Published:Updated:

``ரஜினி சார் அவர் ஸ்கூல் கதையைச் சொல்லி படம் எடுக்க முடியுமான்னு கேட்டார்!" - `பசங்க' பாண்டிராஜ் #11YearsOfPasanga

'பசங்க'
News
'பசங்க'

'' 'பசங்க' படம் பார்த்துட்டு ரஜினி சார் 'என் ஸ்கூல் வாழ்க்கை பத்தி ஒரு கதை இருக்கு. கேட்கிறீங்களா?'னு கேட்டு ஒன்றரை மணி நேரம் கதை சொன்னார். அதை ஒரு சினிமாவுக்கான கதையாவே ரெடி பண்ணி வெச்சிருந்தார்.''

பெரும் ஹீரோக்களை வைத்து எல்லோரும் மசாலா படங்கள் எடுத்துக்கொண்டிருந்த சூழலில், சின்ன பசங்களை வைத்து படமெடுத்து ஹிட் அடித்துக்காட்டியவர் இயக்குநர் பாண்டிராஜ். இவரின் 'பசங்க' படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. பாண்டிராஜிடம் பேசினோம்.

இந்தக் கதையைத்தான் முதல் படமா எடுக்கணும்னு எப்ப நினைச்சீங்க?

" 'பசங்க' படத்துக்கான கதை நான் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்துல இணை இயக்குநரா வேலை செஞ்சுட்டு இருந்த சமயத்துல எழுதினது. ஆரம்பத்துல இருந்தே எனக்குக் குழந்தைகள் படத்தின் மேல் ஆர்வம் அதிகம். அவங்களோட உலகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் பள்ளி காலம் என் வாழ்க்கையில ரொம்ப அழகானது. அதை முதல் படமா எடுத்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. நான் வேற ரெண்டு மூணு ஹீரோயிச கதைகள் எழுதியிருந்தாலும் 'பசங்க' மேல இருந்த நம்பிக்கை எனக்கு மத்த கதைகள்ல இல்லை. காரணம், ஊர்ல நிறைய நண்பர்கள்கிட்டயும் அவங்க குடும்பங்கள்கிட்டயும் ரெண்டு மணி நேரம் இந்தப் படத்தோட கதையைச் சொல்வேன். எல்லோரும் ரொம்ப ரசிச்சு, சிரிச்சு கதை கேட்பாங்க. ஒரு கூட்டத்தை விஷூவல் போட்டுக்காட்டி ரெண்டு மணி நேரம் உட்கார வைக்கலாம். ஆனா, சும்மா கதை சொல்லி உட்கார வைக்க முடியாது, போர் அடிச்சிடும். ஆனா, அவங்க எல்லோரும் ரொம்ப ரசிச்சாங்க. அந்த விஷயம்தான் 'பசங்க' மேல எனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துச்சு."

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தக் கதையை படமாக்க எவ்வளவு தயாரிப்பாளர்களை அணுகியிருப்பீங்க?

'பசங்க'
'பசங்க'

"இந்தக் கதையை எடுத்துட்டு தமிழ் சினிமாவுல இருக்கிற எல்லா தயாரிப்பாளர்களையும் அணுகிட்டேன். இயக்குநரா இருந்து தயாரிப்பாளர் ஆனவங்களையும் அப்ரோச் பண்ணேன். 'கதை சூப்பரா இருக்கு. ஆனா, இது எப்படி வொர்க் அவுட் ஆகும்னு தெரியலை. முதல் படம் சரியா போகலைன்னா அப்புறம் லைஃப் என்னாகும்னு தெரியாது, வேணும்னா கமர்ஷியலா ஒரு படம் பண்ணிட்டு அப்புறம் இதைப் பண்ணுங்களேன்'னு என்மேல இருக்கிற அக்கறையில் சிலர் சொன்னாங்க. என்னடா எல்லாரும் இப்படிச் சொல்றாங்களேனு பெரிய ஹீரோக்களுக்கான கதைகளை எழுதி அவங்களை அணுக ஆரம்பிச்சுட்டேன். ஆனா, என் மனசு முழுக்க 'பசங்க' கதையிலதான் இருந்துச்சு. அப்புறம், 'சுப்ரமணியபுரம்' படத்துக்கு முன்னாடியே சசிகுமார் சார் வெளியே படம் பண்ண கதைகள் கேட்குறார்னு எஸ்.ஆர்.கதிர் சார், அப்பறம் என் நண்பர் வாசு மூலமா தகவல் வந்தது. எல்லோர்கிட்டயும் முயற்சி பண்ணியாச்சு. இவர் ஒருத்தர்தான் பாக்கி. இவர்கிட்டயும் இந்தக் கதையைச் சொல்லி பார்ப்போம்னு 'பசங்க' கதையை சசி சார்கிட்ட சொன்னேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போய் உடனே பண்ணலாம்னு சொல்லிட்டார்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பசங்க படத்தில் நடிகர்களின் ரோல் மிகப்பெரியது. அவர்களையெல்லாம் எப்படி தேர்ந்தெடுத்தீங்க?

"நாசர் மாதிரி ஒரு அப்பா, பிரகாஷ்ராஜ் மாதிரி ஒரு வாத்தியார், சோப்பிக்கண்ணு கேரக்டர்ல விஜயலட்சுமி மாதிரி ஒரு பொண்ணு, மீனாட்சி சுந்தரம் கேரக்டர்ல 'மிர்ச்சி' சிவா மாதிரி ஒரு பையன்னு ஆரம்பிச்சுதான் கதை சொல்லுவேன். அப்படித்தான் என் மைண்ட்ல இருந்தது. சசி சார் படத்துக்குள்ள வர்றதுக்கு முன்னாடி மோஸர்பேர் கம்பெனியில இந்தப் படம் பண்றதா இருந்தது. தயாரிப்பாளரை இம்பரஸ் பண்றதுக்காக ஒரு பெரிய ஹீரோவுடைய பையனை இந்தப் படத்துல ஹீரோவாவும், வில்லனுடைய பையனை வில்லனானவும் அறிமுகப்படுத்தலாம்னு சொன்னேன். அப்படி விக்ரம் சாருடைய மகன் துருவ்வை அன்புக்கரசு கேரக்டர்லயும் நாசர் சாருடைய மகன் அபிஹசனை ஜீவானந்தம் கேரக்டர்லயும் நடிக்க வைக்க பிளான் பண்ணி அவங்கக்கிட்டபோய் கதை சொன்னேன். அப்போ ரெண்டு பேரும் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தாங்க. 'படிச்சிட்டு இருக்கான். இப்போ அவனைத் தொந்தரவு பண்ண வேண்டாமே'னு விக்ரம் சார் சொன்னார். நாசர் சார்கிட்ட இருந்தும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரலை. 'மெரினா' படமெல்லாம் முடிஞ்ச பிறகு, விக்ரம் சாருக்கு ஒரு கதை சொல்றதுக்காக அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ அவர் மனைவிகிட்ட, 'இவர்தான் 'பசங்க' டைரக்டர். துருவ்வை நடிக்க வைக்க கேட்டவர்'னு அறிமுகப்படுத்தி வெச்சார். அப்போ அவங்க மனைவி, 'என் பையனுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கும். நீ கெடுத்துட்டியே கென்னி'னு ஜாலியா பேசிட்டிருந்தாங்க. அதே மாதிரி, விமல் நடிச்ச கேரக்டருக்கு சந்தானம்கிட்ட கூட கதை சொன்னேன். அப்புறம் அந்தக் கம்பெனியில படம் ஆரம்பிக்கலை. சசி சார் வந்த பிறகு, புதுமுகங்களை வெச்சே போயிடலாம்னு முடிவு பண்ணோம். எங்க ஊர்ல இருக்கிற எல்லா ஸ்கூலுக்கும் போய் பசங்களைத் தேர்ந்தெடுத்தோம். நாசர் சார் இடத்துல சிவக்குமார், பிரகாஷ்ராஜ் சார் இடத்துல ஜெயப்பிரகாஷ், அன்பு கேரக்டர்ல கிஷோர், ஜீவா கேரக்டர்ல ஶ்ரீராம்னு படத்துக்குள்ள வந்தாங்க."

விமல் நிறைய படங்கள்ல ரொம்ப சின்ன கேரக்டர்ல நடிச்சிருந்தாலும் 'பசங்க'தான் அவருக்கான அடையாளம் கொடுத்தது. அவர் எப்படி உள்ள வந்தார்?

'பசங்க'
'பசங்க'

"விமலை இந்தப் படத்துல நடிக்க வைக்க ஆடிஷனுக்கு அனுப்பினது விஜய் சேதுபதிதான். 'பசங்க' படத்தோட கேமராமேனும் '96' படத்தோட இயக்குநருமான பிரேமும் விஜய் சேதுபதியும் அப்போவே நல்ல நண்பர்கள். பிரேம் சொல்லி விஜய் சேதுபதி ஆடிஷனுக்கு வந்தார். 'நீங்க நல்லா நடிக்கிறீங்க. ஆனா, இந்தக் கேரக்டருக்கு இன்னும் சின்ன பையனா இருந்தாதான் நல்லாயிருக்கும்'னு அவர்கிட்ட சொன்னேன். அப்போதான் விஜய் சேதுபதி, 'நான் ஒருவரை அனுப்பி வைக்குறேன் பார்க்குறீங்களா?'னு கேட்டு விமலை அனுப்பி வெச்சார். க்ளீன் ஷேவ் பண்ணி மொழு மொழுனு ஆடிஷனுக்கு வந்தார் விமல். நான் சரியா இருக்காதுனு சொல்லிட்டேன். அப்போ பிரேம் ஒரு விளம்பரத்தைப் பார்த்து சிரிச்சுட்டு இருந்தார். என்னனு பார்க்கும்போது அதுல விமல் மீசை, தாடியெல்லாம் வெச்சு சூப்பரா இருந்தாப்ள. அப்போ விசாரிச்சபோதுதான் அவர் கூத்துப்பட்டறையில பெண் வேஷம் போடுவார். அதனாலதான க்ளீன் ஷேவ் பண்ணியிருக்கார்னு தெரிய வந்தது. உடனே விமல்கிட்ட மீசை தாடியெல்லாம் வளர்க்கச் சொல்லி அப்புறம் நடிக்க வெச்சோம்."

ஷூட்டிங்ல மறக்க முடியாத சம்பவம்?

"இந்தப் படத்துல நான் கமிட் ஆனதுல இருந்தே என் அப்பா ரொம்ப சீரியஸா இருந்தார். எப்போ வேணாலும் உயிர் பிரியலாம்ங்கிற ஸ்டேஜ்ல இருந்தார். ஒவ்வொரு நாள் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போதும் இன்னைக்கு அப்பா இருப்பாரோ இல்லையோனு ஒரு பயமும் பதற்றமும் மனசுக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கும். வீட்ல இருந்தா என்னால படத்துல கவனம் செலுத்த முடியாதுனு புதுக்கோட்டைல ஒரு ஹோட்டல்ல தங்க சொல்லிட்டார் என் அண்ணன். இந்தப் படத்துடைய இன்டர்வெல் சீன் எடுக்கும்போது என் அப்பா இறந்துட்டார்னு போன் வந்தது. வீட்டுக்கு ஓடினேன். உடனே சசி சார், சமுத்திரக்கனி அண்ணன்னு எல்லோரும் விஷயம் தெரிஞ்சி வந்துட்டாங்க. படத்துடைய மொத்த யூனிட்டும் எங்க வீட்டுக்கு வந்துடுச்சு. என் அப்பாவுக்கு தேர் கட்டுனதே 'பசங்க' படத்துடைய ஆர்ட் டைரக்‌ஷன் டீம்தான். சினிமாவுல வர்ற மாதிரி கப்பல் மாதிரி தேர் கட்டினாங்க. வீட்டுக்கு வர்றவங்களுக்கு காபி, டீ போட்டு கொடுத்தது புரொடக்‌ஷன் டீம். இந்த சம்பவம் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒண்ணு."

முதல் படத்துக்கே மூணு தேசிய விருதுகள்... விருது அறிவிச்ச நாள் எப்படி இருந்தது?

'பசங்க'
'பசங்க'

''அன்னிக்கு ராமச்சந்திரா காலேஜ்ல ஒரு நிகழ்ச்சிக்காக நான், சசி சார், கனி அண்ணன் எல்லோரும் கிளம்பிட்டு இருந்தோம். அப்போ பி.ஆர்.ஓ நிகில் முருகன் போன் பண்ணி 'வாழ்த்துகள் சார். 'பசங்க' படத்துக்கு மூணு விருது கிடைச்சிருக்கு'னு சொன்னார். 'என்ன விருது? என்ன பிரிவு?'னு கேட்டா 'தேசிய விருது சார். சிறந்த தமிழ் படம், சிறந்த வசனம், சிறந்த குழந்தை நட்சத்திரம்'னு சொன்னார். 'தேசிய விருதுல சிறந்த வசனம்னு ஒரு பிரிவே இல்லையே... நான் நம்பமாட்டேன்'னு சொல்லிட்டு டிவியைப் பார்த்தேன். அந்த வருஷம்தான் 'சிறந்த வசனம்'னு ஒரு பிரிவைச் சேர்த்திருக்காங்க. அப்போ வர ஆரம்பிச்ச போன் கால் 24 மணி நேரமும் தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்தது. அந்த நேரம் இருக்கே... சான்ஸே இல்லை! என் வாழ்க்கையில ரொம்ப ஸ்பெஷலான நேரம் அது. தேசிய விருது வாங்கப்போறதுக்கு முதல் நாள் என் மூத்த மகன் பிறந்தான். விருதை வாங்கின கையோடு நேரா மருத்துவமனைக்குப் போய் அந்த ரெண்டு பதக்கத்தை குழந்தை கழுத்துல போட்டுத்தான் வீட்டுக்கே கூட்டிட்டு வந்தோம். 'பசங்க' கனெக்டுக்காக மகனுக்கு அன்புக்கரசுனு பெயர் வெச்சுட்டேன். "

மறக்க முடியாத பாராட்டு என்ன?

''இயக்குநர் பாலா சார் சொல்லி ரஜினி சார் குடும்பத்தோட படம் பார்க்க வந்தார். நானும் அங்கதான் இருந்தேன். எனக்கு கைகொடுத்துட்டு, 'நீங்க கூட இருக்கும்போது என்னால ஃப்ரியா படத்தை என்ஜாய் பண்ணி பார்க்க முடியாது. நானே உங்களுக்கு படம் பார்த்துட்டு போன் பண்றேன்'னு சொன்னார். அதே மாதிரி போன் பண்ணி பாராட்டினார். மறுநாள் செளந்தர்யா போன் பண்ணி, 'அப்பா உங்களை பார்க்கணும்னு சொல்றார். ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு வந்திடுங்க'னு சொன்னாங்க. அங்க போனேன். போன்ல பேசினது இல்லாமல் நேர்ல ரொம்ப நேரம் 'பசங்க' படம் பத்தி பேசினார். 'என் ஸ்கூல் வாழ்க்கை பத்தி ஒரு கதை இருக்கு. கேட்கிறீங்களா?'னு கேட்டு ஒன்றரை மணி நேரம் கதை சொன்னார். அதை ஒரு சினிமாவுக்கான கதையாவே பண்ணி வெச்சிருந்திருக்கார். 'இந்தக் கதையை நீங்க பண்றீங்களா?'னு கேட்டார்.' நிச்சயம் பண்றேன் சார்'னு சொன்னேன். செளந்தர்யா ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சிருக்காங்க. அதுலயே பண்ணிடலாம்னு சொன்னார். அப்புறம் அது நடக்கலை. அப்புறம் ஒரு நாள், லதா ரஜினிகாந்த் மேடம் என்கிட்ட, 'ரஜினி சாருடைய பயோகிராஃபி பண்றோம். நீங்க இயக்குறீங்களா?'னு கேட்டாங்க. 'பெரிய புராஜெக்ட். ஒன்றிரண்டு வருஷம் ஆகுமே'ன்னு சொன்னேன். அப்ப அவங்க ரஜினி சாருடைய சின்ன வயசு போர்ஷன் மட்டும் பண்ணிக்கொடுங்கனு கேட்டாங்க. நானும் ஓகே சொன்னேன். ஆனா, அவங்க அப்புறம் அந்த பிளானை நிறுத்திட்டதுனால பண்ண முடியலை."