Published:Updated:

தள்ளிப்போகும் `பொன்னியின் செல்வன்'... இடையில் இன்னொரு காதல் படம்... மணிரத்னம் பிளான் என்ன?

இயக்குநர் மணிரத்னம்
இயக்குநர் மணிரத்னம்

லாக் டெளன் முடிந்து 'பொன்னியின் செல்வன்' மீண்டும் ஆரம்பிப்பதற்குள் ஒரு சின்ன படம் எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

தமிழின் மிக முக்கிய எழுத்தாளரான கல்கி எழுதிய நாவல் 'பொன்னியின் செல்வன்'. மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் எனப் பலரும் முயற்சி செய்தனர்.

இயக்குநர் மணிரத்னமும் பல ஆண்டுகளாக இந்த நாவலைப் படமாக்கத் திட்டமிட்டுவந்தார். ஏகப்பட்ட நடிகர்கள், பெரிய பட்ஜெட் எனத் தள்ளிக்கொண்டேபோன இந்தப் படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனம் முன்வர வேலைகளைப் பரபரவெனத் தொடங்கினார் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், சரத்குமார் எனப் பல நடிகர்களையும் ஒப்பந்தம் செய்தார் மணிரத்னம். நடிகர்கள் மட்டுமல்லாமல் ஸ்ட்ராங்கான டெக்னிக்கல் டீம் வேண்டும் என்பதால் கேமராவுக்கு ரவிவர்மன், எடிட்டிங்குக்கு ஶ்ரீகர் பிரசாத், கலைக்கு தோட்டா தரணி, இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் என எல்லோரும் இறுதிசெய்யப்பட்டனர்.

ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை மிக கவனமாகவும் கச்சிதமாகவும் செய்து முடித்த கையோடு தாய்லாந்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. போர்க் காட்சிகளை முதலில் படமாக்கிவிடலாம் என்று எண்ணிதான் ராமோஜி ஃபிலிம் சிட்டியைத் தேர்வு செய்திருந்தனராம். ஆனால், ராஜமெளலி இயக்கி வரும் 'RRR' படத்தின் படப்பிடிப்பு அந்த இடத்தில் நடைபெற்று வந்ததால், அங்கே கிரீன் மேட் போட்டு விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை மட்டுமே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். 'RRR' ஷூட்டிங் நிறைவுபெற்றதும் அந்த இடத்தில் போர்க் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருந்திருக்கிறார். ஆனால், அதன் படப்பிடிப்பு முடிய தாமதமாகும் என்பதால் மீண்டும் தாய்லாந்துக்கே சென்று போர்க் காட்சிகளை எடுக்கும் யோசனையில் இருந்தபோதுதான் கொரோனா பிரச்னையால் லாக் டெளன் வந்துவிட்டது.

அரவிந்த் சாமி, மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்
அரவிந்த் சாமி, மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்

கிட்டத்தட்ட மூன்று மாத லாக்டெளனால் எல்லாப் படங்களின் பிளானுமே முழுவதுமாக மாறிப்போயிருக்கிறது. லாக்டெளன் முடிந்து விமானங்கள் வெளிநாட்டுக்குப் பறக்க அனுமதி கிடைத்தாலும் தற்போதைய சூழலில் வெளிநாடுகளுக்குப் போய் படம்பிடிக்க எல்லோருமே தயங்குகின்றனர். 'பொன்னியின் செல்வன்' போன்ற பிரமாண்ட படத்தை குறைந்த பட்ச நபர்களை வைத்தும் படமாக்க முடியாது. போர்க் காட்சிகள் படத்தில் மிக முக்கியமானது என்பதால் அதற்கு மிகச்சரியான லோகேஷனையும் கூகுள் வழியே தேடிக்கொண்டிருக்கிறது மணிரத்னம் & டீம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'பொன்னியின் செல்வன்' படத்தின் ஷெட்யூலைவைத்தே இதில் நடித்துக்கொண்டிருக்கும் பல்வேறு நடிகர்களும் தங்களின் அடுத்தடுத்த படங்களுக்கு டேட்ஸ் கொடுத்திருந்தனர். ஏனெனில் பொன்னியின் செல்வனுக்காக நீண்ட முடி வளர்ப்பது, தாடி வளர்ப்பது என கெட்அப் சேஞ்ச் இருப்பதால் இந்தப் படத்தின் ஷூட்டை முடித்த பிறகுதான் அவர்கள் மற்ற படங்களில் நடிக்கமுடியும் என்கிற சூழல். இதனால் எல்லோருடைய டேட்ஸும் சரிபார்த்து ஷூட் ஆரம்பிக்க சில மாதங்கள் ஆகிவிடும் என்பதால் இந்த இடைப்பட்ட கேப்பில் ஒரு சிறிய பட்ஜெட் படம் பண்ணும் பிளானில் இருக்கிறார் மணிரத்னம்.

மணிரத்னம்
மணிரத்னம்
`` `மாஸ்டர்'ல `லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா'ன்னு நான் ஏன் எழுதினேன்னா..?'' - அருண்ராஜா காமராஜ்

ஒரு மிடில் ஏஜ் ஹீரோவின் காதல் கதைதான் படம். ஹீரோவாக அநேகமாக அரவிந்த்சாமி நடிக்கலாம். இந்தப் படத்துக்கான ப்ரீபுரொடெக்ஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடந்துவருகின்றன.

இன்னொரு பக்கம் லைகா நிறுவனமும் லாக்டெளன் நாள்களால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துவருவதால் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பட்ஜெட்டைக் குறைக்கச் சொல்லியிருக்கிறதாம். அதனால் வெளிநாட்டுப் படப்பிடிப்பு இனி சந்தேகம்தான் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு