Election bannerElection banner
Published:Updated:

"எளிய மக்களின் யுத்தம் எப்படி வன்முறையாகும்?!" - `கர்ணன்' குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

''அப்போது யாருடைய ஆட்சி நடந்துகொண்டிருந்தது என்று சொல்லவேண்டும் என்றால் நான் போலீஸ் ஸ்டேஷனிலோ, கலெக்டர் அலுவலகத்திலோ ஆட்சியாளர்களின் படங்களைவைத்து காட்டியிருக்கலாம். என்னுடைய நோக்கம் அதுவல்ல.

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 'கர்ணன்' திரைப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. எளிய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை, அவர்களின் வாழ்வியல் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் 1990-களில் பேருந்துகள் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் கொடியன்குளம் கலவரம் ஆகியவை படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ''கொடியன்குளம் கலவரம் நடந்த ஆண்டு 1995 எனும்போது, மாரி செல்வராஜ் ஏன் '1997-ன் முற்பகுதியில்' இருந்து எனக் படத்தை தொடங்குகிறார்'' என்கிற விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்தும், 'கர்ணன்' படத்தின் குறியீடுகள் குறித்தும் இயக்குநர் மாரி செல்வராஜிடம் பேசினேன்.

''படத்தில் ஏராளமான விலங்குகள், உயிரினங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருகின்றன. இதற்கு ஏதும் குறிப்பிட்ட காரணங்கள் இருக்கிறதா?''

''நான் பத்தாண்டுகள் கிராமத்தில் ஆடு, மாடுகள் மேய்த்திருக்கிறேன். பனிரெண்டாவது படிக்கும்வரை ஆடு, மாடுகளோடுதான் அதிகம் பழகியிருக்கிறேன், பேசியிருக்கிறேன். என்னுடைய உணர்வுகள், பிரச்னைகள், காதல் என எல்லாவற்றையும் முதலில் பகிர்ந்துகொள்வது விலங்குகளிடம்தான். விலங்குகளிடம் என்னுடைய குரல், என்னுடைய எண்ணங்களுக்கான ஒப்புதல் கிடைப்பதாக உணர்ந்திருக்கிறேன். அதில் ஒரு ஆறுதல் கிடைக்கும். என்னுடைய சிறுகதைகள், கவிதைகள் என எல்லாவற்றிலும் விலங்குகள் அதிகம் இருக்கும். ஒரு தெரு என யோசித்தால் அதில் விலங்குகள் இல்லாமல் எப்படியிருக்க முடியும்?! மிக முக்கியமாக மனிதர்களின் ஆன்மாவை படம்பிடித்துக்காட்டுவதற்கு விலங்குகள் ஒரு கருவியாக இருப்பதாக நான் நம்புகிறேன். சக மனிதர்களோடு உறவாடுவதைவிட, அவர்களை பார்ப்பதைவிட, விலங்குகளோடு மனிதர்களுக்கு வெளியே யாருக்கும் தெரியாத ரகசியப்பிணைப்பு ஒன்று உண்டு. அதனால் உயிரினங்களைவைத்து கதை சொல்லும்போது அதன்வழியாக மனிதர்களின் ஆன்மாவைக் கண்டுபிடித்துவிடலாம். அதன்மூலம் உணர்வுகளை அவர்களுக்குள் கடத்திவிடலாம். அதனால், மனிதர்களின் உணர்வுகளோடு பேசுவதற்கு விலங்குகளைவிட்டால் மிகச்சரியான உருவகம் (Metaphor) இல்லை என்றுதான் நினைக்கிறேன். ''

'' 'கர்ணன்' படத்தில் குறிப்பிடப்பட்ட 1997-ம் ஆண்டு என்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது. இதுகுறித்து உங்கள் பதில் என்ன?''

கர்ணன் படப்பிடிப்பில் மாரி செல்வராஜ், தனுஷ், லால்
கர்ணன் படப்பிடிப்பில் மாரி செல்வராஜ், தனுஷ், லால்

''நான் படத்தில் ஆண்டை குறிப்பிட்டதே ஆட்சியாளர்களை காட்டுவதற்காக அல்ல. ஆட்சியாளர்களைக் காட்டவேண்டும் அல்லது அப்போது யாருடைய ஆட்சி நடந்துகொண்டிருந்தது என்று சொல்லவேண்டும் என்றால் நான் போலீஸ் ஸ்டேஷனிலோ, கலெக்டர் அலுவலகத்திலோ ஆட்சியாளர்களின் படங்களைவைத்து காட்டியிருக்கலாம். என்னுடைய நோக்கம் அதுவல்ல. இந்த கதை நடக்கும் நேரத்தில் மக்களிடத்தில் என்னவெல்லாம் இருந்தது, என்னவெல்லாம் இல்லை என்பதற்காக அப்போது பேருந்து வசதியில்லை, மொபைல் இல்லை எனப் புரிந்துகொள்வதற்காக ஆண்டை குறிப்பிட்டேன். மேலும் படம் சென்சாருக்குப் போய்விட்டுத்தான் வெளியே வந்திருக்கிறது. அங்கே அவர்கள் சிலவற்றை சாப்பிட எடுத்துக்கொண்டார்கள்.

நான் ஒரு புனைவை உருவாக்கியிருக்கிறேன். அதில் ஒட்டுமொத்த மனித சமூகத்தில் எளிய மக்கள் என்னவெல்லாம் யுத்தம் நடத்தினார்களோ, என்னென்ன பிரச்னைகளுக்காக எல்லாம் போர் புரிந்தார்களோ, சமர் புரிந்தார்களோ அதையெல்லாம் காட்சிப்படுத்துவதுதான் என்னுடைய நோக்கம். ஆனால், புனைவில் ஒரு ஒரிஜினல் எமோஷன் சேரும்போது அதில் பிரச்னைகள் வரும் என்பது இப்போது புரிகிறது. அது பிழையா என்று கேட்டால் பிழைதான். அதை நான் மறுக்கவில்லை. அந்தப் பிழையை சரிசெய்துகொள்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதனால் அதை இப்போது மாற்றிவிட்டோம். நாளை முதல் படத்தில் ஆண்டே குறிப்பிடப்படாது.''

''படத்தில் மிக முக்கியமான குறியீடாக இருப்பது தலை இல்லாத ஓவியம்... அந்த ஓவியம் யாரைக் குறிப்பிடுகிறது?!''

கர்ணன்
கர்ணன்

''எதற்கும் ஒற்றை பதில் கிடையாது. ஒரு படைப்பாளியிடம் இது யார், இதற்கு என்ன அர்த்தம் எனக் கேட்பதே ஒரு மோசமான வன்முறை. ஏனென்றால் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் அது பலவிதமான அர்தத்தை, புரிதலைக் கொடுக்கும். ஒரு படைப்பாளனாக நான் நினைப்பது ஒவ்வொருமுறை படத்தைப் பார்க்கும்போதும் வெவ்வேறு அர்த்தங்கள் கிடைக்க வேண்டும். நேரடியாக இப்படித்தான் படத்தைப் பார்க்க வேண்டும், இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இவ்வளவு உழைப்பு அவசியம் இல்லை. நான் உருவாக்க வேண்டும் என ஆசைப்படுவது பத்து நாள் கழித்து படம் பார்க்கும்போது அது வேறு ஒன்றாகத் தெரியவேண்டும். 40 வருடம் கழித்துப் பார்க்கும்போது வேறு ஒரு உருவமாகத் தெரியவேண்டும். அன்றைக்கு நடந்த விஷயத்தைவைத்து அதில் வேறு அர்த்தம் கிடைக்க வேண்டும். காலம் கடந்து நிற்கவேண்டும் என்பதற்காகத்தான் Metaphor-களை நிறைய பயன்படுத்துகிறோம். இந்த விஷுவல் காலம் கடந்து நிற்கவேண்டும். இது பல அர்த்தங்களை உருவாக்கவேண்டும். பல வழித்தடங்களை உருவாக்கவேண்டும். ஒரே அர்த்தத்தை, ஒரு பதிலை சொல்வதற்கு உருவகம் தேவையில்லை. அதற்கு ஒரு வசனத்தை சொல்லிவிட்டுப் போகலாம். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையோடு, வெவ்வேறு புரிதல்களோடு பார்க்கிறார்கள். படம் பார்க்கும் ஒவ்வொருவரோடும் பயணிக்கக்கூடிய தகுதி ஒரு படைப்பாளனாக எனக்கு இருக்க வேண்டும். படம் பார்க்கும் அத்தனை மனிதர்களின் மூளைக்குள்ளும் சென்றுவந்தால்தான் நான் முழுமையான கலைஞன்.''

''படத்தில் நாயக பிம்பம் அதிகமாக இருப்பது குறித்த விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

'' எப்போதுமே ஒரு பிரச்னையை தொடங்குவதற்கு, அதைப்பற்றி பேசுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார். புளியங்குளம் எனும் ஊரில் எவ்வளவோ பேர் இருந்தும் அந்த ஊரின் கதையை நான் வந்துதான் சொல்லியிருக்கிறேன். ஒரு மனிதனிடம் இருந்துதான் எல்லாமே தொடங்கும். மக்கள் பிரச்னைகளைப்பார்த்து அதை நெறிப்படுத்துவதற்கு, அதை சரிப்படுத்துவதற்கு, அதை தொடங்கிவைப்பதற்கு ஒரு கல், ஒரு கை தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட கையாகத்தான் நான் கர்ணணைப் பார்க்கிறேன்.''

''படத்தில் போலீஸுக்கு எதிராக வன்முறையை கையில் எடுப்பது சரியா... வன்முறைக்கு வன்முறைதான் தீர்வா?''

"எளிய மக்களின் யுத்தம் எப்படி வன்முறையாகும்?!" - `கர்ணன்' குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

'' இந்தப் படம் வன்முறைப் படமாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது, இதன் நோக்கம், இதன் ஆன்மா, திசை திருப்பப்பட்டுவிடக்கூடாது என நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். எளிய மக்களின் போராட்டத்தை, அவர்களின் வாழ்வியலைத்தான் படமாக எடுத்திருக்கிறேன். இந்தப்பக்கம் ஆயிரம் குதிரைகள், அந்தப்பக்கம் ஆயிரம் குதிரைகள், காலாப்படை, யானைப்படை எனப் போர்புரிந்த ராஜாக்களின் யுத்தங்கள் யுத்தமாகவே இருக்கும்போது, எளிய மக்களின் யுத்தம் மட்டும் எப்படி வன்முறையாகப் பார்க்கப்படுகிறது என்பது புரியவில்லை. நான் எடுக்க நினைத்தது யுத்தப் படம்தான். யுத்தங்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எளிய மக்கள், வறண்ட பூமிக்களில் யுத்தத்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். கண்ணபிரானை, கர்ணன் கொலைசெய்யும்போதுகூட, எப்படி அதைக் காட்சிப்படுத்துவது எனத் தெரியாமல் கஷ்டப்பட்டேன். படத்தில் நேரடியாகக் கர்ணன் ஒரு கொலைதான் செய்வான். அதற்கும் கதறிஅழுவான். ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நினைத்து, வாழ்வு நிர்கதியானதை நினைத்து, அனைத்து உயிரினங்களையும் நினைத்து கதறித் துடிப்பான். அந்தக் கொலையை வீரமாக மிகைப்படுத்தி படத்தில் ஒரு காட்சிகூட இருக்காது. என் பயத்தை தன்னுடைய அசாத்திய நடிப்பால் தனுஷ் சார் போக்கிவிட்டார். எனக்கு பெரிய பதற்றம் இருந்தது. இப்படி ஆகிவிடுமோ, இப்படி மாறிவிடுமோ, வேறு மாதிரி புரிந்துகொள்ளப்படுமோ என்கிற என் நிம்மதியின்மையை தன்னுடைய பர்ஃபாமென்ஸால் ஆற்றுப்படுத்தினார் தனுஷ் சார். அப்படியிருந்தும் இன்னும் பயந்து அந்த ஷாட் முடிந்ததும் குழந்தை இன்சர்ட் வைப்பது, கழுதைக்குட்டி இன்சர்ட் வைப்பது என எல்லாமுமே செய்தேன். இவ்வளவு இருந்தும் எளிய மக்களின் போராட்டம் வன்முறையாகத் தெரிகிறது என்றால் நான் இன்னும் நிறைய சினிமா கற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு