Published:Updated:

“விஜய் ரசிகர்கள் கொடுத்த எனர்ஜி... ‘மாஸ்டர்’ எல்லாத்தையும் மாத்துவார்!”

விஜய் - மாளவிகா மோகனன்
பிரீமியம் ஸ்டோரி
விஜய் - மாளவிகா மோகனன்

- லோகேஷ் கனகராஜ் உற்சாகம்

“விஜய் ரசிகர்கள் கொடுத்த எனர்ஜி... ‘மாஸ்டர்’ எல்லாத்தையும் மாத்துவார்!”

- லோகேஷ் கனகராஜ் உற்சாகம்

Published:Updated:
விஜய் - மாளவிகா மோகனன்
பிரீமியம் ஸ்டோரி
விஜய் - மாளவிகா மோகனன்
“ ‘கைதி’ ஷூட்டிங்ல இருந்தப்போ, ‘விஜய் சார் புது இயக்குநர்கள்கிட்ட கதை கேட்கிறாராம். நீ கதை சொல்றியா’ன்னு என் ப்ரெண்ட் சதீஷ் கேட்டான். அப்போ நான் ஷூட்டிங்ல இருந்ததால அவன்கிட்ட எதுவும் சொல்லிக்கல. ஷூட்டிங்ல கொஞ்ச நாள் பிரேக் விட்டப்போ, நானே விஜய் சாரோட மேனேஜர் ஜெகதீஷ்கிட்ட கேட்டேன். ‘ஆமா பிரதர். சார் கதை கேட்டுட்டு இருக்கார்; ரெண்டு நாள் கழிச்சு வந்து கதை சொல்லுங்க’ன்னு சொன்னார். என்கிட்ட அப்போ ஒரு லைன் மட்டும்தான் இருந்துச்சு. சரி, இதை விஜய் சார்கிட்ட சொல்லுவோம். அவர் ஓகே சொன்னா, சந்தோஷம். இல்லைன்னா, அவரை மீட் பண்ணி ஒரு போட்டோ மட்டும் எடுத்துட்டு வந்திடலாம்னுதான் போனேன். அரை மணி நேரத்துல நான் சொல்லவேண்டியதை எல்லாம் சொன்னேன். ‘ரெண்டு நாள் டைம் கொடுங்க; இந்தக் கதை என் மண்டைக்குள்ள ஓடுதான்னு பார்க்கிறேன்’னு சொன்னார். நானும் திரும்ப வந்து ‘கைதி’ ஷூட்டிங்கை ஆரம்பிச்சிட்டேன். அடுத்த நாள் சாயங்காலமே ஜெகதீஷ் போன் பண்ணி, ‘வாழ்த்துகள் பிரதர். நீங்கதான் ‘தளபதி 64’ படத்தை இயக்கப்போறீங்க’ன்னு சொன்னார். என்னால நம்பவே முடியலை. அடுத்த நாள் விஜய் சாரைப் போய்ப் பார்த்தப்போ, அவரும் இதையேதான் சொன்னார். இப்படி டக்கு டக்குனு அமைஞ்சதுதான், ‘மாஸ்டர்’...” - மாஸ் மொமென்ட்டை தனக்கே உரிய அடக்கத்தோடு பேச ஆரம்பித்தார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
“விஜய் ரசிகர்கள் கொடுத்த எனர்ஜி... ‘மாஸ்டர்’ எல்லாத்தையும் மாத்துவார்!”

`` ‘மாஸ்டர்’ படத்தோட பர்ஸ்ட் லுக்கிலிருந்து டீசர் வரை வழக்கமான விஜய் படங்களிலிருந்து வித்தியாசமானதா இருந்தது; இதை எப்படி சாத்தியப்படுத்தினீங்க..?’’

‘‘விஜய் சார் எனக்குக் கொடுத்த சுதந்திரம்தான் காரணம்.

அவர் கதை கேட்டப்போ எனக்கான அடையாளமாய் ‘மாநகரம்’ படம் மட்டும்தான் இருந்துச்சு. ‘கைதி’ படத்தைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே அவரோட அடுத்த படத்தை இயக்குற வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். புதுசா ஒரு விஷயத்தைப் பண்ணலாம்கிற எண்ணம்தான் அதுக்குக் காரணம். அதனால்தான் இந்தப் படத்தை 50 சதவிகிதம் அவரோட படமாகவும் 50 சதவிகிதம் என்னோட படமாகவும் எடுக்க முடிஞ்சது. விஜய் சார், ஒரு முழுமையான இயக்குநரின் நடிகர்னுதான் சொல்லணும். ‘இதை அப்படி மாத்திக்கலாம்; இப்படி மாத்திக்கலாம்’னு எதுவுமே சொன்னதில்லை. வழக்கமாக விஜய் சாரோட படத்தில் என்னென்ன இருக்குமோ அதெல்லாம் இதிலும் இருக்கும். ஆனால், சில க்ளிஷேவான விஷயங்களைத் தவிர்த்திட்டோம். உதாரணத்துக்குச் சொல்லணும்னா, பொதுவாகவே விஜய் சார் படங்களில் அதிக கேரக்டர்கள் இருப்பாங்க. இந்தப் படத்திலும் அப்படித்தான் இருக்கும். ஆனால், எல்லா கேரக்டர்களும் புதுசா இருக்கட்டும்னு முடிவு பண்ணிதான் நடிகர் - நடிகைகளை செலக்ட் பண்ணினோம். இதை விஜய் சாரும் ரொம்பவே என்ஜாய் பண்ணினார். அதனால்தான், படத்தோட பர்ஸ்ட் லுக்கிலிருந்து டீசர் வரை எல்லாமே வித்தியாசமா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க.”

“விஜய் ரசிகர்கள் கொடுத்த எனர்ஜி... ‘மாஸ்டர்’ எல்லாத்தையும் மாத்துவார்!”

``வில்லன் கேரக்டருக்கு விஜய் சேதுபதிதான்னு எப்போ முடிவு பண்ணுனீங்க..?’’

‘‘ ‘கைதி’ ஷூட்டிங் முடிச்சவுடனே ‘மாஸ்டர்’ படத்தை ஆரம்பிக்க முடிவு பண்ணிட்டோம். ஆனால், நாள்கள் ரொம்பக் குறைவாகத்தான் இருந்துச்சு. அதனால எழுத்தாளர் பொன்.பார்த்திபன் சாரையும் ‘மேயாத மான்’, ‘ஆடை’ பட இயக்குநர் ரத்னகுமாரையும் சேர்த்துக்கிட்டு ஸ்கிரிப்ட்டை பைனல் பண்ற வேலைகளில் இருந்தேன். அப்போ, ஹீரோ கேரக்டருக்கு சமமா வில்லன் கேரக்டரும் இருக்கணும்னு நினைச்சுதான் எழுதினோம். என் ப்ரெண்ட் சதீஷ், ‘நீ இந்தக் கேரக்டருக்கு விஜய் சேதுபதி அண்ணாகிட்ட கேட்கலாமே’ன்னு சொன்னான். ‘எப்படிக் கேட்கிறதுன்னு தெரியலைடா’ன்னு நான் சொன்னதும், அதை சேது அண்ணாகிட்ட சதீஷ் சொல்லியிருக்கார். நான் குறும்படங்கள் பண்ணுன சமயத்தில் இருந்தே சேது அண்ணாகூட நல்ல பழக்கமா இருந்ததனால, அதைக் கேட்டதும் அவரே எனக்கு போன் பண்ணி, ‘ஏண்டா, என்கிட்ட கேட்கிறதுல உனக்கு என்ன தயக்கம்’னு உரிமையா கேட்டார். இதை விஜய் சார்கிட்ட சொன்னப்போ, ‘அவர் ஹீரோவா பண்ணிட்டு இருக்கார். இந்தக் கேரக்டரில் நடிப்பாரா’ன்னு கேட்டார். நான் சேது அண்ணாவைச் சந்திச்சப்போ, ‘நான் உன்னை நம்புறேன்டா’ன்னு சொல்லி நடிக்கிறதுக்கு ஓகே சொல்லிட்டார். கிட்டத்தட்ட படத்தோட பைனல் ஷெட்யூலில்தான், இவங்க ரெண்டு பேருக்குமான காம்பினேஷன் காட்சிகளை எடுத்தோம். முதல் நாள் ஷூட்டிங்கிலேயே ரெண்டு பேரும் செம ஜாலியா இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. கிட்டத்தட்ட 18 நாள்கள் ரெண்டு பேரும் ஒண்ணா நடிச்சாங்க. இந்த 18 நாள்களும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரெண்டு பேரும் அவங்கவங்க கேரவனுக்குக்கூடப் போகாமல், செட்டிலேயே உட்கார்ந்து பேசிட்டிருப்பாங்க. அதுக்கு மிகப்பெரிய உதாரணம்தான், சேது அண்ணா விஜய் சாருக்குக் கொடுத்த முத்தம்.”

“விஜய் ரசிகர்கள் கொடுத்த எனர்ஜி... ‘மாஸ்டர்’ எல்லாத்தையும் மாத்துவார்!”

``ஏப்ரல் 9-ம் தேதி படத்தை ரிலீஸ் பண்ண முடியாதுங்கிற நிலை வந்தப்போ என்ன நினைச்சீங்க..?’’

‘‘ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நாலஞ்சு மாசம் எந்த வேலையும் பார்க்காமல், வீடியோ காலில் எல்லாரோட முகங்களையும் பார்த்துக்கிட்டு இருந்தோம். இந்தக் கஷ்டமான நேரத்தில் விஜய் சார் ரசிகர்களோட சப்போர்ட்தான் எங்களுக்கு மிகப்பெரிய எனர்ஜியைக் கொடுத்துச்சு. படம் ஓ.டி.டி-யில் ரிலீஸ்னு செய்தி வரும்போதெல்லாம், ’எவ்வளவு லேட்டானாலும் பரவாயில்லை. படத்தை தியேட்டரிலேயே ரிலீஸ் பண்ணுங்க. நாங்க வெயிட் பண்றோம்’னு அவ்வளவு மெசேஜ் வரும். அவங்க ஆசைப்பட்ட மாதிரியே படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் பண்ணணும்னு முடிவு பண்ணி, இப்போ அந்த நாளுக்காகக் காத்திட்டிருக்கோம். விஜய் சார்கிட்ட எப்போ பேசினாலும், ‘நம்ம டீமை தைரியமா இருக்கச் சொல்லுங்க. எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க. நம்ம படம் எப்போ வந்தாலும் ஜெயிக்கும்’னு சொல்லிட்டே இருப்பார். எல்லாமே நல்லதா நடந்தால், நிச்சயமா படம் பொங்கலுக்கு வரும். இப்போ இருக்கிற நிலைமையில் தியேட்டருக்கு மக்கள் வருவாங்களான்னு எல்லாருக்கும் ஒரு கேள்வி இருக்கும். மாஸ்டர் வந்து அதையெல்லாம் மாற்றுவார்.”

“விஜய் ரசிகர்கள் கொடுத்த எனர்ஜி... ‘மாஸ்டர்’ எல்லாத்தையும் மாத்துவார்!”

`` ‘மாஸ்டர்’ படத்தோட டீசர் வந்தப்போ அதில் விஜய்க்கு வசனம் இல்லாததையும், ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டும் பல கருத்துகள் வந்ததே?’’

‘‘பொதுவா விஜய் சாரோட படங்களில் நிறைய பன்ச் டயலாக் இருக்கும். அதை டீசர் முடியும்போது வைப்பாங்க. இது அந்த மாதிரியான படம் இல்லை; இதில் அவர் பன்ச் டயலாக் பேசியே நடிக்கலை. அதனாலேயே, டீசரில் எந்த டயலாக்குமே இல்லாமல் பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். நிச்சயமா, டிரெய்லரில் விஜய் சார் பேசுற வசனங்கள் இருக்கும். அதே மாதிரி, டீசர் வந்ததுல இருந்து ‘பைட் கிளப்’ படத்தோடு கம்பேர் பண்ணி போஸ்ட் போட்டதை நானும் பார்த்தேன். அந்த மாதிரி படத்துல எந்தக் குறியீடும் படத்தில் இல்லை. இது பக்கா ஆக்‌ஷன் என்டர்டெயினர்.”

“விஜய் ரசிகர்கள் கொடுத்த எனர்ஜி... ‘மாஸ்டர்’ எல்லாத்தையும் மாத்துவார்!”

`` ‘மாஸ்டர்’ படத்தில் நீங்களும் ஒரு கேரக்டரில் நடிச்சிருக்கீங்களாமே..?’’

‘‘விஜய் சார்தான் ஒரு நாள், ‘நீ எங்க எல்லாரையும் நடிக்கச் சொல்லி டார்ச்சர் பண்ற; நீயும் ஒரு சீன்ல நடிக்கணும்’னு சொன்னார். நானும் முதல்ல சும்மாதான் சொல்றார், அப்புறம் மறந்திடுவார்னு நினைச்சேன். கரெக்ட்டா கடைசி நாள் ஷூட்ல அதை ஞாபகம் வெச்சிருந்து, ஒரு சீனில் நடிக்கச் சொன்னார். ‘நான் நடிக்கணும்னா, அந்த சீனை நீங்கதான் டைரக்ட் பண்ணணும்’னு சொன்னேன். இப்படி சொன்னா விட்ருவாருன்னு நினைச்சேன்; ஆனால், ‘பண்ணிட்டாப் போச்சு’ன்னார். அப்பறம் விஜய் சார் ஆக்‌ஷன், கட் சொல்லி, நான் நடிச்சேன்.”

“விஜய் ரசிகர்கள் கொடுத்த எனர்ஜி... ‘மாஸ்டர்’ எல்லாத்தையும் மாத்துவார்!”

``கார்த்தி, விஜய், கமல்னு அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் அமையறது பெரிய விஷயம். அதே சமயம் இந்த ஹீரோவுக்கு அடுத்து அதைவிடப் பெரிய ஹீரோ படம்தான் பண்ணணும்னு ப்ரெஷர் தமிழ் சினிமாவில் இருக்கா? இதை எப்படி பிளான் பண்றீங்க..?’’

‘‘இது தானாக அமைஞ்ச ஒரு விஷயம்தான். `மாநகரம்’ படத்தை முடிச்சிட்டு ‘கைதி’ கதையை மன்சூர் அலிகான் சாருக்காகத்தான் எழுதினேன். ஆனால், அது கார்த்தி சாருக்கு அமைஞ்சது. `கைதி’ பண்ணும்போதே, விஜய் சாருக்குக் கதை சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு வந்துச்சு. அது இப்போ ‘மாஸ்டர்’ படமாக மாறியிருக்கு. வாழ்க்கையில் ஒரு தடவையாச்சும் கமல் சாரைப் பார்த்திட மாட்டோமான்னு ஏங்கிட்டிருந்த எனக்கு, அவரோடு படம் பண்றதுக்காக வாய்ப்பும் வந்துச்சு. இப்படி எல்லாமே அதுவாக அமைஞ்சதுதான். நான் எந்த பிளானும் பண்ணலை; அந்த ப்ரெஷரும் இங்க இல்லை.”

“விஜய் ரசிகர்கள் கொடுத்த எனர்ஜி... ‘மாஸ்டர்’ எல்லாத்தையும் மாத்துவார்!”

`` ‘விக்ரம்’ பட வேலைகள் எப்படிப் போயிட்டிருக்கு..?’

‘‘ ‘கைதி’ ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே கமல் சாரோட தயாரிப்பில் ஒரு படம் பண்றதுக்கு கமிட்டானேன். அதுவே என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணமா இருந்தது. ஏன்னா, அவரோட படங்களைப் பார்த்துதான் நான் சினிமாவே கத்துக்கிட்டேன். அவர் தயாரிப்பில் பண்றதா இருந்த படம், அவர் நடிக்கிற படமாகவும் மாறிடுச்சு. இதுவரைக்கும் நான் எழுதிய கதைகளில், அவரோட படமோ, அவர் நடிச்ச ஒரு கதாபாத்திரமோ ஏதாவது ஒரு இடத்தில் வந்திடும். இப்போ எனக்கு இருக்கிற டாஸ்க்கே, ’விக்ரம்’ படத்தில் அப்படி எதுவும் இல்லாமல் எழுதுறதுதான்.”

“விஜய் ரசிகர்கள் கொடுத்த எனர்ஜி... ‘மாஸ்டர்’ எல்லாத்தையும் மாத்துவார்!”

``நடிகர் கமல் இப்போ அரசியல்வாதி கமலாகவும் மாறியிருக்கார்; அதுக்கு ஏற்றமாதிரிதான் இந்தக் கதையைப் பண்ணச் சொல்லியிருக்காரா..?’’

‘‘ ‘விக்ரம்’ டிஸ்கஷனில் உட்காரும்போது, அவர் அரசியல்வாதி கமல்ஹாசனாக இருக்கவே மாட்டார். ஒரு நடிகரா, ஒரு எழுத்தாளராகத்தான் ஒரு படத்தை அணுகுவார். ‘எனக்காக இதைப் பண்ணு, இது வேணாம்’னு அவர் எப்போதுமே சொன்னதில்லை.”