Published:Updated:

``அஜித், விஜய் படங்களுக்கு இப்படி நடக்குமா; 2 கோடில வெறும் 10 லட்சம் வந்தா என்ன பண்றது?" -ஆர்.கண்ணன்

அதர்வாவுடன் ஆர்.கண்ணன்
அதர்வாவுடன் ஆர்.கண்ணன்

ஃபேமிலி, டிராமா, ஹியூமர், ஆக்‌ஷன் என்று மிக்ஸிங் ஜானரில் படங்களைக் கொடுக்கும் இயக்குநர் ஆர்.கண்ணன், தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து `பிஸ்கோத்' படத்தை எடுத்து முடித்திருக்கிறார். படம் குறித்து அவரிடம் பேசினோம்.

``சந்தானம், ப்ளஸ் கண்ணன், இந்த புராஜெக்ட் எப்படி டேக் ஆஃப் ஆனது?"

பிஸ்கோத்
பிஸ்கோத்

``காமெடி நடிகரா சந்தானம்கூட 4 படங்கள்ல வேலை பார்த்திருக்கேன். இப்போ அவரை ஹீரோவா வெச்சு `பிஸ்கோத்து' படம் முடிச்சிருக்கேன். இவரோட அடிப்படையே காமெடி செக்டர்தான். அதை மையமா வெச்சிதான் ஆடியன்ஸை என்டர்டெயின்மென்ட் பண்ணுவார். சந்தானம் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகு, அவருக்கான ஸ்க்ரிப்ட்டுல சரியா பொருந்தி நடிச்சிட்டிருக்கார். `A1' படத்தோட ரிலீஸுக்கு முன்னாடியே அவர்கிட்ட ஸ்க்ரிப்ட்டை சொல்லியிருந்தேன். அப்படியே டேக் ஆஃப் ஆகிடுச்சு."

`` `இவன் தந்திரன்' படத்துல இருந்து உங்களுடைய படங்களை நீங்களே தயாரிக்கிறீங்க, ஃபைனாஸ் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறீங்க?"

பிஸ்கோத்
பிஸ்கோத்

``என்னோட படங்களை நானே தயாரிச்சாலும் பட்ஜெட்டைப் பொறுத்தவரைக்கும் எப்போதும் சமரசம் ஆகுறது இல்லை. `பிஸ்கோத்' படமே 12 கோடி ரூபாயில பண்ணியிருக்கோம். படத்துக்கான தொழில்நுட்பத்தை பெஸ்ட்டான குழுவை வெச்சு பண்ணியிருக்கேன். ஆனா, படத்தை எடுக்கிறதைவிட ரிலீஸ் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. இயக்குநரா கதை எழுதுகிறது, வசனத்தை எப்படிப் பயன்படுத்துகிறது, கதைக்களத்துல எப்படி வேலை வாங்குறது இவைல்லாம் தெரிஞ்ச விஷயங்கள். என் கிரவுண்ட்ல யாரும் விளையாட முடியாது. எல்லாமே என்னோட கட்டுப்பாட்டுல இருக்கும். ஆனா, இதை பிஸினஸ் பண்றப்ப தியேட்டர்காரங்க போடுற ஒப்பந்தம் கொஞ்சம் புரியாத ஒண்ணாதான் இருக்கு. நாலு படம் வரைக்கும் தயாரிச்சிட்டாலும் இன்னுமே கத்துக்கிட்டுதான் இருக்கேன். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் போடுற விதிமுறை மற்றும் நிபந்தனைகளைப் புரிஞ்சிக்க முடியாத சூழல்தான் இங்க இருக்கு. படத்தோட காஸ்ட்டியூம்ல ஒரு சட்டைக்காக 100 ரூபாய்கூட என்னால சமரசம் பண்ண முடியல. அவ்வளவு தரமா கொடுத்து எடுக்கிறோம். படம் நல்லா வரணும்னு எல்லாமே பண்றேன்.

ஆனா, பிஸினஸ்னு போயிட்டா எதிர்பாக்கிற எதுவும் நடக்க மாட்டேங்குது. இது ஏமாற்றமா இருக்கு. செலவு 100 ரூபாயா இருந்தாலும் வாங்குறவங்க 10 ரூபாய்க்குதான் கேட்குறாங்க. 90 ரூபாய் வரைக்கும் நஷ்டமாகுது. சொல்றதும் செய்யுறதும் வேற மாதிரியிருக்கு. `இவன் தந்திரம்' சமயத்துல சினிமா படப்பிடிப்புகள் நடக்கல. படங்கள் தியேட்டர்ல ஓடல. தீடீர்ன்னு ஸ்ட்ரைக் அறிவிச்சிட்டாங்க. படம் ரிலீஸாகி மூணு நாள்தான் ஆகியிருந்தது. என்ன பண்றதுனே தெரியல. இந்தப் படம் ஒன்றரை வருஷம் உழைப்பு. படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்திருந்தன. அந்தச் சமயத்துல அஜித், விஜய் படம் ஏதாவது ரிலீஸாகி இருந்தா திடீரென்று ஸ்ட்ரைக் அறிவிச்சியிருக்க மாட்டாங்க. யாரோ ஒரு மூணாவது நபர்தானே பாதிக்கப்படுறார்னு இப்படிப் பண்ணிட்டாங்க. இந்தச் சூழலில் தியேட்டர் அசோசியேஷன்ஸ் `முதல் மூணு நாளுக்காக எங்களுக்குச் சேர வேண்டிய பங்கை நாங்க எடுத்துக்கல. தயாரிப்பாளருக்காக விட்டுக் கொடுக்கிறோம்'னு சொன்னாங்க. ஆனா, இதுல 2 கோடி வரைக்கும் வரணும்னா வெறும் 10 லட்சம் ரூபாய்தான் வந்தது. ஒரு சிலரைத் தவிர யாருமே தரல. இதுதான் அங்கே இருந்த அடிப்படை நெறிமுறை. ஒரு படைப்பாளிக்கு சவாலான விஷயம் பிஸினஸ்லதான் இருக்கு. வெளிப்படையான பிஸினஸ் இருந்தா நல்ல படங்களை இன்னும் கொடுக்க முடியும். ஒரு படம் எடுக்குறப்ப 200 தொழிலாளிகள் வேலைபாக்குறாங்க. எல்லாருக்கும் இதன் மூலமா வருமானம் வருது. இந்தத் துறைக்கான எல்லாரோட சப்போர்ட்டும் கண்டிப்பா தேவைப்படுது. இதைக் குற்றமா சொல்லல. இதுல வருத்தப்பட்டு ஒண்ணும் ஆகப்போறது இல்லை."

``இவ்வளவு நிதிநெருக்கடிக்குப் பிறகும் தொடர்ந்து படங்கள் தயாரித்தீர்களே?"

சந்தானம்
சந்தானம்

``வேற வழியில்லைனுதான் பண்ணேன். வெளியே இருந்தும் சில தயாரிப்பாளர்கள் கிடைச்சாங்க. இருந்தும் நானே தயாரிக்க ஆரம்பிச்சிட்டேன். கையிலே இருக்கிற ரெண்டு படங்களை ரிலீஸ் பண்ணிட்டு வெளியே பண்ணலாம்னு இருக்கேன். கஷ்டப்பட்டுயெல்லாம் படங்களைத் தயாரிக்கல, இஷ்டப்பட்டுதான் பண்றேன்."

``"இப்படிப்பட்ட சூழலில் தயாரிப்பாளர் சங்கம் தேர்தலில் நிக்கணும்னு எப்போதாவது நினைச்சு இருக்கீங்களா?"

``அப்படி எப்பவும் நினைச்சது இல்லை. சங்கத்தின் எந்த மீட்டிங் நடந்தாலும் கலந்துக்குவேன். முதலில் அங்க இருக்கிறவங்க பேசுறதைக் கவனிப்பேன். பல வருஷம் தயாரிப்பாளரா இருந்தவங்களெல்லாம் இருக்காங்க. சத்யஜோதி தியாகராஜன் சார் மாதிரியான 30 வருஷம் அனுபவம் இருக்கிறவங்களெல்லாம் உட்கார்ந்திருக்கிறப்ப, பேசுறதுக்கு என்ன இருக்கும். ஒரு பிரச்னையை எப்படித் தீர்க்குறாங்க, எந்த மாதிரி அறிவுரை கொடுக்குறாங்கனுதான் முதல்ல பார்ப்பேன். இதைப் பாடமா, அனுபவமா எடுத்துட்டு வர்றேன். இவங்களை எதிர்த்து போட்டியிடணும்கிற எண்ணமே இல்லை."

``ஹீரோ சந்தானம் எப்படியெல்லாம் அவரோட தோற்றத்தை குரூம்மிங் பண்ணியிருக்கார்னு நினைக்கிறீங்க?"

சந்தானம்
சந்தானம்

``காமெடியனா நிறைய பண்ணிட்டார். ஹீரோவுடைய நண்பனா கலாய்ச்சிட்டு இருக்கிறதுனு அதையே திரும்பத் திரும்ப பண்ண வேண்டியதா இருந்திருக்கும். அவருக்கே சலிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனா, அவர் ஹீரோவா நடிக்கணும்னு எடுத்த முடிவுல ரொம்ப உறுதியா இருக்கார். அதுல இருந்து கொஞ்சமும் பின்வாங்கல. எனக்கு அடுத்து அவருக்காக அஞ்சு டைரக்டர்ஸ் ஸ்க்ரிப்ட் எழுதி ரெடியா இருக்காங்க. ஹீரோ சந்தானம் நிலைச்சு நிற்பார்.''

அடுத்த கட்டுரைக்கு