Published:Updated:

``நாகேஷ் சார் கடைசியா நடிச்சதும், பார்த்ததும் என் படம்தான்!" - கே.எஸ்.ரவிகுமார்

மனோரமா, நாகேஷ், கமல், கௌதமி, அக்ஷரா உடன் கே.எஸ்.ரவிகுமார்
மனோரமா, நாகேஷ், கமல், கௌதமி, அக்ஷரா உடன் கே.எஸ்.ரவிகுமார்

நாகேஷை வைத்து `சேரன் பாண்டியன்' படத்தில் ஆரம்பித்து `அவ்வை சண்முகி', `பஞ்சதந்திரம்', `தசாவதாரம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிகுமார். நாகேஷ் நினைவு நாளையொட்டி அவரிடம் பேசினோம்.

``நான் ஸ்கூல் படிச்ச காலத்துல இருந்தே நாகேஷ் சார் எனக்கு நல்ல பழக்கம். என்னோட ஃபிரெண்டு நாராயணனோட அப்பா ஒரு சினிமா தயாரிப்பாளர். `கை நிறைய காசு'னு ஒரு படம் நாகேஷ் சாரை வெச்சு தயாரிச்சிட்டிருந்தார். அந்தப் படத்துல நாகேஷ் சாருக்கு டபுள் ரோல். சரண்யா பொன்வண்ணனோட அப்பா ராஜன் சார்தான் அந்தப் படத்தோட இயக்குநர். ஷூட்டிங் போயிட்டிருந்தப்போ நாராயணன்கூட சேர்ந்து ஸ்பாட்டுக்குப் போனேன். அப்போதான் நாகேஷ் சாரை முதன் முதல்ல நேர்ல பார்த்தேன். அப்போ இருந்து அவர் எனக்கு நல்ல பழக்கமாகிட்டார்."

நாகேஷ்
நாகேஷ்

``அதுக்கப்புறம் அடிக்கடி நாகேஷ் சார் வீட்டுக்குப் போவேன். அவரோட பையனுக்கும் எனக்கும் சின்ன வயசு வித்தியாசம்தான். அதனால என்னையும் அவரோட ஒரு பையனா பார்த்தார். என்னோட ரொம்ப நட்பா இருப்பார். அவருக்கு வெளி ஊர்கள்ல ஷூட்டிங் இருக்கிறப்போ என்னையும் சேர்த்து கூட்டிட்டுப் போவார். ஏன்னா, ஷூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் அவருக்குப் பேச்சுத் துணைக்கு ஒரு ஆள் வேணும். அந்த சமயத்துல அவரோட நெருங்கிப் பழகுறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. நிறைய ஜோக் அடிப்பார்; கதைகள் சொல்வார்."

``அவருக்கு நிஜ வாழ்க்கையிலும் டைமிங் சென்ஸ் ஜாஸ்தி. மத்தவங்க பேசுறதை கூர்ந்து கவனிப்பார். அவர் அதிகம் பேச மாட்டார். `பார்த்த ஞாபகம் இல்லையா' படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். ஆர்ட்டிஸ்ட் எல்லோருக்கும் எப்படி நடிக்கணும்னு நடிச்சே காட்டுவார். என்னோட ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கிற நடிகர்களுக்கும் இப்படித்தான் நானும் நடிச்சுக் காட்டுவேன். இதை அவர்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். என்னோட ரெண்டாவது படம் `சேரன் பாண்டியன்'. அதுல நாகேஷ் சாரை நடிக்க வெச்சிருப்பேன். வசனங்கள் சொல்லி எப்படி நடிக்கணும்னு சொல்லிக் காட்டுவேன். `எனக்கே நடிச்சுக் காட்டுற'னு மேலயும் கீழயும் பார்த்தார். அவரோட கடைசி படம்கூட நான் இயக்கின `தசாவதாரம்'தான். இந்தப் பாக்கியம் எனக்குத்தான் கிடைச்சிருக்கு. அவர் இறந்த அப்புறம் `கோச்சடையான்' படத்தை எடுத்தோம். அப்பகூட அனிமேஷன்ல அவரைக் கொண்டு வந்தோம். ஏன்னா, நாகேஷ் சாருக்கான கேரக்டராதான் அது இருந்தது. சௌந்தர்யாதான் படத்தை டைரக்ட் பண்ணாங்க. நான் இப்படிச் சொன்ன உடனே ஓகே சொல்லிட்டாங்க."

கே.எஸ்.ரவிகுமார்
கே.எஸ்.ரவிகுமார்
`` `இன்னுமாடா கமல்  அந்தக்  கோழி சாகலை'னு கேட்பார்  நாகேஷ் சார்!" - சரண்

``சினிமாவைத் தாண்டி என் வீட்டுல எந்த விசேஷம் நடந்தாலும் வந்துருவார். அவரோட பையன் ஆனந்த்பாபு வீட்டை நான் விலைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சாபு சிரில்தான் இன்டீரியர் வேலைகள் பண்ணியிருப்பார். ரொம்ப அழகான வீடு. அந்த வீட்டுல இருக்கவே எனக்கு தர்மசங்கடமா இருந்தது. என்னோட பசங்க விருப்பத்துக்காக கொஞ்ச நாள் இருந்தேன். அப்போ நாகேஷ் சார் பக்கத்து வீட்டுல இருந்தார். அடிக்கடி சந்திச்சுப் பேசுவோம். என்னோட படங்கள்ல எப்போ நடிக்கக் கூப்பிட்டாலும் வந்து நின்னுடுவார். அப்படித்தான் `அவ்வை சண்முகி' படத்துல ஜோசப் கேரக்டருக்காக வந்து நின்னார். நாகேஷ் சார் இல்லாத ஸ்பாட்லகூட அவரைப் பத்தி நானும் கமல் சாரும் பேசிட்டே இருப்போம். ஹியூமர் காட்சிகள்ல நான் நடிக்கும்போது, `இது நாகேஷ் சாரோட ஸ்டைல் மாதிரியே இருக்கு'னு நெருக்கமானவங்க சிலர் சொல்வாங்க. அந்தளவு அவர் எனக்குள்ளே வாழ்ந்தார்."

`` 'தசாவதாரம்' ஷூட்டிங் அப்போ அவருக்கு உடல்நிலை சரியில்லாம இருந்தது. இதனாலே அவரை அதிகமா நடிக்கவிடாம ஷாட் எடுத்திருப்பேன். ஆனா, அதுதான் அவரோட கடைசி படமா இருக்கும்னு நான் நினைக்கலை. இந்தப் படத்தோட ப்ரிவியூ ஷோ பார்த்துட்டு நாகேஷ் சாரைக் கட்டிப்பிடிச்சு கமல் சார் அழுதுட்டார். நாகேஷ் சார் கடைசியா பார்த்த படமும் இதுதான். ஆனா, தமிழ் சினிமாவுல எப்பவுமே வாழ்ந்துட்டுதான் இருப்பார். பல தலைமுறைகளைப் பார்த்தவர் அவர்'' என்று பேசி முடித்தார் கே.எஸ்.ரவிகுமார்.

அடுத்த கட்டுரைக்கு