Published:Updated:

`` `நோ, நோ... நீங்க வேணாம்'னு ரஜினி என்னை ஒதுக்கினார்... எதுக்காக?!'' - பார்த்திபன் தொடர் - 11

பார்த்திபன்
பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 11.

"உங்களோட 'உள்ளே வெளியே' தான் 'சாமி' படத்துக்கு கான்செப்ட். உங்க 'புதிய பாதை' அரசாங்கம் தொட்டில் குழந்தைன்னு திட்டம் போட புதிய பாதை வகுத்தது. 'குடைக்குள் மழை' கான்செப்ட்தான் 'அந்நியன்'. இப்படி உங்கள் முதல் முயற்சிகள் வேறு வடிவங்களில் வந்து வெற்றி பெறும்போது எப்படி இருக்கும்?"

- சீனிவாசன்.கே, ஈரோடு

"எப்படியிருக்கும். காலரைத் தூக்கிவிட்டுக்க தோணும். நாம எங்கயும் காப்பியடிக்கல. நம்மளோட கான்செப்ட் காலம் கடந்து நிற்பதற்கு காரணமா இருக்குன்றது மகிழ்ச்சியான விஷயம். தொட்டில் குழந்தை திட்டம் 'புதிய பாதை'க்கு அப்புறம் தொடங்கப்பட்டது. அப்ப குடும்பக் கட்டுப்பாடு அமைப்புல இருந்து ஒரு பெரிய ஷீல்டு கொடுத்தாங்க. 'நிரோத் உபயோகிங்க, நிரோத் உபயோகிங்கன்னு எதுக்கு ரேடியோ, டிவிலலாம் சொல்றான். பலூன் ஊதி பறக்க உடுறதுக்கா. என்ன மாதிரி அநாதைகள் உருவாகாம இருக்கிறதுக்கு'ன்னு சொன்ன அந்த வசனத்துக்குத்தான் ஷீல்டு கிடைச்சது. நாங்க அத்தனைக் கோடி கொடுத்துப் பண்ற விளம்பரத்தை மீறின விளம்பரம் உங்களால் கிடைச்சிருக்குன்னு சொன்னாங்க. அப்படி நிறைய முயற்சிகள் பண்றேன். இன்னும் முயற்சிகள் பண்ணவும் ஆர்வமா இருக்கேன்."

``சிம்பு ஒரு சுயம்பு, மாஸ்டர் ஆஃப் ஆல் ஆர்ட்ஸ், லைவ் ஒயர்... ஆனா, அவரோட?" - பார்த்திபன் தொடர் - 10

"பார்த்திபன் என்றால் ஒரு புதுமை இருக்கும் என்கிற ஆர்வம் போய் இப்போது 'அய்யய்யோ வித்தியாசம் வித்தியாசம் என்று கொடுமை செய்கிறார்' என்று ஒரு அயற்சி ஏற்படுகிறது. உதாரணம். 'ஏன் இப்படி வெண்பா வெண்பா வா பேசுறிங்க?' என்பதை ரசிக்க முடியவில்லை. மாறாக எப்படியாச்சும் நான் வித்தியாசமானவன் என நிரூபிக்க ஏன் துடிக்கிறார் என்று ஒரு எரிச்சல் வருகிறது. கவனித்தீர்களா?"

- N J Barani Kumaran, Dharmapuri

Parthiban, Jyothika
Parthiban, Jyothika

''கவனித்தேன், மிஸ்டர் பரணி குமரன். தர்மபுரியலயிருந்து ஒரு அதர்மம் புரியற மாதிரி ஒரு கேள்வி கேட்டிருக்கீங்க. நான் வித்தியாசம் படைக்கணும்னு நினைக்கிறது 'ஒத்த செருப்பு' மாதிரியான யாரும் எடுக்காத முயற்சிகளை எடுக்குறதுதான். 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'னு ஒரு படம் கதையே இல்லாத ஒரு முயற்சி. அடுத்து நான் பண்ணப்போறதும் அந்த மாதிரியான ஒரு முயற்சிதான். நான் வித்தியாசம்னு நினைக்கிறது இந்த மாதிரி படங்களைத்தான். நான் நடிக்கப்போற படங்கள்ல, அந்த நாள்ல, அந்த ஸ்கிரிப்ட்ல, அந்த சீன்ல எனக்குன்னு எதுவும் இன்ட்ரஸ்ட்டிங்கா இல்லைன்னா இந்த மாதிரி 'வெண்பா... வெண்பா' வசனங்களை சேர்த்துடறேன். நானும் படம் பார்க்கும்போது இது மொக்கையா இருக்குன்னுதான் யோசிச்சேன். அந்தப் படத்துலயே வேறவேற டயலாக்ஸ் சொல்லியிருக்கேன். அது எடிட்டிங்ல போயிருச்சு. ஆனா, இந்த டயலாக் எடிட்டிங்ல போகல.

அப்படின்னா, அந்த டைரக்டர் அதை ரசிச்சிருக்கார். அவர் ரசிச்சதுனாலதான் அந்த டயலாக் படத்துல இருக்கு. இந்த மாதிரி ஒவ்வொரு படத்துலயும் 10, 20 மொக்கையான விஷயத்தையும் போடுவோம், நல்ல விஷயத்தையும் போடுவோம். 'சார் , ரம்பா சார்' டயலாக்லாம் அப்ப மொக்கைன்னு சொல்லப்பட்டுச்சு. அதுவே பார்த்தீங்கன்னா அப்புறம் சூப்பர்னு சொன்னாங்க.. இதெல்லாம் வித்தியாசம் பண்ணியே ஆகணும், நீங்க கைதட்டணும்னு பண்றதில்ல. அரிசில சில நேரம் கல்லும் இருக்கும். கல்லைத்தான் ஒதுக்கணுமேத் தவிர அரிசையை ஒதுக்கக்கூடாது. வெண்பா விஷயம் உண்மையிலேயே தவிர்த்திருக்கலாம். எனக்கும் அது தோணுச்சு. உங்களுக்கும் அது தோணியிருக்கு. தர்ம்புரியில இருந்து தோணினதால அது தர்மமாத்தான் இருக்கும். இனிமே அந்த மாதிரியான விஷயங்களைத் தவிர்க்க முயற்சி பண்றேன்.''

Dear Parthiban Sir,

Engine Bharathiraja

First Coach Bhagyaraj

Second Coach Parthiban

Third Coach H.Vinoth

How is your journey on this train?

- Padmakumar, Kerala

''பொதுவாவே கேரளா பற்றிப்பேசும்போது படித்த வர்கம், பர்சன்டேஜ் அதிகம்னு சொல்லுவாங்க. அது உங்கக் கேள்வியிலேயே தெரியுது. இது ஒரு பிரமாண்டமான ட்ரெய்னா இருக்கும்போல. ட்ரெய்ன்கூட கிடையாது. ஃப்ளைட் அளவுக்கு விலையா இருக்கும்னு தோணுது. இன்ஜின்ல பாரதிராஜ சார்ல இருந்து ஆரம்பிச்சு, இதுல நீங்க அழகா மிஸ்டர் வினோத்தை வந்து கோத்தது ரொம்ப பிடிச்சிருக்கு. வினோத்தே இப்ப ரொம்ப பெரிய, உயரமான இடத்துல இருக்கிற டைரக்டர். அவர் என்கிட்ட பணி புரிந்தார்ங்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமான ஒரு விஷயம். அந்த மாதிரி ஒரு பயணத்தை நானும் எதிர்பார்க்குறேன். எந்த பிளாட்ஃபார்ம்ல அந்த ட்ரெய்ன் வரும்னு எனக்குத் தெரியல. நான் வேணா ஒரு ரிசர்வேஷன், அட்வான்ஸ் ரிசர்வேஷன்ல ஒரு டிக்கெட் போட்டு வைக்க ரெடியா இருக்கேன்.''

Bharathi Raja, Parthiban, Suseendhiran, Sargunam
Bharathi Raja, Parthiban, Suseendhiran, Sargunam

"சார்... நான் உங்களின் தீவிர ரசிகன். அடுத்து நீங்கள் நடிக்கவிருப்பது 'இரவின் நிழல்' படமா, 'ஒத்த செருப்பு' படத்தின் ஹாலிவுட் வெர்ஷனா? 'பொன்னியின் செல்வன்' படத்தில் தங்களின் கதாபாத்திரம் தெரிந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்க்கும் கோடியில் ஒருவன்.

- பா.சு.மருதாசலம், பாப்பம்பட்டி,கோவை

'' 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரம் பத்திலாம் சொல்ல என்கிட்ட லைசென்ஸ் இல்ல. இன்னும் எனக்கான படப்பிடிப்பே துவங்கல. அந்தப் படத்துல நான் நடிக்கிறேன்றதே எனக்கு சுவாரஸ்யமான விஷயம்தான். அந்த சுவாரஸ்யத்தை உங்களுக்கும் கொடுக்க காத்திட்டிருக்கேன். 'இரவின் நிழல்' க்வாரன்டீன் முடிஞ்சதும் தொடங்கப்படும். அது இல்லாமல் நான் நடிக்கிற படங்கள் நிறைய இருக்கு. அமேசானுக்காக புஷ்கர் - காயத்ரியோட ஒரு வெப்சீரிஸ்ல நடிக்கிறேன். அப்புறம் எழிலோட இயக்கத்துல ஒரு படம். அப்புறம் மிஸ்டர் பா.இரஞ்சித் தயாரிப்புல ஒரு படம். இந்த மாதிரி நிறையப்படங்கள்ல நான் நடிக்கிறேன். 'ஒத்த செருப்பு' இந்தியில பண்றதுக்கான பேச்சுவார்த்தையும், ஹாலிவுட்ல பண்றதுக்கான பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்துல நடந்திட்டிருக்கு. எது முதல்ல தொடங்கும்னு எனக்குத் தெரியல. இதெல்லாம் மீறி இன்னொரு இன்ட்ரஸ்ட்டிங் ப்ராஜெக்ட்கூட இடியுடன், மழையுடன் வரலாம்.''

''திரு. கமல்ஹாசன் உடனான நட்பை சிலாகித்து பகிரும் நீங்கள் ஏன் திரு. ரஜினிகாந்த் உடனான நட்பை பகிருவதில்லை. அவரைப் பார்த்து நீங்கள் வியந்த ஒரு விஷயம், மற்றும் அவரை நினைக்கும் போது சட்டென்று உங்களின் நினைவுக்கு வரும் ஒரு விஷயம் பகிர முடியுமா?''

- அ.தசரதன், சின்னசேலம்

Rajinikanth, Parthiban
Rajinikanth, Parthiban

''ஒரு மேடையில 'நான் எந்த சினிமாவில் ஜெயிச்சிருக்கேன்னா, கமல்ஹாசன்ற மாபெரும் கலைஞன் இருக்கிற சினிமால ஜெயிச்சிக்கிறேன்றது எவ்ளவு பெரிய விஷயம்'னு ரஜினி சாரே புருவம் உயர்த்தி சொல்லியிருக்கிறார். ரஜினி சாரே ஆச்சர்யப்படுகிற மகா கலைஞன் கமல் சார். நானும் சினிமாவில் நடிக்கணும்னு வரும்போது கமல்சார்தான் ஆரம்ப பிம்பம். கமல்சாரைப் பற்றி பேசியிருக்கேன். ரஜினி சாரைபற்றி கவிதையே எழுதியிருக்கேன்.

''விலக விலகப் புள்ளிதானே...

நீ மட்டும் எப்படி விஸ்வரூபம்.''

'கிறுக்கல்கள்'ல நான் எழுதின இந்தக் கவிதையை எல்லோரும் காதல் கவிதை, காதலிக்காக எழுதியதுன்னு நினைச்சிக்கிட்டாங்க. ஆமாம், காதலிக்காக எழுதியதுதான். அந்தக் காதலியின் பெயர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இரவு முழுக்க அவர் வீட்ல இருந்துட்டு மறுநாள் காலைல, வெளில பால் பாக்கெட்லாம் போட்டுட்டு இருந்த நேரத்துல அவரோட வண்டில வந்து ஆழ்வார்த்திருநகர்ல இருக்கிற என் வீட்ல டிராப் பண்றார். அவர் வந்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. டிரைவரைவிட்டு என்னை டிராப் பண்ண சொல்லியிருக்கலாம். ஆனா, அவர் வந்தார். அவர் என்னை விட்டுட்டுப் போகும்போது நான் அந்தக் காரைப் பார்த்துட்டே இருக்கேன். கார், கொஞ்சம் கொஞ்சமா ஒரு புள்ளியா மறையுது. அப்பதான் அந்தக் கவிதையை நான் எழுதினேன். ஒரு பொருள், ஒரு கார்னு எல்லாமே புள்ளியா மறைஞ்சிடும். ஆனா, உன்னோட பெருந்தன்மை, அந்த உயரம், சூப்பர் ஸ்டார்ங்கிறது எவ்ளோ பெரிய விஷயம்.

இந்திய திரையுலமே மதிக்கிற ஒரு நடிகர். ஆனால், நடிகராகவே இல்லாமல் சக நடிகரை அல்லது நண்பனை ட்ரீட் பண்றவிதம் பெரிய விஷயம். அவர் மேடைகள்ல பேசுற விதம், தூய்மையான அந்த மனம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கமல், அமிதாப், பாலசந்தர்னு அவர் அவர்களைப்பற்றி பேசுவது பிடிக்கும். இப்பக்கூட 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தோட இயக்குநர்கிட்ட பேசுன விதம், 'எனக்குக்கூட ஒரு கதை யோசிங்களேன்'னு சொன்னது ரொம்பப் பிடிக்கும். 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தை பைக்ல மாறு வேஷத்துல போய் பார்த்துட்டு வந்து, நடுராத்திரில எனக்கு போன் பண்ணி, 'ரொம்பப் பிரமாதமா இருக்கு, இதை ஒரு புக்கா போடுங்க'ன்னு சொன்னார். அவர் சொன்னதுக்காகவே புக் போட்டேன். என் வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களை எல்லாம் அவரோட பகிர்ந்திருக்கேன். முக்கியமா என்னோட திருமண செய்தி. அப்ப கிசுகிசு செய்திகள் வந்தபோது நான் அதையெல்லாம் பொய்ன்னு மறுப்பேன். அந்த கிசுகிசுவை மறைச்சிட்டே இருப்பேன். ஆனா, ரஜினி சார்கிட்டதான் முதன்முதலா போய் சொன்னேன். அப்ப அவர் பண்ண அட்வைஸ், அவர் லைஃபைப் பத்தி அவர் ஷேர் பண்ண விஷயங்கள், அப்ப நாங்க சேர்ந்து நடிக்கலாம்னு அவரே கதை சொன்னதுலாம் பெரிய விஷயம். அப்புறம் 'உள்ளே வெளியே' பார்த்துட்டு அவர் பாராட்டுனது 'நோ, நோ, பார்த்திபன்... இந்த ஸ்டைல்லாம் நீங்களும் பயங்கரமா பண்றீங்க. ஆனா, நோ... நீங்க பிஹைண்ட் தி ஸ்கிரீன்தான்'னு சொல்லிட்டு செல்லமா என்னை வேணாம்னு ஒதுக்கினாரு. அப்படின்னா அவர் ரொம்ப ரசிச்சாருன்னு அர்த்தம்.

இப்பக்கூட என்னோட பொண்ணு கீர்த்தனா திருமணத்துக்காக இன்விட்டேஷன் கொடுக்கப்போனப்போ, பணம் எடுக்கப்போனார். என்ன சார், பணம்லாம் வேணாம். நான் அதுக்கெல்லாம் தேவையான அளவுக்குப் பண்ணியிருக்கேன். குழந்தைகளைப் படிக்க வைக்கணும், அவங்களுக்கு என்ன தேவையோ அதை பண்ணணும், மினிமமா ஒரு வசதிக்குள்ள அவங்களை வெச்சிருக்கணும்னு ஒரு ஏற்பாட்டை பண்ணி வெச்சிருக்கேன்னு சொல்லி அவர்கிட்ட மறுத்தேன். ஆனா, அவர் இல்லைல்ல நான் எடுத்துட்டு வர்றேன்னு சொன்னார். என்னை மாதிரி கலைஞர்கள் ரிஸ்க் எடுத்து எடுத்து கஷ்டத்துக்குள்ளாகி இருக்கறவங்களைப் பத்தி அவருக்கு நல்லாவே தெரியும். அவருக்கு என்ன தெரியாதோ அதை தெரியாதுன்னே சொல்லுவார். சீக்கிரத்துல அவரை ஒரு சிறப்பான இடத்துல நாம பார்ப்போம்.''

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

குண்டக்க மண்டக்க கேள்வி டு சீரியஸ் சினிமா டவுட்ஸ்... பார்த்திபன் ரெடி, நீங்க ரெடியா? #AskParthiban

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு