சினிமா
Published:Updated:

“சாதிகள் இல்லை என்பது வடிகட்டிய பொய்!”

கீலி புச்சி
பிரீமியம் ஸ்டோரி
News
கீலி புச்சி

எனக்கு சுருங்கச் சொல்வது பிடிக்கும். அதனால்தான் பெரிய படங்களைவிடக் குறும்படங்கள் எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

நீரஜ் கைவான்... பாலிவுட்டின் கவன ஈர்ப்புக்குரிய இளம் இயக்குநர். முதல் படமான ‘மஸான்’ மூலம் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது, 2 கேன்ஸ் விருதுகள் என பாலிவுட்டில் பலரின் புருவங்களை உயர வைத்தவர். இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பாசறையைச் சேர்ந்தவர். ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். நெட்ஃபிளிக்ஸில் ஹிட்டடித்த ‘சேக்ரெட் கேம்ஸ்’ வெப் சீரிஸின் சிக்கலான 8 அத்தியாயங்களை இயக்கி அசத்தியவர். ‘சோர்’, ‘எபிபோனி’, ‘ஜூஸ்’ என்ற 3 குறும்படங்கள் மூலம் சர்வதேச அங்கீகாரங்களை வென்றவர். சமீபத்திய நெட்ஃபிளிக்ஸ் டாப் சார்ட் ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘அஜீப் தாஸ்தான்ஸ்’ ஆந்தாலஜி படத்தில் இவர் இயக்கிய ‘கீலி புச்சி’ பலத்த வரவேற்பைக் குவித்திருக்கிறது. வாழ்த்துகள் சொல்லி அவருடன் ஒரு சிட்-சாட்...

 “சாதிகள் இல்லை என்பது வடிகட்டிய பொய்!”

``2015-ல் அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள்... பிறகு ஏன் இரண்டாவது படமே எடுக்கவில்லை..?’’

“இந்தக் கேள்விதான் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. முதல் படத்திலேயே தேசிய விருது, கேன்ஸ் விருது, பிலிம்ஃபேர் விருது குவித்த என்னைச் சந்திக்கும் எல்லோரும் கேட்கும் முதல் கேள்வி இதுதான். குரு இயக்குநர் அனுராக் காஷ்யப்பெல்லாம் ஒரு படி மேலே போய், ‘அடுத்து கேன்ஸுக்கு எப்போ போறே?’ என்கிறார். நண்பர்கள் இதை ‘செகண்ட் பிலிம் சிண்ட்ரோம்’ என்கிறார்கள். இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானே எச்சரித்தார். ‘முதல் படம் எப்பவும் ஈஸி. ரொம்ப நாள் மனசுக்குள்ள போட்டு அடைகாத்த ஒண்ணை அடிச்சுப் பிடிச்சுப் போராடி படமா பண்ணிடுவோம். ரெண்டாவது படம்தான் கஷ்டம். அதைப் பண்றதுக்கு மனவலிமை வேணும்!’ என்றார். அவரோட அனுபவத்துல அதைச் சொல்லியிருக்கார். என்னோட பிரச்னை நானே தான். அந்த சிண்ட்ரோமைத் தாண்ட பெருசா ஏதாச்சும் பண்ணணும்னு நினைச்சதே இல்லை. நேர்மையா ஒரு படம் பண்ணணும். என்னோட சமூக மதிப்பீடு, நான் பார்க்குற உலகம், என்னை பாதிச்ச ஒரு புள்ளி கிடைக்கணும். அப்படிக் கிடைச்சா, எகிறிக்குதிச்சு படம் பண்ண ஓடிருவேன். அந்த மொமன்ட்டுக்காகக் காத்திருக்காமல் குறும்படங்கள், விளம்பரப்படங்கள், ‘சேக்ரெட் கேம்ஸ்’ வெப்சீரிஸ் இயக்கக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கிட்டேன். இரண்டாவது படம் விரைவில் நிகழும்னு நம்புறேன்!”

நீரஜ் கைவான்
நீரஜ் கைவான்
 “சாதிகள் இல்லை என்பது வடிகட்டிய பொய்!”

’`உங்களின் ‘கீலி புச்சி’ படம், சமூகத்தில் இருக்கும் தலித் ஒடுக்குமுறை, ஓரினச் சேர்க்கை என இரண்டு மிகப்பெரிய விஷயங்களை உள்ளடக்கி இருந்தது. தனி சினிமாவாகவே அதைப் பண்ணியிருக்கலாமே?

“எனக்கு சுருங்கச் சொல்வது பிடிக்கும். அதனால்தான் பெரிய படங்களைவிடக் குறும்படங்கள் எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. இந்தக் குறும்படத்தை இன்னும் டீட்டெய்லாக நீட்டி முழக்கிக் காட்டியிருந்தால் ஏதாவது ஓரிடத்தில் நான் கதையின் நீளத்துக்காக சமரசம் செய்துகொண்டது பலவீனமாகத் துருத்திக்கொண்டு வெளிப்பட்டிருக்கும். ஒரு கேரக்டரைத் தூக்கிப் பிடிக்க இன்னொன்றை வில்லத்தனமாகக் காட்டியிருக்க வேண்டியிருக்கும். அது படத்தின் ஜீவனைக் குலைத்திருக்கும். மனிதர்கள் ஒன்றும் கறுப்பு வெள்ளைக் கட்டங்கள் இல்லை. எல்லோருமே இங்கே கேரக்டர்கள்தான். ஹீரோவும் வில்லனும் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறார்கள். ஒருவரைக் கறுப்பு, இன்னொருவரை வெள்ளை என ஸ்கிரிப்ட்டில் காட்டிவிடக்கூடாது. ‘ஷோலே வில்லன் கப்பர் சிங்கை எனக்குப் பிடிக்காது!’ என நாம் எளிதாகச் சொல்லிவிடலாம். வில்லனாக கப்பர்சிங் ஏன் உருவானான், எதனால் அப்படிக் கெட்டவனாக மாறினான் என யோசித்தால், கதை வேறொரு திசையை உருவாக்கிக் கொடுக்கும். அதனால்தான் என் கதைகளில் வில்லன்கள் யாரும் இல்லை. ஆனால், சமூகமே மிகப்பெரிய வில்லனாகக் கதையில் நிற்கிறது. அது என்னை பாதித்ததைப்போல உங்களையும் பாதிக்கிறது! என் படங்கள் என் ஒருவனால் உருவானது இல்லை. கதைகள் உருவானதும் நிறைய நண்பர்களிடம் அதை விவாதித்து மெருகேற்றுவேன். ஒரு தலித்தாக நான் சந்தித்த பிரச்னைகள் கதைக்குத் தேவையாக இருக்கும். ஆனால், லெஸ்பியன் உணர்வுகளைப் பெண்களால்தான் இன்னும் உண்மைத்தன்மையோடு கடத்த முடியும். அதனால் நிறைய பெண்களிடம் பேசி, கதையை மெருகேற்றி கொங்கனா சென்னின் அந்த தலித்திய ஒடுக்குமுறைக்கு உள்ளான லெஸ்பியன் கேரக்டரைத் துல்லியமாகக் கொண்டுவர முடிந்தது. ஆரம்பத்தில் நானும் க்ளிஷேவாக, தன் பால் ஈர்ப்பில் இருக்கும் கொங்கனா தான் நேசிக்கும் அதிதியின் கணவர்மீது பொறாமைப்படும் பெண்ணாகத்தான் எழுதியிருந்தேன். ஒரு பெண் தோழி, ‘நீரஜ்... அப்படில்லாம் இருக்க மாட்டாங்க!’ என்று முதல் பார்வையிலேயே என் தவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்தினார். அதிதியை வில்லத்தனமாகக் காட்டாமல், சமூகம் என்ன சொன்னாலும் கேட்டு வாழும் ஒரு நல்ல பெண்ணாகவே காட்ட முடிந்தது. ஊடகங்கள் பெருகிக்கிடக்கும் இந்தக் காலத்திலும்கூட ‘இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?’ என்று சிம்பிளாகக் கடக்கும் எல்லோருமே வில்லன்கள்தான்.

நான் வலிந்து எதையும் சொல்லாமலே ஒரு கேரக்டரை வில்லத்தனமாக உங்களால் பார்க்க முடிந்தால் நீங்கள் பாக்கியவான். இரண்டு பாத்திரங்களையும் துல்லியமாக வடிவமைத்திருப்பதாகப் பல பெண்கள் பாராட்டுகிறார்கள்.

அதேபோல தன்பால் ஈர்ப்புகொண்ட கொங்கனாவை ‘டாம் பாய்’ போலக் காட்டாமல், இயல்பாகக் காட்சிப்படுத்தியிருந்ததையும் ரசித்தார்கள். உண்மைக்கு அருகில் படம் பிடித்ததாக உணர்கிறேன். அதற்குக் காரணம் என்னுடன் பணியாற்றிய பெண்கள்தான்!”

 “சாதிகள் இல்லை என்பது வடிகட்டிய பொய்!”

``தலித் இயக்குநராக உங்களைப் பொதுவெளியில் அடையாளப்படுத்திக் கொள்வதன் நோக்கம் என்ன? பாலிவுட்டில் அதற்கு எதிர்வினைகள் இருக்குமே?’’

“என் முதல் படம் ‘மஸான்’ ஒரு தலித் இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான கதை. பிணங்களை எரியூட்டும் குலத்தொழில் செய்யும் டிப்ளோமா இன்ஜினீயரிங் பட்டதாரி ஹீரோ. ஆதிக்கசாதிப் பெண்ணுடனான அவனுடைய காதல் என்னவானது என்பதே கதை. அதை வாரணாசியில் படமாக்கும்போது, எனக்கு அங்கிருந்த எல்லோரும் உதவி செய்தார்கள். என் அடையாளத்தைச் சொன்னால் உதவுவார்களா என்ற தயக்கம் அப்போது இருந்தது. ஆனால், அது தேவை என இப்போது உணர்கிறேன். மற்றவர்களைவிட அந்த வலியை என்னால் அதிகமாக உணர முடியும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்துகொண்டாவது சாதிகள் இல்லை என்று சொல்லுவது வடிகட்டிய பொய். சுய சாதிப்பெருமை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து சாதியை மறுக்கிறேன் எனச் சொல்லலாம். அதைத்தான் நான் செய்கிறேன்.

 “சாதிகள் இல்லை என்பது வடிகட்டிய பொய்!”

ஒரு பிரபல இயக்குநர் ஒரு ட்வீட் போட்டிருந்தார். ‘எக்ஸிகியூட்டிவ் க்ளாஸ் ஃப்ளைட்டில் என் பக்கத்தில் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் பயணிக்கிறார். இந்தியா முன்னேறி விட்டது. ஆனால், ஏன் இன்னமும் சாதிப்பாகுபாடு, தலித் புரட்சி எனப் புலம்புகிறார்கள்?’ என்று. நான் அதை என் கமெண்ட்டோடு இப்படி ஷேர் செய்திருந்தேன். ‘ஆம். நானும் விருதுகள் குவித்த தலித் இயக்குநர்தான். போராடித்தான் அதேபோல எக்ஸி கியூட்டிவ் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். தேவைப் பட்டால் என் இருக்கையைக்கூட உங்களுக்கு விட்டுக்கொடுக்க முடியும்’ என்றேன்.

‘உதவி இயக்குநர்கள், எழுத் தாளர்கள் தேவை: தகுதியுள்ள தலித், பகுஜன் மற்றும் ஆதிவாசி இளைஞர்கள் விண்ணப்பிக்கவும்’ என்ற என் ட்வீட்டுக்கும் நிறைய எதிர்வினைகள் வந்தன. வாய்ப்புகள் மறுக்கப் பட்டவர்களுக்கு அம்பேத்கர் என்ன செய்தார் என்பதை மறந்து விடுகிறோம். என் அடையாளத்தைச் சொல்லாமல் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசுவது அபத்தம் என்று நினைத்துதான் அப்படிச் சொன்னேன். தமிழ் சினிமா இயக்குநர் பா.இரஞ்சித் தலித் இயக்குநராகத் தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவிதம் பிடித்திருந்தது. எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன் அவர். படங்களை மட்டும் இயக்காமல், நிறைய படங்களைத் தயாரித்துப் பல இளம் திறமை சாலிகளை உருவாக்குகிறார். அதேபோல, ‘பான்றி’, ‘சாய்ரத்’ படங்களை இயக்கிய மராத்திய இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே வையும் ரொம்பப் பிடிக்கும்!”