சினிமா
Published:Updated:

“ரீமேக் பண்றது சாதாரண விஷயமில்லை!”

நிவேதா தாமஸ் - அதர்வா
பிரீமியம் ஸ்டோரி
News
நிவேதா தாமஸ் - அதர்வா

ஒரிஜினலுக்கு நியாயம் செய்வது ரொம்பப் பெரிய வேலை. சரியா வரலைன்னா நல்லா திட்டு கிடைக்கும்.

“எந்தக் கதையாக இருந்தாலும் அதில் முடிந்த அளவு உண்மை சொல்லணும்னு நினைப்பேன். நம் உண்மை இன்னொருத்தருக்குப் பொய்யா இருக்கலாம். இரண்டு பேருக்கும் பொய்யா இருந்தால் அது படைப்பா இருக்கமுடியாது. அதேசமயம் தயாரிப்பாளருக்குப் பணம் வரணும். பார்வையாளனும் நானும் சேர்ந்து வாழ்க்கையிலும் கலையிலும் உயர்வதற்கான ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிக்கணும். அப்படித்தான் இந்த ‘தள்ளிப்போகாதே’ படமும் இருக்கும். `நின்னு கோரி’ன்னு தெலுங்கில் பெரிய ஹிட் அடித்த படம். மனசுக்கு சாந்தத்தையும் வாழ்க்கையில் பிடிப்பையும் சேர்க்கிற படம். தமிழுக்கு ரொம்பவும் சரியா இருக்கும். காதலும் உறவும் புரிதலும் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள்னு படம் சொல்ல வருது...” தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் ஆர்.கண்ணன், டைரக்டர் மணிரத்னத்தின் அணுக்க சீடர்.
“ரீமேக் பண்றது சாதாரண விஷயமில்லை!”

“அதிகமும் ரீமேக் செய்பவராக அறியப்படுகிறீர்கள்...”

“அப்படித்தான் சொல்லிக்கிறாங்க. ஆனாலும் நான்கு படங்கள்தான் ரீமேக் செய்திருக்கேன். ஆறு படங்கள் சொந்தக்கதைதான். ரீமேக் பண்றதும் சாதாரண விஷயமில்லை. ஒரிஜினலுக்கு நியாயம் செய்வது ரொம்பப் பெரிய வேலை. சரியா வரலைன்னா நல்லா திட்டு கிடைக்கும். இந்தியில் ‘ஜஃப் வி மெட்’ படத்தை ‘கண்டேன் காதலை’ன்னு கொண்டுவந்தபோது தமிழில் இது சாத்தியமான்னு சொன்னவங்க நிறைய பேர். அப்போது பரத் ‘பழனி’ மாதிரியான படங்கள் நடிச்சிட்டிருந்தார். அவரை அந்த ரோலுக்குத் தகுந்தபடி மாற்ற முடியுமான்னு பேசினாங்க. ஆனா, படம் இன்னிக்குவரை தொலைக்காட்சியில் ரசிக்கப்படுது. அதேமாதிரிதான் இப்போது இந்தியன் கிச்சனை எடுக்கிறேன். முக்கியமான சினிமாத் தருணங்களைத் தமிழ் மக்கள் தவறவிடக்கூடாது என்பதில் எனக்கு சிறப்புக் கவனம் உண்டு. ‘தள்ளிப்போகாதே’ படத்திலும் அது நிகழ்ந்திருக்கு.”

“ரீமேக் பண்றது சாதாரண விஷயமில்லை!”

“அதர்வா எப்படி?”

“ ‘நின்னு கோரி’யில் நானி பிரமாதமாக நடித்திருப்பார். அந்த வயதில், தோற்றத்தில் பின்னணியில் எனக்கு அதர்வாதான் மனதிற்குள் வந்தார். அவர்கிட்டே படத்தைக் காட்டினதுமே இரண்டாவது யோசனையே இல்லை. ‘சரி... பண்ணுவோம்’னு சொல்லிட்டார். கணவன், மனைவி, முன்னாள் காதலன்னு எல்லாரும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கிறார்கள்.

தன் காதலியின் நலன் விரும்புகிறவன்; தன் காதலன் கஷ்டப்படக்கூடாது, நிம்மதியான வாழ்க்கை வாழணும்னு நினைக்கிற பெண்; ரொம்பவும் பெருந்தன்மையான கணவன்னு படம் அருமையான வட்டத்தில் சுழலும். எல்லாமே பாசிட்டிவ் கேரக்டர்ஸ். மூவரும் எப்படி தங்களின் இடத்தை ஏற்றுக்கொள்கிறார்கள், மாற்றிக்கொள்கிறார்கள்... அந்த மாற்றங்களின் வலி, கொண்டாட்டம், காதல் என எல்லாவற்றையும் படம் பேசுகிறது. வலியே பிரதானமெடுத்து அதர்வா அழுது தவித்து நடக்கிற ஒரு காட்சி. அவ்வளவு பிரமாதப்படுத்தியிருந்தார். படத்தின் ஒரு பகுதி ரஷ்யாவில் நடக்கிறது. அதற்காக 20 நாள்கள் படப்பிடிப்பு நடந்தது. ”

“ரீமேக் பண்றது சாதாரண விஷயமில்லை!”

“நிவேதா தாமஸ் இடத்தில் அனுபமா...”

“அனுபமாவிற்கும் இதில் அதர்வாவிற்கு சமமான இடம் இருக்கிறது. பொதுவாக எல்லோரும் ஒரிஜினல்தான் நல்லாருக்கும் என்பார்கள். இந்தப் படமும் அந்தப் பேச்சிலிருந்து தப்பாது. எனக்கு நன்றாகத் தெரியும். நான் இந்தக் கதையில் சொல்லப்பட்ட விஷயம் இன்னும் ஒருபடி மேலேபோய் சேரணும்னு முயற்சி செய்திருக்கிறேன். ஒரிஜினலில் ஆதி செய்த ரோலில் அமிதாஷ் பிரதான் நடித்திருக்கிறார். இதில் ஆடுகளம் நரேனின் ரோல் முக்கியமானது.”

ஆர்.கண்ணன்
ஆர்.கண்ணன்

“பாடல்கள் அழகா இருக்கு...”

“கோபி சுந்தர். மலையாளத்தில் இன்னமும் வேண்டப்படுகிற மியூசிக் டைரக்டர். டீக்கடையில் ஒரு வேட்டியை மடிச்சுக்கட்டி உட்கார்த்துட்டு டீயை உறிஞ்சியபடி ட்யூன்களை உருவாக்கி விடுவார். சண்முகசுந்தரம்தான் கேமரா. என் மனதைப் படித்துப் பார்த்ததுபோல் அப்படியே காட்சிகளைத் தருவார். வசனங்களையும் பாடல்களையும் கபிலன் வைரமுத்து எழுதிக்கொடுத்தார். படத்தில் இழுத்துப் பிடித்த ரப்பர் பேண்ட் போல தொடர்ந்து அதிர்வு இருக்கும்...”

உறுதியாகச் சொல்கிறார்.