Published:Updated:

“ரஜினி ஹீரோ... கமல் வில்லன்... ஒரு மிரட்டலான ஸ்கிரிப்ட்!”

லோகேஷ் கனகராஜ்
பிரீமியம் ஸ்டோரி
லோகேஷ் கனகராஜ்

ரொம்பப் பெருமையா இருக்கு. அவருக்கு இது ரெண்டாவது அவார்டு. ‘தர்மம்'னு அவர் இயக்கின குறும்படத்தின்போதுதான் எனக்கு அறிமுகமானார்.

“ரஜினி ஹீரோ... கமல் வில்லன்... ஒரு மிரட்டலான ஸ்கிரிப்ட்!”

ரொம்பப் பெருமையா இருக்கு. அவருக்கு இது ரெண்டாவது அவார்டு. ‘தர்மம்'னு அவர் இயக்கின குறும்படத்தின்போதுதான் எனக்கு அறிமுகமானார்.

Published:Updated:
லோகேஷ் கனகராஜ்
பிரீமியம் ஸ்டோரி
லோகேஷ் கனகராஜ்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் சிறப்பு விருந்தினராக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார். மாணவ நிருபர்களின் கேள்விகளும் லோகேஷின் சுவாரஸ்யமான பதில்களும் இங்கே...

`` ‘விக்ரம்' பார்த்துட்டு யாரெல்லாம் பேசினாங்க?’’

‘‘ரஜினி சார் என்னுடைய நான்கு படங்களுக்கும் போன் பண்ணிப் பேசினார். ‘விக்ரம்’ முதல் நாள் நைட்டே பார்த்துட்டுப் பேசினார். ரெண்டு நாள் கழிச்சு, ரெண்டாவது முறை பார்த்துட்டு மறுபடியும் பேசினார். விஜய்ண்ணா முதல் நாள் முதல் ஷோ பார்த்தார்னு நினைக்கறேன். அன்னைக்கு நான் நெட்வொர்க் இல்லாத ஏரியாவுல இருந்தேன். அவர் அனுப்பியிருந்த மெசேஜையே சாயங்காலமாதான் பார்த்தேன். ‘மைண்ட் ப்ளோயிங்'னு பாராட்டியிருந்தார். அப்புறம், அவருக்கு போன் பண்ணிப் பேசினேன். அவர் ரெண்டு முறை படம் பார்த்தார். சிரஞ்சீவி சார் வீட்டுக்குக் கூப்பிட்டிருந்தார். சல்மான் கான் சார் பேசினார், ராம் சரண், அல்லு அர்ஜுன், யஷ்னு எல்லோரும் பேசினாங்க. மலையாள இன்டஸ்ட்ரியில இருந்து நிறைய பேர் வாழ்த்து சொன்னாங்க. எல்லாமே பெரிய சர்ப்ரைஸ்தான்.''

``சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி கண்ட கனவுகள் இப்ப நடக்குதுன்னு வியந்திருக்கீங்களா?’’

‘‘அப்படிக் கனவுகள்னு பெருசா எதுவும் இருந்ததில்ல. முதல் ஷார்ட் பிலிம் முடிச்சதும் கிடைச்ச முதல் கைத்தட்டல்தான் எல்லாத்தையுமே மாத்தியிருக்குன்னு நினைக்கிறேன். சில விஷயங்கள் நமக்குத்தான் நடக்குதான்னு ஆச்சர்யமா தோணும்போது, நான் எங்கிருந்து வந்தேன்னு பழசையும் திரும்பிப் பார்ப்பேன். இப்படி நினைச்சுப் பார்க்கிறதை விட்டுடக்கூடாது என்பதுதான் சினிமாவுக்கான முயற்சியாகவும் இருக்கும். ஆனந்த விகடன்ல ‘மாநகர'த்துக்கு ஐம்பது மார்க் கொடுத்திருந்தாங்க. ஒரு சின்னப் படத்துக்கு இவ்ளோ மார்க் வாங்கினதும் அந்தப் படம் கவனத்துக்கு வந்தது. ‘அந்தப் படத்துக்கு ஏன் அவ்ளோ மார்க்'னு படம் பார்க்க ஆரம்பிச்சாங்க. படம் பிக்கப் ஆகிடுச்சு. ஸோ, இந்த நேரத்துல விகடனுக்கு நன்றி சொல்லிக்கறேன்.''

“ரஜினி ஹீரோ... கமல் வில்லன்... ஒரு மிரட்டலான ஸ்கிரிப்ட்!”

``உங்க நண்பரும் ‘மண்டேலா' இயக்குநருமான மடோன் அஸ்வினுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு..?’’

‘‘ரொம்பப் பெருமையா இருக்கு. அவருக்கு இது ரெண்டாவது அவார்டு. ‘தர்மம்'னு அவர் இயக்கின குறும்படத்தின்போதுதான் எனக்கு அறிமுகமானார். அந்த ஷார்ட் பிலிமுக்குத்தான் அவருக்கு முதல் விருது கிடைச்சது. 2014-ல நான் படம் ஆரம்பிச்சிட்டேன். ‘மண்டேலா' மாதிரி ஒரு படம் பண்ணணும்னு விரும்பி, பொறுமையா இருந்தார். நான் கடைசி பெஞ்ச் மாணவன்னா, அவர் முதல் பெஞ்ச் மாணவர். அவர் ‘மண்டேலா' மாதிரி ஒரு படம் பண்ணலைனாதான் ஆச்சர்யம்.''

``அடுத்து வரப்போற உங்க படங்கள்..?’’

‘‘எனக்கும் கமிட்மென்ட்ஸ் அதிகமாகிட்டே போகுது. இருந்தாலும் அடுத்தடுத்து உடனே பண்ணணும் என்கிற அவசரம் எதுவுமில்ல. இப்ப பண்ணப்போற படங்கள்கூட, ஏற்கெனவே பண்ணி வச்சிருந்த கமிட்மென்ட்கள்தான். அதுக்கான வேலைகள்தான் இப்ப போகுது. இப்போதைக்கு ரெண்டு படங்கள் லைன்அப்ல இருக்கு. அதுக்கடுத்து எதுவும் முடிவாகாமல் இருக்கு.''

`` ‘மாஸ்டர்' இந்தியில் ரீமேக் ஆகிறதாகவும், அதில் சல்மான்கான் நடிக்கிறதாகவும் தகவல் வந்துச்சே?’’

‘‘எனக்கும் தகவல் வந்துச்சு. சல்மான் சார்கிட்ட பேசினேன். ‘மாஸ்டர்' வெளியான சமயத்துல கேட்டிருந்தாங்க. அப்ப நான் ‘விக்ரம்'ல இருந்ததால என்னால பண்ணமுடியாதுன்னு சொல்லியிருந்தேன். இப்ப யார் பண்றாங்கன்னு தெரியல. ஆனா, நடக்குதுன்னு நினைக்கறேன்.''

``சினிமாவுக்குள் வந்ததும் வாழ்க்கை பற்றி பயம் வந்திருக்கா?’’

‘‘சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி பயந்திருக்கேன். எங்கே போகப்போறோம்னு தெரியாம இருந்துச்சு. அப்ப பயம் ஜாஸ்தியா இருந்துச்சு. ஆனா, சினிமாவுக்குள்ள வந்த பின்னாடி, பயம் பெருசா இல்ல. பொழைச்சுக்கலாம்னு நம்பிக்கை வந்துடுச்சு.''

``ஒரு நல்ல திரைப்படத்திற்குப் பாடல்கள் முக்கியம்னு நினைக்கிறீங்களா?’’

‘‘நம்மகிட்ட இருந்து பாடல்களை எப்படிப் பிரிக்க முடியாமல் இருக்குதோ அப்படி அதைப் படத்திலும் பிரிக்க முடியாது. அதே சமயம், ‘கைதி' மாதிரி படத்திற்கு எங்கேயுமே பாட்டு தேவையில்லை. பாடல்களை வச்சு, படம் பண்றது எனக்குமே பிடிக்கும். ஆனாலும் அதுக்கான சூழல் படத்துல அமையணும். ‘விக்ரம்'ல வந்த ‘போர்கண்ட சிங்கம்' உண்மையிலேயே அந்த சிச்சுவேஷனுக்குத் தேவைன்னு எனக்குத் தோணுச்சு. ‘மாஸ்டர்'ல இடைவேளை சமயத்துல இரண்டு பசங்க தூக்குல தொங்குறப்ப வரும் பாடலை, முக்கியமான பாடலா பாக்குறேன். ஆழமான எமோஷன்களை ஜனங்களுக்குக் கடத்தறதுல பாடல்களின் பங்கு முக்கியம்.’’

``நீங்க ரஜினியோட படம் பண்றதா ஒரு பேச்சு வந்துச்சு. அப்புறம், அதைப் பத்தி எந்த அப்டேட்டும் இல்லையே?’’

‘‘ரஜினி சார் ரொம்பப் பெரிய ஸ்டார். அவரோடு படம் பண்றதுக்கான பேச்சுகள் நடந்தது. ஆனா, ‘எப்போ, எங்கே?’ என்பதற்கான பதில்கள் என்கிட்ட இல்ல. ரஜினி சார் படம் பண்ண யாருக்குத்தான் ஆசையில்லாம இருக்கும்? கண்டிப்பா அவரோட படம் பண்ண விரும்புறேன். ஆனா, நாம நினைக்கற மாதிரி அது அவ்ளோ ஈஸி இல்ல. நடக்கும்போது நடக்கட்டும்! ரஜினி சார், சல்மான்கான் சார்னு எல்லோரோடும் ஒர்க் பண்ண ஆசை இருக்கு.''

`` ‘Lokesh Cinematic Universe'ல இனி சீக்வெல் மட்டும்தானா? இல்ல, தில்லி, ரோலக்ஸ்னு கேரக்டர்களுக்கான ப்ரீக்வெலும் உண்டா?’’

‘‘இந்த யுனிவர்ஸுக்கு எந்த பிளானும் பண்ணல. அது எவ்ளோ தூரம் வொர்க் ஆகப்போகுதுன்னு டீசர்ல வச்சிருந்தேன். ஆடியன்ஸோட வரவேற்பைப் பொறுத்து அடுத்தடுத்துப் பண்ணலாம்னு திட்டமிட்டேன். ஆனா, ‘எல்.சி.யு'னு பெயர் வச்சதே மக்கள்தான். எனக்கு அப்ப ஐடியாவே இல்ல. இதுல யுனிவர்ஸ்னு ஒண்ணு அமைஞ்சாலே, கதைக்கு முன்னாடி, கதைக்குப் பின்னாடின்னு எதுவேணாலும் எடுக்க முடியும். அதுக்கான சாத்தியம் உண்டு. ஏன்னா, ஆடியன்ஸ் அதுக்கான கனெக்ட்ல இருப்பாங்க. தில்லின்னு பெயர் வச்சாலே கார்த்தி சார்னு தோண ஆரம்பிச்சிடும். ‘கைதி2', ‘விக்ரம்2'க்குன்னு இப்ப ஐடியா இருக்கு.''

``ஹீரோயின் சென்ட்ரிக் படங்களை உங்ககிட்ட இருந்து எப்போ எதிர்பார்க்கலாம்?’’

‘‘நான் அப்படி யோசிச்சதில்ல. இப்ப ஏஜெண்ட் டீனா கேரக்டர் எல்லாருக்கும் பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க. அதனால, அதை ஒரு வெப்சீரிஸா பண்ற ஆசை இருக்கு.''

`` ‘ஊமை விழிகள்' படத்தை ரீமேக் பண்ண ஆசைன்னு சொல்லியிருந்தீங்க. ஏன்?’’

‘‘அந்தப் படத்துடைய கேரக்டர்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரவிச்சந்திரன் சாருடைய சீன் பார்க்கும்போது சின்ன வயசுல ரொம்ப பயமா இருக்கும். 35 வருஷத்துக்கு முன்னாடியே இவ்வளவு தரமா பண்ணியிருக்காங்கன்னா, இப்போ இன்னும் சூப்பரா பண்ணி அந்தப் படத்துக்குக் கூடுதல் மரியாதை செலுத்தலாம்னு தோணுச்சு. தவிர, நைட், க்ரைம், ஆக்‌ஷன், மல்டி ஸ்டாரர்னு என்னுடைய பேட்டர்ன்ல இருக்கு. எனக்கு ரீமேக்ல உடன்பாடு இருந்ததில்லை. அதையும் மீறி ரீமேக் பண்ண நினைச்சா, ‘ஊமை விழிகள்', ‘இணைந்த கைகள்' படங்களாதான் இருக்கும்.’’

``ரத்னகுமார், ஸ்ரீகணேஷ், நித்திலன், கார்த்திக் யோகின்னு உங்க ப்ரெண்ட்ஸ் கேங் பத்திச் சொல்லுங்க... எப்படி எல்லோரும் நண்பர்களானீங்க?’’

‘‘நான், ரத்னகுமார், ஈனாக், ‘கணம்' பட இயக்குநர் ஸ்ரீகார்த்திக், ‘மண்டேலா' அஷ்வின், ‘குரங்கு பொம்மை' நித்திலன், ‘8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ், ‘சவாரி' குகன், ‘டிக்கிலோனா' கார்த்திக் யோகின்னு ஒன்பது பேர் ஒரு அப்பார்ட்மென்ட்ல இருந்தோம். இன்னைக்கு எல்லோரும் இயக்குநராகிட்டோம். எல்லோரும் ரொம்ப நெருக்கம். ஒருத்தருக்கொருத்தர் கதையைப் படிச்சுக் கருத்து சொல்லிக்குவோம். வொர்க் ஆகும் ஆகாதுன்னு பேசி கதையை மெருகேத்துவோம். காரணம், யாரும் யார்கிட்டேயும் உதவி இயக்குநரா இருந்ததில்லை. எங்களுக்குள்ள போட்டி இருந்ததில்லை. எல்லோரும் ஜெயிக்கணும்னுதான் ஓடினோம்; ஓடிட்டிருக்கோம். அந்த டைமை நினைச்சுப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.’’

``இயக்குநரான பிறகு, நீங்க மிஸ் பண்ற விஷயம் என்ன?’’

‘‘டீக்கடை. வீட்டுப் பக்கத்துல ஒரு டீக்கடை இருக்கும். அங்கதான் சினிமா பத்தி நிறைய பேசிட்டு இருப்போம். நானும் ‘உறியடி' விஜயகுமாரும் ரொம்ப நெருக்கமான நண்பர்கள். ரெண்டு பேரும் படம் பண்ணின பிறகும்கூட, சாலிகிராமம் ஏரியாவுல இருக்கிற டீக்கடைகள்ல நின்னு மணிக்கணக்கா பேசியிருக்கோம். அப்போவே அவனுக்கு ரசிகர்கள் அதிகம். இப்போ பழைய மாதிரி டீக்கடைக்குப் போக முடியாது. அதைத்தான் மிஸ் பண்றேன்.’’

``சமீபமா நீங்க பார்த்து வியந்த படம்?’’

‘‘நிறைய இருக்கு. டக்குனு ஞாபகம் வர்றதை சொல்றேன். என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணினது, ‘ஒரு கிடாயின் கருணை மனு.' கொண்டாடியிருக்க வேண்டிய படம். ‘மண்டேலா' சூப்பரா இருந்தது. ‘அய்யப்பனும் கோஷியும்' மூணு முறை பார்த்தேன். எஸ்.ஆர்.பிரபு சாருக்கு போன் பண்ணி, இந்தப் படத்தை நாம ரீமேக் பண்ணலாம்னு சொன்னேன். பிஜு மேனன் கேரக்டர்ல சூர்யா சாரும் பிரித்விராஜ் கேரக்டர்ல கார்த்தி சாரும் பண்ணலாம்னு பேசினோம். சூர்யா சார், கார்த்தி சார் ரெண்டு பேர்கிட்டேயும் பேசினேன். அப்புறம்தான், அந்தப் படத்துடைய தமிழ் ரீமேக் உரிமை வேற பக்கம் போயிடுச்சுன்னு சொன்னாங்க. அதனால பண்ண முடியாமப்போச்சு.’’

``கமல் கொடுத்த கார்ல முதல்முறை எங்கே போனீங்க?’’

‘‘நான் பெருசா கார் ஓட்டமாட்டேன். ஏற்கெனவே, ரெண்டு மூணு முறை கார் ஓட்டி பிரச்னையாகியிருக்கு. கமல் சார் என்னை கார் ஓட்டச் சொன்னார். ‘இல்ல சார், நீங்க எடுங்க'ன்னு சொன்னேன். என்னை உட்கார வெச்சு, எல்டாம்ஸ் ரோட்ல ஒரு ரவுண்டு வந்தார். அந்த ஏரியாவுல எந்தெந்த இயக்குநர்கள், எந்தெந்த நடிகர்கள் எந்தெந்த வீட்ல இருந்தாங்கன்னு காட்டிக்கிட்டே வந்தார். அன்னைக்கு நைட் 20 நிமிஷம் நாங்க ரெண்டு பேர் மட்டும் அந்த கார்ல போயிட்டு வந்தோம்.’’

“ரஜினி ஹீரோ... கமல் வில்லன்... ஒரு மிரட்டலான ஸ்கிரிப்ட்!”

``உங்களுக்கும் பிரியாணிக்குமான தொடர்பு எப்போதிலிருந்து ஆரம்பமாச்சு?’’

‘‘ ‘விக்ரம்' படத்துக்கு முன்னாடி வரை என் படங்கள்ல எதார்த்தமா பிரியாணி சீன் அமைஞ்சதுதான். ‘கைதி' படத்துக்காக நிறைய கைதிகளைச் சந்திச்சேன். ஜெயில்ல இருந்து வந்தவுடன் என்ன பண்ணீங்கன்னு கேட்டேன். அப்போ ஒவ்வொருத்தர் சொன்ன விஷயங்கள் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. ஒருத்தர் நாய் குரைக்கிறதைப் பார்த்துப் பல வருஷமாச்சுன்னு நாய் பக்கத்துல உட்கார்ந்து அது குரைக்கிறதைப் பார்த்திட்டு இருந்திருக்கார். உள்ளே வெள்ளை நிற உடையை மட்டும் பார்த்துப் பார்த்து, வெளியே வந்தவுடன் கலர் கலரான பொருள்களை ஒருத்தர் பார்த்திருக்கிறார். இப்படி ஒவ்வொருத்தரும் நிறைய சொன்னாங்க. ஆனா, எல்லோரும் ஒரே மாதிரி சொன்ன விஷயம், சாப்பாடு. வீட்டுக்கு வந்தவுடன் என்ன இருக்கோ அதை வாசனை பிடிச்சு சாப்பிடுறது. அதைத்தான் ‘கைதி' படத்துல பிரியாணியைப் பார்த்தவுடன் அந்த பிரியாணி அண்டாத் தட்டுல பிரியாணியைப் போட்டு சாப்டுற மாதிரி வெச்சேன். ‘விக்ரம்' படத்துல பிரியாணி சீன் எதிர்பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சது. எனக்கு வில்லேஜ் குக்கிங் சேனல் யூடியூப் ரொம்பப் பிடிக்கும். பசி இல்லாதப்போகூட அவங்க வீடியோ பார்த்தால் சாப்பிடணும்னு தோணும். அதனால, அவங்களை உள்ள கொண்டு வந்தேன். மத்தபடி பெரிய கனெக்ட்லாம் இல்லை.’’

``ரோலக்ஸ் கேரக்டர் இல்லாமல் சூர்யாவை வெச்சு வேறொரு படத்தை உங்ககிட்ட எப்போ எதிர்பார்க்கலாம்?’’

‘‘சூர்யா சாருக்கு எழுதினதுதான் ‘இரும்புக்கை மாயாவி.' ஐந்து வருடங்களா நானும் அவரும் பேசிட்டு இருக்கோம். எங்கே பார்த்தாலும், ‘எப்போ அதைப் பண்ணப்போறோம்'னு கேட்பார். எப்போ அதைப் பண்ணினாலும், சூர்யா சாரை வெச்சுதான் பண்ணுவேன்.’’

``ஒரு மிரட்டலான ஸ்கிரிப்ட். ஹீரோவுக்கும் வில்லனுக்கும் சரி சமமான முக்கியத்துவம் கொடுக்கணும்னா, யார் யார் அந்தப் படத்துல இருப்பாங்க?’’

‘‘ரஜினி சார் ஹீரோ, கமல் சாரை வில்லனா வெச்சுப் பண்ணுவேன்.’’

``இதுமாதிரி நாம ஒரு படம் பண்ணணும்னு நினைக்கிற படம் எது?’’

‘‘ ‘குருதிப்புனல்'தான், அதனுடைய தாக்கம் இன்னும் இருக்கு. அந்த மாதிரி ஒரு படத்தை எடுக்கணும்னு ஆசை.’’

``நீங்க வொர்க் பண்ணணும்னு நினைக்கிற ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் யார்?’’

‘‘எல்லா ஹீரோக்கள் கூடவும் வொர்க் பண்ண ஆசை. நிச்சயமா ரஜினி சார், அஜித் சார்கூட வேலை செய்யணும்னு மிகப்பெரிய ஆசை. ஹீரோயின் சென்ட்ரிக்கா முதல்ல நான் நிறைய எழுதணும். அப்போதான் யார் நடிப்பாங்கன்னு தெரியணும். ஏ.ஆர்.ரஹ்மான் சாரையும் பி.சி.ஸ்ரீராம் சாரையும் அவ்வளவு பிடிக்கும். ஒருமுறையாவது அவங்ககூட வொர்க் பண்ண வாய்ப்பு அமையுதான்னு பார்ப்போம்.’’