Published:Updated:

`பிறந்த மண்ணுக்கு உதவுறது கடமை!’- சொந்த ஊர் மக்களை நெகிழவைத்த இயக்குநர் மாரி செல்வராஜ்

நிவாரணத் தொகுப்பு வழங்கிய மாரி செல்வராஜ்
நிவாரணத் தொகுப்பு வழங்கிய மாரி செல்வராஜ்

தனது சொந்த கிராமத்திலுள்ள ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளார் `பரியேறும் பெருமாள் திரைப்பட’ இயக்குநர் மாரிசெல்வராஜ்.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகில் உள்ள புளியங்குளம் கிராமம்தான் `பரியேறும் பெருமாள்’ திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜின் சொந்த ஊர். சாதி ஏற்றத்தாழ்வுடன், இந்த ஊர் மக்களின் வாழ்வியலை எடுத்துச் சொன்ன படம்தான் பரியேறும் பெருமாள். பல தரப்பினரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று, தன் முதல் திரைப்படத்திலேயே கவனம் ஈர்த்தார் இயக்குநர் மாரிசெல்வராஜ். மீண்டும் அவரது இயக்கத்தில், நெல்லை மாவட்டத்தில் நடந்த மற்றுமொரு சமூகப் பிரச்னையை மையமாக வைத்து நடிகர் தனுஷ் நடிப்பில் `கர்ணன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

நிவாரணத் தொகுப்பு வழங்கிய மாரிசெல்வராஜ்
நிவாரணத் தொகுப்பு வழங்கிய மாரிசெல்வராஜ்

இத்திரைப்படமும் அனைவரின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போதைய ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தனது சொந்த கிராமத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு, 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் என, ரூ.7 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் தொகுப்பை வீடு வீடாகச் சென்று அவரே வழங்கியுள்ளார்.

இதுகுறித்து புளியங்குளம் கிராம மக்களிடம் பேசினோம், ``மாரியோட அம்மா, அப்பா ரெண்டுபேரும் விவசாயக் கூலித் தொழிலாளிகள். இருபது வருஷத்துக்கு முன்னால கிராமத்துல பஞ்சத்தால் விவசாய வேலைகளும் பெரிய அளவுல இல்லாததுனால, உள்ளூர் ஆண்கள் அரிதாரம்பூசி பெண் வேடமிட்டு ஆடும் குழுவில் மாரியின் அப்பாவும் ஒருவர். தன் அப்பா பாடிய பாடல்களை மாரியும் சின்ன வயசுல பாடி ஆடுவார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, சட்டக்கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு பொழப்புக்காக சென்னைக்குப் போனார்.

புளியங்குளம் கிராமம்
புளியங்குளம் கிராமம்

தி.நகர் ஜவுளிக்கடையில் வேலை, நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன் பக்கத்துல உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நைட் வாட்ச்மேன் வேலையும் பார்த்தார். அதுக்குப் பிறகுதான் இயக்குநர் ராம் சாரிடம் ஆபீஸ் பாயாக சேர்ந்து, 10 வருசமா அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தார். `கற்றது தமிழ்’, `தங்க மீன்கள்’, `தரமணி’ ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநரா பணிபுரிந்தார்.

தொடர்ந்து தனியாக திரைப்படம் இயக்க முடிவு செய்து `பரியேறும் பெருமாள்’ கதையைத் தயார் செய்து திரைப்படத்தை இயக்கினார். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதெல்லாம் எல்லாரையும் அக்கறையா விசாரிப்பார். ஊர்ல இருந்த போது எப்படி இருந்தாரோ அதே மாதிரிதான் இப்பவும் பழகுறார். இப்போ ஊரடங்கினால் எந்தத் தொழிலும் நடக்கல.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

ரொம்ப சிரமமான நிலையிலதான் வாழ்க்கைப்பாட்டை ஓட்டிக்கிட்டு இருக்கோம். இந்தச் சூழ்நிலையில ஒவ்வொரு வீட்டுக்கும் 5 கிலோ அரிசி, மளிகைப்பொருள்கள் தொகுப்புப் பையை அவரே வீடுவீடா வந்து கதவைத்தட்டி கொடுத்துட்டுப் போனார். சினிமாவுல சின்ன ரோல் கிடைச்சு நாலஞ்சு படத்துல தலைகாட்டிட்டா, சொந்த ஊரை மறந்து விடுவார்கள்.

அவர்கள் மத்தியில், முதல் படத்தை வெற்றிப் படமா கொடுத்தாலும் எந்த அலட்டலும் இல்லாம சகஜமாப் பேசுறதோட, எல்லா வீட்டுக்கும் நிவாரணப் பொருள்கள் கொடுத்து உதவி செய்யுறதுக்குத் தனி மனசு வேணும். எங்க ஊரு மாரியை நன்றியோட நினைச்சுப் பார்க்கிறோம்” என்றனர்.

நிவாரணத் தொகுப்பு வழங்கிய மாரிசெல்வராஜ்
நிவாரணத் தொகுப்பு வழங்கிய மாரிசெல்வராஜ்

இயக்குநர் மாரிசெல்வராஜிடம் பேசினோம்,``நான் சினிமாவில முன்னேறணும்னு எனக்கு எப்பவும் ஊக்கம் கொடுக்குறதே என்னோட கிராம மக்கள்தான். இதுபோன்ற சூழ்நிலையில அவர்களுக்கு என்னால முடிஞ்ச உதவியைச் செய்ததைப் பெருமையா நினைக்கிறேன். நல்ல நிலைமையில இருக்குற ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உதவி செய்யுறதும் அவரவர் கடமையும்கூட” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு