75வது கான் (Cannes) திரைப்பட விழா, பிரான்ஸில் நடந்து வருகிறது. அதில் இயக்குநர் பா.ரஞ்சித், தனது `வேட்டுவம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.
'சார்பட்டா பரம்பரை', 'நட்சத்திரம் நகர்கிறது' படங்களைத் தொடர்ந்து பா.இரஞ்சித், விக்ரம் மற்றும் கமல் நடிக்கும் படங்களை இயக்குகிறார். கான் திரைப்பட விழாவில் அவர் வெளியிட்டுள்ள 'வேட்டுவம்' விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டிலா என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் எழுந்திருக்கிறது. இது குறித்து விசாரித்தோம்.
பா.இரஞ்சித் தனது நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு', 'ரைட்டர்', 'குதிரைவால்' ஆகிய படங்களைத் தயாரித்திருந்தார். தொடர்ந்து அவரது தயாரிப்பில் 'சேத்துமான்', 'ஜெ.பேபி', 'பொம்மை நாயகி', 'நட்சத்திரம் நகர்கிறது' என அடுத்தடுத்த படங்கள் ரெடியாகிவிட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வேட்டுவம்' பற்றி விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்...
"இது விக்ரம் படத்தின் டைட்டிலோ, கமல் நடிக்கும் படத்தின் டைட்டிலோ அல்ல. இந்த இரண்டு படங்களுக்கும் நடுவே, 'வேட்டுவம்' படத்தை இயக்குகிறார் பா.இரஞ்சித். வேட்டைப்புலியின் ஓவியத்தை ஃபர்ஸ்ட் லுக்காக அவர் வெளியிட்டுள்ளார். இது ஒரு கேங்ஸ்டர் கதை. அதிலும் மதுரை பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதை என்கிறார்கள். பாலிவுட்டை சேர்ந்த அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் முழுக்கவே புதுமுகங்கள் நடிப்பார்கள் எனத் தெரிகிறது.
இதற்கிடையே பா.இரஞ்சித் - விக்ரம் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவுறும் தறுவாயில் இருக்கின்றன. ஜூலையில் அதன் படப்பிடிப்பு நடக்கலாம் என்கிறார்கள்.