப்பட்டு போயிடுவான். அப்புறம், மறுபடியும் வந்து நல்லா பேசுவான். ஆனா, மனுஷன் ரொம்ப நல்லவன். கடைசி வரைக்குமே என்கூட நல்ல தொடர்புலதான் இருந்தான். என்ன பிரச்னை வந்தாலும் வெளியே காட்டிக்கவேமாட்டான். ஊருக்குள்ள கம்பீரமா வாழணும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். கதை விவாதத்துல செளந்தருடைய இன்புட்ஸ் ரொம்ப அபாரமா இருக்கும். அவனுடைய ஸ்டைல் தனியா இருக்கும். எது யோசிச்சாலும் நேட்டிவிட்டிக்கும் எமோஷனுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும்.

கே.எஸ்.ரவிக்குமார்
கே.எஸ்.ரவிக்குமார்

'சிம்மராசி', 'முதல் சீதனம்'னு ரெண்டு படத்தை டைரக்‌ஷன் பண்ணான். அவன் படம் இயக்கும்போது என்கிட்ட, 'இன்னொரு 'நாட்டாமை'யை கொடுக்கிறேன் பாருங்க'ன்னு சொல்லிட்டு பண்ணுவான். எங்களுக்குள்ள அப்பப்போ சின்னச்சின்ன ஊடல் இருக்கும். 'நட்புக்காக' படத்தைப் பார்த்துட்டு, 'எப்படி நான் இல்லாமல் இவ்ளோ அழகா கோயம்புத்தூர் நேட்டிவிட்டி கொண்டுவந்தார்'னு யார்கிட்டேயோ பேசிருக்கான். அப்புறம் எனக்கு தகவல் வந்தது. அந்தப் படத்துல 'மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா'னு வர்ற பாடல் வரி மாதிரிதான் செளந்தர் எனக்கு. மீசைக்காரன், ரொம்ப ரோசக்காரன்.

ஜெயலலிதாவின் போராட்டம் அரசியலில் மட்டுமல்ல... சினிமாவில் யார் யாருடன் மோதினார் தெரியுமா?!

ரொம்ப வருஷமா அவனுக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்தது. அப்புறம், டயாலிசிஸ் எடுத்துக்கிட்டிருந்தான். அப்பப்போ கொஞ்ச உதவிகள் பண்ணிட்டு இருந்தேன். ஒருமுறை நான் அவன்கிட்ட, 'சென்னை வா. எனக்கு தெரிஞ்ச டாக்டர்கிட்ட சொல்லி டிரான்ஸ்பிளான்ட் பண்ணலாம்'னு சொன்னேன். அதுக்கு, 'ஐயோ நான் வரலைப்பா. டிரான்ஸ்பிளான்ட் பண்ணா இறந்திடுவாங்க. இதுலயே சரியாகிடும்'ன்னே சொல்லிட்டு இருந்தான். கடைசியா அவன் பேரனை வெச்சு ஒரு படம் எடுக்கணும்னு 'உள்ளேன் ஐயா'னு ஒரு படம் பண்ணான். அதுல ஒரு நாள் போய் அவனுக்காக நடிச்சுட்டு வந்தேன். செளந்தர் இறந்த தகவலைக் கேட்டதிலிருந்து ரொம்ப கஷ்டமா இருக்கு. அவன் ஆன்மா சாந்தி அடையட்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு