Published:Updated:

`உங்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மனக்கசப்புனு சொன்னாங்களே, உண்மையா..?’ - பாண்டிராஜ் பதில்

director pandiraj
director pandiraj

சிவா நடிச்ச ஒரு சீனுக்கு ஸ்பாட்ல இருக்குற எல்லோருமே அழுதுட்டாங்க.

`` 'பசங்க', 'வம்சம்', 'கேடி பில்லா கில்லா ரங்கா'னு என்னுடைய எல்லா படங்களிலும் எமோஷன்கள்தான் பேசப்பட்டிருக்கு. என்னுடைய பலம் இதுதான்னு 'கடைக்குட்டி சிங்கம்' படத்துலதான் தெரிஞ்சுகிட்டேன். என் கரியர்லயும் சரி, கார்த்தி சார் கரியர்லயும் சரி, அதிக வசூல் வந்தது இந்தப் படத்துக்குதான்னு சொல்றாங்க. இதுக்குப் பிறகு, குடும்பக் கதைகளை எடுக்காமல் வேறொரு கதை பண்ணலாம்னுதான் இருந்தேன். ஆனால், சிவகார்த்திகேயன் சொல்லும்போதே 'கடைக்குட்டி சிங்கம்' மாதிரி ஒரு படம் பண்ணலாம்னுதான் சொன்னார். தவிர, 'இந்தப் படம் பார்த்து எங்க குடும்பம் ஒண்ணு சேர்ந்திருக்கு'னு நிறைய பேர் சொல்றாங்க. `தியேட்டருக்கே வராதவங்க இந்தப் படம் பார்க்க தியேட்டருக்கு வந்திருக்காங்க’னு ஊர்ல இருக்கிற தியேட்டர் உரிமையாளர்கள் எல்லோரும் சொன்னாங்க. கல்யாண பத்திரிகைகளில் 'விவசாயி'னு போட ஆரம்பிச்சுட்டாங்க. இதை எல்லாம் பார்க்கும்போதும் கேட்கும்போதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் படம் மூலமா பணம், விருது எல்லாம் கிடைச்சாலும் உறவுகளுக்குள்ள இருக்கிற இடைவெளியை குறைச்சு, அவங்களை ஒண்ணு சேர்த்திருக்குனு நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. இவ்ளோ விஷயங்கள் இருக்கும்போது மீண்டும் ஒரு குடும்பப் படம் பண்ணிடலாம்னு நினைச்சு எழுதின கதைதான், `நம்ம வீட்டுப் பிள்ளை’ ‘’ - எனப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் பாண்டிராஜ்.

'ஷோபிக்கண்ணு', 'கண்ணுக்கினியாள்', 'ஆண்டாள் பிரியதர்ஷினி', 'பூம்பொழில் செல்லம்மா'னு உங்க படங்களுடைய கேரக்டர்களின் பெயர்கள் எல்லாமே வித்தியாசமா இருக்கு. இதுக்கு எவ்ளோ மெனக்கெடுவீங்க?

sivakarthikeyan
sivakarthikeyan

"என் கதையில வர எல்லா கேரக்டர்களுக்கும் பெயர் வைக்கிறதுல கொஞ்சம் மெனக்கெடுவேன். 'பசங்க' படத்துல 'ஷோபிக்கண்ணு', 'போதும்பொண்ணு'னு கேரக்டர் வரும். படம் பார்த்துட்டு வெளிய வரும்போது ஒருத்தர், 'அந்த டைரக்டர் ஒவ்வொரு பெயரையும் வித்தியாசமா வெச்சிருக்கார்'னு சொன்னார். மக்கள் எல்லாத்தையும் கவனிக்கிறாங்கன்னு எனக்குப் புரிய ஆரம்பிச்சது. அதனால எல்லா படங்களுக்கும் பெயர் வைக்கிறதுல கொஞ்சம் நேரம் எடுத்துக்குவேன். `நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்துல சிவகார்த்திகேயனுடைய பெயர் அரும்பொன். பாரதிராஜா சார் பெயர் அருள்மொழிவர்மன். அனு இம்மானுவேல் பெயர் 'மாங்கனி'."

அனு இமானுவேலை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடிக்க வைக்க காரணம் என்ன?

sivakarthikeyan and anu emmanuel
sivakarthikeyan and anu emmanuel

"அனு இமானுவேல்தான் இந்தக் கதைக்கு வேணும்னு நான் நினைக்கலை. ரெண்டு மூணு ஹீரோயின்கள்கிட்ட பேசினோம். ஆனா, கால்ஷீட் பிரச்னை இருந்தது. எங்களுக்கு இந்தப் படத்தை உடனே ஆரம்பிக்க வேண்டிய சூழல் இருந்தது. தவிர, நயன்தாரா, சமந்தா மாதிரி பெரிய ஹீரோயின்கள் இந்தக் கதைக்கு தேவைப்படலை. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' மாதிரியான படங்களில் புது ஹீரோயின்களோட சிவா நடிச்சது சூப்பரா வொர்க்அவுட் ஆச்சு. அது மாதிரி சிவகார்த்திகேயன் - அனு இமானுவேல் காம்போவும் வொர்க்அவுட் ஆகும்.’’

’நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்துல பெரிய டீமே இருக்கு. இவ்வளவு பெரிய டீமை வெச்சு எப்படி சீக்கிரம் படத்தை எடுத்து முடிச்சீங்க?

namma veettu pillai movie still
namma veettu pillai movie still

"இந்தப் படத்தை 120 நாள்ல எடுக்கணும். ஆனா, நாங்க 75 நாள்கள்ல முடிச்சுட்டோம். நல்ல டீம் அமைஞ்சதுனாலதான் இது சாத்தியமானது. நான் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயனைப் பார்க்க, கூட்டம் வந்து 'சிவா... சிவா...'னு கத்துனது, நான் பார்த்து பிரமிச்ச பாரதிராஜா சாருக்கு 'ஆக்‌ஷன், கட்' சொன்னதுனு ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாதான் இருந்தது. ஸ்பாட்டுக்கு வந்த பிறகுதான் அவர் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தையே பார்த்தார். பார்த்துட்டு மறுநாள் வந்து என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டார். இந்தப் படத்துடைய கதை கேட்டுட்டு, 'கிழக்குச் சீமையிலே' கதையையே பெரிசா யோசிச்சு வேற மாதிரி எடுத்திருக்க; சந்தோசமா இருக்குடா'னு சொன்னார். 'எப்படி உங்களை வெச்சே உங்க கதையை எடுத்துட்டேனா?'னு கேட்டு சிரிச்சேன். நம்ம பார்த்து வியந்த ஒருவர் நம்மளை புகழ்ந்து பேசுனது மறக்கவே முடியாது. சிவா நடிச்ச ஒரு சீனுக்கு ஸ்பாட்ல இருக்குற எல்லோருமே அழுதுட்டாங்க. நீரவ் ஷா சார் கண்ணை துடைச்சுக்கிட்டே ரோல் பண்ணிட்டு இருந்தார்."

படத்தோட பெயர் 'எங்க வீட்டு பிள்ளை'னு சொன்னாங்களே. உங்களுடைய முதல் ஆப்ஷன் அதுவாகத்தான் இருந்ததா?

"மூணு ஆப்ஷன் வெச்சிருந்தோம். அதுல 'எங்க வீட்டு பிள்ளை' இல்லை. அதுக்குள்ள 'எங்க வீட்டு பிள்ளை' டைட்டில்னு வெளிய வர ஆரம்பிச்சுடுச்சு. நாம் சொன்ன மூணு தலைப்புல சன் பிக்சர்ஸுக்கு இந்தத் தலைப்பு பிடிச்சிருந்தது. சிவகார்த்திகேயனுக்கும் இந்தத் தலைப்பு சரியா பொருந்தும்னு நினைச்சு இந்தப் பெயரையே வெச்சுட்டோம்."

'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்குப் பிறகு, உங்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மனக்கசப்பு இருந்ததா சொன்னாங்களே, உண்மையா?

director pandiraj with sivakarthikeyan
director pandiraj with sivakarthikeyan

"எங்களுக்குள்ள சண்டைனு நிறைய செய்திகள் வந்ததைப் பார்த்திருக்கேன். என்கிட்டேயும் நிறைய பேர் கேட்டாங்க. அந்தப் படத்துக்குப் பிறகு நானும் சிவாவும் ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்குப் படம் பண்றதா ஒப்பந்தம் இருந்தது. அந்த நேரத்துல சிவா ரொம்ப பிஸியா இருந்தார். அதைப் புரிஞ்சுகிட்டு நான் விலகிட்டேன்; அவ்ளோதான். தயாரிப்பாளர் கவுன்சில்ல நிறைய பேர் அவரைக் கட்டாயப்படுத்தி கால்ஷீட் வாங்கினாங்க. என்னையும் அதே மாதிரி படம் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. ’நான் மாட்டேன்’னு சொல்லிட்டேன். இன்னைக்கு வரை 'ஏன் கால்ஷீட் தரலை?'னு நான் சிவாகிட்ட கேட்டதில்லை. ஆனா, பேசுன புராஜெக்ட் வேற ஒரு வடிவத்துல போயிடுச்சேனு வருத்தம் இருந்ததே தவிர, சிவா மேல தப்பு இல்லை. நானும் அந்த நேரத்துல 'பசங்க 2', 'இது நம்ம ஆளு', 'கதகளி'னு பிஸியாதான் இருந்தேன். அவர் பட விழாக்களுக்கு நான் போனேன்; என் பட விழாவுக்கு அவர் வந்தார். நாங்க பேசிக்கிட்டேதான் இருந்தோம். கணவன் - மனைவிக்குள்ள வர மாதிரி, அப்பா - மகனுக்குள்ள வர மாதிரி, எங்களுக்குள்ள சின்ன மன வருத்தம் வந்தது. சிவா என் தம்பி. அதனால எங்களுக்குள்ள நிறைய இருக்கும். மத்தபடி வெளியே சொல்ற மாதிரி சண்டை எல்லாம் இல்லை."

அதே மாதிரி சூர்யா தயாரிப்புல படம் பண்றதா சொல்லிட்டு, சன் பிக்சர்ஸ் ஆஃபர் வந்தவுடன் அங்கே பாண்டிராஜ் போயிட்டார். அதனால சூர்யா, கார்த்தி ரெண்டு பேரும் உங்க மேல வருத்தத்துல இருக்காங்கன்னு ஒரு செய்தி இருக்கே!

director pandiraj with surya and karthi
director pandiraj with surya and karthi

" ‘கடைக்குட்டி சிங்கம்' படம் ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே 'அடுத்த படம் நம்மளே பண்ணலாம்'னு கார்த்தி சார் சொன்னார். 'கண்டிப்பா பண்ணலாம்'னு சொன்னேன். அந்தப் படம் ரிலீஸான நாள் சூர்யா சார் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ, '2டி நிறுவனத்துக்கு மறுபடியும் ஒரு படம் பண்ணுங்க. கதைக்கு தகுந்த மாதிரி அதுல நானோ, தம்பியோ நடிக்கிறோம். ஆனா, கண்டிப்பா படம் பண்ணணும்'னு சொல்லி அட்வான்ஸ் கொடுத்துட்டார். 'கடைக்குட்டி சிங்கம்' ஸ்பாட்டுக்கு சிவா வந்தபோதே 'ஒரு படம் பண்ணலாம்'னு பேசி வெச்சிருந்தோம். அவர் அட்வான்ஸ் கொடுக்கும்போது வேண்டாம்னு சொன்னா நல்லா இருக்காதுனு வாங்கிக்கிட்டேன். சாப்பிடும்போது, 'ஒரு நாள் என்கிட்ட ஒரு லைன் சொன்னார். எனக்குப் பிடிச்சிருந்தது. நானே பண்றேன்'னு சூர்யா சார்கிட்ட கார்த்தி சார் சொன்னார். 'ஓகே... தம்பிக்கே பண்ணுங்க. அடுத்த படம் நாம பண்ணலாம்'னு சூர்யா சார் சொல்லிட்டார்.

kadaikutty singam movie still
kadaikutty singam movie still

கார்த்தி சாரை வெச்சு படம் பண்றதுக்கான வேலைகள் ஆரம்பிச்சுட்டேன். அப்போ பாக்யராஜ் கண்ணன் படம் ஆரம்பிக்க தாமதமாச்சு. அந்த ஒரு மாசம் கேப்ல, லோகேஷ் கனகராஜுடைய 'கைதி' படத்தை கமிட் பண்ணாங்க. அது பிளான் பண்ணதைவிட 20 நாள் லேட்டாதான் முடிஞ்சது. அதனால பாக்யராஜ் கண்ணன் படமும் தள்ளிப்போச்சு. இதற்டையில ஜீத்து ஜோசப் படத்துல நடிக்க கமிட்மென்ட் கொடுத்துட்டார். இந்தப் படங்களை எல்லாம் முடிச்சுட்டு என் படத்துக்கு வர்றதுக்கு இந்த வருடம் நவம்பர் ஆகிடும். அதே சமயம், மணிரத்னம் சார் 'பொன்னியின் செல்வன்' படத்துக்கும் பேசிக்கிட்டு இருந்தார். இதனால கார்த்தி சார் கொஞ்சம் சங்கடமா ஃபீல் பண்ணார். அதைப் புரிஞ்சுக்கிட்டு, 'நான் அதுக்குள்ள ஒரு சின்ன படம் பண்ணிட்டு வந்திடவா?'னு அவர்கிட்ட கேட்டேன். அவரும் ஓகே சொல்லிட்டார். சூர்யா சார், கார்த்தி சார் ரெண்டு பேர்கிட்டேயும் சுமுகமா பேசிட்டுதான் வெளியே வந்தேன். 'கடைக்குட்டி சிங்கம்' முடிச்ச சமயத்துல சன் பிக்சர்ஸ் என்கிட்ட, ஒரு படம் பண்ணச் சொல்லி கேட்டபோது, ’நான் 2டியில கார்த்தி சாருக்கு ஒரு படம் பண்றேன்'னு சொல்லிட்டேன். நான் வெளியே வந்த பிறகு, நானும் சிவாவும்தான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அப்ரோச் பண்ணோம். அப்படிதான் இந்தப் படம் ஆரம்பமானது. சன் பிக்சர்ஸ் வந்ததுனால ஒரு படத்தை விட்டுட்டு வர நபர் நானும் கிடையாது; சிவாவும் கிடையாது. சூர்யா, கார்த்தி, சிம்பு, அருள்நிதி, விஷால், சிவானு இதுவரை நான் வொர்க் பண்ண எல்லா ஹீரோக்களுடனும் மறுபடியும் படம் பண்ணுவேன்.’’

வரும் வியாழக்கிழமை வெளியாகும் ஆனந்தவிகடன் இதழில், ’நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தைப் பற்றி பல தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார், இயக்குநர் பாண்டிராஜ்.

அடுத்த கட்டுரைக்கு