கட்டுரைகள்
Published:Updated:

``கதை, கவிதை மாதிரி இல்லை... சினிமா கிட்டத்தட்ட நிஜம்!'’ - மணிரத்னம் பேட்டி

மணிரத்னம்
பிரீமியம் ஸ்டோரி
News
மணிரத்னம்

‘அவருக்கு என்ன விருப்பமோ அதைப் பண்றார். நான் எதையோ படிச்சு, எதையோ செய்து, கடைசியில் இந்த சினிமாவிற்கு வந்து நிற்கிறேன்.

`பொன்னியின் செல்வ'னுக்காக இயக்குநர் மணிரத்னத்தைச் சந்தித்தபோது சினிமா பற்றி உரையாட எவ்வளவோ இருந்தன. தமிழ் சினிமாவின் அடையாளமாக அவரிடம் இன்னும் பர்சனலாக சிலவற்றைப் பேச முடிந்தது. அதன் சில பகிர்தல்கள் இதோ...

உங்களுக்கு சினிமான்னா என்ன?

‘‘ஒரு சினிமாவுக்குச் சில கருவிகள் வேணும். ஒரு கதை, அதைச் சொல்ல கேமரா, அதை நிகழ்த்த நடிகர்கள்... இந்த மூணும்தான் முதல் கருவிகள். அப்புறம் ஒவ்வொண்ணா சேரும். ஒரு அறைக்குள்ள சொல்ற காதலை மழைச் சாலையிலோ, கடற்கரையிலோ காட்டும்போது அது கூடுதல் அழகாகும். பின்னணியில் ஒரு வயலின் சேர்த்தால் ஒரு கவிதை மாதிரி ஆகிடும். இப்படியேதான் பல விஷயங்கள் சேரும். இடம், பொருள், சூழல்னு எல்லாமே சேர்ந்து அமைஞ்சால்தான் அது சினிமா. இது ரசனை சம்பந்தப்பட்ட விஷயம். கதையோ, கவிதையோ எழுதுவது வேற. ஆனால் சினிமா கிட்டத்தட்ட நிஜம். அந்த மனிதனைத் தொட மட்டும்தான் முடியாது. மற்றபடி அவன் சிரிப்பு, கண்ணீர், கோபம், பயம்னு எல்லாமே கண்முன்னால் உணர முடிகிற நிஜம். சினிமாவோட மேஜிக் அது.''

``கதை, கவிதை மாதிரி இல்லை... சினிமா கிட்டத்தட்ட நிஜம்!'’ - மணிரத்னம் பேட்டி

நீங்கதான் பாரதிராஜாவை வெகு நாள் கழித்து நடிகராக யோசித்தீர்கள்? இன்று அவர் தேடப்படுகிற நடிகர்!

‘‘மறுபடியும் அவர் நடிப்பாரான்னு எனக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் அவரை நடிக்க வைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா அவர் வசீகரமான பர்சனாலிட்டி. ஆயிரம் பேர்கிட்ட மேடையில் மைக் பிடிச்சுப் பேசினாலும், தனியாக நம்மகிட்ட ரகசியம் மாதிரி பேசினாலும், ஏதோ ஒரு தனித்தன்மை அவரிடம் இருக்கும். அவரோட கரகரத்த குரல், அந்த பாடி லாங்குவேஜ் தனியாகத் தெரியும். ஆஸ்திரேலியா போனவரைக் கூட்டி வந்து ‘ஆயுத எழுத்தி'ல் நடிக்க வச்சேன். இப்பப் பாருங்க, எந்த நல்ல படத்திலும் அவரோட நடிப்பு அழகா இருக்கு. அவர் நல்லபடியாக மீண்டு வருவார்.’’

உங்க பையன் நந்தன் என்ன பண்றார்? எப்படி வரப்போகிறார்? அவரை எப்படிக் கொண்டு வர விரும்புகிறீர்கள்?

‘‘அவருக்கு என்ன விருப்பமோ அதைப் பண்றார். நான் எதையோ படிச்சு, எதையோ செய்து, கடைசியில் இந்த சினிமாவிற்கு வந்து நிற்கிறேன். அவருக்கு என்ன பிரியமோ அதைச் செய்துட்டுப் போகட்டும்னு விட்டுட்டோம். அவர் தொடர்ந்து படிச்சுக்கிட்டே இருக்கார். அவர் படிக்கிற புத்தகத்தை என்னால் இரண்டு பக்கங்களுக்கு மேலே படிக்கவே முடியவில்லை. அப்பப்ப உட்கார்ந்து சாவகாசமாகப் பேசுவோம். முடிவு எல்லாமே அவருடையதுதான். எங்க அப்பா ‘இதைக் கண்டிப்பாகச் செய்யாதே’ என்று சொன்னால் அதை நான் பிடிவாதமாகப் பண்ணுவேன். அப்படி அவருக்கான சுதந்திரத்தை நந்தனே எடுத்துக்கொள்கிறார். அவர் எப்படி வந்து எங்கு நிற்கப்போகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். அதற்கான சுதந்திரம், உரிமை அவருக்கு உண்டு.''

``கதை, கவிதை மாதிரி இல்லை... சினிமா கிட்டத்தட்ட நிஜம்!'’ - மணிரத்னம் பேட்டி

ஆச்சரியம் என்னன்னா... நீங்க இதுவரை எந்தக் கிசுகிசுவிலும் சிக்கினதில்லை. அழகழகான பெண்கள்கூட வொர்க் பண்ணியிருக்கீங்க... ஆனாலும்...

‘‘கிசுகிசு நானே சொல்லட்டுமா... சினிமாவில் என்கிட்டே டிசிப்ளின் இருக்கணும்னு நினைப்பேன். சினிமாவை இழுத்துப் போட்டுட்டு அதனோடு இருக்கும்போது அதற்குள்ளேதான் இருப்பேன். அதற்கு நடுவில் எனக்குத் தடுமாற்றங்கள் இருக்காது. சத்தியமாகக் கிடையாது. இங்கே எல்லோரும் எனக்கு நண்பர்கள்தான். எனக்காக எதையும் செய்வாங்க. அப்படிப் பார்த்தால் நான் லக்கி. நல்ல விஷயங்களை மட்டுமே கடைப்பிடிக்கிறேன். நமக்கு ஒரு படம் பண்ற வாய்ப்பும், நம்பித் தயாரிக்கிறவர்களும் இருக்கிறபோது, அதற்காகக் கேட்பதெல்லாம் கிடைக்கிறபோது, அதில் கவனம் குவிக்கிறதுதான் சரி. அதுக்கும் மேலே நம்ம priority, personality இருக்கு இல்லையா, அதுதான்!''