Published:Updated:

2டி சூர்யா; நானும் ரவுடிதான்; பணத்துக்காகப் படங்கள்!? - பார்த்திபனின் ஆண்line பெண்line Thought காம்

ஆண்line பெண்line Thought காம்
ஆண்line பெண்line Thought காம்

விகடனுக்காக இயக்குநர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் எழுதும் புதிய கேள்வி பதில் தொடர்!

''ஹாய் பார்த்து, ஆண் line பெண்line Thought com என்றால் என்ன?'' கே.ஆர்.சீனிவாசன், சேலம்.

''ஹாய் பார்த்து... நல்லா இருக்கு. சில பேர் என்னை பார்த்தின்னு கூப்பிடுவாங்க. பார்த்துன்னு ரொம்ப ரேராதான் கூப்பிடுவாங்க. செல்லப் பேர் அது. விகடன்ல இருந்து கேள்வி பதில் பகுதி எழுதுங்கன்னு கேட்டு, அவங்களே சில தலைப்பு சாய்ஸஸ் கொடுத்தாங்க. ஆனா, எனக்கு ஆண்Line பெண்Line Thought காம் சரியா இருக்கும்னு தோணுச்சு. பெரிய அர்த்தம்லாம் கிடையாது. டாட் காமை தாட் காம்னு மாத்திட்டேன். ஆணின் பார்வையிலான கேள்விகளும் பெண்ணின் பார்வையிலான கேள்விகளும் எப்போதும் நேர் எதிராகவே இருக்கும். பெண்களின் பார்வை கொஞ்சம் ஸ்டாராங்காவே இருக்கும். அதனால் இரண்டு பேரின் பாயின்ட் ஆஃப் வியூவில் இருந்து வரும் கேள்விகளுக்கும் பதில் சொல்லலாம் என்பதால்தான் ஆன்லைன் பெண்லைன் தாட் காம்.''

Parthiban
Parthiban

''எதிலும் வித்தியாசம் காட்டுவது என்பதே வழக்கமானதாக மாறி, அயர்ச்சி உண்டாக்க வாய்ப்புள்ளது அல்லவா... அந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?'' - வினோத், கோயம்புத்தூர்.

''விகடன் விரும்பிகளுக்கு எனது வணக்கம். இப்பக்கூட விகடன் வாசகர்களுக்கு, நேயர்களுக்குன்னு சொல்லாம விகடன் விரும்பிகள்னுதான் சொன்னேன். நான் அங்கவே வித்தியாசப்படணும்னு நினைக்கிறேன். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல கிட்டத்தட்ட அரை மணி நேரமா யோசிக்கிறேன். எதுவும் புதுசா தோணலை. ஆனாலும் நான் யோசிக்கிறேங்கிறது மட்டும் உண்மை. அதாவது, மெனக்கெடுறதுன்னு சொல்லுவாங்க. மெனக்கெடல்ங்கிறது பெரிய கடல். தேடத்தேட ஏதோ ஒண்ணு கிடைச்சிட்டே இருக்கு. இத்தனை வருஷமா இதைப் பண்றோம், இவ்ளோ வருஷம் சினிமால இருக்கோம்கிறதையே நான் மறந்துடுறேன். இப்பதான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்றேன், இப்பதான் முதன்முதலா நான் ஒரு படம் பண்ணப்போறேன்னுதான் நான் நினைச்சிக்குறேன். அந்த முதல்முயற்சி என்னவா வேணா இருக்கலாம். படமோ, விகடன் கேள்வி பதிலோ அதுக்கு என்னை முழுமையா ஒப்படைக்கணும்னு விரும்புறேன். சமீபத்துல அமெரிக்காவில் இருக்கிற கால்டுவெல்ங்கிற என்னோட நண்பரின் மகளுக்குக் கல்யாணம். லாக்டெளன்னால நேர்ல கலந்துக்க முடியல. வீடியோ மூலமாவே வாழ்த்துச் சொல்லுங்கன்னு சொன்னாங்க. அதுக்கும் அரைமணி நேரம் யோசிச்சு மணமக்களுக்கு வாழ்த்துகள்னு சொல்லாம, 'வள்ளுவன் வாசுகிபோல வாழணும்'னு சொல்றமாதிரி இந்த மணமக்களே இனி நடக்கப்போற திருமணங்களுக்கு முன் உதாரணமா, சிறப்பான தம்பதிகளா உங்கள் பேரை எல்லோரும் சொல்லணும்னு சொல்லிட்டு, கைல இருக்கிற அட்சதையை எடுத்து தூவுறேன். அதுல கொஞ்சம் வொர்க் பண்றேன். அந்த மஞ்சள் மெதுவா போய் அவங்க மேல விழுற மாதிரி இருக்கும். அதைப் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அந்த மகிழ்ச்சியை விலைக்கு வாங்குறது ரொம்ப கஷ்டம். எல்லாத்தையும் ரூபா, பைசான்னு கணக்குப்போட முடியாது. இதை நான் சவலா பார்க்கலை... சந்தோஷமாகப் பார்க்குறேன்.''

''வணக்கம் பார்த்திபன். குடைக்குள் மழை பெய்யும்போது எப்படி நனையாமல் இருப்பது?''

செ.ரேவதி, சேலம்.

''ஏன் நனையாமல் இருக்க வேண்டும். அவள் உங்களை நினைக்கும்போதெல்லாம் உங்கள் குடைக்குள் மழை பெய்ய வேண்டும். நீங்கள் அவள் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் அவள் குடைக்குள் மழை பெய்ய வேண்டும். ஒரே குடைக்குள் நீங்கள் இருவரும் இருக்கும்போது மழை பெய்தால் குடை மட்டுமே நனைய வேண்டும். குடை மட்டுமே நனையும். உள்ளே வெப்பம் தகிக்கும். வெட்கம் தடுக்கும். அது சரி காதலில் நீங்கள் இருக்கும்போது காலுக்கு அடியில் பூமி இருந்தால் என்ன, தலைக்குமேலே குடை இருந்தால் என்ன, எல்லாமே தலைகீழாகத்தானே தெரியும்.''

''உங்கள் சுயசரிதையின் பெயரும் முதல் பத்தியும் என்னவாக இருக்கும்?''

சூர்யராஜ், சென்னை.

''இந்தக் கேள்விக்கு என்னுடைய பாராட்டு. சுயசரிதம் எழுதுற அளவுக்கு அவ்ளோ ஸ்பெஷலான்னு கேட்டா, எனக்கு ஸ்பெஷல்தான். சில வருஷங்களுக்கு முன்னாடி, அகலமா, நீளமா பெரிய புத்தகம் ரெடி பண்ணி, எப்பலாம் தோணுதோ அப்பலாம் எழுதி என் கையெழுத்துல வெளியிடலாம்னு நினைச்சேன். அதுல எனக்குத் தெரிஞ்ச சந்தோஷப் பக்கங்களைவிட அருவருப்பான, அவமானமான இதுவரைக்கும் வெளியே சொல்லாத முடியாத விஷயங்களாதான் இருக்கும். அப்படி இருந்தாலும் இதெல்லாமே வாழ்க்கையில சாதிக்கிறதுக்கு காரணங்களா இருந்திருக்கு. தலைப்பு இப்போதைக்கு யோசிக்கலை. ஆனா, இந்தக் கேள்வியைக் கேட்டதும் 'என்னைத் தோண்டியபோது'னு வைக்கலாம்னு யோசிக்கிறேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`பார்த்திபனும் ரவுடிதான்' எனச் சொல்வதுபோன்ற ஆக்‌ஷன் சம்பவம் இருந்தால் ஷேர் பண்ணுங்களேன்?

விமலா, ஆரப்பாளையம்

பார்த்திபன்
பார்த்திபன்

''சில சம்பவங்கள் இருக்கு. ஆனா, முடிஞ்சவரைக்கும் தன்மையா இருப்பேன். சண்டைக்குப் போகமாட்டேன். வன்முறையில உடன்பாடில்லை. ஆனா, என்னுடைய படங்கள் திரையரங்குல வரும்போது அதைத் திருட்டு டிவிடி போட்டு விப்பாங்க. அதெல்லாம் நம்மளைப்போட்டு உயிரோட சாவடிக்கும். 'நானும் ரவுடிதான்' படத்துல உயிரோடக் கொண்டு போய் பொதைப்பேன். அந்தமாதிரி, ஒரு இயக்குநரையோ, தயாரிப்பாளரையோ இந்த வியாபாரத்தால அப்படியே குழிதோண்டி புதைச்சிடுவாங்க. இதை எங்கே போய் கம்ப்ளெய்ன்ட் பண்ணாலும் பிரயோஜனம் இல்லாம இருந்தது. ஒருதடவை நான் ஒரு கேமராவை எடுத்துக்கிட்டு, என்னோட இணை இயக்குநர்களோட பர்மா பஜார்க்கு போயிட்டேன். எகிறிக்குதிச்செல்லாம் போய் என் பட டிவிடிகளை கையும் களவுமா பிடிச்சேன். அங்க இருக்கவங்க தடுமாறுனாங்க. அப்புறம் சின்னதா ஒரு ரவுடியிஸம் ஃபார்ம் ஆச்சு. 10 ரூபாய்க்கு போட்டு என் படத்தை வித்துட்டு இருப்பாங்க. அதுல அவங்க மூலதனம் எதுவுமே கிடையாது. என்னுடைய உழைப்பு. அழுவுறதா தெரியல. கோபப்படுறதான்னு தெரியல. சட்டையெல்லாம் பிடிச்சிக் கேக்குறேன். இதுக்கு அப்புறம் அண்ணாநகர்ல ஒரு கடைவீதியிருக்கு. நான் அங்கப்போறதுக்குள்ள என்னை எதிர்க்க அங்க ஒரு ரவுடியிஸம் ஃபார்ம் ஆகுது. அப்படியும் தைரியாமப் போறேன். 'என் பொருளை எடுத்து விக்க உங்களுக்கு என்ன உரிமையிருக்கு... என் கோபம்தானே நியாயமானது'ன்னு சண்டை போடுறேன். அது கொஞ்சம் ரவுடித்தனாமத்தான் இருந்தது. ஆனா, என்னுடைய பொருளை என்னுடைய படைப்பை பாதுகாக்குறதுக்காக நான் அப்படிப் பண்ணேன்.''

''Dear parthiban sir,

I always feel that your masterpiece movie is HOUSEFULL movie... I was disappointed that it was not released at right time... Now the people's taste as changed a lot... Why can't you remake that movie now according to current generation..?

ஷாகுல், சென்னை.

Parthiban in Housefull
Parthiban in Housefull

''நான் எடுத்ததிலேயே இங்கிலீஷ் படம் மாதிரியான படம் 'ஹவுஸ்ஃபுல்'. அதனாலதான் டைட்டில்கூட ஆங்கிலத்துலயே வெச்சிருப்பேன். எனக்குத் தெரிஞ்சு அந்தப் படத்தை இந்த ஜெனரேஷனுக்காக மாத்தி எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லைன்னு நினைக்கிறேன். எனக்கு இந்தப் படத்தை அமிதாப் பச்சனை வெச்சு இந்தில பண்ணணும்னு ஆசை. அவரோட கரியர்ல, ஒரு தியேட்டர் அதிபராவும் தியேட்டருக்காகப் போராடுற மனிதராகவும், ஒரு ஹியுமேனிட்டேரியனாகவும் அவருக்கு ஒரு சிறந்த பாத்திரம் அது. போனவருஷம்கூட இதுக்காக ட்ரை பண்ணேன். இப்பகூட ட்ரை பண்றேன். இந்தில ரமேஷ்னு ஒரு தயாரிப்பாளர் மூலம, 'ஹவுஸ்ஃபுல்' டிவிடியை அவர்கிட்ட கொடுங்க. அவர் படம் பார்க்கட்டும்'னு சொல்லியிருக்கேன். அவர் யெஸ்னு சொன்னா பண்ணலாம்னு நினைச்சிட்டிருக்கேன். உலகம் நிறைய பரந்து விரிஞ்சிருக்கு. எது முதல்ல வரப்போகுதுன்னு தெரியல. இப்பக்கூட ஹாலிவுட்ல இருந்து ஒரு அழைப்பு. 'ஒத்தசெருப்பு' படத்தை அங்க இருக்குற நடிகரை வெச்சுப் பண்ணலாம்னு கேட்டிருக்காங்க. நிறைய வாய்ப்புகள் இருக்கு. வரவேற்புகள் இருக்கு. பார்க்கலாம்.''

''சூர்யாவுக்கு கதை வைத்திருக்கிறீர்களா...

சூர்யாவை வைத்து இயக்குவதற்கு உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?''

வெற்றி, ஐம்பதுமேல் நகரம்.

Parthiban
Parthiban

''நண்பர் சூர்யாவுக்காகக் கதைகள் வைத்திருக்கிறேன். கதைகள் யோசிக்கிறேன். அவருக்குத் திருப்தியாகும்படி ஒரு கதை சொல்லி என்னால் படம் எடுக்க முடியும். அதை 2டியிலும் எடுக்கலாம். 3டியிலும் எடுக்கலாம். புரியும்னு நினைக்கிறேன்.''

''ஒத்த செருப்பு போன்ற தரமான கனவு படைப்புகளை உருவாக்க, கிடைக்கும் பிற வாய்ப்புகளையெல்லாம் ஒப்புக்கொண்டு பிடிக்காத கதாபாத்திரத்திலும் நடித்த(ப்ப)துண்டா?''

வ.செ.வளர்செல்வன், நத்தக்காடையூர்.

ஒத்த செருப்பு
ஒத்த செருப்பு

''பணத்துக்காகத்தான் நடிக்கிறதுன்னு ஒரு பாத்திரத்தை நான் அக்செப்ட் பண்ணிக்கிட்டதே கிடையாது. அப்படிப் பண்ணியிருந்தா வருஷத்துக்கு 10 படமாவது நான் நடிச்சிருக்கணும். ஆனா, நான் நடிக்க ஒத்துக்கிட்டதுக்குப்பிறகு, எனக்கு சில முரண்பாடுகள் ஏற்படும். எனக்கு என்ன கதாபாத்திரம் டைரக்டர் சொன்னாரோ அப்படியில்லாம அது வேற போக்குல போயிட்டிருக்கும். அப்புறம் அந்த இயக்குநருக்கும் எனக்கும் டைரக்டோரியலா அவர் எடுக்குற பாங்கு எனக்கு ஒத்துவராமப் போகும். ஆனா, ஒத்துக்கிட்டப்பிறகு நம்மளால விலகி வர முடியாது. முதல் நாளே 'அட்வான்ஸைத் திருப்பிக்கொடுத்துடறேன். என்னை விட்ருங்க'ன்னு அட்வான்ஸையெல்லாம் திருப்பிக் கொடுத்திருக்கேன். கையெடுத்துக் கும்பிடு போட்டிருக்கேன். ஆனா, அதெல்லாம் முடியாது. சமாதானப்படுத்துவாங்க. அப்புறம் சரி பண்ணிடலாம், டப்பிங்ல சரி பண்ணிடலாம்னு சொல்லுவாங்க. படம் நடக்கும்போது நமக்கு நிறைய கேள்விகள் வரும். அய்யோ இதெல்லாம் தீர்க்கப்படாமல் இருக்கேனு தோணும். என்னுடைய டைரக்‌ஷன் படங்கள் எப்படின்னா, ஷூட்டிங் போயிட்டிருக்கும்போதுகூட யாராவது ஏதாவது கேள்வி கேட்டாங்கன்னா சரி பண்ணிட முடியுமான்னு நினைப்போம். ஆனா, நான் நடிச்ச 60 படங்கள்ல, 20 படங்கள் பூஜையோட அந்த ஸ்கிரிப்ட்டை எடுத்து மூடி வெச்சிடுவாங்க. அதுக்கு அப்புறம் எடுத்துப் பார்க்குறதோ, கேள்வி கேட்குறதே இருக்காது. நானும் தவறுகள் பண்றது உண்டு. ஆனால், சிலபேர் சொன்னாலும் திருத்திக்கிறது கிடையாது. இதெல்லாம் யாரும் கேட்கமாட்டாங்கன்ற போக்கோட சில படங்கள் நடக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அப்போ நாம பணத்துக்காகத்தான் நடிக்கிறோமான்னு வேதனை இருக்கும். இனிமே அப்படிப்பட்ட படங்கள் ஒத்துக்கக் கூடாது, ஜாக்கிரதையாதான் இருக்கணும்னு நினைப்பேன். அதேசமயம், 'ஒத்த செருப்பு' மாதிரியானப் படங்களைத் தொடர்ந்து செய்வேன்.''

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

குண்டக்க மண்டக்க கேள்வி டு சீரியஸ் சினிமா டவுட்ஸ்... பார்த்திபன் ரெடி, நீங்க ரெடியா? #AskParthiban
அடுத்த கட்டுரைக்கு