`நோக்கம் நிறைவேறிடுச்சு... எந்தவொரு வருத்தமும் இல்லை!'- தேசிய விருது குறித்து மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் எடுத்த `பரியேறும் பெருமாள்' திரைப்படத்துக்கு இந்திய அரசாங்கம் தேசிய விருது கொடுக்கவில்லை என சினிமா ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், புதுச்சேரி அரசு இப்படத்துக்கு விருது அறிவித்துள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜிடம் பேசியபோது,`` `பரியேறும் பெருமாள்' அரசுக்காக எடுக்கப்படலை. இது மக்களுக்காக எடுத்த படைப்பு. அவங்களுடைய விவாதங்களில் இருக்கணும்னுதான் எடுத்தேன். ஒட்டுமொத்த மக்களும் இந்தப் படத்தைப் பார்த்து ரசிச்சு ஏத்துக்கிட்டாங்க. படத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப் போயிட்டாங்க. இது மூலமா படம் எடுக்கப்பட்ட நோக்கமும் நிறைவேறிடுச்சு. படத்துக்கு விருது கிடைக்கலையேன்னு எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை.
முதல் படம் எடுக்கிற எந்த இயக்குநரும் தேசிய விருதை எதிர்பார்க்க மாட்டாங்க. ஏன்னா, விருது கிடைக்க தேவையான சூட்சமமும், விதிமுறைகளும் அறிமுக இயக்குநருக்குத் தெரியாது. தொடர்ச்சியா படங்கள் இயக்கியிருந்தா விருதை எதிர்பார்த்திருப்பேன். என் படம் தேசிய விருதுக்குத் தகுதியான படம்னு சொல்ற இடத்துல நான் இல்லை. நிறைய பிழைகள், குறைகள் படத்துல இருந்திருக்கலாம்.

ஆனா, ஒரு நல்ல சினிமாவை இப்போதான் கத்துட்டு வர்றேன். ஏன்னா, இப்போதானே முதல் படமே எடுத்து முடிச்சிருக்கேன். இன்னும் நான் பயணம் பண்ண வேண்டிய தூரம் நிறைய இருக்கு. படத்துக்கு விருது கிடைக்கலைனு நிறைய இயக்குநர்கள் எனக்குப் போன் பண்ணி வருத்தப்பட்டாங்க. எனக்காக இவங்க பேசினது ரொம்பவே ஆறுதலா இருக்கு. இப்போ புதுச்சேரி அரசாங்கம் என்னுடைய படத்துக்கு விருது அறிவிச்சது சந்தோஷம்தான். நாளைக்குதான் விருது வாங்கப் போறேன். என்னுடைய அடுத்த படத்துடைய ஷூட்டிங் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்போகுது'' என்றார் மாரி செல்வராஜ்.