Published:Updated:

``சிம்பு ஒரு சுயம்பு, மாஸ்டர் ஆஃப் ஆல் ஆர்ட்ஸ், லைவ் ஒயர்... ஆனா, அவரோட?" - பார்த்திபன் தொடர் - 10

பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 10.

``சிம்பு ஒரு சுயம்பு, மாஸ்டர் ஆஃப் ஆல் ஆர்ட்ஸ், லைவ் ஒயர்... ஆனா, அவரோட?" - பார்த்திபன் தொடர் - 10

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 10.

Published:Updated:
பார்த்திபன்

''சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கும். தாங்கள் ஒரு தமிழ் இதழில் கொடுத்த பேட்டியில், தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற எண்ணத்தில் இருந்தபோது மெரினாவில் சுண்டல் வாங்கிய பேப்பரில் இருந்த யாரோ எழுதியிருந்த "இறந்துதான் என்ன சாதிக்கப் போகிறோம். இருந்துதான் சாதிப்போமே" என்கிற வரிகளைப் பார்த்து தாங்கள் தற்கொலை முயற்சியை விட்டுவிட்டீர்கள் என்று எழுதி இருந்தீர்கள். அந்த நாள்களில் நானும் அத்தகையோர் முடிவிலிருந்து உங்கள் வார்த்தைகளைப் படித்த பின்பு என் முடிவை மாற்றிக்கொண்டேன். அந்த நேரத்தில் என் முடிவு எப்படி இருந்திருக்குமோ, ஆனால் உங்களுடைய எழுத்துக்கள் என்னை மாற்றிவிட்டன. அதற்குப் பின்பும் நீங்கள் அப்படி யோசித்தது உண்டா?''

- வி.முனிரத்னம், பெங்களூர்

''நம்மளை தற்கொலை பண்ணிக்கத் தூண்டுறது இந்தச் சமூகம்தான். அப்போதிலிருந்தே இப்போது வரைக்கும் அப்படித்தான் இருக்கு. ஒரு கட்டத்துல சிலருக்கு 'சரி செத்துப் போயிடலாம்'னு தோணும். எனக்கும் அப்படித்தான் தோணுச்சு. பீச்சுக்குப் போனேன். அந்தக் காகிதம் கிடைச்சது. 'வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம், செத்துத்தொலையலாமே. செத்துதான் என்ன செய்யப்போகிறோம், வாழ்ந்தே தொலையலாமே'ன்னு படிச்சேன், என் மனசு மாறிடுச்சுன்னு சொன்னேன். ஆனா, பின்னாடி ஒரு தொடர்ல எழுதியிருந்தேன். அது வேற யாரோ எழுதினதில்ல, நானே எழுதினதுதான். அப்படி ஒரு பேப்பரை நானே உருவாக்கிக்கிட்டு எழுதினேன். இப்படிச் சொன்னதுக்கு அப்புறம் இது பார்த்திபன் சொன்னதில்லை, வேறு யாரோ இதையே எழுதியிருக்காங்கன்னு சொன்னாங்க.

அதேபோல 'கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்' படத்துல பிரியாணி ஒசத்தியா, பழைய சோறு ஒசத்தியான்னு ஒரு டயலாக் வரும். என் வீட்ல பிரியாணிக்கும் பழைய சோறுக்கும் ஒரு பெரிய போரே நடக்கும். அதை மனசுல வெச்சு இதை எழுதியிருந்தேன். ஆனா, இதே கருத்தை சோஷியல் மீடியால யாரோ எழுதியிருக்கிறதா சொன்னாங்க. என்ன விஷயம்னா ஒரே மாதிரியான கருத்துகளைப் பலரும் யோசிக்கிறோம், எழுதுறோம், பேசுறோம். எல்லோரும் ரீப்பிட் பண்ணிட்டிருக்கோம்.

ஒருத்தர் செத்துப்போனா மூணு நாள் அழுவாங்க. அதுக்குப் பிறகு ரொம்ப கஷ்டம். அழுகையே வராது. அதில் இருந்துதான் நான் அப்படியொரு கவிதையை எழுதினேன்.

சோஷியல் மீடியா வந்த பிறகு, வாழ்க்கை மேல பெரிய வெறுப்பு ஏற்படுற வாய்ப்பு உருவாகிடுச்சு. இது தனிப்பட்ட வாழ்க்கை, இது இரண்டு பேருக்கு உள்ளானதுன்னு சில விஷயங்கள் இருக்கு. அவங்களுக்குள் பிரச்னைகள் வரும்போது, அதை சரிபண்ண, நியாயம் சொல்லத்தான் நாம் காவல்துறை, நீதிமன்றம் போன்ற அமைப்புகளை உருவாக்கி வெச்சிருக்கோம். ஆனா, நாம ரெண்டு பேருக்குள்ள நடக்குற விஷயங்களைப் பஞ்சாயத்துப் பண்ணி, அதைப் பெருசாக்குறதுல, எது சரி, எது தப்புன்னு கண்டுபிடிக்கவே தாமதம் ஆகிடுது. ஒரு விஷயம் நடக்குதுன்னா நாமளே இரண்டு நாளுக்கு முன்னாடி எடுத்த முடிவை மூணாவது நாள் மாத்திக்கிறோம். அதேமாதிரிதான் ரெண்டு பேருக்குள்ள நடக்குற விஷயம், அவங்களே அதை சரி பண்ணிக்கலாம். சரியாக்கிடலாம். முடிவுகளை மாத்திக்க முற்படலாம். ஆனா, நாம அவங்களை நெருக்கடிக்குள்ள தள்ளிடுறோம்.

குறிப்பா, பெண்களைக் குறிவெச்சு நடக்கறது சமூக வலைதளங்கள்ல நிறைய விஷயங்கள் நடக்குது. பெண்ணோ, ஆணோ அவங்கத் தேர்ந்தெடுக்குற வாழ்க்கையை சரிபண்ணிக்க கால அவகாசம் கொடுக்கணும். நிறைய பிளாக்மெயிலிங் நடக்குது. உன்னைப் பத்தி இந்த விஷயத்தை லீக் பண்ணிடுவேன்னு மிரட்டுறாங்க. அதுக்கெல்லாம் தக்க தண்டனை இருக்கு, அதெல்லாம் புரியாம, இல்லை தெரிஞ்சும் ஒளிஞ்சிக்கிட்டு பண்ணிடுறாங்க. சிலருக்கு இது பணம் சம்பாதிக்கிறதுக்கான ஏற்பாடு. ஹேக்கர்ஸ் அதிகமாகிட்டதா சொல்றாங்க. சோஷியல் மீடியால இந்த மாதிரியான விஷயங்கள் நிறைய இருக்கு. இந்த மாதிரியான செய்திகளை நாம இக்னோர் பண்ணிடணும். அது மாதிரியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ரெண்டு வாரம் போச்சுன்னா அது தானாவே மறந்துபோயிடும். ஒரு பெண்ணையோ, ஆணையோ தவறான முடிவுக்குப் போகத் தூண்டுற அளவுக்கு சோஷியல் மீடியாவில் சில விஷயங்கள் நடக்குது. சோஷியல் மீடியா கறும் பூதமா இருக்கு. இந்த மாதிரியான விஷயங்களை இக்னோர் பண்ணணும்கிறதுதான் என்னோட அன்பான வேண்டுகோள்.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''சார், நான் சிம்புவின் அதிதீவிர ரசிகன். சிம்பு சிறு வயதில் இருந்தபோது நீங்கள் அவருக்கு விருது கொடுப்பது போன்ற புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன். இப்போதும் வைத்திருக்கிறேன். அப்படி சிறு வயதில் இருந்தே திரை உலகை கலக்கி வந்த சிம்பு, இப்போது பல சர்ச்சைகளில் சிக்குகிறார். தலைவர் ஒரு நல்ல come back வரணும். அவர வச்சு படம் எடுப்பீங்களா? அவருக்கு பின்னால் வந்த பலரும் இப்போ வேற லெவல் போயிட்டிருக்காங்க. சிம்புவைப் பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க? அவரைப்பத்தி பாசிட்டிவான, மறக்க முடியாத விஷயத்தை சொல்ல முடியுமா சார்?''

- கவியரசன், மதுரை

சிம்பு
சிம்பு

''மாஸ்டர் ஆஃப் ஆல் ஆர்ட்ஸுன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரிதான் சிம்பு. சின்ன குழந்தையில இருந்தே அவருக்குத் தெரியாத கலைகள் கிடையாது. குறிப்பா சினிமா. சினிமாவை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு அவருக்கு நல்லாவே தெரியும். எனக்கெல்லாம் ஒரு விஷயத்தை கத்துக்குறதுக்கே காலதாமதம் ஆச்சு. ஆனா, அவர் டான்ஸ், டைரக்‌ஷன்னு எல்லாத்தையும் அவ்ளோ தெளிவா பண்ணார். நான் 'உள்ளே வெளியே' பண்ணும்போது என்ன மனநிலையில் இருந்தேனோ அதேபோலத்தான் 'மன்மதன்' பண்ணும்போதெல்லாம் அவர் மனநிலையும் இருந்தது. இந்தப் படங்கள் பற்றியெல்லாம் சிலர் விமர்சித்தாலும், பெண்களுக்கு அவரை ரொம்பவே பிடிச்சது. பெண் ரசிகைகள் அவருக்கு ரொம்பவும் அதிகம். லைவ் ஒயர் மாதிரி இருப்பார்.

அப்புறம் இதுதான் சரி, இது தப்புனு எதுவுமே கிடையாது. வாழ்க்கையை இப்படி எடுத்துட்டுப்போனா கரெக்ட்டு, இவங்களெல்லாம்தான் கரெக்ட்டுனு எதுவும் கிடையாது. இது ஒரு விதமான அனுபவம். அவர் ஏகப்பட்ட வெற்றிப் படங்கள் கொடுத்திருக்கிறார். ஒண்ணு ரெண்டு படங்கள் தோல்வியாகியிருக்கலாம். அதுக்காக கம்பேக்னு எல்லாம் ஒண்ணும் கிடையாது. அவருக்கு, அவர் படங்களுக்குன்னு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள்னு எல்லோருக்குமே அது தெரியும். அவர் என் படத்துல நடிப்பாரான்றதை அவர்தான் டிசைட் பண்ணணும். நான் கிடையாது. நீங்க சொல்ற அந்த போட்டோ எனக்கும் ஞாபகம் இருக்கு. அந்தப் படம் பார்க்கும்போது 'இந்தக் குட்டிப்பையனை எனக்குத் தெரியும்ல'னு ரொம்ப சந்தோஷமா இருக்கும். என் பையனுக்கு விருது கொடுக்குற மாதிரியான மகிழ்ச்சிதான். ஏன்னா, டி.ஆர் சார் எனக்கு நெருங்கிய நண்பர். அப்படியே ஆப்போசிட் ஆஃப் சிம்பு. அவரோட டேலன்ட்டை எக்ஸ்ஸிபிட் பண்ற ஸ்டைல் வேற. எல்லோரும் வேற வேற மாதிரிதான் இருப்பாங்க. எல்லோரும் ஒரே மாதிரியான ஒழுக்க நெறிகள், கட்டுப்பாடுகளோடதான் இருக்கணும்னு அவசியம் இல்ல.

சிம்பு சுருக்கமா சொல்லணும்னா சுயம்பு. தன்னைத்தானே செதுக்கிக்கக்கூடிய, வளர்த்துக்கொள்ளக்கூடிய சக்தி சுயம்பு. அதனால கம்பேக்லாம் ஒண்ணுமே இல்லை. விரைவில் அதிரடியா, அடுத்தடுத்து நிறைய படங்கள் நீங்க ரசிக்கிற மாதிரி அவர் கொடுப்பார். அதை நானும் பார்ப்பேன்.''

''நீங்கள் மாணவனாக இருக்கும்போது பாக்யராஜ் சார் உங்களிடம் என்ன தகுதி எதிர்பார்த்தார்? உங்களிடம் வரும் மாணவனிடம் நீங்கள் என்ன தகுதி எதிர்பார்க்கிறீர்கள்?

- பாலசுப்ரமணி, இலுப்பூர்

நடிகர், இயக்குநர் பாக்யராஜ்
நடிகர், இயக்குநர் பாக்யராஜ்

''பாக்யராஜ் சார் என்கிட்ட எதுவுமே எதிர்பார்க்கல. ஒரு குரு சிஷ்யன்கிட்ட எதுவும் எதிர்பார்க்க முடியாது. நாமதான் அவரைத் தேடிப்போறோம். அவர்கிட்ட இருந்து ஏதாவது விஷயம் கத்துக்க முடியுமா, அந்தப் புகழ் வெளிச்சத்துல நாமளும் கொஞ்சம் இளைப்பாற முடியுமான்னு இந்த மாதிரியான எதிர்பார்ப்புகள்லாம் சிஷ்யனுக்குத்தான் இருக்கும். பாக்யராஜ் சாருக்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. நான் அவர்கிட்ட போகும்போது எனக்கான கனவுகள், கற்பனைகள் எல்லாத்தையும் சாதிக்கிற ஒரே இடம் இந்த இடம்தான்ற நம்பிக்கையோட அவர்கிட்டப்போனேன். ரொம்ப சின்சியரா இருந்தேன். தெரியாததை தெரியாதுன்னும், தெரிஞ்சதை தெரிஞ்சதுன்னும் சொல்லுவேன். முழுநேரமும் இன்வால்வ்டா இருந்தேன். நிறைய படிச்சதில்லை, படங்கள் பார்த்ததில்லை, உலக சினிமாக்கள் எல்லாம் பார்த்ததேயில்லைன்றதால என்னோட அறிவே ரொம்பக்குறைவு. அதனால ரொம்ப சின்சியரா குருகுலம் மாதிரி, அவர் முகத்தையே பார்த்துக்கிட்டிருப்பேன். அவர் புருவத்தை தூக்கிப்பார்த்து வெரிகுட்னு சொன்னாலும் அந்த ரியாக்‌ஷன் எனக்குப் போதுமானதா இருந்தது.

அவர்கிட்டயிருந்து பிரிஞ்சு வரும்போதுகூட, என் இடத்துக்கு இன்னொரு ஆள் வந்துடுவாரேன்னு அந்த முகம் தெரியாத ஆள்மேலகூட ரொம்ப பொறாமையா இருந்தேன். நான் இயக்குநர் ஆன பிறகு நாம இருந்த மாதிரியே நம்மகூட நாலு பேர் இருந்தா எவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கும்னு தோணும். நாங்க எல்லாம் கதை பேசும்போது ஒரு படத்தோட கதையைப் பேசமாட்டோம். 9 படங்களோட கதையைப் பேசுவோம். டைரக்டர் கிட்ட இருந்த பழக்கம். அதெல்லாம் வெளில போயிடக் கூடாது. ஏன்னா, எப்பவேணாலும் அந்தக் கதைகளைப் படமா பண்ணலாம். அசிஸ்டென்ட்ஸ்கிட்ட நிறைய பர்சனல் விஷயங்கள் பேசுவோம். எவ்ளோ நம்பிக்கை இருந்தா அசிஸ்டென்ட்ஸ்கிட்ட அதெல்லாம் பேசுவோம். அசிஸ்ட்டென்ட்ஸ் பணம், காசுக்கு ஆசைப்படுறவங்களா, பிளாக்மெய்ல் பண்றவங்களாவே இருக்க மாட்டாங்க.

உதாரணத்துக்கு ஒரு விஷயம். நாங்க ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்ட காலம் அது. எம்.எம்.டி.ஏ காலனில வீடு. மழை பெஞ்சா வீடு ஒழுகும். அந்த நேரத்துல எங்க டைரக்டர் என்கிட்ட 1 லட்சம் ரூபாய் பணம் கேஷா கொடுத்து, 'நீ வீட்ல வெச்சுக்கோ... நான் கேட்கும்போது குடு'ன்னு சொல்றார். வீட்ல மழை ஒழுகாத இடத்துல அதைப் பாதுகாப்பா வெச்சு, சேஃப்ட்டி பண்ணவே ரொம்ப கஷ்டப்பட்டேன். வீட்லயும் ரொம்ப கஷ்டமான நேரம் அது. எங்க அப்பா ஏதாவது வீட்டுச் செலவுக்கு காசு எடுத்துட்டார்ன்னா என்ன பண்ணறதுனுலாம் யோசிச்சிருக்கேன். பெரிய சோதனை. ரொம்ப நாள் பத்திரமா வெச்சிருந்து டைரக்டர் கேட்டப்போ கொண்டு போய் கொடுத்தேன். நான் டைரக்டர்கிட்ட என் கஷ்டத்தைச் சொல்லியிருக்கலாம். வீடு ஒழுகிற நிலைமைல இருக்குன்னு சொல்லியிருக்கலாம். ஒரு 10,000 ரூபாய் கடன் கொடுங்க சார்னு கேட்டிருக்கலாம். இல்லை எங்க அப்பாவுக்கு கேன்சர் சார், மருந்து மாத்திரை வாங்குறதுக்கு வழியில்லைன்னு சொல்லியிருக்கலாம். இது எதையுமே நான் செய்யலை. அவர் என்னை நம்பிக்கொடுத்ததை நான் சரியா பண்ணிடணும்னுதான் கவனமா இருந்தேன்.

எங்க டைரக்டரைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றதெல்லாம் நான் விமர்சனம் பண்றதுக்கான ஆள் அவர் கிடையாது. குரு என்பவர் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டவர்னு புரிஞ்சது. என்கிட்ட அசிஸ்டென்ட்ஸா வந்தவர்களில் சில பேர் மட்டுமே அப்படியிருந்தாங்க. சில பேர் இந்த சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்திக்கிறதுன்னு இருந்தாங்க. சில பிளாக்மெயில்கள்லாம் இருந்தன. திறமையை மட்டுமே நம்பி யார் உழைக்கிறாங்களோ அவங்களுக்கு மிகச்சிறப்பான எதிர்காலம் இருக்கும்."

''பல ஆண்டுகளுக்கு முன் துக்ளக் இதழில் கேள்வி, பதில் பகுதியில் சோ அவர்களிடம் உங்களைக் கலங்கடித்த சம்பவம் எது என்ற கேள்விக்கு 'நடிகர் பார்த்திபன் அவர்கள் செய்த உதவியைக் கேள்விப்பட்டு கலங்கிப்போனேன்' என்று பதில் கூறியிருந்தார். ஆனால், அது என்ன சம்பவம் என்று குறிப்பிடவில்லை. இப்போது கூறுங்களேன் அது என்ன நிகழ்வு என்று?''

- கா.கு.இலக்கியன், செங்குன்றம்

பார்த்திபன்
பார்த்திபன்

"திரு. சோ அவர்கள் என்னுடைய பெருமதிப்புக்குறியவர். சில பேரைப் பார்த்தா பிரமிச்சிப்போயிடுவோம்ல, அந்த மாதிரியானவர் அவர். கலைஞரை, மக்கள் திலகம் எம்ஜிஆரை அவர் நிறைய விமர்சனம் பண்ணியிருக்கார். ஆனா, அவருடைய விமர்சனங்களை அவங்க ரசிப்பாங்க. அந்த விமர்சனத்துல இருக்கிற அந்தப் புத்திசாலித்தனத்தை எல்லோருமே ரசிப்பாங்க. ஒருநாள் அவர்கிட்ட போன் பண்ணிப் பேசினேன். உண்மையில் அவருடைய கடைசி காலங்களில் அடிக்கடி அவர்கிட்டப் பேசினேன். அப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.

என்னுடைய 'சோத்துக்கட்சி' படத்தோட தொடக்கவிழாவுக்கு கூப்பிட்டு, அவரும் வந்து தொடங்கிவெச்சார். அவர்கிட்ட ஒருமுறை போன்ல பேசும்போது 'ஒரு மனுஷன் ஹார்ட் அட்டாக்லகூட சாகலாம். ஆனா சிரிச்சி மட்டும் சாகக்கூடாது சார்'னு அவர்கிட்ட சொன்னேன். என்ன விஷயம்னு கேட்டார். அன்னைக்கு துக்ளக்ல வந்த கேள்வி பதில் பற்றி சொன்னேன். 'தமிழகத்தை அமைதிப்பூங்கா என்கிறாரே கலைஞர். சரியா?'ன்னு ஒரு கேள்வி. 'மிகவும் சரியாத்தான் சொல்லியிருக்கார். நாம இல்லாத ஒண்ணைத்தான் பூங்காவுக்குப் பேர் வெப்போம். காந்தி பூங்கா, நேரு பூங்கான்னு பேர் வெப்போம். அங்கே காந்தியும் இருக்க மாட்டார், நேருவும் இருக்க மாட்டார். அந்த மாதிரிதான் இல்லாத ஒன்றை அமைதிப்பூங்கானு கலைஞர் சொல்றார்'னு எழுதியிருந்ததைச் சொன்னேன்.

நீங்க கேட்ட அந்த விஷயம் என்னென்னா, சுந்தரம் சார்தான் என்னுடைய முதல் படத்தோட தயாரிப்பாளர். நான் கடவுளா மதிக்கிற ஒருவர். யார்னே தெரியாத பார்த்திபனுக்காக 38 லட்சம் ரூபாய் செலவு பண்ணி நம்பிக்கையோட படம் எடுத்தார். அந்தப் படம்தான் 30 வருஷமா நான் புவா சாப்பிடக் காரணம். அந்த நன்றிக்காக வேட்டி, சட்டை, செருப்பு, பர்ஸ்னு எல்லாத்தையும் வாங்கிட்டு ஜனவரி 1-ம் தேதி ஒவ்வொரு வருஷமும் குடும்பத்தோட போய் பார்ப்பேன். ஒவ்வொரு வருஷமும் தவறாமல் திருப்பதி கோயிலுக்குப் போற மாதிரி பண்ணுவேன். குடும்பத்தோட அவர் கால்ல விழுந்து வணங்கிட்டு வருவேன். இந்த விஷயத்தைத்தான் சுந்தரம் சார், சோ சார்கிட்ட சொல்ல, அவர் அதை எழுதியிருந்தார். சில விஷயங்களால் பாக்கெட் நிறையும். ஆனா, மனசு நிரம்புறது ரொம்ப பெரிய விஷயம். அப்போ எனக்கு மனசு நிறைஞ்சது. இப்போ நீங்க கேட்கிறப்போதும் ரொம்ப நிறைவா இருக்கு.''

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.