Published:Updated:

``இளையராஜா கவாஸ்கர்... ஏ.ஆர்.ரஹ்மான், சச்சின் டெண்டுல்கர்... ஏன் சொல்றேன்னா?'' - மிஷ்கின்

மிஷ்கின், Mysskin
மிஷ்கின், Mysskin

இயக்குநர் மிஷ்கினுடன் உரையாடுவது என்பது எப்போதுமே உள்ளத்துடனான உரையாடலாக இருக்கும். சினிமா, வேலை, நட்பு, வாழ்க்கை என அவர் ஒவ்வொன்றையும் அணுகும் விதமே வித்தியாசமானது. ஒரு லாக்டெளன் நாளில் அவரை சந்தித்தோம்.

``நிறைய புத்தகங்கள் படிக்கும் மனிதர் நீங்கள் என்பதால் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். இந்த கொரோனா போன்ற பயங்கர நோய்கள் பற்றி நீங்கள் முன்பே படித்ததுண்டா?"

``இல்ல... பிளேக்ஸ் பற்றி நிறைய படிச்சிருக்கேன். நாவல்கள்லாம் எழுதியிருக்காங்க. ஆனா, கொரோனா பற்றி எதுவும் படிச்சதில்ல. கொரோனா வைரஸ் பற்றி தெரியவந்தப்போ எல்லாருமே ஷாக் ஆகிட்டாங்க. இந்த கொரோனாவுக்கு மனுஷங்க எல்லாருமே ஒண்ணுதான். பெரியவன், சின்னவன்னு இங்கே யாருமில்லன்னு எல்லோருக்கும் உணர்த்தியிருக்கு. இந்த நாள்கள்ல மதங்கள், ஜோதிடம்லாம் இல்லாமப்போகுது. இயற்கை எல்லாத்தையும் வாரிச்சுருட்டி எறிஞ்சிட்டு போயிட்டிருக்கு.''

``வடிவேலுக்கு ரத்தம்... ஷங்கர், சிம்புதேவனுக்கு தக்காளிச் சட்னியா?'' – சிங்கமுத்து

''இந்த லாக்டெளன் நாட்கள்ல மிஷ்கினுக்குள்ள இருக்குற சண்முகராஜனை எப்போதாவது பார்த்தீங்களா?''

''இந்த ரெண்டுமே பேர்தான். சினிமாவுக்கு வர்றதுக்காக பேர் மாத்தினேன். என்னோட பழைய பேர் சண்முகராஜாவே எனக்குப் பிடிக்காது. ரொம்ப போரா இருந்துச்சு. அப்பா வெச்ச பேர்தான். ஆனா, என்ன பண்றது... பிடிக்கல. மிஷ்கினா இல்ல சண்முகராஜாவா வாழ்றது முக்கியமில்ல. என்ன பண்ணோம், என்ன படிக்குறோம், என்ன யோசிக்குறோம்கிறதுதான் முக்கியம். என் ரூமுக்குள்ள இருக்குறப்போ நான் சினிமாக்காரன்றதையே மறந்துடுவேன்.''

Myskkin
Myskkin

''உங்க பார்வையில் கமர்ஷியல் சினிமானா என்ன?''

''எப்பவும் ஒரு படத்துல ஒரு சுவை இருக்கும். பெரிய கருத்துகள், ஒழுக்கங்கள் (Morals) இல்லாம சுவை மட்டுமே இருக்குற படங்களும் உண்டு. இதுதான் கமர்ஷியல் சினிமானு எந்தப் படத்தையுமே சொல்ல முடியாது. ஏன்னா, இங்க 'சிறை', 'உதிரிப்பூக்கள்' மாதிரியான படங்கள் ஓடியிருக்கு. இன்னைக்கு ஓடுமானு கேட்டா ஓடாது. ஆனா, இன்னைக்கும் 'சேது', 'அறம்' என்னோட 'சித்திரம் பேசுதடி', 'சைக்கோ' ஓடியிருக்கு. வெற்றிமாறனின் 'அசுரன்' பெரிய ஹிட் ஆகியிருக்கு. ஒழுக்க மதிப்பீடுகள் இல்லாத, சமூகத்துக்கு பயனில்லாத படங்களும் ஓடியிருக்கு. ஏன்னா, இந்தப் படங்கள்ல நகைச்சுவை, நையாண்டினு ஏதோ ஒண்ணு மக்களை ஈர்த்திருக்கு. நாம படம் எடுக்குறப்போ மக்களுக்கு தேவையான ஒழுக்கங்களையும் சேர்த்து எடுத்தா நல்லாயிருக்கும். என்னோட சினிமா ஸ்ட்ராங்கா, அதே நேரத்துல சுவையா இருக்கணும்னு நினைப்பேன். பார்க்கும்போது அடுத்து என்னன்னு கேட்டுக்கிட்டே இருக்கணும். அவ்வளவுதான்.''

''உங்க படங்களில் சில வித்தியாசமான கதாபாத்திரங்களை உருவாக்கியே ஆகணும்னு அதுக்கான நடிகர்களைத் தேடுவீங்களா?''

''வித்தியாசம்னு சொல்ல விரும்பல. இந்த வார்த்தை மேல பெரிய நம்பிக்கை இல்ல. கதை எழுதி முடிச்சிட்டு, அதுக்கான நடிகர்களைத் தேடுறேன். 'பிசாசு' ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சிட்டு அப்பா கேரக்டர்ல சிவக்குமார் சார்கிட்ட கேட்கலாம்னு இருந்தேன். பாலாகிட்ட இதை சொன்னப்போ, 'சிவக்குமார் நடிக்க மாட்டார் டா'னு சொன்னார். விட்டுட்டேன். சிவக்குமார் ஐயாவை பெரிய தந்தை மாதிரிதான் நாம எல்லாருமே பார்ப்போம். இவர் நடிச்சா நல்லாயிருக்கும்னு ஃபீல் பண்ணேன். ஆனா, நடிக்கல. உடனே, சிவக்குமாருக்கு எதிரா இருக்குற கேரக்டரை தேடுவோம்னு தேடினேன். ராதாரவி வந்தார். அசிஸ்டென்ட் டைரக்டர்கிட்ட சொன்னேன். 'அப்பா கேரக்டருக்கு, வில்லன் நடிகரா'னு கேட்டாங்க. ராதாரவி சார் சரியா இருப்பார்னு சொன்னேன். ஒரு குருட்டுதனமான நம்பிக்கை எனக்குள்ள இருந்தது. நம்பிக்கையை எப்பவும் குருடாதான் நான் பார்ப்பேன். ராதாரவி அப்பாகிட்ட கேட்டேன். 'என்ன தம்பி இப்படி சொல்றீங்க'னு கேட்டார். 'பண்ணுங்கப்பா'னு சொன்னேன். ரொம்ப சிறப்பா பண்ணார். வித்தியாசம்னு நினைச்சு பண்ணுனா ரொம்ப அழுக்கா தெரியும். எந்த கேரக்டரும் யார் வேணாலும் பண்ணலாம்.''

Myskkin
Myskkin

''இப்ப நடிகராவும் இருக்கீங்க... நடிகரா எந்த அளவுக்கு உங்களை தயார்படுத்திட்டு ஷூட்டிங் ஸ்பாட் போவீங்க?''

''எந்தத் தயாரிப்பும் இல்ல. சினிமாவுலயே 20 வருஷமா இருந்துட்டேன். அந்தர் பல்ட்டி அடினு சொல்லப் போறாங்களா... கிடையாது. ஒரு டயலாக் கொடுத்து 'பேசு, கோபப்படு'னு சொல்லப் போறாங்க. அப்புறம் 'ஸ்மைல் பண்ணிட்டே பேசுங்க'ன்னு சொல்லப்போறாங்க. நடிப்பைப் பொறுத்தவரைக்கும் சொல்றதை நடிச்சிட்டு வீட்டுக்குப் போயிருவேன். அதைவிட்டுட்டு அங்கே நின்னு ரசிகர்களைப் பார்த்து கைகாட்டி, ரசிகர் மன்றம் வெச்சு ரெண்டு லட்சம் பேரை திரட்டி, அடுத்த தேர்தல்ல நிக்குற மாதிரியான எந்த ஐடியாவும் இல்ல. நடிச்சி முடிச்சிட்டு, 'நல்லாயிருக்கா'னு கூட கேட்க மாட்டேன்.''

''நீங்க எழுதுன கேரக்டர்ல உங்களுக்கு நெருக்கமான கேரக்டர் எது?''

'' 'பிசாசு' படத்துல வந்த அந்தப் பெண். அதுக்கப்புறம் அந்தப் படத்துல இருந்த பையன் நாகா. 'சைக்கோ'வா நடிச்சிருந்த ராஜ்குமார் பிச்சுமணி கதாபாத்திரம் மற்றும் ரேச்சல் டீச்சர். 'நந்தலாலா' படத்துல வந்த பாஸ்கர் மணி. 'ஓநாயும் ஆட்டுகுட்டியும்' படத்தோட எட்வர்ட்.''

Myskkin
Myskkin

''இன்றைய சூழல்ல சினிமா, ஓ.டி.டி வழியா ஒரு சின்ன ஸ்கிரீன்ல சுருங்கிருச்சுன்னு சொல்றாங்களே. இதை நீங்க எப்படி பார்க்குறீங்க?''

''அண்ணாந்து பார்க்குற ஃபீல் தனி. தியேட்டர்ல போய் பார்த்ததுனாலதான் ரசிகர் மன்றம் உருவாச்சு. இன்னும் 10 வருஷத்துல, தியேட்டர் இல்லனா எந்த ரசிகர் மன்றமும் இருக்காது. யாரும் முதலமைச்சர் ஆக மாட்டாங்க. இந்த நல்லதுதான் நடக்கும். தியேட்டர் கோயில் மாதிரி. இன்னும் 20 வருஷத்துல தியேட்டர் இல்லாமப் போகும். அதுவரைக்கும் தியேட்டர்களை நல்லா பாத்துக்குவோம். சாமிக்கு அப்புறம் அண்ணாந்து பார்க்குறது தியேட்டர் ஸ்கிரீனைத்தான். சினிமாக்காரங்க, தியேட்டர் ஓனர்ஸுக்காக பேசல. ஒரு மாசம் தியேட்டர்ல படம் ஓடட்டும். அப்புறம் ஓ.டி.டி-க்கு போகட்டும். அப்புறம் தியேட்டரை நம்பி நிறைய மனிதர்கள் இருக்காங்க. 10 லட்சம் தொழிலாளர்கள் இருக்காங்க. இவங்க ரோட்டுக்குப் போக முடியுமா? நம்மல வளர்த்த வீடு தியேட்டர். தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நிறைய சண்டை இருக்கு. இதை உட்கார்ந்து பேசுவோமே. வீட்டு டி.வி ஸ்கிரீன்ல சாமி, சர்ச், மசூதினு பார்த்து கும்பிட்டுட்டு அப்படியேவா இருக்கோம். இல்லைதானே! தியேட்டர்குள்ள போனா, மனசும் சுத்தமாகும். தியேட்டர் இல்லாத ஊர் ஊரே இல்ல. ரொம்ப எமோஷனலா இதை நான் சொல்றேன்.''

''சமூக வலைதளங்களில் நீங்க அதிகமா விமர்சனத்துக்குள்ளாகுறீங்களே?''

''ஆன்லைன், ஸ்மார்ட்போன்னு வந்த பிறகு, இன்னைக்கு யார் வேணா, யாரை வேணா கேள்வி கேட்கலாம். என்னைத் திட்டாத வார்த்தைகளே கிடையாது. ஆனா, எதுவும் என் மனசுக்குள்ள போனதே கிடையாது. அதை நான் கண்டுக்குறதேயில்ல. ஃபேஸ்புக், ட்விட்டர்னு எதுலயும் நான் இல்லை. அடுத்த ஒரு வருஷத்துக்கு செல்போனையே ஆஃப் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன். போர் அடிக்குது. 100 பேர் பேசுறாங்க. எனக்குன்னு என்னால டைம் ஸ்பெண்ட் பண்ணமுடியலை. 1 வருஷம் பார்த்துட்டு இந்த முறை நல்லாயிருந்துச்சுனா அப்படியே செல்லையே தூக்கிப்போட்டுடலாம்னு இருக்கேன்.''

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

''வெற்றிமாறனை அடிக்கடி உங்கள் பேட்டிகள்ல உயர்வா குறிப்பிடுறீங்க. அவர் மேல பெரிய மரியாதை உங்களுக்கு உண்டோ?''

''இயக்குநர் கதிர்கிட்ட ஒரு வருஷம் வேலை பார்த்துட்டு இருந்தேன். அவர்கிட்ட இருந்து வேலையை விடுற ஒரு மாசத்துக்கு முன்னாடி வெற்றி அங்கே வந்தார். அந்த ஒரு மாசத்துல, ஒரு வருஷத்துக்கான நட்போட பழகுனோம். அவர்மேல எப்படி மரியாதை வந்துச்சுனா, எப்போவும் படிச்சிட்டே இருக்குற டைரக்டர். எப்பவும் சினிமா பற்றி இல்லனா, 'எந்தப் புத்தகம் படிக்கலாம்'னு பேசுவான். நல்ல படிப்பாளி. 'லக்ல பெரியாளா ஆகிட்டாங்க'ன்னு நிறைய பேர் சொல்லுவாங்க. வெற்றிமாறனுக்கு ஒரு வெங்காயம் லக்கூட கிடையாது. வெற்றி முழுக்க முழுக்க உழைச்சிக்கிட்டே இருந்தான். இன்னைக்கும் உழைக்குறான். என் நண்பனின் வளர்ச்சி இது. வெற்றிக்கிட்ட கேட்டாலும் என்னைப் பற்றி இதைத்தான் சொல்லுவான். நான்கூட 'வா, போ'னு சொல்லி வெற்றியை கூப்பிடுவேன். ஏன்னா, என்னைவிட வயசுல அவன் சின்னவன். அவன், 'ராஜா'னுதான் என்னை கூப்பிடுவான். என்னோட நண்பன் இவ்வளவு பெரிய உயரத்துல இருக்குறது பெரிய சந்தோஷம்.''

''இளையராஜாவோட அதிதீவிர ரசிகர் நீங்க. அவரை எப்பவும் கொண்டாடுவீங்க. ஆனா, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி எங்கேயும் நீங்க பேசினதில்லையே?''

இளையராஜா
இளையராஜா

''இளையராஜா சாரை கவாஸ்கர் மாதிரி பார்க்குறேன். ஏ.ஆர்.ரஹ்மானை சச்சின் டெண்டுல்கரா பார்க்குறேன். இளையராஜா கிராண்ட் மாஸ்டர்னா, ரஹ்மான் லிட்டில் மாஸ்டர். இன்னைக்கு கிராண்ட் மாஸ்டர் லெவலுக்கு ரஹ்மானும் வந்துட்டார். அவர் உழைப்பை பக்கத்துல இருந்துதான் தெரிஞ்சிக்கணும்னு இல்ல. தள்ளியிருந்தே பார்க்கலாம். அந்த அளவுக்கு பெரிய உழைப்பு. தமிழர்களை உலகளவுல கொண்டு போயிட்டார். ரஹ்மான் ஒரு வரம். ரொம்ப ஆன்மிகவாதி. அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். பெரிய ஜீனியஸ். ரஹ்மான் கூடவும் நான் வொர்க் பண்ணணும். இது, எனக்கு பெரிய வாய்ப்பா இருக்கும்னு நினைக்குறேன். கதிர் சார்கிட்ட இருந்தப்போ, ஏ.ஆர்.ரஹ்மான் ஆபீஸுக்கு ஒருமுறை கூட்டிட்டுப் போயிருந்தார். அப்போ, இரவு ரெண்டு மணி. சித்தாந்தம் பற்றி படிச்சிட்டிருந்த நாள்கள். அதனால, அங்கேயிருந்த பூவை கையில எடுத்து உத்து பார்த்துட்டு இருந்தேன். அதுல மூழ்கிப் போயிருந்த நேரத்துல ரஹ்மான் வந்து போயிட்டார். எனக்குத் தெரியல. 'ரஹ்மான் வந்து போயிட்டார். நீ என்னடா பூவை பார்த்துக்கிட்டு இருக்க'னு கதிர் சார் திட்டினார். அவரை பார்க்கக் கிடைச்ச ஒரு வாய்ப்பையும் மிஸ் பண்ணிட்டேன். இதுவரைக்கும் ரஹ்மானை நேர்ல பார்க்கல. சீக்கிரம் பார்க்கணும்.''

அருண் விஜய்யுடன் அஞ்சாதே 2, சிம்புவுடன் அடுத்த படம், விஷாலுடன் சண்டை... மிஷ்கினின் விரிவான பேட்டி, வரும் வியாழன் அன்று ஆனந்த விகடனில் வெளியாகிறது.
அடுத்த கட்டுரைக்கு