Published:Updated:

Karnan: "காட்டுப்பேச்சியைக் கையெடுத்துக் கும்பிட்டேன்னு வடிவேலு சொன்னார்!"- மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ்

"பஸ் ஸ்டாப்ல ஒன்றரை மணி நேரம் நிக்கணும். அதனால, படிப்ப விட்டவங்க நிறைய பேர் இருக்காங்க. என் ஊர் மற்றும் நகரத்தைத் தொடுறதுக்கு கிட்டதட்ட பல வருஷத்தைக் கொடுத்திருக்கேன்."- மாரி செல்வராஜ்

Karnan: "காட்டுப்பேச்சியைக் கையெடுத்துக் கும்பிட்டேன்னு வடிவேலு சொன்னார்!"- மாரி செல்வராஜ்

"பஸ் ஸ்டாப்ல ஒன்றரை மணி நேரம் நிக்கணும். அதனால, படிப்ப விட்டவங்க நிறைய பேர் இருக்காங்க. என் ஊர் மற்றும் நகரத்தைத் தொடுறதுக்கு கிட்டதட்ட பல வருஷத்தைக் கொடுத்திருக்கேன்."- மாரி செல்வராஜ்

Published:Updated:
மாரி செல்வராஜ்

'கர்ணன்' திரைப்படம் வந்து ஒரு வருடம் ஆனதையொட்டி இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'கர்ணன்' வந்து ஒரு வருஷமாகுது, எதெல்லாம் ஞாபகத்துக்கு வருது?

'' 'கர்ணன்' நினைச்சாலே கொரோனாதான் ஞாபகத்துக்கு வருது. பயங்கரமா செலிபிரேட் பண்ணிக் கொண்டாடக்கூடிய வெற்றியா 'கர்ணன்' இருந்தது. படம் ரிலீஸுக்கு முன்னாடி எத்தனை தியேட்டர்ல ஓப்பனிங் எப்படியிருக்கும், எத்தனை தியேட்டர்ஸ் கிடைக்கும், மக்கள் தியேட்டருக்கு வருவாங்களா இல்லையான்னு கேள்வி இருந்தது. பெரிய பயமும் இருந்தது. கொரோனா செகண்ட் அலை பெரிய பீக்ல இருந்தது. படம் ரிலீஸான போதே தியேட்டர் ஐம்பது சதவிகிதம்னு அறிவிப்பு வந்திருச்சு. இருந்தும், மக்கள் பெரிய ஆதரவு படத்துக்குக் கொடுத்தாங்க. எல்லா ஊர் தியேட்டர்லயும் ஹவுஸ்புல்லா படம் போயிட்டிருந்தது. சீக்கிரம் படத்தைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டு பார்த்தாங்க. 'எப்போ வேணாலும் லாக்டௌன் போடுவாங்க'ங்குற பயம் எங்களுக்கு வந்திருச்சு. இருந்தாலுமே, இந்த பயத்தையெல்லாம் உடைக்கிற மாதிரி 'கர்ணன்'னுக்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் ஞாபகத்துக்கு வந்துகிட்டே இருக்கு. பெரிய சந்தோஷமாகவும் இருந்தது."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'கர்ணன்' படத்தை தியேட்டர்ல பார்த்த அனுபவம் எப்படியிருந்தது?

