சினிமா
Published:Updated:

கல்வி உலகத்தின் கறுப்புப் பக்கங்கள்!

ஜி.வி.பிரகாஷ், கௌதம் மேனன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.வி.பிரகாஷ், கௌதம் மேனன்

இப்பவெல்லாம் யாரையாவது ரொம்ப நல்லவர்னு சொன்னால் சிரிச்சுடுறாங்க. இப்ப நல்லவனா இருக்கிறது கேலிப்பொருளாகிடுச்சு

“மனதுக்கு உகந்ததாக ஒரு படம் பண்ணணும்னு ஆசை. நம்ம கேரியருக்கு நல்ல ஆரம்பமும் வேணும். அதுதான் ‘செல்ஃபி.' இப்ப வெகு சாதாரணமாக ரொம்பவும் புழக்கத்தில் இருக்கிற இந்த வார்த்தையை ஒரு குறியீடாகப் பயன்படுத்தியிருக்கேன். ‘எல்லாக் கதையையும் சொல்லியாச்சோ’ன்னு எப்பவும் ஒரு சந்தேகம் வந்துட்டே இருக்கும். ‘அப்படியில்லை’ன்னு இந்தப் படம் பார்த்தால் தோணும்” ஆர்வமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் மதிமாறன். வெற்றிமாறனின் சீடர்; மிக இளைஞர்.

மதிமாறன்
மதிமாறன்

“சினிமா மூலமா பெரிய சமூக மாற்றங்கள் செய்யலாம்னு நான் பெருசா நம்பினதில்லை. ஆனால் நமது கருத்துகளை நேர்மையாகப் பதிவு செய்யணும். பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிச் சொல்லும்போது கொஞ்சம் தீவிரம் இருக்கத்தான் செய்யும். இங்கே இன்னமும் சொல்லப்படாமல் இருக்கும் விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன். தமிழ்நாடு கல்வியில் முன்னோடி மாநிலமாக இருக்க சமூக நீதியும், இருமொழிக் கொள்கையுமே முக்கியக் காரணம்னு நான் நம்புறேன். அதனாலேயே இங்க கல்விக்கான கட்டமைப்பு பலமா இருக்கு. வெளிமாநில மாணவர்கள் அதிகம் படிக்கிற மாநிலம் இதுதான். இப்படியான பெருமைமிகு முகம் இருக்க, சில கறுப்புப் பக்கங்களும் இன்னொரு முகமாக இருந்துட்டே இருக்கு. இந்தப் படம் அந்த உலகத்தை, அது சார்ந்த மனிதர்களைக் காட்சிப்படுத்தும். அதனால் இதில் காலேஜுக்கு வெளியே நடக்கிற காலேஜ் படம். கடலூரிலிருந்து இங்கே வந்து இன்ஜினீயரிங் படிக்கும் மாணவன் சந்திக்கும் பிரச்னைகளே படத்தின் அடிப்படை.”

கல்வி உலகத்தின் கறுப்புப் பக்கங்கள்!
கல்வி உலகத்தின் கறுப்புப் பக்கங்கள்!

“ஜி.வி.பிரகாஷ், கௌதம் மேனன், வாகை சந்திரசேகர்னு டீம் வேற மாதிரி இருக்கே...”

“ ‘ஆடுகளம்’ வேலை பார்க்கும்போதே ஜி.வி.பிரகாஷ் சார் பழக்கம். இந்தக் கதை மனதிற்குள் வந்ததும் அவரைத்தான் சந்தித்தேன். வெளியூரிலிருந்து சென்னையின் புறநகருக்குப் படிக்க வருகிற பையன்னு சரியாக இருந்தார். பொதுவாகப் பார்த்தால் எளியவர்கள்தான் இங்கே கஷ்டப்படுறாங்க. எல்லாவற்றையும் மீறி வாழ்க்கையைப் பற்றிய ஒரு நம்பிக்கை இங்கே இருக்கிறதே... அது எனக்கு ஆச்சரியம். அதை ஜி.வி நல்லா பிரதிபலித்தார். உண்மையைச் சொல்லும்போது அதன் விளிம்பு வரை எட்டிப் பார்க்கும் ஒரு முனைப்பு எனக்கு எப்பவும் உண்டு. எனக்கு நேர்மை ஜெயிக்குமா என்று தெரியாது. ஆனால் நியாயம் கண்டிப்பா உலகத்துக்குப் புரியும். அதைக் கதையில் கொண்டு வர ஜி.வி உதவியாக இருந்தார். கௌதம் மேனனை அவர்கிட்டே இருந்து எடுத்துட்டு, லுங்கி கட்டி அந்த நுனிநாக்கு இங்கிலீஷை உருவிட்டு சாதா மனிதராகக் கதையில் உலவ விட்டேன். அவரை அவருக்கே பிடிச்சுப்போச்சு. குணாநிதின்னு ஒருத்தரை முக்கியக் கேரக்டரில் அறிமுகப்படுத்துறேன்.

இப்பவெல்லாம் யாரையாவது ரொம்ப நல்லவர்னு சொன்னால் சிரிச்சுடுறாங்க. இப்ப நல்லவனா இருக்கிறது கேலிப்பொருளாகிடுச்சு. பிழைக்கத் தெரியாதவன்னு சிம்பிளாகச் சொல்லி அந்த நல்ல குணத்தை ஒதுக்கி வச்சுடுவாங்க. இப்படிப் பல விஷயங்கள் இருக்கும் படம் ‘செல்ஃபி.’ வர்ஷா பொல்லமா நடிக்கிறாங்க. ஜோடிப்பொருத்தம் நல்லா இருக்கிறதா எல்லோரும் சொன்னாங்க. நானே அதைச் சொன்னால் சரியா இருக்குமான்னு தெரியலை. தேர்டு அம்பயர் நீங்களே சொல்லுங்க.”

கல்வி உலகத்தின் கறுப்புப் பக்கங்கள்!
SAKTHI
கல்வி உலகத்தின் கறுப்புப் பக்கங்கள்!

“இப்ப வெற்றிமாறன் ஸ்கூல்னு ஒண்ணு உருவாகி வந்திருக்கே...”

“வெற்றிமாறன் சார் கிட்டே உதவியாளராகச் சேர்ந்துட்டேன்னு முதலில் நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது... அவர்தான் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கார்னு. அவர் ரொம்பக் கடினமானவர். அவர் உலகமே வேறு. படம் எடுக்கும்போது ஒவ்வொரு கட்டத்திலும் அவர் நிகழ்த்துற மேஜிக்கையும் அவர் அதற்காகக் கொடுக்கிற உழைப்பையும் கூட இருந்து பார்க்கும்போதே எனது கற்றல் ஆரம்பமானது. தாணு சார் அவரே முன்வந்து படத்தை வெளியிடுகிறேன் என்று சொன்னபோது இந்த செல்ஃபிக்குக் கூடுதல் அந்தஸ்து கிடைத்தது. இந்த ‘செல்ஃபி’ என்கிற டைட்டில் ஒரு பொலிட்டிக்கல் ஸ்டேட்மென்டும்கூட. கதைக்கும் டைட்டிலுக்கும் தொடர்பு இருக்கு”

அழுத்தமாகச் சொல்கிறார்.