Published:Updated:

`ராஜராஜன் இப்போது இருந்திருந்தால் என்னை உரையாட அழைத்திருப்பார்!'- பா.இரஞ்சித்

கு.தினகரன்

``ராஜராஜசோழன் பற்றி நான் பேசியது உண்மை. அதை நான் எங்கேயும் மறுக்கவில்லை. நான் அம்பேத்கர் வளர்ப்பு. எனக்குப் பயமில்லை''.

பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

உலகில் பல சித்தாந்தங்களின் உருவாக்கத்துக்கும், ஆய்வுகளுக்கு ஆதாரமாகவும் நம்மிடையே நிற்பவை புத்தகங்கள். சமூக அவலங்களைப் பல எழுத்தாளர்களும் தங்கள் எழுத்தின் வழியே தொடர்ச்சியாக பதிவு செய்துவருகின்றனர். அவர்களில் சூரஜ் யெங்டே குறிப்பிடத்தக்கவர்.

புத்தக வெளியீட்டு விழா
புத்தக வெளியீட்டு விழா

சூரஜ் யெங்டே, ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் தலித் இந்தியர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு, மனித உரிமைகள், தலித் வாழ்வியல், சாதி ஒழிப்பு எனத் தொடர்ந்து இயங்கிவருபவர். இவர் எழுதிய `கேஸ்ட் மேட்டர்ஸ்' புத்தகம் சென்னையில் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் முன்னிலையில் வெளியிடப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவில் சாதிகளின் நிலை எப்படி இருந்தது, தலித்துகளின் வாழ்க்கைமுறை, அவர்களின் காதல் எனப் பல்வேறு விஷயங்களை இந்தப் புத்தகம் பேசுகிறது.

விழாவில் பா. இரஞ்சித் புத்தகத்தை வெளியிட, எழுத்தாளர் வ.கீதா, ராஜசேகரன், முனைவர் ராமு மணிவண்ணன் ஆகியோர் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு கலந்துரையாடினர். அன்றாட அரசியலில் தலித்துகளின் உரையாடல்கள், சாதிகளினால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டன.

பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், ``ராஜராஜசோழன் பற்றி நான் பேசியது உண்மை. அதை நான் எங்கேயும் மறுக்கவில்லை. நான் அம்பேத்கர் வளர்ப்பு. எனக்குப் பயமில்லை. ஒருவேளை ராஜராஜன் இப்போது இருந்திருந்தால் நான் பேசியதைக் கேட்டு என்னை உரையாட அழைத்திருப்பார்.

நான் பேசியதை எனக்கு முன்னரே பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால், நான் பேசும்போது மட்டும் அது விவாதத்துக்குள்ளாகிறது. சர்ச்சைகளை ஏற்படுத்துவதற்காகவோ, விளம்பரத்துக்காகவோ நான் பேசவில்லை. இங்கு நான் என்பது நான் மட்டும் அல்ல, இந்த சமூகம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமான சமூகமல்ல, எல்லோருக்குமான சமூகம். நீ என்னைப் பார்த்து பரிதாபப்பட வேண்டாம். சக மனிதனாகப் பார்த்தால் போதும். இந்த சமூகத்தில் சாதியை ஒழிக்க உரையாடல் நிச்சயம் வேண்டும்" எனப் பேசினார்.

சூரஜ் யெங்டே
சூரஜ் யெங்டே

இறுதியாகப் பேசிய சூரஜ், ``நாங்கள் எதையும் அதிகமாகக் கேட்கவில்லை எங்களுக்குச் சேர வேண்டியதைக் கேட்கிறோம். எழுபது சதவிகித தலித் மக்களுக்கு நிலமில்லை. தொண்ணூறு சதவிகித தலித் மக்கள் இன்னும் விவசாய நிலங்களில் கூலித் தொழில் செய்கின்றனர். எங்களுக்கான உரிமையை மீட்டெடுப்போம்" என உணர்ச்சிபொங்க பேசினார்.