'கர்ணன்'
'கர்ணன்'
RAHUL DEO

"படம் ரிலீஸாகி அஞ்சு நாளுலயே எனக்கு கொரோனா வந்திருச்சு. என்னைத் தனிமைப்படுத்துக்கிட்டேன். அதனால, எந்தவொரு பங்கஷனும் நடக்கல. யாரும் யார் கூடவும் சேர்ந்து கொண்டாட முடியல. ஆனா, இந்தப் படம் எதுக்காக எடுக்கப்பட்டதோ அங்க போய்ச் சேர்ந்திருச்சு. எல்லாரும் படம் பார்த்துட்டு வீட்டுக்குள்ள விவாதம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பதினாறு நாள் படம் தியேட்டர்ல ஓடிச்சு. ஆனா, புரொடியூசர் தாணு சார் படத்தை தியேட்டர்ல ரிலீஸ் பண்ணணும்ங்குறதுல உறுதியா இருந்தார். தியேட்டர்ல ஐம்பது சதவிகிதம் பற்றியெல்லாம் பீல் பண்ணல. கண்டிப்பா மக்கள் எல்லாரும் தியேட்டர்ல படத்தைப் பார்த்துருவாங்கன்னு நம்பினார். என்ன அடிப்படையில அவர் இதை நம்பினாருன்னு தெரியல. ஆனா, நான் ரொம்ப பயந்தேன். பல வருஷங்கள் சினிமா தயாரிப்பாளரா இருந்த அனுபவத்துல, 'இல்ல தம்பி, என்ன ஆனாலும் பார்த்துக்கலாம்னு' தைரியமா இருந்தார். பிசினஸா நிறைய விஷயங்கள் பாசிட்டிவா சொன்னார். படம் ரிலீஸான உடனே இதெல்லாம் நடந்துச்சு. மக்கள் தியேட்டருக்கு வருவாங்களா இல்லையான்னு பயந்துட்டிருந்தப்போ, பெரிய பலத்தை மக்கள் கொடுத்தாங்க. இதை, சினிமாவா ஏத்துக்குவாங்களா இல்லையான்னு பயம் இருந்ததை மக்கள் உடைச்சிட்டாங்க. சரியா படமிருந்தா மக்கள் அங்கீகரிப்பாங்கன்னு நிரூபிச்சுக் காட்டினாங்க."

காட்டுப்பேச்சி கேரக்டரை எப்படி கிரியேட் பண்ணீங்க?

காட்டுப்பேச்சி
காட்டுப்பேச்சி

"பொதுவா என்னுடைய படங்கள்ல நடிக்கிற ஊர் மக்கள் படத்தோடு ரொம்ப கனெக்ட் ஆகிருவாங்க. ஏன்னா, அங்கே இருக்கிற வாழ்க்கையில நடக்கிற விஷயங்களைப் படத்துல வெச்சிருப்பேன். 'பரியேறும் பெருமாள்' படத்துல கருப்பி நாய் இருக்கும். நம்ம ஊர்ல இருக்கிற நாயை வெச்சு என்ன பண்றாங்கன்னு வேடிக்கை பார்க்க வருவாங்க. இதோடு கனெக்ட் ஆகிருவாங்க. 'கர்ணன்' படத்துலயும் இதேதான் நடந்துச்சு. எல்லாக் காட்டுலயும் கன்னிசாமியா ஒரு உருவம் கெடக்கும். திருநெல்வேலி சுத்து வட்டாரம் எல்லா இடத்துலயும் அந்த முகம் சிதறி கீழே கெடக்கும். இவங்களுடைய குலதெய்வம், வழிபாட்டு முறையில இருக்கு. அதை ஸ்க்ரீன்ல கொண்டு வர்றப்போ, பொண்ணுக்கு அந்த முகமூடி மாட்டிவிட்டு ஷூட் பண்றப்போ ஆச்சரியமா பார்த்தாங்க. நிறைய பேர் இந்தப் பொண்ணைத் தெய்வமா வணங்க ஆரம்பிச்சிட்டாங்க. வடிவேல் சார், 'பாப்பாவைக் கையெடுத்துக் கும்பிட்டேன்னு' படம் பார்த்துட்டுச் சொன்னார். இந்த எமோஷனல் கனெக்ட் எல்லாருக்கும் ஆகியிருக்கு. இப்படிதான் அவங்க வாழ்க்கைக்குள்ள இருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவங்களுக்கே தெரியாம வெளியே எடுத்து வந்து நிப்பாட்டுறப்போ பயங்கரமா இம்ப்ரஸ் ஆகியிருக்காங்க."

போலீஸ் ஸ்டேஷன் காட்சில உண்மையாவே எல்லாரும் அடிவாங்கினாங்கன்னு கேள்விப்பட்டோம்?

தனுஷ்
தனுஷ்

"நிறைய அக்காக்கள், அம்மாக்கள், பாட்டிகள் மற்றும் தாத்தக்கள்னு உழைப்பைப் போட்டிருக்காங்க. சினிமாவுக்குன்னு ஒரு பார்மெட் வைஸ் பைட்டர்ஸ் அடிக்குற மாதிரி அடிச்சா எல்லாரும் சிரிச்சிருவாங்க. படத்துல கனெக்ட் ஆகவே மாட்டாங்க. போலீஸ் காட்சியை இவங்க எல்லாரும் தினசரி வாழ்க்கையில பார்த்துட்டுதான் இருக்காங்க. இந்த வலியை அனுபவிச்சிட்டிருக்காங்க. இந்த உச்சம் எப்படியிருக்கும்னு தெரியும். இந்த சீன் எப்படி நடிக்கணும்னு அவங்க யாருக்கும் சொல்லிக் கொடுக்கல. சினிமாவைச் சார்ந்த பைட்டர்ஸுக்குத்தான் சொல்லிக் கொடுத்தேன். ஏன்னா, அவங்க எல்லாரும் நம்ம ஆர்ட்டிஸ்ட். சினிமாட்டிக்கா மட்டும் அடிக்க முயற்சி பண்ணுவாங்க. அதாவது வலிக்கமா அடிக்க. அவங்களைத்தான் திட்ட வேண்டியதாகவும் இருந்தது. 'நீ அடி அவன் தாங்குவான். அவங்க ரெடியாதான் இருக்காங்க'ன்னு பைட்டர்ஸுக்கு சொன்னேன். ஏன்னா, மக்கள் மேல கம்பு படாமப் போனாலே சிரிச்சிருவாங்க. நிஜமா அடி வாங்கிட்டு, நம்மள ஒருத்தன் அடிக்குறான்னு நிஜமா திருப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த மேஜிக் இப்படிதான் நடந்தது."

தனுஷ் பஸ்ஸை உடைக்கிற காட்சியை எப்படி டிசைன் பண்ணுனீங்க?

"நான் காலேஜ் படிக்கிறப்போ பஸ்ஸுகாக மூணு மணி நேரம் வரையெல்லாம் நிப்பேன். இப்போ கொஞ்சம் மாறியிருக்கு. இத்தனைக்கும் லா காலேஜ் மதியம் நடக்கும். ஆனா, காலையிலயே பத்தரைக்கெல்லாம் பஸ் ஸ்டாப்புக்குப் போய் நிக்க ஆரம்பிச்சிருவேன். என்கூட படிக்குற பசங்களெல்லாம் நிக்குற என்னைப் பார்த்து டாட்டா காட்டிக்கிட்டே போவாங்க. ஒரு டவுன் பஸ்ஸுக்காக நின்னுட்டே இருப்பேன். ஒரு ஏக்கம் நமக்குள்ள இருக்கும்ல. இந்த டவுன் பஸ் விட்டுட்டா வெயில்ல நின்னுக்கிட்டே இருக்கணும். வேறொரு ஸ்டாப்புக்குப் போய் ஏறவும் தோணாது. ஏன்னா, அங்கே நிக்குறவன் எல்லாருக்கும் அது என்னுடைய ஸ்டாப் இல்லன்னு தெரியும். அதனால, ஏதாவது கலாய்ச்சுப் பேசுவான். 'பஸ்கூட நிக்காத ஒரு ஊர் உன்னுடையது. இதுக்கு ஒரு பேரு’ன்னு கலாய்ப்பாங்க. நமக்கு வருத்தமா இருக்கும். ஒரு பஸ் நிறுத்தணும்னா பத்துப் பேர் கூட இருக்கணும். அப்போ ஒரு சம்பவம் நடந்தது. அந்தச் சம்பவம் எனக்கொரு ஆறுதலா இருந்தது. என்னுடைய பஸ் ஸ்டாப்ல நிக்காத ஒரு பஸ். நிறைய கல்லூரி மாணவர்களுக்குப் பிடித்த அந்த பஸ். அன்னைக்கு அடிபட்டு, கண்ணாடி உடைஞ்சு நிக்குது. அதைப் பார்க்குறப்போ சந்தோஷமா இருந்தது. எல்லாரும் ஏறி விளையாடிக்கிட்டு இருந்தோம். நாய், ஆடு மாடுன்னு எல்லாமே பஸ் ஏறிருச்சு. ஊர் மக்கள் எல்லாரும் உட்கார்ந்து ரசிச்சுப் பார்த்தோம். இது எனக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதை வன்முறைன்னு எல்லாரும் சொல்லுவாங்க. இந்த வன்முறைக்குப் பின்னாடியிருக்கிற ஏக்கம், வெற்றியைப் பார்த்தேன். இந்தக் கதைதான் 'கர்ணன்.’ நான் படிக்கறதுக்கு பொறுமையிருந்தது. அதனால வெயிட் பண்ணி பஸ் பிடிச்சுப் படிக்கப் போனேன். நிறைய பேர் வீட்டுல பொண்ணுங்க படிக்கமாப் போயிட்டாங்க. ஏன்னா, கூப்பிட்டு வர்றதுக்கு ஆளுங்க இருக்க மாட்டாங்க. பஸ் ஸ்டாப்ல ஏதாவது பிரச்னை வந்திரும்னு ஒதுங்கிப் போவாங்க. பஸ் ஸ்டாப்ல ஒன்றரை மணி நேரம் நிக்கணும். அதனால படிப்ப விட்டவங்க நிறைய பேர் இருக்காங்க. என் ஊர் மற்றும் நகரத்தைத் தொடுறதுக்கு கிட்டதட்ட பல வருஷத்தைக் கொடுத்திருக்கேன். காலேஜ் படிக்கிற வரைக்கும் திருநெல்வேலிக்கு அடிக்கடி வந்ததில்ல. முப்பது கிலோ மீட்டர் கடக்க பல வருஷம் தேவைப்பட்டுச்சு. பெரிய தூரமா தெரியும். இதைவிடக் கொடுமை என்னனா, திருநெல்வேலில இருந்து ஊருக்கு வர்றதுக்கு ஒவ்வொரு டிரைவரா எங்க ஊர்ல நிக்குமான்னு கேட்போம். இத்தனைக்கும் எல்லா பஸ்ஸும் எங்க ஊரை கிராஸ் பண்ணித்தான் போகும். திருச்செந்தூர் போற எல்லா பஸ்ஸும் எங்க ஊரை கிராஸாகாமப் போகாது. ஆனா, புளியங்குளம் நிக்குமான்னு கேட்டா, 'போப்பா'ன்னு விரட்டிருவாங்க. கிட்டத்தட்ட பத்து பஸ் கேட்டுட்டு டவுன் பஸ் ஏதாவது ஒத்துக்குவாங்க. அதுவும், ஒரு டிக்கெட் இருந்தா ஏத்த மாட்டாங்க. இந்த இடம்பெயர்தல் எனக்குக் கஷ்டமா இருந்தது. 'நான் ஏன் லேட்டா ஜெயிச்சேன்'ங்குற காரணத்தை யோசிக்குறப்போ நடந்து வர்றதுக்குத் தாமதம் ஆகியிருக்குன்னு தோணும். லேட்டா திருமணம், சமூகத்தைப் புரிஞ்சிக்கிட்டதுக்கு எல்லாத்துக்கும் இதுதான் காரணம். எல்லாமே ரொம்ப ரொம்பத் தாமதமா நடந்திருக்கு. இந்த வலியைத்தான் 'கர்ணன்'ல காட்டினேன்."

'கர்ணன்' கேரக்டருக்கு தனுஷ் எப்படிப் பொருந்திப் போனார்?

