
- நெல்சன் சொல்லும் ரகசியம்
- கிருஷ்ணா
திருவிழா உற்சாகத்தில் இருக்கிறார் நெல்சன் திலீப்குமார். இருக்காதா பின்னே, விஜய்யின் ‘பீஸ்ட்’ முடித்துவிட்டு ரிலீஸ் தேதிக்கு கவுன்ட் டவுன் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
‘`விஜய் சார் படம்னா அதுக்கு என்ன மாதிரி எதிர்பார்ப்பு இருக்கும்னு நல்லாத் தெரியும். அதுக்காக நல்லபடியா உழைச்சிருக்கோம். சன் பிக்சர்ஸ், விஜய் படம் என்ற விஷயமே எனர்ஜி ஏத்த, மேலும் ரசிச்சு வேலை செஞ்சிருக்கோம். என்னுடைய முந்தைய படங்களான ‘கோலமாவு கோகிலா’ மாதிரியோ ‘டாக்டர்’ போலவோ இந்த ‘பீஸ்ட்’ கிடையாது. இது டோட்டலாகவே வேற பிலிம். ஆக்ஷன் பட்டையக் கிளப்பும். கலகல காமெடியும் இருக்கும். இதுவரைக்கும் வந்த என்னோட படங்களை மனசுல வச்சு, ‘பீஸ்ட்’டைப் பார்க்கும்போது அந்த வித்தியாசம் நல்லாத் தெரியும்” - உற்சாக டெம்போ குறையாமல் பேசுகிறார்.

`` `அரபிக்குத்து', `ஜாலிலோ ஜிம்கானா' எனப் பாடல்கள், விஷுவல்கள்னு கலர்ஃபுல்லா அசத்துது... விஜய் தாண்டியும் மேஜிக் தெறிக்கும்போல..?’’
“சின்ன வயசில் இருந்தே நான் விஜய் ரசிகர்னால, அதையும் மைண்ட்ல வச்சு படம் பண்ணியிருக்கேன். இண்டஸ்ட்ரீல அவருக்கு இருக்கற உயரத்தையும் சரியா கையாளணும்ங்கற பொறுப்பும் இருக்கு. அதனால் என் ஸ்டைலும் அவர் ஸ்டைலுமா கலந்த படமா இது இருக்கும்.
படத்தோட கதை சிம்பிள் லைன்தான். ஒரு நெருக்கடியான சூழல், அந்தச் சூழலை ஹீரோ எப்படிக் கையாளுறார், அந்தச் சூழலில் ஆபத்தில் சிக்கியவர்களை எப்படிக் காப்பாத்துறார் என்பதுதான் கதை. நான் ‘டாக்டர்’ படம் பண்ணிட்டு இருக்கும்போது ‘கோலமாவு’ மட்டுமே பண்ணியிருந்தேன். இப்படி ஒரு சூழல்ல விஜய் சார்கிட்ட நாம கதை சொன்னால், அவர் கேட்பாரா, சம்மதிப்பாரான்னு தயக்கம் இருந்துச்சு. அதேநேரத்தில் ‘எப்படி நினைக்கிறோமோ அதே மாதிரிதான் படமாகவும் பண்ணணும்’ என்பதில் உறுதியா இருந்தேன். விஜய் சார் ஸ்டைல்ல இருந்து இது கொஞ்சம் வித்தியாசப்படும்ங்கறதால அவர் இதைப் பண்ணுவாரான்னுகூட சின்னத் தயக்கம் இருந்துச்சு. ஆனா, அவருக்குக் கதை பிடிச்சிடுச்சு. சார் ஓகே சொன்னதும் சந்தோஷமாகிட்டேன். நான் நினைச்சதைவிட, அவரோடு ஒர்க் பண்றது அவ்ளோ ஈஸியா இருந்துச்சு. அவ்ளோ கம்ஃபோர்ட்டா என்னைப் பார்த்துக்கிட்டார். அப்படி ஒரு வைப்ரேஷன் எங்களுக்குள் ஏற்பட்டுடுச்சு. ஃப்ரெண்ட்லியான ஒரு சூழல்லேயே மொத்தப் படத்தையும் முடிச்சிட்டோம்.’’

``விஜய்யோட எனர்ஜி வேற லெவல்ல இருக்கே..?’’
``விஜய் சார் ரொம்ப சிம்பிளா இருப்பார். கூலான ஆள். என்னை எப்பவும் ‘என்ன நெல்சா... எல்லாம் கரெக்ட்டா போகுதா?’ம்பார். ‘இவங்க என்ன நினைப்பாங்க.. அவங்க என்ன நினைப்பாங்க’ன்னு எல்லாம் நினைக்க மாட்டார். வாழ்க்கையை சிம்பிள் அண்ட் ஹம்பிளா அவர் கொண்டு போற விஷயம் ரொம்பப் பிடிச்சிருந்தது. ஒன்மோர்னு நீங்க பத்துத் தடவை கேட்டாலும், ‘அப்படியா’ன்னு இன்முகத்தோடு கேட்டுட்டு வந்து சளைக்காமல் நடிப்பார். ‘நாம எது பண்ணினாலும் பார்ப்பாங்க’ என்கிற எண்ணத்தை ஒருநாள்கூட அவர்கிட்ட பார்த்ததில்ல.
அவரோடு ஒரு ஷாப்பிங் போனாக்கூட, ரொம்பவே சிம்பிளானதைத்தான் வாங்குறார்.நூறு ரூபாய் பிரியாணியா இருந்தாக்கூட, அதையும் சந்தோஷமா சாப்பிடுறார். அப்படியொரு சிம்பிள் லைஃப் ஸ்டைல் அவரோடது. ஒருநாள் ராத்திரி அவரோடு சாப்பிட உட்காந்தோம். சாதாரண பிரியாணி சாப்பிட்டுக்கிட்டு இருந்தார். ‘இதை வெளியே நானே சாப்பிட்டுட்டு வந்திருப்பேனே’ன்னு அவர்கிட்ட சொன்னேன். ‘இவ்ளோதான் லைஃப்’னு சிரிச்சுக்கிட்டே சொன்னார். ஸ்பாட்லேயும் கூட நமக்கு மத்த பிரஷர் எதுவும் ஏற்படாம அன்பும் அக்கறையுமா பாத்துக்குவார். அதனாலேயே ‘பீஸ்ட்’ தருணங்கள் காலம் கடந்தும் இனிமையா இருக்கும்.”

``மறுபடியும் தமிழில் பூஜா ஹெக்டே... எப்படி?’’
``இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, பூஜாவுக்கு தெலுங்கில் `அல வைகுந்தபுரம்லு' வந்திருந்தது. அதுல பூஜா கலக்கியிருந்தாங்க. ஹீரோயின் தேடுதல்ல விஜய் சாருடன் இதுவரை அவரோடு நடிச்சிராதவங்களா இருக்கணும். அவரோட உயரத்துக்குப் பொருத்தமா இருக்கணும்னு பார்க்கறப்ப பூஜா பொருத்தமா இருந்தாங்க. அவங்களும் ரொம்ப கடின உழைப்பாளி. அவங்களுக்குத் தமிழ் தெரியலைன்னாலும்கூட, டயலாக் பேசுறப்ப தமிழைக் கத்துக்கிட்டு உச்சரிச்சாங்க. அதே போல ஒரு கதாபாத்திரத்துக்கு புதுசா ஒரு ஆள் தேவைப்பட்டுச்சு. செல்வராகவன் சார் மைண்ட்ல வந்தார். அவர்கிட்ட கேட்டதும், உடனே சம்மதிச்சிட்டார். எங்க டீமே கலகலன்னுதான் இருக்கும். விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, சுனில்னு எல்லாருமே செம ஜாலியா இருப்போம். ஆரம்பத்துல விஜய் சாரே, 'என்ன எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்காங்க'ன்னு ஷாக் ஆனார். அப்புறம் எவ்ளோ கலகலன்னு இருந்தாலும் வேலையில அத்தனை பேரும் கரெக்ட்டா இருந்தது அவரை இம்ப்ரஸ் பண்ணிடுச்சு.''

``ஒரு பாடல் வெளியிடுறதுக்கு முன் அந்தப் பாடலுக்கு லீடு கொடுக்கறதுக்காக நீங்க, அனிருத், சிவகார்த்திகேயன்னு மூணு பேரும் சேர்ந்து கான்சப்ட் வீடியோக்கள் பண்றீங்க... இந்த ஐடியாவை எப்படிப் பிடிச்சீங்க?’’
`` `கோலமாவு'ல இருந்து சொல்றேன். அந்தப் படத்தை எடுக்கும்போது நாங்க நினைச்ச பட்ஜெட்டைவிட கொஞ்சம் குறைவான பட்ஜெட்லதான் எடுத்தோம். அதைப் பெரிய அளவுல புரொமோட் பண்ணணும்னா இன்னும் பணம் செலவாகும். அப்படிச் செலவு பண்ணாம எப்படி புரொமோட் பண்றதுன்னு யோசிச்சப்பதான் கான்சப்ட் பிடிச்சோம். டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் வளர்ந்திருக்கறதும் நமக்கு ப்ளஸ். அனிகிட்ட பாட்டு வாங்குறதும் காமெடியான அனுபவம். அதனால அதை வச்சு, பண்ணினோம். வரவேற்பும் கிடைக்கவே, தொடர்ந்து அப்படிப் பண்ண ஆரம்பிச்சிட்டோம். நானும் டெலிவிஷன்ல இருந்து வந்ததால, எஸ்.கே-வை அங்கிருந்தே தெரியும். பதினைந்து வருஷ நட்பு. அதேபோல் அனியை (அனிருத்) பனிரெண்டு வருஷம் தெரியும். அதுவும் எஸ்.கே கிட்ட நீங்க ஒர்க் கொடுத்துட்டீங்கன்னா, அவர் மைண்ட்ல எப்பவும் இந்த ஒர்க் ஓடிக்கிட்டே இருக்கும். 'பீஸ்ட்'ல அவரைக் கூப்பிட்டதுகூட, அவர் எழுதினா சரியா வரும் என்பதால்தான். எங்களோட இந்த நட்புக் கூட்டணி எப்பவும் தொடரும்.''


``இயக்குநர் ஆகுறதுக்கு முன்னாடி நீங்க ஒரு விஜய் ரசிகரா அவர் படத்துக்கு டிக்கெட் வாங்க தியேட்டர்ல க்யூவுல நின்னுருப்பீங்க... இப்ப நெல்சன் படத்துக்கு டிக்கெட் கிடைக்குமான்னு சூழல் வந்திருக்கு... இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீங்க?’’
``அப்பவும் நான் விஜய் சாரோட தீவிர ரசிகன். அப்பெல்லாம் நான் கூட்டத்துல டிக்கெட் எடுக்க முயற்சி பண்ற காலகட்டத்துல சினிமாவுக்குள் நான் வருவேனான்னு எனக்கே தெரியாது. இன்னிக்கு விஜய் சார் படம் பண்றது கனவு நனவான சந்தோஷம்தான். எங்க அப்பாவாலதான் சினிமாவுக்குள்ளேயே வந்தேன். அவர் நல்ல ஸ்கிரிப்ட் ரைட்டர். ரேடியோ நாடகங்கள், குறும்படங்கள், மேடை நாடகங்களுக்கு ஆயிரக்கணக்கா ஸ்கிரிப்ட் எழுதியிருக்கார். என்னோட சின்ன வயசில இருந்து வீட்ல எப்பவும் அவர் எழுதிட்டு இருப்பார். அவர் ஏதோ எழுதிட்டிருக்கார். நாம நம்ம வேலையைப் பார்ப்போம்னுதான் நானும் இருந்திருக்கேன். ஆனா, ஏதோ ஒரு கட்டத்துல எனக்கு மீடியாதான் செட் ஆகும்னு என்னை விஸ்காம் படிக்கச் சொன்னார். இடையே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல்போக, இனிமே இதுதான் என் வாழ்க்கைன்னு நினைச்சுப் பயணிக்க ஆரம்பிச்சேன். ‘கோலமாவு கோகிலா’ வெற்றிக்குப் பிறகுதான் அவர் முகத்தில் சந்தோஷம் வந்தது. `டாக்டர்' ரிலீஸுக்கு முன் அவர் இறந்துட்டார். இப்ப 'பீஸ்ட்' வர்ற டைம் இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்.”

``நீங்க ரஜினி 169 கமிட் ஆனதும், விஜய் ரியாக்ஷன் எப்படி இருந்தது?’’
``விஜய் சாரும் ரஜினி சாரோட ரசிகர்னு எல்லாருக்கும் தெரியும். ரஜினி சார் படம் பண்றதுக்கு என்னை மோட்டிவேட் பண்ணினது விஜய் சார்தான். `பீஸ்ட்' படப்பிடிப்பு மும்முரமா போய்ட்டிருந்த நேரம், விஜய்சார் என்கிட்ட `ரஜினி சார் அடுத்த படத்துக்கான கதைகள் கேட்க ஆரம்பிச்சிருக்கார். நீங்க ஏன் முயற்சி பண்ணக்கூடாது?'ன்னு கேட்டார். ரஜினி சார் லெஜன்ட். அவருக்கு நான் எப்படி கதை பண்றதுன்னு பெரிய தயக்கம் இருந்துச்சு. என் தயக்கத்தை உடைச்சவர் விஜய் சார்தான். `நீங்க கதை மட்டும் பண்ணுங்க. உங்களுக்கு நடக்கும்'னார். அவர் சொல்லி ஸ்பார்க் ஆன பிறகுதான் நான் கதை பண்ணலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சேன். விஜய் சாரும் இன்னும் மோட்டிவேட் பண்ணினார். `நீங்க இப்பவே கதை ரெடி பண்ணுங்க நெல்சா... இந்தப் படம் முடிக்கறப்ப, ரஜினி சார் படம் தொடங்கறதுக்கும் சரியா இருக்கும். உங்களுக்கு நடந்திடும்'னு உறுதியா சொன்னார். அவரோட பாசிட்டிவிட்டி இதை சாத்தியமாக்கியிருக்கு'' - நெகிழ்கிறார் நெல்சன்.