Published:Updated:

"அப்ப அண்ணனா நான் ரவிக்கு பண்ண வேண்டியதை பிரகாஷ் ராஜ் சார் பண்ணார்!" - மோகன் ராஜா

'பொம்மரீலு’ படத்தை ’சந்தோஷ் சுப்ரமணியம்’ படமாக ரீமேக் செய்த அனுபவம் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள இயக்குநர் மோகன் ராஜாவிடம் பேசினேன்.

`ராஜா - ரவி’ என்கிற ஹிட் காம்போவின் மிக முக்கியமான படங்களில் `சந்தோஷ் சுப்ரமணியம்' படமும் ஒன்று. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 12 வருடங்கள் ஆனாலும், இப்போது டிவியில் போட்டாலும் சேனலை மாற்றாமல் பார்க்க வைக்கும் எவர்கிரீன் படமாக இருக்கிறது. இந்தப் படத்தை ரீமேக் செய்த அனுபவம் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள இயக்குநர் மோகன் ராஜாவிடம் பேசினேன்.

`ட்ரம்ப்பே... நீ அமெரிக்காவுக்குதான் மாஸ்... ஆனா, மோடி முன்னாடி தூஸ்!' - அனல் கோலிவுட் பிரஸ் மீட்ஸ் #Parody

`பொம்மரீலு’ படத்தை ரீமேக் பண்ணணும்னு நீங்க முடிவெடுத்தற்கான காரணம்?

`` 'பொம்மரீலு’ படத்தை எடுத்த பாஸ்கரும் நானும் 1996ல் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சதுல இருந்து நல்ல நண்பர்கள். இந்தக் கதையை நாங்க காலேஜ் நாள்கள்லேயே பேசியிருக்கோம். அந்தக் கதையை பாஸ்கர் தெலுங்கில் படமாக எடுப்பார்; அதை நான் தமிழிலில் ரீமேக் பண்ணுவேன்னு நினைச்சதுகூட கிடையாது. ஆனா, அப்படி ஒரு வாய்ப்பு எங்களைத் தேடி வரும்போது, அதை விட்டுடக்கூடாதுனு நினைச்சோம். நான் ரவியை வைத்து இயக்கிய `ஜெயம்’, `எம்.குமரன்’ படங்கள் மட்டும்தான், நாங்க இதைப் பண்ணணும்னு தேடி ரீமேக் பண்ணப் படங்கள். `சம்திங் சம்திங்’, `சந்தோஷ் சுப்ரமணியம்’ படங்கள் எங்களைத் தேடி வந்த படங்கள்தான். `எம்.குமரன்’ படத்துக்கு அப்பறம் `மழை’, `இதயத்திருடன்’ படங்கள் ரவிக்கு சரியா போகாதனால, ஒரு பெரிய ஹிட் தேவைப்பட்ட நேரத்தில் `நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா’ படத்தை ரீமேக் பண்ணணும்னு ஸ்ரீ லெட்சுமி புரொடக்‌ஷன் எங்ககிட்ட வந்தாங்க. அதுதான் `சம்திங் சம்திங்’."

ஜெயம் ரவி, ஜெனிலியா
ஜெயம் ரவி, ஜெனிலியா

``அதே மாதிரி, `பொம்மரீலு’ ரீமேக் உரிமத்தை வெச்சிருந்த பிரகாஷ் ராஜ் சார், `நீங்கதான் ரீமேக் பண்ணணும்’னு என்கிட்ட சொன்னார். ஆனா, அவர் இந்தப் படத்திற்காகப் பரிந்துரைத்த ஹீரோ, ஹீரோயினை வைத்துப் படம் எடுக்க எனக்கு உடன்பாடில்லை. ஒரு கட்டத்துல நாங்க எல்லாரும் பேசி ரவிதான் இதுக்குச் சரியான ஆள்னு முடிவு பண்ணினோம். ஆனால், ரவியோட கால்ஷீட் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கிட்ட இருந்துச்சு. இயக்குநர் சுசி கணேசனின் இயக்கத்தில் ரவியை ஹீரோவா வெச்சு `கந்தசாமி’ படத்தை எடுப்பதற்கான வேலைகள்ல இருந்தார், கல்பாத்தி அகோரம் சார். அதே சமயத்துலதான், இயக்குநர் சுசி கணேசனுக்கு விக்ரமோட கால்ஷீட் கிடைக்க, அகோரம் சார்கிட்ட நிலைமையை எடுத்துச் சொல்லி விக்ரமை வைத்துப் படம் இயக்கப் போயிட்டார். இப்ப ரவியோட கால்ஷீட் மட்டும் அகோரம் சார்கிட்ட இருந்தனால, `ரவி நடிச்சா இந்தப் படம் நல்லா வரும்’னு பிரகாஷ் ராஜ் சார்கிட்ட இருந்து `பொம்மரீலு’ ரீமேக் உரிமத்தை அகோரம் சார் வாங்கினார். அகோரம் சாரும் `சம்திங் சம்திங்’ படம் பார்த்ததிலிருந்தே என்னையும் ரவியையும் வெச்சு ஒரு படம் பண்ணணும்னு சொல்லிட்டு இருந்தார். அது இந்தப் படம் மூலமா நடக்கும்னு உடனே ஓகே சொல்லிட்டார். இப்படி `சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் நாங்க இருக்கணும்னு அது எங்களைத் தேடி வந்துச்சு.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`பொம்மரீலு’ ஸ்கிரிப்ட்டில் தமிழுக்காக என்னென்ன மாற்றங்கள் பண்ணீங்க?

`` 'பொம்மரீலு’வைத் தமிழுக்காக மாற்றும் போது படம் முழுக்க காமெடி இருக்கணும்னு முடிவு பண்ணேன். `தெலுங்கு வெர்ஷனைவிட, தமிழ் வெர்ஷனுக்கு ஆடியன்ஸ் பயங்கரமா சிரிச்சு என்ஜாய் பண்ணுனாங்க’னு `பொம்மரீலு’ படத்தை இந்தியில் ரீமேக் பண்றதுக்கான உரிமத்தை வாங்கிய போனி கபூர் சார்கூட என்கிட்ட இந்த விஷயத்தை நோட் பண்ணிச் சொன்னார். முதல் விஷயமா நான் மாத்துனது இதைத்தான். இன்னொண்ணு என்னன்னா, `பொம்மரீலு’ படத்தோட திரைக்கதை ரொம்ப சிறப்பா இருந்ததால, அதில் எதுவுமே பண்ணக்கூடாது; ஆனா, அந்தக் காட்சிகளை எல்லாம் இன்னும் அழுத்தமா எடுக்கணும்னு நினைச்சேன். அடுத்தது என்னன்னா, படத்தில் இருக்கிற மெல்லிய உணர்வுகளைக் கொச்சைப் படுத்திடக்கூடாதுனு நினைச்சேன். இப்படிதான் நான் பல விஷயங்களை நோட் பண்ணினேன். உதாரணத்துக்கு, ஹீரோயினோட சிரிப்பும், ஹீரோவோட ஆதங்கமும். இந்த ரெண்டு விஷயமுமே படத்தில் சரியான மீட்டரில் இருக்கணும்னு நினைச்சேன். ஜெனிலியா இந்தப் படத்தில் நூறு இடங்கள்ல சிரிச்சிருப்பாங்க. அந்த எல்லா சிரிப்புக்கும் வித்தியாசம் இருக்கு. அதேமாதிரி, ஹீரோ அவங்க அப்பாகிட்ட எந்தெந்த சீனில் எந்தெந்தளவுக்குக் கோபப்படணும்னு ஒரு கட்டுரையே எழுதினேன். அந்தக் கோபத்தோட அளவுகோல் மாறிடக்கூடாதுனு கவனமா இருந்தேன். சும்மா படத்தைப் பார்த்து சீன் பை சீன் ரீமேக் பண்ற மாதிரி இந்தப் படத்தை நான் பண்ணல. அந்தப் படத்தை நல்லா ஸ்டடி பண்ணிட்டு, இந்தப் படத்தைப் பண்ணினேன்.’’

`சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தோட ஷூட்டிங்கில் நடந்த மறக்கமுடியாத விஷயம்?

jayam ravi
jayam ravi

``நாலாவது முறையா ரீமேக் படம் பண்ணும்போது எனக்கும் ரவிக்கும் ஒரு முரண் வந்துச்சு. `நீ ஹீரோயின் கேரக்டர் மேலயும், மத்த நடிகர்கள் நடிக்கிற கேரக்டர் மேலயும்தான் அதிக கவனம் செலுத்துற. என் கேரக்டர் மேல கவனம் செலுத்த மாட்ற’னு ரவி சொன்னான். `என்னைவிட நீதான் அதிகமா இந்த ஹீரோ கேரக்டரை உள்வாங்கி வெச்சிருக்கிற ஆள். உன்னை உதாசீனப்படுத்தணும்னு நான் மற்ற கேரக்டர் மேல கவனம் செலுத்தல. உன் கதாபாத்திரத்தை நீயே ஒழுங்கா பார்த்துக்கிற. உன்னைக் குழப்பாம இருந்தாலே போதும்கிற அளவுக்கு உன் மேல பெரிய மரியாதை இருக்குடா’னு அவனுக்குப் புரிய வெச்சேன். இந்தப் படத்தில் நடிக்கும்போதும் அந்த மீட்டரை விட்டு மீறிடக்கூடாதுனு பார்த்து, பார்த்து நடிச்சான். குறிப்பா க்ளைமாக்ஸ் காட்சிக்காக அவ்வளவு மெனக்கெட்டான். கிட்டத்தட்ட 14 பக்கம் வசனத்தை ஒரே டேக்ல பேசினான். ஒரே டேக்ல பேசும்போது, எப்ப அப்பாவைப் பார்க்கணும், எப்ப திரும்பணும், எந்தளவுக்கு வேகமா இழுத்தா சட்டை பட்டன் தெறிக்கும்கிற அளவுக்கு எல்லாத்தையும் சரியா கணக்குப் பண்ணி நடிச்சான். ரவி நிஜமாகவே எமோஷனலாகி அந்த க்ளைமாக்ஸ் வசனத்தைப் பேசி முடிச்சதும், செட்ல இருந்த எல்லாரும் பேச்சு, மூச்சு இல்லாம இருந்தாங்க. அங்க நான் ஒரு அண்ணனா ரவியைச் சமாதானப்படுத்துவதற்கு முன், பிரகாஷ் ராஜ் சார் ரவியை விடாம ரெண்டு நிமிஷத்துக்கு மேல கட்டிப்பிடிச்சார். அவ்வளவு எமோஷனையும் உள்வாங்கி நடிச்சு முடிச்சதுக்கு அப்பறமும், அவனுக்கு மேலும் சிரமத்தைக் கொடுக்க வேண்டியதா போயிடுச்சு. 400 அடி இருக்க வேண்டிய ஒரு ஃபிலிம் கேன், 340 அடி இருந்ததைக் கவனிக்காம நாங்க டேக் போயிட்டோம். அதுனால, 12-வது பக்க வசனங்களை ரவி பேசிட்டு இருக்கும் போது ஃப்லிம் ரோல் காலியாகிடுச்சு. இருந்தாலும், கட் சொல்லிடாம மொத்த சீனையும் ரவி நடிச்சு முடிச்சதுக்கு அப்பறம், மறுபடியும் அந்த 2 பக்க வசனத்தை மட்டும் எடுத்தோம். கடைசி ரெண்டு பக்க வசனமா இருந்தாலும், அந்த மொத்த எமோஷனையும் திரும்பக் கொண்டுவரணும்கிற சிரமத்தைப் பார்க்காமல் நடிச்சுக் கொடுத்தான்.’’

இந்தப் படம் பண்ணும்போது எந்தெந்தக் காட்சிகளில் உங்களோட அப்பா நினைவுக்கு வந்தார்?

Editor Mohan, Mohan Raja, Jayam Ravi
Editor Mohan, Mohan Raja, Jayam Ravi

``இது தந்தை - மகன் உறவுக்கான படமா இருந்தனால, படம் பார்க்கிற எல்லாருக்கும் அவங்க அப்பா நினைவுக்கு வர்ற மாதிரி, இதை எடுத்த எங்களுக்கும் அது வரும்தானே. இந்தப் படம் முழுக்கவே எங்க அப்பாவை நினைச்சுக்கிட்டு பண்ணதுதான். இந்தப் படத்தை நான் சந்தோஷமாக ரீமேக் பண்ணதுக்கு முக்கியக் காரணம், க்ளைமாக்ஸில் இருந்த ஒரு வசனம்தான். அவ்வளவு ஆதங்கத்தையும் தன்னோட அப்பாக்கிட்ட ஹீரோ சொன்னதும், `இதெல்லாம் ஏன்டா என்கிட்ட முன்னாடியே சொல்லலை’னு அப்பா கேட்பார். அதுக்கு, `நீங்க எங்களை சரியாத்தான் வளர்த்திட்டு இருக்கீங்கங்கிற சந்தோஷத்தை உங்களுக்குக் கொடுத்திட்டே இருக்கணும்னு நினைச்சேன். ஏன்னா, உங்களை மாதிரி ஒரு அப்பா யாருக்கும் கிடைக்க மாட்டாங்க. ஒவ்வொரு நிமிஷமும் தன்னோட பசங்களுக்காகப் பார்த்துப் பார்த்து பண்ற அப்பா யாருக்குக் கிடைக்கும்’னு ஹீரோ சொல்வான். இந்த வசனம் மட்டும் இல்லைனா, அந்த அப்பா கேரக்டர் நெகட்டிவ் கேரக்டரா மாறியிருக்கவும் வாய்ப்பு இருக்கு. அப்படி ஆகாம இந்த வசனம் அதை பேலன்ஸ் பண்ணியிருந்ததாலதான், இந்தப் படத்தோட ரீமேக்கைப் பண்றதுக்கு ஓகே சொன்னேன். இந்தப் படம் எல்லா அப்பா - மகனும் தான் யார்னு சுய பரிசீலனை பண்ணிக்கிறதுக்கு உதவுச்சுனு சொல்லலாம். இந்தப் படம் பார்த்துட்டு , `என் மகள் படிக்கணும்னு நினைச்ச டிகிரிக்கே அப்ளிகேஷன் வாங்கிக் கொடுத்தேன்’னு ஒரு தந்தை என்கிட்ட சொன்னார். அதுதானே மாற்றம். அந்தச் சமூக மாற்றத்தையும் இந்தப் படம் ஏற்படுத்துச்சு.’’

`பொம்மரீலு’ படத்தில் நடித்த ஜெனிலியா, பிரகாஷ் ராஜை இந்தப் படத்திலும் நடிக்க வைக்க என்ன காரணம்?

``பிரகாஷ் ராஜ் சார் செம பிஸியான நடிகர். `எம்.குமரன்’ படம் பண்ணும் போதே, அவரோட கால்ஷீட் கிடைப்பதில் ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. அதுனால, இந்தப் படத்தின் அப்பா கேரக்டருக்கு முதலில் சத்யராஜ் சார்கிட்டதான் கேட்டோம். அப்ப அவர், `இப்போவும் ஹீரோவா நடிக்கிறதுக்கு ரெண்டு, மூணு படங்கள் வந்திட்டு இருக்கு. அப்பா ரோலில் நடித்து அதை ஏன் கெடுத்துக்கணும்னு யோசிக்கிறேன்’னு சொன்னார். இப்படி சொன்னவர், சில வருஷங்கள் கழிச்சு என்னைப் பார்க்கும் போது, `அப்பவே அந்தப் படத்தில் நடிச்சிருக்கலாம்’னு சொல்லியிருக்கார். சத்யராஜ் சார் நடிக்கலைனு சொன்னதும் நாங்க பிரகாஷ் ராஜ் சார்கிட்டே போனோம். `என்ன... மத்த நடிகர்கள்கிட்டேயும் ஒரு ரவுண்ட் கேட்டுட்டு வந்துட்டீங்களா’னு சிரிச்சுக்கிட்டே கேட்டார். நாங்களும் அவர்கிட்ட எங்க தோல்வியை ஒப்புக்கிட்டோம். எங்களுக்குள்ள இப்படிப்பட்ட உறவுதான் இருக்கு. இப்படித்தான் அவர் இந்தப் படத்திற்குள் வந்தார். ஒரிஜினல் வெர்ஷனில் நல்லா கட்ட மீசை வெச்சுக்கிட்டு செமையா இருப்பார். இந்தப் படத்தோட ஷூட்டிங்கிற்கு வரப்ப, மொட்டை போட்டு, மீசையையும் எடுத்துட்டு வந்துட்டார். `என்ன சார்’னு கேட்டா, ‘அட சுப்ரமணியம் இப்படித்தான் இருப்பான்னு நினைச்சுக்கோங்கப்பா’னு சொல்லிட்டார். அப்புறம் படம் முழுக்க அவருக்கு க்ளீன் ஷேவ் லுக்கை வெச்சுக்கிட்டு, விக்கு மட்டும் வெச்சுக்கிட்டோம்."

Prakash Raj, Jayam Ravi
Prakash Raj, Jayam Ravi

``ஆரம்பத்தில் இருந்தே ஹாசினி கேரக்டருக்கு ஜெனிலியாதான்னு முடிவு பண்ணிட்டேன். முதலில் பிரகாஷ் ராஜ் சார் தயாரிக்கிறதா இருந்தப்போ, `ஹீரோயின் ரோலுக்கு வேற ஆளை நடிக்க வைக்கலாம்’னு சொன்னப்ப, முடியாதுனு சொல்லிட்டேன். வேற யாராலும் நடிக்க முடியாதுனு கிடையாது. இந்த கேரக்டருக்கு வேற ஆளை நடிக்க வெச்சுக்காட்டுறேன்னு கெத்து காட்ற விஷயமும் இது கிடையாது. அதுனால, ஹீரோயின் ரோலுக்கு ஜெனிலியாவையே கமிட் பண்ணிட்டோம். இந்தப் படத்தில் மட்டுமல்ல, இதுக்கு முன்னாடி நான் ரீமேக் பண்ண மூணு படங்களிலுமே ஒரிஜினல் வெர்ஷனில் நடிச்ச நடிகைகள்தான் தமிழ் வெர்ஷனிலும் நடிச்சிருப்பாங்க. ஏன்னா, அந்த கேரக்டர்களுக்கு அவங்க அவ்வளவு கச்சிதமா பொருந்தியிருந்தாங்க.’’

மூன்று ரீமேக் படங்கள் பண்ணதுக்கு அப்பறம் நான்காவது ரீமேக் படமா இதைப் பண்ணுவதற்கு முன் உங்களுக்கு தயக்கம் எதுவும் இருந்ததா?

``நான் தொடர்ந்து ரீமேக் படங்கள் பண்ணிட்டு இருந்தனால, என்னை `ரீமேக் ராஜா’னு கிண்டலும் பண்ணியிருக்காங்க. ஆனா, அதையும் நான், `ரீமேக் பண்றதில் நாமதான் ராஜா’னு சொல்றாங்க. அப்ப நாம `ரீமேக் கிங்’னு பாசிட்டிவ்வா நினைச்சுப்பேன். அது உண்மையும் கூடத்தான். ஏன்னா, தமிழில் என்னோட முதல் இரண்டு ரீமேக் படங்கள்தான் நான் பண்ணணும்னு நினைத்தவை. அடுத்து நான் பண்ணின ரீமேக் படங்களெல்லாம், நீங்க பண்ணுனா நல்லா இருக்கும்’னு என்கிட்ட வந்த படங்கள். அப்படி என்கிட்ட வர எல்லா ரீமேக் படங்களையும் நான் பண்றதில்லை. நான் ஏழு படங்கள் பண்றதுக்காக, 70 ரீமேக் படங்களை மறுத்திருக்கேன். `இது தமிழ் சினிமாவுக்கு செட்டாகாது; இந்தக் கருத்து சரியில்லை; இது ஆரோக்கியமான படமா இருக்காது’னு பல படங்களை காசுக்காகப் பண்ணாம, தவிர்த்திருக்கேன். அப்படி பார்த்துப் பார்த்து தமிழ் ரசிகர்களுக்கு நல்ல படங்களையும், என் தயாரிப்பாளர்கள் என்மீது வைத்த நம்பிக்கையை வீணாக்காமலும் படங்கள் பண்ணிட்டு இருக்கேன்.’’

நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைமுக்கெல்லாம் முன்னாடி நம் நாஸ்டால்ஜி சீரியல்ஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு