Published:Updated:

``தனுஷோட நடிப்புக்கு `தொடரி'ல என்னால தீனி போட முடியல; ஏன்னா!" - பிரபு சாலமன்

காடன்
News
காடன்

`என் படங்கள் எல்லாமே பரிசோதனை முயற்சிதான். அது ஓடுது ஓடலைங்கிறது அடுத்த விஷயம். நான் எதையாவது பரிசோதனை பண்ணிக்கிட்டே இருக்கணும்னு நினைக்கிறேன்.’

`கும்கி' படத்தில் ஒரு யானையை வைத்து படம் எடுத்த இயக்குநர் பிரபு சாலமன், தற்போது முப்பது யானைகளை வைத்து `காடன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ராணா, விஷ்ணு விஷால், பாலிவுட் நடிகர் புல்கித் சாம்ராட், பாலிவுட் இசையமைப்பாளர் ஷாந்தனு மொய்த்ரா என வித்தியாசமான கூட்டணியில் உருவாகி திரைக்கு வரத் தயார் நிலையில் இருக்கும் இப்படத்தைப் பற்றியும், அவரது சினிமா பயணம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதல் முறையா மூணு மொழிகள்ல படம் பண்ணது எப்படி இருந்தது?

``மூணு படம் பண்ண மாதிரி இருக்கு. `காடன்', `ஆரண்யா', `ஹாத்தி மேரா சாத்தி'னு மூணு மொழிகள்ல வர்றதுனால ஒவ்வொரு ஷாட்டும் மூணு மொழில டயலாக் பேச வெச்சு எடுக்க வேண்டியதா இருந்தது. இதுவே பெரிய சவால். இதுல முப்பது யானைகளை வெச்சு மூணு முறை ஒரே மாதிரி எடுக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. எத்தனை டேக் போனாலும் அசராம நடிச்சுக்கிட்டே இருந்தார், ராணா. `நல்லா வரணும். எத்தனை டேக்னாலும் நான் ரெடி'னு என் கூடவே இருந்து நான் சொல்றதெல்லாம் பண்ணார். அவருக்கான வொர்க் ஷாப் ஏழு மாசம் நடந்தது. எவ்ளோ தூரத்துல இருந்தாலும் நான் ஓகே சொல்றேன்னா இல்ல ஒன்மோர் சொல்றேனானு என் முகத்தையே பார்த்துட்டு இருப்பார். ஷாட் ஓகேனு சொல்லிட்டா அவர் முகத்துல அவ்ளோ சந்தோஷம் தெரியும். மொத்தத்துல மிகப்பெரிய சவால்; ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது 'காடன்'."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராணா, விஷ்ணு விஷால்னு உங்க சாய்ஸ் வித்தியாசமா இருக்கே!

காடன்
காடன்

``காடுகள் சார்ந்தவன்னு வித்தியாசமா அந்தக் கேரக்டர் தெரியணும்னு நினைச்சேன். எழுதி முடிச்சவுடன் எனக்கு ராணாதான் மைண்டுக்கு வந்தார். அவரும் `பாகுபலி'க்கு அப்புறம் வேற மாதிரி ஏதாவது பண்ணணும்னு தேடல்ல இருந்திருக்கார்னு அப்புறம்தான் தெரியவந்தது. இந்தக் கதையைச் சொன்னவுடனே ரொம்பப் பிடிச்சுப்போய் ஓகே சொல்லிட்டார். பறவைகள், மரங்கள், விலங்குகள்கூட பேசுற மனுஷன். அதுக்குத் தனித்துவமான நடை, உடல்மொழி தேவை. அதுக்காக 7 மாசம் ஹோம் வொர்க் பண்ணார். அந்த ரிகர்சல் டைம்லயே காட்டுக்குள்ள வெறும் கால்ல நடக்குறது, காடன் எப்படி பார்க்கணும், நடக்கணும்னு எல்லாமே தெரிஞ்சுட்டுத் தயாரானார். ஒரு கும்கி யானையுடைய பாகனா விஷ்ணு வர்றார். ஆரம்பத்துல இந்தக் கேரக்டர் யாருனு முடிவாகாமலே ஷூட்டிங் கிளம்பிட்டோம். ஷூட்டிங் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ல விஷ்ணு அந்தக் கேரக்டருக்கு சரியா இருப்பார்னு தோணுச்சு. இந்தக் கேரக்டர்ல நடிக்க முடியுமானு போன் பண்ணிதான் கேட்டேன். கதைகூட கேட்காம தாய்லாந்துக்கு கிளம்பி வந்துட்டார். அற்புதமா நடிச்சிருக்காங்க ரெண்டு பேரும்."

உங்க படங்கள்ல பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்குமே! இதுல எப்படி?

``இதுல பாடல்கள் பெருசா கிடையாது. `காடன்'ல பெரிய பலமா நினைக்கிறது சவுண்ட் எஃபெக்ட்ஸ்தான். மக்கள் படம் பார்க்கும்போது காடுகளை உணரணும். அதனாலதான் ரசூல் பூக்குட்டியை படத்துக்குள்ள கூட்டிட்டு வந்தேன். இசையைவிட லைவ் சவுண்ட்தான் நிறைய இருக்கும்."

இந்தக் கதையை முதல்ல இந்திக்கு எழுத என்ன காரணம்?

காடன்
காடன்

``பட்ஜெட்தான் காரணம். ஈரோஸ் எல்லோருக்கும் ரீச் ஆகுற மாதிரி பெரிசா படம் பண்ணணும்னு சொன்னாங்க. அதுக்கு நம்ம லவ் சப்ஜெக்ட்டை சொல்ல முடியாது. ஜாதவ் பயாங், லாரன்ஸ் ஆண்டனி பத்தி நான் படிச்ச விஷயங்களெல்லாம் சொன்னதும் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. காஸிரங்கா பகுதியில கட்டின சுவர் பிரச்னை சுப்ரீம் கோர்டுல போய்க்கிட்டிருந்தது. அந்த கனெக்ட்டும் இந்திக்கு இருந்தது. படத்தோட ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கும்போது, அந்த வழக்குக்கு வந்த தீர்ப்பு படத்துடைய க்ளைமேக்ஸையே மாத்தி எழுத வெச்சது."

உங்க படங்கள் என்ன ஜானர்ல இருந்தாலும் அதுல காதல் இருக்கும். அது மாதிரி `காடன்'ல என்ன?

``கண்டிப்பா இருக்கு. அந்தப் பழங்குடியின பொண்ணு மேல மாறனுக்கு ஒன் சைடு லவ் இருக்கும், அவ்ளோதான். இந்தக் கதையில காதலை பெரிசா சொல்லமுடியலை. அப்படிப் பண்ணா திணிக்கிற மாதிரி இருக்கும். காடன் காட்டை எவ்ளோ காதலிச்சான், அதுக்காக எவ்ளோ அழுதான், போராடுனான்னு வரும். அதுதான் நான் இதுல சொல்ற காதல்."

நிறைய தோல்விகளைச் சந்திச்சவன்னு நிறைய இடங்கள்ல சொல்லியிருக்கீங்க. இப்போ உங்களுக்குப் மிகப்பெரிய வெற்றி அல்லது மீண்டும் தோல்வி வந்தா அதை எப்படிக் கையாளுவீங்க?

காடன்
காடன்

``ஆன்மிகத்தோட பயணிச்சிட்டு வர்றேன். அதனால எனக்கு மிகப்பெரிய தோல்வினாலும் என்னை அவ்ளோவா பாதிக்காது. எவ்ளோ பெரிய தோல்வியா இருந்தாலும் `வா சண்டை செய்வோம்'னு என் மனசு எப்போவும் சொல்லிட்டே இருக்கும். என் `கொக்கி' படத்துக்கு முன்னாடி ஒரு தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லப்போனேன். என்னை ஒருமுறை பார்த்துட்டு அப்புறம் கீழே குனிஞ்சவர், என்னைப் பார்க்கவேயில்லை. கதை சொல்லலாமா வேணாமானு தோணுச்சு. அப்புறம் அவர் என்கிட்ட, `ஏன்பா உன்கிட்ட யாரும் சொல்லலையா. எனக்குக் கறுப்பு பிடிக்காதுனு? கேட்டார். நான் கறுப்பு கலர் சட்டைப் போட்டுட்டுப் போனதை அவர் அபசகுனமா நினைச்சிருக்கார். வெளியே வந்து விசாரிச்சா, அவர் இந்த சென்டிமென்ட் எல்லாம் பார்ப்பார், உன் ஜாகத்தை எல்லாம் கேட்டிருந்தார்னு சொன்னாங்க. என்னை பார்க்கமாட்டேன்னு சொன்னவர் என்னைத் தினமும் பார்க்கணும்னு நினைச்சா என்னாகும்? இதை வெச்சு எழுதினதுதான் `கொக்கி'. இதை எதுக்கு சொல்ல வர்றேன்னா, நான் உடைஞ்சு போகவேமாட்டேன். பல தோல்விகளைச் சந்திச்சிருக்கேன். இப்போ இருக்கிற இயக்குநர்கள் எனக்கு ரொம்பப் பழக்கமான நண்பர்களும்கூட. அவங்க எனக்குப் போன் பண்ணி `எப்போல்லாம் நாங்க விழுந்துட்டோம்னு நினைக்குபோதெல்லாம் உன் ஞாபகம்தான்யா வரும். விடக்கூடாதுனு எழுந்து ஓடணும்னு நினைக்கிறோம்'னு சொல்வாங்க.

என் படங்கள் எல்லாமே பரிசோதனை முயற்சிதான். அது ஓடுது ஓடலைங்கிறது அடுத்த விஷயம். நான் எதையாவது பரிசோதனை பண்ணிக்கிட்டே இருக்கணும்னு நினைக்கிறேன். அதனால எனக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை.`மைனா', `கும்கி' மாதிரி பெரிய வெற்றிகள் வந்தாலும் அதைப் பெருசா எடுத்துக்கமாட்டேன். நான் `கொக்கி'க்கு எப்படி உழைச்சேனோ அதே அளவுதான் `மைனா'வுக்கும் உழைச்சேன். அந்தப் படத்துக்கு வெற்றி கிடைக்கலைனா அது கெட்ட படமாகிடுமானு எனக்குள்ள கேள்வி வரும். அதுல கதை, திரைக்கதையில எதாவது மிஸ் பண்ணியிருப்பேனே தவிர உழைக்காம இல்லை. வெற்றி, தோல்விக்கான ஓட்டம் என்னுடையதில்லை. வெற்றிங்கிறது இலக்கு இல்லை; அது ஒரு பயணம்."

இந்தப் பயணத்துல கத்துக்கிட்டது என்ன? உங்க பலம்னு நீங்க நினைக்கிறது?

``பீம் சிங், ஏ.பி.நாகராஜன் மாதிரியான முன்னோர்களை நினைச்சுப் பார்க்கும்போது நம்ம எல்லாம் ஒண்ணும் பண்ணலை. தினம்தினம் கத்துக்கிட்டே இருக்கேன். தன்னம்பிக்கையும் பழக்கவழக்கங்களும் என் பலம்னு நினைக்கிறேன். நடிகர்கள், செட்டப், பணம்னு எல்லாத்தையும் வெச்சுக்கிட்டு எல்லோரும்தான் படம் பண்ணலாம். ஒரு சைக்கிளும் கேமராவும் கொடு போதும்னு சொல்லிட்டு உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்குற படம் எடுக்குறான் பாருங்க, அவன்தான் ஃபிலிம் மேக்கர். நான், கேமரா, என்கூட இருக்கிற கதை, நாலு பேர் இவங்களோட மட்டும் போகும்போதுதான் மனசார ஒரு படம் நடக்குதுனு `மைனா'ல புரிஞ்சுக்கிட்டேன். நல்ல திரைக்கதை, அதைப் பதிவு பண்ண ஒரு கருவி இது இருந்தா போதும்னு நினைக்கிற துணிச்சல் இருக்கிறவன்தான் சிறந்த படைப்பாளி. இவர் கதையை ஓகே சொல்லணும், இந்த நடிகர் படத்துக்குள்ள வரணும்னு நம்ம மத்தவங்களை நம்புறோம். என்னைக்கும் கதைதான் ஜெயிக்கும். அது எல்லோரும் ஆமோதிக்கிற விஷயம். நடிகர்களுக்கும் அது தெரியும். முதல் காட்சிக்குக் கூட்டம் சேர்க்கலாம். ஆனா, தொடர்ந்து ஓட்டம் பிடிக்கணும்னா நல்ல கதையும் அதுல சில மேஜிக்கும் அவசியம்."

உங்க படங்கள்ல தனியா காமெடியன்கள் இருக்கிறதில்லையே?

காடன்
காடன்

``எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறப்ப அவங்க மட்டும்தான் திரையில சிரிச்சிட்டு இருப்பாங்க. நான் அமைதியாதான் பார்த்துட்டு இருப்பேன்; தியேட்டரும் அமைதியா இருக்கும். அவங்க வேலை என்னை சிரிக்க வைக்கணும். ஆனா, அவங்க சிரிச்சுட்டு இருப்பாங்க. சார்லி சாப்ளின் எங்கேயாச்சு சிரிச்சு பார்த்திருக்கீங்களா? தம்பி ராமையாவை எல்லா இடத்துலயும் அப்படித்தான் பயன்படுத்தியிருப்பேன். என் படத்துலதான் அவர் வித்தியாசமா இருப்பார். நல்லா நடிக்கத் தெரிஞ்சவங்க யாரை வேணாலும் வெச்சு சூழலுக்குத் தகுந்த மாதிரி வசனத்தை எழுதி சிரிக்கவைக்கலாம். அதுதான் இயக்குநருடைய வேலை. வடிவேலு சாருடைய நடிப்பைப் பார்த்து அவ்ளோ ரசிச்சிருக்கேன். அவர் மாதிரியான நடிகர் நம்மகூட சேரும்போது நமக்கு போனஸ். என்னுடைய `கிங்' படத்துல அவர் நடிச்ச காமெடி சீன் இன்னைக்கும் பேசப்படுதுல்ல..."

`தொடரி' ரிசல்ட்ல நீங்க கத்துக்கிட்டது?

``அந்தக் கதையை நான் தனுஷுக்குனு பண்ணல. அக்டோபர் ஷூட்டிங் போலாம்னு இருந்தோம். ஜூலையில ஷூட்டிங் போக வேண்டிய கட்டாயம். அதனால நல்லா டீடெயிலிங் பண்ணமுடியலை. தனுஷ் எனக்கு அவ்ளோ சப்போர்டா இருந்தார். ஆனா, அவர் நடிப்புக்கு என்னால அந்தப் படத்துல சரியா தீனி போடமுடியல. டீயெலிங் பண்ணாம, விஷுவல் எஃபெக்ட்ஸை மட்டும் நம்பிப் போகக்கூடாதுனு கத்துக்கிட்டேன். எல்லா இயக்குநர்களும் இந்த மாதிரி சூழலைக் கடந்துபோவாங்க. இந்தக் கதையை இந்தப் பூனையை வெச்சுதான் பண்ணணும்னா அதுதான் பண்ணனும்னு புரிஞ்சுகிட்டேன்"

அடுத்து?

``வசனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒரு படம் பண்ணணும். யானைகள் பத்தி அவ்ளோ தெரிஞ்சுக்கிட்டேன். அதனால இனி யானை கதைகள் இருக்காது."

பெரிய ஹீரோக்களை வெச்சு கமர்ஷியல் என்டர்டெயினரா ஒரு படம் பண்ணணும்னு நினைச்சிருக்கீங்களா?

காடன்
காடன்

``நிச்சயமா பண்ணணும். அதுக்கான கதை, திரைக்கதை அமையணும். அந்தத் திருப்தி எனக்கு கொடுத்தா பண்ணுவேன். அது இல்லாம அவங்களைக் கஷ்டப்படுத்திடக் கூடாது. அவங்களுக்குனு ஒரு இமேஜ், அவங்களுக்குனு ஒரு மார்க்கெட் இருக்கும். அதனால என்னுடைய சுயநலத்துல அதை எதையும் பண்ணிடக்கூடாது"