தனுஷ்
தனுஷ்

"எனக்குள்ள பெரிய பயமிருந்தது, நாம 'ரா'வா எடுக்கப் போறோம். லைவ் லொகேஷன்ல எடுக்கப் போறோம்னு. பெரிய ஹீரோ எப்படி ஏத்துக்குவார். அவர் தனியா தெரிவரான்னு பயமிருந்தது. ஸ்க்ரிப்ட்ல எழுதியிருந்ததை எடுக்க சுதந்திரம் இருந்தது. லொகேஷன் எதுவும் மாத்தல. தனுஷ் சார் சுத்தி எப்போவும் சினிமாவுக்கு சம்பந்தமில்லாத ஆட்களா இருப்பாங்க. அவங்க எல்லாரையும் உன்னிப்பா கவனிப்பார். ஹீரோயிசத்துக்காகச் சில விஷயங்களைச் செஞ்சாலும், 'வேண்டாம் சார்'னு சொல்லிருவார். படத்தை பிச்சுப் பிச்சு எடுத்திருக்கோம். ஏன்னா, கொரோனா வந்திருச்சு. முழுமை அடைஞ்சிருக்குமான்னு டவுட் இருந்தது. அவரோட கடைசி நாள் ஷூட்டிங்ல, 'நல்ல படத்துல நடிச்சிருக்கேன்’னார். 'இன்னும் நீங்க படமே பார்க்கலையே'ன்னு கேட்டா, 'படம் ஓடினாலும் ஓடமாப்போனாலும் நல்ல படம். அதுக்கு நன்றி'ன்னு சொல்லிட்டுப் போனார். அடுத்து படம் பண்றோம்னு சொல்லிட்டுப் போனார். இந்த நம்பிக்கைதான் எடிட்டிங்ல என்னை உட்கார வெச்சது. எனக்குள்ள இருந்த தயக்கம் எல்லாத்தையும் உடைச்சது. ஹீரோவுக்கு போகஸ் வைக்காம தேவையில்லாத விஷயங்களுக்கு வெச்சிட்டோம்னு டவுட்ல இருந்தேன். பன்றி, குதிரை, கழுதை, பருந்துன்னு எல்லாத்துக்கும் போகஸ் வெச்சிருக்கோம்னு டவுட்டோட இருந்தோம். லேயர் லேயர்னு போய்க்கிட்டே இருக்கோம்னு யோசிச்சேன். கழுதை மலை மேல ஏறுற சீனுக்கு ஒருநாள் முழுக்க நேரம் செலவழிச்சேன். 'ஏன் டைரக்டர் கழுதை பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கார்’னு நினைச்சாங்க. அப்படி கழுதை மலை மேல நின்னப்போ சவுண்ட்டா கத்தினேன். மொத்த 'கர்ணன்' ஷூட்டிங்ல கண்கலங்கி எமோஷனல் ஆகி நின்ன ஷாட் அது. ஏன்னா, அது எனக்குக் கனவுல வந்த காட்சி. மலை மேல கழுதை நிக்குற காட்சியை நேர்ல பார்த்ததே இல்ல. ஆனா, என்னுடைய கனவுல கால்கட்டு போட்டு நின்னுக்கிட்டே இருக்கும் கழுதை மலை மேல போயிருமா, ஷாட் எடுத்திருவோமான்னு கேள்வி இருந்துகிட்டே இருந்தது. பைனலி, கழுதை போய் நின்னுருச்சு. அந்த செகண்ட் டைரக்டா ஆர்ட் பார்மோட மதிப்பைப் புரிஞ்சிகிட்டேன். என் கனவை நேர்ல பார்க்குறேன்னு சந்தோஷப்பட்டேன். படம் ஓடுது, ஓடலன்னு தாண்டி இந்த ஷாட் போதும்னு தோணுச்சு. இது போதும்னு தோணுச்சு. சொல்ல முடியாத வார்த்தையா இருந்தது. ரைட்டர் மற்றும் இயக்குநரைத் தாண்டி மாரி செல்வராஜ் பையனா சந்தோஷப்பட்டேன். கர்ணன் சக்சஸ் அங்கேயே உணர்ந்துட்டேன். முழுப்படமா நான் திருப்தி அடைஞ்சிட்டேன். படம் ரிலீஸின் போது அமெரிக்காவுல தனுஷ் இருந்தார். அப்போ வீடியோ கால் பண்ணினார். 'என்ன சார் பண்ணியிருக்கீங்க'ன்னார். உடனே, என்னோட டைரக்டர் ராம் சாரை லைன்ல எடுத்தார். கான்பரன்ஸ் கால்ல மூணு பேரும் இருக்கோம். 'இவ்வளவு பெரிய அனுபவத்தைப் படம் கொடுக்கும்னு நினைக்கல. பெரிய அனுபவத்தைக் கொடுத்திருக்கு. சாட்சியா நீங்க இருக்கணும்னு சொல்றேன்’னு சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்தேன். 'ஏமன்' தாத்தா சாகுறப்போ குதிரைக்கார பையன் அழுவான். அந்த சீன் எடுத்து அனுப்பியிருந்தார் தனுஷ். ’இந்த மாதிரி ஒரு படத்துல பண்ணுவேன்னு'னார். இந்த அளவுக்கு ஒரு நடிகன் கவனிக்குறார். அந்தப் பையன் லுக்கை அந்த அளவுக்கு தனுஷ் கவனிச்சியிருக்கார். அந்தக் காட்சில மிரண்டுபோயிட்டேன்னு சொன்னார். அதுதான் நடிப்புன்னு சொன்னார்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism