Published:Updated:

``ஓடாதுன்னு சொன்ன சிலபேர்; எக்ஸ்ட்ரா 50 நாள் ஓடும்னு சொன்ன அவர்..!" - மோகன் ராஜா #15YearsOfMKumaran

`எம்.குமரன் S/O மகாலட்சுமி’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்தப் படம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார், இயக்குநர் மோகன் ராஜா.

’ஜெயம்’ ரவி - ராஜா கூட்டணியில் இரண்டாவதாக வெளிவந்த படம், ’எம்.குமரன் S/O மகாலட்சுமி’. இந்தப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்தப் படம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.

" `எம்.குமரன் S/O மகாலட்சுமி’ படம் எப்படி ஆரம்பமாச்சு?"

`` `ஜெயம்’ படத்துக்கு அப்புறம் நானும் ரவியும் தனித்தனியாகப் படம் பண்றதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தோம். நான் ஒரு கதையை எழுதிட்டிருந்தேன்; ரவிக்கு செட்டாகிற மாதிரி ஒரு கதையும் கேட்டுட்டிருந்தோம். ஆனால், ரவியோட திறமையை முழுசா காட்டுற மாதிரி எந்தக் கதையும் வரல. `ஜெயம்’ படம் ஹிட்டான அடுத்த வருடமே ஒரு படம் பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால, கதைக்கு ரொம்பநாள் காத்திருக்க முடியல. அதனால, மறுபடியும் நானே ரவியை வெச்சு ஒரு படம் இயக்கலாம்னு முடிவு பண்ணினேன். அந்தச் சமயத்தில்தான் ‘அம்மா நானா ஓ தமிழ அம்மாயி'ங்கிற தெலுங்குப் படம் ரிலீஸாகியிருந்தது. இந்தப் படத்தை ரீமேக் பண்ணா சரியா இருக்கும்னு முடிவெடுத்து, ஆரம்பிச்சதுதான் ’எம்.குமரன் S/O மகாலட்சுமி’.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"ரீமேக் படமா இருந்தாலும் அதில் உங்களுடைய உழைப்பு எந்த அளவுக்கு இருந்துச்சு?"

`` `ஜெயம்’ படத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு படம் தமிழ்ல ரீமேக் ஆகுதுன்னா, அதுல பெரிய ஹீரோ இருப்பார். பெரிய ஹீரோ இருந்தாதான் ஒரு படத்தை ரீமேக் பண்ணுவாங்க.`கதை நல்லா இருக்கு; இதை ரீமேக் பண்ணலாம்’னு பெருசா யாரும் பண்ணதே இல்லை. அந்த டிரெண்டை மாத்திதான், ’ஜெயம்’ பண்ணினோம். ’ஜெயம்’ பண்ணும்போது என்னால அதில் பெருசா மாற்றங்களைக் கொண்டுவர முடியல. ஒரிஜினல்ல என்ன இருந்துச்சோ, அதிலிருந்து சின்னச் சின்ன மாற்றங்களோடு அந்தப் படத்தை எடுத்தேன். ஆனா, ’எம்.குமரன்’ல பல மாற்றங்களைப் பண்ணினேன். நான் பண்ணின ரீமேக் படங்களிலேயே அதிக மாற்றத்தைப் பண்ணின படம்னா, அது ’எம்.குமரன்’தான். ‘அம்மா நானா ஓ தமிழ அம்மாயி' படத்தைப் பார்க்கும்போது, ’இந்தப் படம் நல்லாயிருக்கு; ஆனா, ஏதோ ஒண்ணு மிஸ்ஸாகுதே!'ன்னு எங்களுக்குத் தோணுச்சு. அதனால இந்தப் படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்குறதுக்கு முன்னாடி ஏலகிரியில, 10 நாள் டிஸ்கஷன் வெச்சோம். இங்கே இருந்து ஒரு டீம் ஏலகிரிக்குப் போய் இந்தப் படத்தை எப்படிப் பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். அந்த முடிவில் எங்களுக்குப் பல ஐடியா கிடைச்சது. 

Jayam Ravi and asin
Jayam Ravi and asin

’எம்.குமரன்’ படத்தோட கதை என்னன்னு கேட்டா, ‘அம்மா - பையன் பாசம், அம்மா இறந்ததுக்கு அப்புறம் அப்பாகிட்ட போறான், அங்கே அவனோட பாக்ஸிங் கனவும் நிஜமாகுது, அப்பாகூடவும் சேர்றான்’னு சொல்வாங்க. பொதுவாவே ஒரு தகப்பனைப் பார்த்துதான் ஒரு ஆண் எப்படி இருக்கணும்னு மகன் தெரிஞ்சுப்பான். ஆனா, இந்தப் படத்தில் தன்னோட மகனைப் பார்த்துதான், ஒரு ஆண் எப்படி இருக்கணும்னு அப்பா தெரிஞ்சுப்பார். இதை முக்கியமான கருவா வெச்சுக்கிட்டுதான் திரைக்கதை அமைச்சோம். அதேமாதிரி ’எம்.குமரன்’ல இருக்கிற மாதிரி ஒரிஜினல் படத்துல ஓப்பனிங், இன்டர்வெல், எண்டிங் இருக்காது. அதையும் மாற்றினோம். இவ்வளவு விஷயங்களையும் பண்ணிட்டுதான் படத்தோட ரீமேக் ரைட்ஸை வாங்கினோம். இந்த டிஸ்கஷன் டைம்ல வேற யாராவது ரைட்ஸை வாங்கிட்டா என்ன பண்றதுன்னு ஒரு யோசனை. ஆனாலும், கதையில் முழு நம்பிக்கை வந்ததுக்குப் பிறகே ரைட்ஸ் வாங்குவோம்னு உறுதியா இருந்தோம். நம்பிக்கையும் வந்தது, ரைட்ஸும் வாங்கினோம்.

அதுக்குப் பிறகு சிலபேர், ‘தமிழ் சினிமாவுல பாக்ஸிங்கை வெச்சுப் படம் எடுத்தா ஓடாதுப்பா, அது ராசி இல்லை’ன்னு சொன்னாங்க. நம்ம ஊர்ல பாக்ஸிங் அந்நியமா இருக்குன்னு நினைக்கிறாங்க. அதனால, சென்னை போர்ஷன்ல கொஞ்சமா பாக்ஸிங்கை வெச்சுட்டு, மத்ததையெல்லாம் மலேசியாவுல நடக்கிற மாதிரி மாத்திட்டேன். அதுமட்டுமல்லாம, ஒரிஜினல் வெர்ஷன்ல பிரிஞ்சிருக்கிற ஹீரோவோட அப்பாவும் அம்மாவும் பக்கத்துப் பக்கத்து ஊர்ல இருப்பாங்க. பக்கத்து ஊர்ல இருக்கிறவங்க சந்திச்சுக்க மாட்டாங்களான்னு ஒரு கேள்வி. அதனால, அப்பாவோட ஊரையும் மலேசியான்னு மாத்திட்டேன். அதுக்கப்புறம், ’மலேசியாவுல எடுத்த தமிழ் படங்கள் ஓடாது’ன்னு சொன்னாங்க. எங்க அப்பா எங்களுக்கு, ’ஒரு படம் ஏ சென்டர்ல மட்டும்தான் ஓடுச்சு, பி, சி சென்டர்ல மட்டும்தான் ஓடுச்சுன்னு யாரும் சொல்லக் கூடாது. மூணு சென்டர்லேயும் ஓடணும், அதுதான் வெற்றி. அதுக்கு கதை முக்கியமா இருந்தாலே போதும்!’ன்னு சொன்னார். அந்தத் தாரக மந்திரத்தோட இந்தப் படத்தை ஆரம்பிச்சோம்.’’

"நதியாவை எப்படி நடிக்க வெச்சீங்க?"

Jayam Ravi and nadhiya
Jayam Ravi and nadhiya

‘’ஒவ்வொரு கேரக்டருக்கும் யார், யாரை நடிக்க வைக்கலாம்னு பேசிட்டிருந்தப்போ, அம்மா கேரக்டருக்கு நதியான்னு சொன்னதும், எல்லோருக்கும் பிடிச்சுப்போச்சு. அப்போ, ‘அப்படின்னா, படம் 50 நாள் எக்ஸ்ட்ரா ஓடும்’ன்னு சொன்னார், அப்பா. ஆனா, நதியா நடிப்பாங்களான்னு சந்தேகமா இருந்தது. அவங்க ரொம்ப வருடமா நடிக்காம இருந்தாங்க. இருந்தாலும், அவங்ககிட்ட முயற்சி பண்ணினோம். அவங்க அப்போதான் லண்டன்ல இருந்து, அவங்க அம்மாவைப் பார்க்க மும்பைக்கு வந்திருந்தாங்க. நான் போய் அவங்களைப் பார்த்தப்போ, சின்ன பொண்ணு மாதிரி இருந்தாங்க. அம்மா கேரக்டருக்கு எப்படி ஓகே சொல்லப்போறாங்கன்னு பயந்துக்கிட்டேதான் கதையைச் சொன்னேன். கதை அவங்களுக்குப் பிடிச்சுப்போச்சு. அதுமட்டுமில்லாம, அப்பாவைப் பற்றி அவங்களுக்கு முன்னாடியே நல்லா தெரியும்ங்கிறதால உடனே ஓகே சொல்லிட்டாங்க.

நதியா மேடம் நடிச்சது இந்தப் படத்துக்குப் பெரிய ப்ளஸ் பாயின்ட். அவங்களைத் திரையில் பார்த்ததும் அவங்களோட எனர்ஜி ஆடியன்ஸுக்குத் தெரிஞ்சிடும். ஒரு மாடர்ன் அம்மாவா அவங்க இருக்காங்கன்னு ஈஸியா கன்வே பண்ண முடிஞ்சது. வேறெந்த நடிகையை அந்தக் கேரக்டரில் நடிக்க வெச்சிருந்தாலும், அந்தக் கேரக்டர் எப்படிப்பட்டதுன்னு எடுத்துச் சொல்ல இன்னும் நாலு சீன் எக்ஸ்ட்ரா தேவைப்பட்டிருக்கும். அதுமட்டுமல்லாம, அம்மா கேரக்டர்னு சொன்னதும் கொஞ்சம் நரை முடி அது இதுன்னு எந்த எக்ஸ்ட்ரா வேலைப்பாடும் செய்யல.

ஏன்னா, நம்ம தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை வெறும் பேண்டேஜ் மட்டும் இருந்தா பரிதாபம் வராதுன்னு அதுக்குமேல ரத்தம் வந்தமாதிரி தெரிய சிவப்பு மை ஊத்துவாங்க. பேண்டேஜைத் தாண்டி ரத்தம் வரவே வராது. இருந்தாலும் இதையெல்லாம் பண்ணுவாங்க. அப்படித்தான், அம்மா கேரக்டர்னா, முடி வெள்ளையா இருக்கணும்னு டை அடிச்சுவிடுவாங்க. ஆனா, இதில் நதியா மேடம் நிஜத்தில் எப்படி இருந்தாங்களோ, அதேமாதிரிதான் படத்திலும் காட்டியிருந்தோம். அது மக்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. மற்ற கதாபாத்திரங்களுக்கு அசின், பிரகாஷ் ராஜ், சுப்புன்னு ஒரிஜினல்ல நடிச்சவங்களையே இந்தப் படத்திலேயும் நடிக்கவெச்சேன். விவேக் சாரோட காமெடி டிராக்கும்  படத்துல ரொம்ப நல்லா வொர்க் அவுட் ஆகியிருந்துச்சு.

ஸ்ரீகாந்த் தேவாவும் நல்ல நல்ல பாட்டா போட்டுக் கொடுத்தார். ‘நீயே... நீயே’ பாட்டு இல்லாம எந்த அன்னையர் தினமும் கொண்டாடப்படுறதில்லை. அதேமாதிரி, ‘சென்னை செந்தமிழ்’, ‘அய்யோ... அய்யோ’ன்னு படத்துல இடம்பெற்ற எல்லாப் பாட்டும் ஹிட்!’’

"உங்க தம்பியைப் பற்றிச் சொல்லவே இல்லையே?" 

Jayam Ravi and mohan raja
Jayam Ravi and mohan raja

‘’ரவி வீட்டுல எப்படி இருப்பானோ, அதேமாதிரிதான் படத்திலும் தெரியணும்னு அவன் பண்ற சின்னச் சின்ன சேட்டைகளைப் படத்துல வெச்சேன். கண்ணை உருட்டுறது, பரதநாட்டியம் ஆடுறதுன்னு ரவியோட பல ஒரிஜினல் விஷயங்கள் படத்திலும் இருக்கும். எந்தக் காட்சியா இருந்தாலும் ரவியை வெச்சுப் பல டேக் எடுப்பேன். ‘நீ இப்படி பல டேக் எடுப்ப, கடைசியில முதல் டேக்கைத்தான் யூஸ் பண்ணுவ’ன்னு ரவி அடிக்கடி சொல்வான்.

ஏன் அப்படின்னா, ’நம்ம தம்பிக்கிட்ட இருந்து பெஸ்ட்டை வாங்கி, அதை ஆடியன்ஸுக்குக் காட்டணும்’னு ஆசைப்பட்டேன். அது உண்மையாவே நடந்துச்சு. இந்தப் படம் ரிலீஸானதும், பல பாராட்டுகள் கிடைச்சது. ரொம்ப மிகையா சொல்றேன்னு நினைக்காதீங்க, ‘ஜெயம் ரவி, ரித்திக் ரோஷன் மாதிரி இருக்கார்’னு பலபேர் சொன்னாங்க. ’டான்ஸ் வருது, ஆக்‌ஷன் வருது, ஒரு பக்கா கமர்ஷியல் ஹீரோவா இருக்கார்’னு சொன்னாங்க. ரொம்பப் பெருமையா இருந்துச்சு.’’

"ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த மறக்க முடியாத சம்பவம்?"

‘’இது அம்மா பாசத்தைப் பற்றிப் பேசுற படம். அதில் நான், என் தம்பி, எங்க அப்பான்னு ஃபேமிலியா சேர்ந்து வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம்தான். ஏன்னா, எங்க அம்மாவை மனசுல வெச்சுத்தான் ரவி நடிச்சான், நானும் படம் எடுத்தேன். ஜாலியான காட்சியா இருந்தாலும், சோகமான காட்சியா இருந்தாலும், ‘அம்மாவை மனசுல நினைச்சுக்கோ ரவி’ன்னு சொல்வேன். ரவியும் அதேமாதிரி நடிச்சான். மறக்க முடியாத சம்பவம்னா, ‘நீயே... நீயே’ பாட்டுல நதியா மேடமுக்கு ஊசி போடுற மாதிரி ஒரு சீன் வரும். அந்த சீன் எடுக்கும்போது, பதற்றத்துல நர்ஸ் நிஜமாவே ஊசி போட்டுட்டாங்க. அப்புறம் அவங்களுக்கு ஒரு டிடி ஊசி போட்டுட்டு வந்தோம். இப்படி நிறைய சம்பவம் நடந்திருக்கு.’’

"படம் ரிலீஸாகி 15 வருடம் ஆச்சு. எப்படி இருக்கு இந்த ஃபீல்?"

Jayam Ravi and asin
Jayam Ravi and asin

’’இந்தப் படத்தில் ஒரு விடை தெரியாத கேள்வி இருக்கும். அதை எத்தனை பேர் நோட் பண்ணியிருப்பாங்கன்னு எனக்குத் தெரியல. படத்துல நதியா இறந்ததுக்கு அப்புறம், தன் மகனுக்குத் துணையா யாரும் இல்லையேனு அந்தப் பையனை அப்பாக்கிட்ட போகச் சொன்னாங்களா... இல்லை, ’நான் என் பிள்ளையை எப்படி வளர்த்திருக்கேன்னு பாரு’னு அந்த அப்பாவுக்குப் புரிய வைக்கணும்னு போகச் சொன்னாங்களாங்கிறதுதான் அந்தக் கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாததுதான் இந்தப் படத்தோட அழகே! இந்தக் கேள்விக்கான பதில் பாசமானதாகவும் இருக்கலாம், ஆணவமானதாகவும் இருக்கலாம். அதனாலதான், அதுக்கு விடையே சொல்லாம விட்டுட்டேன். இந்தப் படம் ரிலீஸாகி ஒரு வருடம் கழிச்சு நான் ஒரு நபரைப் பார்த்தேன். அவர் என்கிட்ட, "சார் ’எம்.குமரன்’ படத்துல வர்றமாதிரிதான் என் அம்மாவும் என்னைத் தனி ஆளா வளர்த்தாங்க. ஆனா, அப்பாவோட பெயர்தான் எனக்கு இனிஷியலா இருந்துச்சு. இந்தப் படம் பார்த்த பிறகு, என் அம்மா பெயர்தான் எனக்கு இனிஷியலா இருக்கணும்னு படிப்புச் சான்றிதழ்ல இருந்து எல்லாத்திலேயும் இனிஷியலை மாத்துனேன்"னு சொன்னார்.

இதேமாதிரி ஒரு சம்பவம் போன வருடமும் நடந்துச்சு. ஏர்போர்ட்ல ஒரு அம்மாவைப் பார்த்தேன். அவங்களோடு அவங்க பையனும் இருந்தார். அந்த அம்மா என்னைப் பார்த்ததும், ‘சிங்கிள் மதரா என் பையனைக் கஷ்டப்பட்டு வளர்த்திருக்கேன். எனக்கு ஒரு தெம்பு கொடுத்ததே உங்க படம்தான் சார்’னு சொன்னாங்க. இதையெல்லாம் கேட்டப்போ, எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல. இப்படிப் பல அற்புதமான அனுபவங்களை, ’எம்.குமரன் S/O மகாலெட்சுமி’ படம் கொடுத்திருக்கு.’’

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு