Election bannerElection banner
Published:Updated:

``ராம்க்குப் பிடிச்ச ஒரே காரணத்தால வெற்றி இதைச் சொன்னார்!" - `பாரம்' இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி

பிரியா கிருஷ்ணசாமி
பிரியா கிருஷ்ணசாமி

``என்னோட தாய்மொழி தமிழ். அதனாலதான் `பாரம்' படத்தைத் தமிழ்ல எடுத்தேன். அடிப்படையில நான் ஃபிலிம் எடிட்டர். பல மொழிகள்ல வேலை பார்த்திருக்கேன். என்னோட மொழி, கலாசாரத்துலதான் ஒரு கதையை உணர்வோட சொல்ல முடியும்னு நினைச்சேன்" என ஆரம்பிக்கிறார் தேசிய விருது இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி.

``உண்மையா நடந்த ஒரு எமோஷனல் ஸ்டோரி என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. அதை மையமா வெச்சிதான் `பாரம்' படத்தின் கதையை எழுதினேன். ஆன்லைன்லதான் அந்த ஸ்டோரியைப் படிச்சேன். அதைப் பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணேன். அப்பதான் ஆன்லைன்ல படிச்ச ஸ்டோரி மாதிரியே நிஜத்திலேயும் நிறைய நடக்குதுனு தெரிய வந்தது. ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. அதுக்கு அப்புறம் அமீர் கானின் `சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியைப் பார்த்தப்ப அதிலும் நான் படிச்சிருந்த உண்மைக் கதை மாதிரி நிகழ்வு நடந்துகிட்டிருந்தது. `தலைக்கூத்தல்' பத்தின கதைதான். தமிழ்நாட்டில மட்டும் இல்லாம இந்திய அளவுல இது நடந்துகிட்டு வருது. இதை ஆவணப்படமா எடுக்கிறதைவிட முழு நீளப் படமா எடுக்கலாம்னு தோணுச்சு. அப்படியே படமாவும் முடிச்சிட்டேன். பாண்டிச்சேரி பக்கத்துல, ஒரு சின்ன கிராமத்துல படத்தோட ஷூட்டிங்கை நடத்தினோம். திருநெல்வேலியில சில போர்ஷன்களை ஷூட் பண்ணோம்.

பாரம்
பாரம்

படத்தோட கதையை இங்கிலீஷ்ல எழுதி முடிச்சிருந்தேன். தமிழ்லதான் படமா பண்ணப்போறோம்னு தமிழ் வசனங்கள் எழுதுவதற்காகத் தெரிஞ்சவங்களைத் தேடினேன். இதுக்கே மூணு மாசம் ஆகிடுச்சு. அதுக்கப்புறம் பாண்டிச்சேரி லொக்கேஷனுக்கு நேரா போய் அங்க நடிப்பைப் பத்தின வொர்க்‌ஷாப் பண்ணேன். அதுல இருந்துதான் நடிகர்களை செலக்ட் பண்ணேன்.

`பாரம்'ல நடிச்சிருக்கிறவங்க எல்லாரும் சாதாரண மனிதரிகளும் தியேட்டர் ஆர்டிஸ்ட்களும்தான். என்னோட குழுவுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தேன். என்னோட கதைக்கரு மாறாம அவங்களுக்கு ஏத்த வசனங்களைப் பேசி நடிச்சாங்க. ஆனா, எல்லாமே என்னோட கதைக்கருவுடன் ஒன்றித்தான் இருந்தது. வெறும் 18 நாள்களில் படத்தை எடுத்து முடிச்சிட்டோம். ஆர்டிஸ்ட் பேசின வசனங்களெல்லாம் லைவா ரெக்கார்ட் பண்ணிட்டோம். இதுக்குப் பிறகு, நிறைய ஃபிலிம் பெஸ்ட்டிவல்ல படத்தைத் திரையிட்டோம்.

பாரம்
பாரம்

``இப்படி இருந்தப்ப கோவா ஃபிலிம் ஃபெஸ்ட்டிவல்ல இந்திய பனோரமா பிரிவில் `பாரம்' மற்றும் `பேரன்பு' ஆகிய ரெண்டு படங்களும் திரையிடப்பட்டன. இயக்குநர் ராமை முதன்முதல்ல அங்கதான் சந்திச்சிப் பேசினேன். அவரோட எல்லாப் படங்களையும் நான் பார்த்திருக்கேன். நான் `பாரம்' பத்தி சொல்லிட்டிருக்கும்போது, `படத்தை ரிலீஸ் பண்ணுங்க பிரியா'னு சொன்னாங்க. என்னோட ஆசையும் அதுவாதான் இருந்தது. படத்தை மக்கள் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். ஏன்னா, `தலைக்கூத்தல்' பத்தின முதல் படம் இதுதான். எல்லாரும் இதைப் பத்தித் தெரிஞ்சிக்கணும்னு நினைச்சேன். அப்புறம் ஒரு நாள், ராமை சென்னையில சந்திச்சுப் பேசினேன். என்கூட படத்தோட இணை தயாரிப்பாளார் ஆர்த்ரா ஸ்வரூப்பும் வந்திருந்தார். அப்போ, `என்னோட படத்தைப் பார்க்க முடியுமா'னு கேட்டேன். `பார்க்கலாம்'னு சொல்லிட்டுப் பார்த்தார். உடனே, இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய நிறைய தயாரிப்பாளர்களைச் சந்திக்கச் சொன்னார். இதுக்காக நிறைய பேரைச் சந்திச்சேன். யாரும் படத்தை ரிலீஸ் செய்ய சம்மதிக்கல. ராம், வெற்றிமாறனுக்கு போன் பண்ணி என் படத்தைப் பத்தி சொன்னார்."

``அதுக்குப் பிறகு வெற்றிமாறனை பார்க்க அவரோட ஆபீஸுக்குப் போனேன். அப்போ `அசுரன்' படத்தோட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள்ல பிஸியா இருந்தார். `நீங்க ரொம்ப பிஸினு தெரியும் சார். ஜஸ்ட் ஹலோ சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்'னு சொன்னேன். `ராமுக்குப் படம் பிடிச்சிருக்கு. நம்ம படத்தை வெளியிடலாம்'னு சொல்லிட்டார். எனக்கு ஆச்சர்யமா இருந்தது. இருந்தும், `சார் நீங்க ஒருமுறை பார்த்துவிட்டு ரிலீஸ் பண்ணா திருப்தியா இருக்கும்'னு சொன்னேன். `அசுரன்' படத்தோட ரிலீஸுக்குப் பிறகு படம் பார்த்துவிட்டு, `எனக்குப் பிடிச்சிருக்கு. நம்ம வேலையை ஆரம்பிச்சிடலாம்'னு சொல்லிட்டார்.

12 ஆண்டுகள், 5 படங்கள், எல்லாமே கிளாசிக்... ஏன் இருளிலிருந்து தொடங்குகிறார் வெற்றிமாறன்? #Screenplay

வெற்றிமாறன் மாதிரி பெரிய ஐக்கான் படத்தை ரிலீஸ் செய்யுறதுல சந்தோஷம். ராமும் வெற்றிமாறனும் இல்லைன்னா படத்தை ரிலீஸ் பண்ணியிருக்க முடியாது. படத்தோட பிரஸ் ஷோ அப்போ மிஷ்கின் பேசினது வைரலானது. அவருக்கும் படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. படத்தோட ரிலீஸ்ல அவருக்கும் பங்களிப்பு இருக்கு. தொடர்ந்து தமிழ்ல நிறைய படங்கள் இயக்க ஆசைப்படுறேன். அதுக்காக நிறைய எழுத்தாளர்களையும் சந்திச்சிகிட்டிருக்கேன். நல்ல கதைகள் கிடைச்சா டைரக்‌ஷன் பண்ண ரெடியா இருக்கேன்'' என்கிறார் பிரியா கிருஷ்ணசாமி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு