Published:Updated:

``உதயநிதிக்கும் எனக்கும் ஆரம்பத்துல மிஸ்மேட்ச் ஆச்சு; அது ஏன்னா..." - `சைக்கோ' கதை சொல்லும் மிஷ்கின்

ராஜ்
News
ராஜ்

`சைக்கோ' படத்தில் பெரிதும் கவர்ந்தவர், வில்லனாக நடித்த ராஜ்குமார். ஒருவித சைக்கோ தன்மையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தின் இயக்குநர் மிஷ்கின் மற்றும் ராஜ்குமார் இருவரையும் சந்தித்தோம்.

இயக்குநர் மிஷ்கினுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் மற்றும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது படம் முழுக்க குருதி வாடையடித்தாலும், க்ளைமாக்ஸில் ஓர் இனம்புரியாத பேரன்பைக் கொடுத்துவிடுவார். சமீபத்தில் வெளிவந்த `சைக்கோ' படமும் அப்படியானதுதான். அந்தப் படத்தில் பெரிதும் கவர்ந்தவர், வில்லனாக நடித்த ராஜ்குமார். ஒருவித `சைக்கோ' தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இயக்குநர் மிஷ்கின் மற்றும் ராஜ்குமார் இருவரையும் சந்தித்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

"கலவையான விமர்சனங்கள் வந்துட்டிருக்கு. இதைப் படத்தோட வெற்றினுதான் நான் சொல்வேன். படத்தோட ஸ்க்ரிப்ட்டை எழுத ஒரு வருஷம் தேவைப்பட்டது. எழுதி முடிக்கும்போதே, இதுக்கான விமர்சனங்களையும் எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டேன். படம் கட்டாயம் ஒரு டிபேட்டை உருவாக்கும்னு தெரியும். இது எதுவுமே இல்லாம இருந்திருந்தா, சாதாரண ஒரு சினிமாவாதான் `சைக்கோ' இருந்திருக்கும். படத்தைப் பார்த்துட்டு, லாஜிக் மீறல்கள், `14 கொலைகளைப் பண்ணின ஒருத்தனை, ஹீரோயின் எப்படி மனிதனாக்குறா'ன்னு நிறைய பேர் கேட்குறாங்க. நிஜ வாழ்க்கையில இப்படி எதுவும் நடக்கலை. அதனாலதான் என்னுடைய கனவுப் படமா இதை எடுத்திருக்கேன்.

நித்யா மேனன் மற்றும் மிஷ்கின்
நித்யா மேனன் மற்றும் மிஷ்கின்

இதுல வர்ற ஹீரோயின், கூத்தாடிகிட்டே எல்லோரையும் மனிதனாக்குறா. படம் பார்த்துட்டு வெளியே போயிட்டா இதை மறந்து போயிடுறாங்க. வெள்ளைக்காரன், பல வருஷமா நம்மளை அடிமைப்படுத்தி வெச்சிருந்தான். காந்திஜி அவனை மன்னிக்கலையா? மிகச் சிறந்த மனிதர்கள் எல்லோரும் மன்னித்தவர்கள்தான். இதுல ஒருத்திதான் தாகினியும்" என்று சைக்கோ பற்றி இன்ட்ரோ கொடுத்தார் மிஷ்கின். அதைத் தொடர்ந்து, வில்லனாக நடித்த ராஜ்குமாரை அறிமுகம் செய்து வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"நடிக்கிறதுக்காகத்தான் ராஜ் என்னைத் தேடி வந்தான். ஆபீஸ் கதவை யாரோ திறந்தாங்க. வாசல்லதான் நின்னுட்டிருந்தான். என்னைப் பார்த்தவுடனே டக்குனு கதவை மூடிட்டான். அவன் என்னை எதிர்பார்க்கலை. `டேய் உள்ள வா'னு கூப்பிட்டேன். பயந்துக்கிட்டே வந்தான். அவனோட பயம்கூட அழகா இருந்தது. 5 வருஷமா என்கூடதான் இருக்கான். எல்லா வேலைகளையும் பார்த்திருக்கான். லைம்லைட்டுக்கு எப்பவுமே வர மாட்டான். உண்மையா இருப்பான்" என்று சொல்லி ராஜைப் பார்த்து சிரிக்கிறார் மிஷ்கின்.

ராஜ்குமார்
ராஜ்குமார்

"எனக்குள்ள இருந்த பயத்தை மிஷ்கின் சார்தான் போக்கினார். அவருக்கு படிக்கிற பழக்கம் இருக்கு. இருந்தாலும், படிக்கணும்னு நம்மளை கட்டாயப்படுத்த மாட்டார். எப்பவும் என்னைக் குழந்தை மாதிரிதான் பார்த்துக்குவார். அவர்கூட பழகுற எல்லோரையும் வாமா வெச்சிக்குவார்" என்று சொல்லி, மிஷ்கினை பெருமிதத்தோடு பார்த்தார், ராஜ்.

"'பிசாசு' பட சமயம், கூடவே இருந்து வேலைபார்த்தான். `எந்த குறிக்கோளும் வெச்சிக்காத, வாழ்க்கையைக் கலையா பாரு'னு சொல்வேன். `சைக்கோ' படத்துக்குப் பிறகு நிறைய படங்கள்ல நடிக்கக் கூப்புடுவாங்க, யோசிச்சு முடிவு எடு'னு சொல்லியிருக்கேன்'' என்று மிஷ்கின் இடைவெளி விட,

ராஜ்குமார் - சைக்கோ படத்தில்...
ராஜ்குமார் - சைக்கோ படத்தில்...

"அம்மா அப்பாவைவிட என்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட ஒருத்தர்னா, அது மிஷ்கின் சார்தான். அவர் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடச் சொல்வார். ஆனா சாப்பிட மாட்டேன். அவரைப் பத்தி எனக்கு வேற ஒரு ஃபீல் இருக்கும். இந்தப் படத்துல கமிட்டானதுக்கு அப்புறம், ஸ்க்ரிப்ட் பேப்பரைக் கொடுத்து படிக்கச் சொன்னார். இவ்வளவு பெரிய ரோலை என்னை நம்பி கொடுத்திருக்கார்னு பிரமிப்போட அதைப் படிச்சேன். ஒரு படத்துக்காக மிஷ்கின் சாரோட மெனக்கெடலைப் பார்க்கும்போது, தன்னால நம்மளும் அந்தப் படத்துக்குள்ள போயிடுவோம். அவர் கேட்ட எந்தக் கேள்விக்கும் நான் `நோ' சொன்னதே இல்லை" என்று ராஜ் சொல்லி முடிக்க,

"இதுவரைக்கும் என்கூட இருந்த யாருமே நோ சொன்னது இல்லை. `ஆடுகளம்' நரேன் என்னோட பெரும்பாலான படங்கள்ல இருப்பார். அவரைக் கூப்பிட்டாலே போதும், `நடிக்கிறேன்'னு சொல்லி வந்துடுவார். இதே மாதிரிதான், அவர் வெற்றிமாறன்கிட்டயும் இருப்பார். என்னோட எல்லாப் படத்துலேயும் அவர் இருக்கணும்னு நினைப்பேன். அளவு கடந்த பாசம் ரெண்டு பேருக்கும் இடையிலேயும் இருக்கும். அவரும் பெஸ்ட்டா நடிக்கக்கூடிய நடிகர். அணில் ராமருக்கு உதவிய மாதிரிதான் அவர் எனக்கு. உதயநிதியும் அப்படித்தான். அவ்வளவு பெரிய இடத்துல இருந்து வந்திருந்தாலும் கேட்டது எதுக்குமே நோ சொன்னது இல்லை. சில விஷயங்கள்ல மட்டும் ரெண்டு பேருக்கும் மிஸ்மேட்ச் ஆச்சு. ஏன்னா, அவர் நடிச்ச எந்தப் படத்தையும் நான் பார்த்தது இல்லை. ஸோ, அவர் எப்படி நடிப்பார்னு தெரியாது. ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கங்கள் இருந்தது. போகப்போக சரியாகிடுச்சு" என்றார் மிஷ்கின்.

உதயநிதி
உதயநிதி

"உதயநிதி சார் வேற லெவல். கொஞ்சம்கூட திமிர் இருக்காது. எல்லோரையும் மதிப்பார். எனக்கு கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பசங்க இருக்காங்க. வீட்டுக்கு எப்போவாவதுதான் போவேன். அதிக நேரம் மிஷ்கின் சார் ஆபீஸ்லதான் இருப்பேன்'' என்று ராஜ் சொல்லிச் சிரிக்க, "இவனோட மனைவி என்னைத்தான் திட்டுவாங்க'' என்று கிண்டலாகச் சொன்னார் மிஷ்கின். அதைத் தொடர்ந்து பேசிய ராஜ், "சார்கூட இருக்கேன்னு சொன்னா மனைவி எதுவும் சொல்ல மாட்டாங்க. மத்த நண்பர்கள்கூட வெளியில போனாதான் திட்டுவாங்க. எனக்கு மிகப் பெரிய வரவேற்பை மிஷ்கின் சார் கொடுத்திருக்கார். இதைத் தாண்டி வேற என்ன வேணும்'' என்று சொன்னதும், ராஜை கட்டியணைத்தார் மிஷ்கின்.

மிஷ்கின் - ராஜ் குமார் வீடியோ பேட்டியை முழுமையாகப் பார்க்க, கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்யவும்!