சினிமா
பேட்டிகள்
Published:Updated:

விஷாலுடன் மீண்டும் இணைவேனா? - ‘பிசாசு 2’-ல் விஜய்சேதுபதி... எப்படி?

மிஷ்கின்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஷ்கின்

- இளையராஜாவுக்கும் எனக்கும் என்ன சண்டை?

அறையெங்கும் புத்தகங்கள். மிஷ்கின் வந்து அமர்கிறார். புத்தகங்களினூடே இன்னொரு பெரிய புத்தகம் மாதிரி உட்கார்ந்திருக்கிறார். இளையராஜா, உதயநிதி, விஷால், ‘பிசாசு 2’-ல் புதிதாக விஜய்சேதுபதி என எந்தக் கேள்வி கேட்டாலும் பரபர எனப் பக்கங்கள் விரிகின்றன.
விஷாலுடன் மீண்டும் இணைவேனா? - ‘பிசாசு 2’-ல் விஜய்சேதுபதி... எப்படி?

‘பிசாசு 2’ எப்படி வந்திருக்கிறது?

“சில படங்கள்தான் உடலோடு சேர்ந்து மனதையும் வருத்திச் செய்கிற படமாக இருக்கும். இதுவும் அப்படித்தான். ‘பிசாசு’க்கும், இந்தப் ‘பிசாசு 2’-க்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. பார்ட் 2 என்பது தயாரிப்பாளரின் நலத்திற்காக. ரொம்ப ஆழமாகப் பெண்மையைப் பற்றிப் பேசியிருக்கேன். யாரை நடிக்க வைக்கலாம்னு யோசித்தபோது ஆண்ட்ரியாதான் நினைவுக்கு வந்தாங்க. இவ்வளவு சிரமம் எடுத்துச் செய்கிற படத்திற்கு நல்ல சம்பளம் வேண்டும் என்றார். ஆண்ட்ரியா கேட்டதைக் கொடுத்து ஆரம்பமானது படம். ஒரு நாளும் சண்டை வராமல் ஷூட்டிங் ஆரம்பிச்சதே இல்லை. பேக்கப் முடிஞ்சதும் ஒரு வார்த்தைப் போரே நடக்கும். அதற்குக் காரணம் பெருசா எதுவும் இருக்காது. ‘இந்தக் கதாபாத்திரமே அவ்வளவு வலியோடு இருக்கு. இந்தக் கதாபாத்திரமே என்னைத் தொந்தரவு செய்யுது. அதனால் சண்டை போடுகிறேன்’னு ஒரு நாள் ஆண்ட்ரியா சொன்னார். ‘கவலைப்படாதே... நீ நல்லா சண்டை போடு. நானும் திட்றேன். நல்லா புரிஞ்சுப்போம்’னு சொன்னேன். பூர்ணாவுக்கு முக்கியமான பாத்திரம். பூர்ணா பார்வையில்தான் படமே போகுது. ஒரு விஷயங்க... பழிவாங்குறது மனிதர்கள்தான். பேய்கள்மீது அதைத் திணிச்சிட்டோம்.

இந்தச் சமூகம் பெண்ணைப் பிசாசாக்குது. அவங்களோட எல்லாச் சுதந்திரத்தையும் பறிச்சு நிர்கதியா விடுகிறோம். இங்கே ஆணுக்குச் சொந்தமான ஒரு பொருள் என்பதற்கு மேலே பெண்ணுக்கு அடையாளம் இல்லை. ஏன் இப்படி இருக்கணும்? ஒரு பெண் எப்படி உடைந்து சிதறுகிறாள் என்பதுதான் படமே. ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ளாததால், முக்கியத்துவம் கொடுக்காததால் எவ்வளவு விபத்து நேரும்னு சொல்லியிருக்கேன். என்னுடைய கற்பனையில் கொஞ்சம் தேன் கலந்து, பூக்கள் சேர்த்து, கொஞ்சம் ரத்தமும் சேர்த்து ஒரு ஓவியம் வரைஞ்சிருக்கேன். அறிவிலிருந்து எழுதாமல் இதயத்திலிருந்து எழுதியிருக்கேன். ஸ்கிரிப்ட் எழுதும்போது நாலைந்து இடங்களில் நானே அழுதேன்.”

விஷாலுடன் மீண்டும் இணைவேனா? - ‘பிசாசு 2’-ல் விஜய்சேதுபதி... எப்படி?

நீங்க பெண்மை, குடும்பம்னு பயணம் போறது ஆச்சரியமா இருக்கு...

“படத்தின் ஆரம்பத்தில் மூன்று குடும்பங்கள் சேர்ந்து ஒரு இடத்திற்குப் போகுது. அதில் இரண்டு பேர் ஒரு வருஷத்திற்குள் கல்யாணம் செய்துகிட்டு விவாகரத்து பண்றாங்க. அவங்க விவாகரத்துப் பேப்பரில் கையெழுத்துப் போடும்போது பேப்பரைக் கிழிக்கும் அளவுக்குக் கோபம் இருக்கும். மனசு கிழிந்துபோயிருக்கு என்பதற்கான அடையாளம் அது. ‘போன வருஷம் டூர் போனோம். இந்த வருஷம் டூர் போயிட்டுப் பிரிஞ்சிடுவோம்’னு கிளம்புறாங்க. அந்த மூன்று குடும்பங்களும் ஆண்ட்ரியாவைச் சந்திக்குது. அதுக்குப் பிறகு நடக்குறதுதான் கதை. முழுக்க ஆண்ட்ரியாவைச் சுத்தி நடக்கிற கதை. ‘உண்மையா நடி’ன்னு ஆண்ட்ரியாகிட்ட ஒரு தடவை சொல்லிட்டேன். ‘அதென்னங்க உண்மையா நடிக்கிறது, பொய்யாவா நடிப்பாங்க’ன்னு கேலி பண்ணிட்டுப் போய்ட்டார். இதுவரை தமிழ்ப்படங்களில் பார்க்காத அளவுக்கான நடிப்பைக் கொடுத்திருக்கார் ஆண்ட்ரியா.”

விஷாலுடன் மீண்டும் இணைவேனா? - ‘பிசாசு 2’-ல் விஜய்சேதுபதி... எப்படி?
விஷாலுடன் மீண்டும் இணைவேனா? - ‘பிசாசு 2’-ல் விஜய்சேதுபதி... எப்படி?

விஜய் சேதுபதியும் நடித்திருப்பது ஆச்சரியம்...

“நல்லா தூங்கிட்டிருந்தேன். உதவியாளர்கள் கதவைத் தட்டுறாங்க. பின்னாடி விஜய்சேதுபதி நிற்கிறான். ‘வர்றேன்’னு அறிவிப்பே இல்லை. உடனே ‘என்னடா மகனே’ன்னு கட்டிக்கிட்டேன். அந்த மழை இரவில் தவளைகள் சாட்சியா, உட்கார்ந்து எட்டு மணி நேரமா பேசிட்டே இருந்தோம். ஏதோ என் மேல் கோபமா இருந்திருக்கான். ‘சைக்கோ’ பார்த்துட்டு வந்திட்டான். ‘உங்க சினிமா புரிஞ்சிருச்சு... பத்து வருஷம் உங்களை மிஸ் பண்ணிட்டேன்’னு சொன்னான். இந்த மாதிரியெல்லாம் ஒரு நடிகன் பேசுவது கஷ்டம். தன்னை எரிச்சுக்கிட்டு உண்மை பேசுறது இன்னும் கஷ்டம். அப்படியே பேசிக் கொண்டாடிட்டுப் போயிட்டான்.

பத்து நாள் கழிச்சு அவன்கிட்ட இருந்து போன். ‘உங்க கூட இரண்டு நாள் இருக்கேன். எனக்காக உங்க படத்தில் ஒரு கதாபாத்திரம் எழுதுங்க’ன்னு சொன்னான். இருந்த கதாபாத்திரத்தைச் செறிவூட்டினேன். இந்தப்படத்தில் சேது 16 நிமிஷம் வர்றான். அந்த 16 நிமிஷத்திலும் வைரத்தைத் தீட்டின மாதிரி இருக்கான். என்ன கேரக்டர்னு இப்ப சொல்லமுடியாது. அவன் வந்ததும் இந்தப் படத்திற்கு ஒரு பரிமாணம் கிடைச்சது. நான் அவனை நடிகனா பார்க்கலை. நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில் பிறந்த மாதிரி இருந்தோம்.

இப்ப அவனைப் பற்றிச் சில விமர்சனங்கள் வருது. அவனே அதைச் சரி பண்ணுவான். அவனை இனிமேல் தமிழ் சினிமாவில் இருந்து எடுக்கவே முடியாது. எப்படி இருக்கணும்னு அவனே நிர்ணயம் பண்றான். இந்த வாழ்க்கையைக் கண்கொட்டாமல் கவனிக்கிறான். ரசிக்கிறான். என் படத்தில் இந்தக் கதாபாத்திரத்தை உயரத் தூக்கிட்டுப் போயிட்டான். அவன் கார் ஏறுகிறவரை யூனிட்டில் கைதட்டி அனுப்பினோம். கைகூப்பினான். ‘ஐயா, நிறைய அறிவை எடுத்துக்கிட்டுப் போறேன்’னு அவன் சொன்னதுக்கு ‘நீ நிறைய அன்பை விட்டுட்டுப் போறாய்’ன்னு சொன்னேன். முத்தம் கொடுத்து அனுப்பினேன். ஈகோவைத் தனியா வச்சுட்டு காலில் விழுந்து கும்பிட்டான். தமிழ் சினிமா நல்லபடியாக இவனைப் பார்த்துக்கணும். இது என் வேண்டுகோள்.”

விஷாலுடன் மீண்டும் இணைவேனா? - ‘பிசாசு 2’-ல் விஜய்சேதுபதி... எப்படி?

இதில் இளையராஜாவுக்குப் பதிலாக கார்த்திக் ராஜா?

“எனக்கும் ராஜா அப்பாவுக்கும் சண்டை. என்ன சண்டைன்னு ரொம்ப உள்ளே போக வேண்டாம். அவர் ‘சித்ராம் வேண்டாம்’னு சொன்னார். நான் வேணும்னேன். கபிலனின் சில வரிகளைத் தேவையில்லைன்னு சொன்னதற்கு வேணும்னு பிடிவாதமா நின்னேன். ‘என் மூஞ்சியில் முழிக்காதே... போ’ன்னு சொன்னார். அதுமாதிரி என்னைப் பெத்த அப்பாகூடச் சொல்லியிருக்கார். அப்படிப் போக முடியுமா என்ன? அவர் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து கார்த்திக் ராஜாவைப் பிடித்து வெளியே கொண்டுவந்துட்டேன். அவனைப் பதினாறு வருஷமா பார்த்துக்கிட்டே இருக்கேன். அவன் சின்ன வயசு இளையராஜா மாதிரி உட்கார்ந்து வேலை பார்க்கிறான். இத்தனை நாள் அவன் இசையமைப்பாளராக வெளிப்படாமல் தேக்கம் இருந்ததில்லையா, அதையெல்லாம் அடிச்சுக் கரைபுரண்டு வந்திருக்கான். உயிரையும் உணர்வையும் கலந்து பிரவாகம் எடுத்திருக்கான். இந்த புரொடியூசர் முருகானந்தம்கிட்ட நான் வச்ச முதல் கோரிக்கை, எனக்குக் கார்த்திக் ராஜா வேண்டும் என்பதுதான்.”

விஷாலுடன் மீண்டும் இணைவேனா? - ‘பிசாசு 2’-ல் விஜய்சேதுபதி... எப்படி?

மணிரத்னம், ஷங்கர் எனப் பல டைரக்டர்களோட இணைந்து பல திட்டங்கள் இருக்கும் போல..?

“என்ன இருந்தாலும் மணிரத்னமும் ஷங்கரும் எங்களுக்கு வாத்தியார்கள். அவங்க அனுபவமும் பக்குவமும் எங்களுக்குப் பயன்படணும்னு நினைச்சோம். அவங்க பெருந்தன்மையா எங்களுடன் இணைந்து வந்தாங்க. நிறைய திட்டங்கள் இருக்கு. நாங்களும், அறிமுக இயக்குநர்களுமா சேர்ந்து செய்கிற நல்ல படங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். அடிக்கடி நாங்கள் ஒன்றுகூடுகிறோம். எங்ககூட சரிக்கு சமமாக உட்கார்ந்து எல்லாத்தையும் பகிர்ந்துக்கிறாங்க. இப்பக்கூட யூ.கே போனபோது ஒரு பையன் உட்கார்ந்து ‘பிரடெரிக் - 2’ படிச்சிட்டிருந்தான். அழகா, ஞானக்களையோட இருக்கான். அந்தப் புத்தகம் பற்றிப் பேசலாம்னு நெனச்சிட்டு இருக்கும்போதே, அவனே என் முன்னாடி வந்து நிக்கிறான். ‘யாருப்பா’ன்னு கேட்டால் ‘உங்கள் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் உங்களைப் பிடிக்கும். நான் நந்தன் மணிரத்னம்’னு சொன்னான். பெரிய அறிஞனாக இருக்கான். அவனையெல்லாம் தமிழகம் பயன்படுத்தணும்.”

உங்க ஹீரோ உதயநிதி எம்.எல்.ஏ ஆகிட்டாரே?

“ஷூட்டிங் முடிச்சிட்டு வந்து இன்னும் பார்க்கலை. பக்கத்திலிருந்த ஒருத்தருக்கு கொரோனா இருந்தது. அதனால் தனிமைப்படுத்தி இருக்கேன். இனிமேல்தான் தம்பியைப் பார்க்கணும். ‘சைக்கோ’ நடிக்கும்போது பகலெல்லாம் பிரசாரம் போயிட்டு அப்படியே சட்டுனு ஒரு சின்னத் தூக்கம் போட்டு, ராத்திரி நடிச்சுக் கொடுத்திட்டுப் போவார். நாற்பது நாள் அப்பேர்ப்பட்ட உழைப்பு. ‘உங்களுக்கான இடம் கண்டிப்பா சேரும் உதய்’ன்னு முன்னாடியே சொல்லியிருந்தேன். ரொம்ப மேன்மையான தம்பி. மக்களுக்காக உழைக்கணும்னு உண்மையா நினைக்கிறார். தன் தொகுதிப் பிரச்னைகளைப் போய்ப் பார்க்கிறார். நாட்டில் நல்லது நடந்திருக்கு. சுதந்திரக் காற்று வீசியிருக்கு. உதய் இயல்பாக இன்னும் பெரிய இடத்திற்குப் போவார். அது அவரோட உழைப்பிற்கும், நல்லது செய்கிற ஆர்வத்திற்கும் கிடைக்கிற பரிசாக இருக்கும்.”

விஷாலுடன் மீண்டும் இணைவேனா? - ‘பிசாசு 2’-ல் விஜய்சேதுபதி... எப்படி?

விஷாலுடன் கோபம் குறைந்துவிட்டதா?

“விஷால் எனக்குத் தம்பி மாதிரிதான். அந்தக் கோபம் நிஜம். தன் கோபத்தால் மதுரையை எரிச்ச கண்ணகி மாதிரி எதுவும் நடக்கலை. அவன் நல்லாயிருக்கணும். ஆனால், அவன்கூட இனிமேல் கலைப்பயணம் இல்லை. ‘துப்பறிவாளன் 1’-ல் ‘பாட்டு வேண்டாம்’ன்னு சொன்னதுக்கு ‘சரி’ன்னு சொன்ன பெரிய மனுஷன் அவன். நாங்க இரண்டு பேரும் விடாக்கண்டன் கொடாக்கண்டன்கள். அப்படித்தான் இருக்கும். அவன் 40 வருஷம் சினிமாவில் இருப்பான். நல்ல உழைப்பாளி. அவன் என்மேல் வைத்த அன்பையும், நான் அவன் மேல் வைத்த அன்பையும் மறக்க முடியாது.’’

உங்க மகள் எப்படி இருக்காங்க?

“கனடாவில் பைன் ஆர்ட்ஸ் படிக்கிறாள். அவளுக்கு இப்ப தன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கத் தெரியுது. ‘ரொம்பக் குடிக்காதே, நல்லாத் தூங்கு, கண்ணு முழிச்சு ரொம்ப நேரம் படிக்காதே, நேரத்திற்கு சாப்பிடு’ன்னு ஊரிலிருந்து அட்வைஸ் மழைதான். நாம யார் பேச்சையும் கேட்ட வரலாறே இல்லை. ஆனாலும் பெத்த பொண்ணு பேச்சுக்கு சரின்னு சொல்லி அதன்படியே நடக்கிறேன்.”