Published:Updated:

`கடைசி விவசாயி' பட இசை சர்ச்சைத் தொடர்பாக இளையராஜா புகார் கொடுத்தாரா? இயக்குநர் மணிகண்டன் விளக்கம்!

கடைசி விவசாயி
News
கடைசி விவசாயி

"என் இசையை நீக்கிவிட்டு டைரக்டர் மணிகண்டன் இன்னொருவர் இசையைப் போட்டுவிட்டார்" என இளையராஜா இசையமைப்பாளர்கள் யூனியனில் புகார் கொடுத்ததாக செய்தி பரவியது.

'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் ரிலிஸுக்குத் தயாராக இருக்கிறது 'கடைசி விவசாயி' படம். விஜய் சேதுபதி படத்தைத் தயாரித்ததோடு கௌரவத் தோற்றத்திலும் நடித்திருக்கிறார். நல்லாண்டி என்பவர் வயதான விவசாயி வேடத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு யானைப் பாகனாக ஒரு முக்கியமான பாத்திரத்தில் படத்தில் இடம்பெற்றுள்ளார். படம் முதலில் நேரடி ஓடிடி ரிலீஸ் என்று செய்திகள் அடிப்பட்ட நிலையில், மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டதால், தியேட்டர் ரிலீஸுக்கே படம் தயாராகி வருகிறது.

இளையராஜா
இளையராஜா

இந்தப் படத்திற்கு முதலில் இளையராஜா இசை அமைப்பதாக இருந்தது. பிறகு வந்த படத்தின் டிரெய்லரில் சந்தோஷ் நாராயணனின் பெயர் இசையமைப்பாளராக இடம்பெற்று இருந்தது. இதற்கு இடையில் நடந்தது என்ன என்று பலவாறாக இணையதளங்களில் சர்ச்சைகள் நிலவின.

"என் இசையை நீக்கிவிட்டு டைரக்டர் மணிகண்டன் இன்னொருவர் இசையைப் போட்டுவிட்டார்" என இளையராஜா இசையமைப்பாளர்கள் யூனியனில் புகார் கொடுத்ததாக செய்தி பரவியது. இதையொட்டி இளையராஜா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தப்பட்டு பதிவுகள் எழுதினார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நடந்தது என்ன என்று இயக்குநர் மணிகண்டனிடம் பேசினோம். "இளையராஜா ஆபீஸிலிருந்து இதுபற்றி பேசினார்கள். 'நாங்கள் இதுமாதிரி எந்த ஒரு புகாரையும் யூனியனுக்கு அளிக்கவில்லை. நாம் பரஸ்பரம் பேசி இசை அமைப்பதிலிருந்து விலகிக்கொண்டது நமக்குத் தெரியும். அதில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. அப்படியிருக்க இப்படி ஒரு செய்தி எப்படிப் பரவியது' எனக் கேட்டார்கள்.

'கடைசி விவசாயி' மணிகண்டன்
'கடைசி விவசாயி' மணிகண்டன்

'நானே இப்போதுதான் இதைப்பற்றி கேள்விப்பட்டேன். எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது' என்றேன். அவர்களும் சரியென்று இது குறித்து விசாரிப்பதாகச் சொல்லிவிட்டார்கள். அதனால் அதற்கு பதில் சொல்வது தேவையில்லாதது என விட்டுவிட்டேன்" என்றார் இயக்குநர்.

ஆக, இளையராஜாவிற்குத் தெரிந்துதான் இசையமைப்பாளர் மாற்றம் நடந்திருக்கிறது என இயக்குநர் மணிகண்டனின் பதில் மூலம் நமக்குத் தெரியவருகிறது.