பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார், நடிகர் சிவகார்த்திகேயன். 'டான்' ரிலீஸுக்கு ரெடி. 'அயலான்' படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. 'ஜதிரத்னலு' இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. அடுத்ததாக, இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் அசோக் இயக்கத்தில் 'சிங்கப்பாதை' என்ற படம், 'மண்டேலா' இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படம். பேச்சுவார்த்தையில் பல படங்கள் என எஸ்.கே செம பிஸி!
இதற்கிடையில் 'ரங்கூன்' இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கிறார். அதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருக்கிறது என்ற தகவல் சில வாரங்களுக்கு முன் வெளியானது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதிடீரென்று பொங்கல் சர்ப்ரைஸாக அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமும் சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 51வது தயாரிப்பு இது. சோனி பிக்சர்ஸின் முதல் தமிழ் படத் தயாரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
"சில வேலைகள் சந்தோஷத்தை தரும்; சில கெளரவத்தையும் பெருமையையும் தரும். நாங்கள் தயாரிக்கும் இந்தப் படம் அனைவருக்கும் பெருமை தேடித்தரும். தம்பி சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி" என நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்திருந்தார்.
நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இவ்வுலகத்தில் ஏராளம்" என்று இந்தப் படத்தின் அறிவிப்பை பகிர்ந்திருந்தார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான 'ரங்கூன்' நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாக அதிக கவனம் ஈர்த்தது. அதன் பிறகு, இவர் இயக்கும் படம் என்ன என்பது சினிமா ரசிகர்களின் மனதில் அப்போது இருந்த கேள்வி. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கு பதில் கிடைத்துள்ளது. அறிவிப்பிலேயே படத்திற்கான எதிர்பார்ப்பு கூடிவிட்டது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை தொடர்புகொண்டு பேசினேன்.
அப்போது பேசியவர், '''ரங்கூன்' வெளியான ஒரு வாரத்துக்குள்ள நிறைய தயாரிப்பு நிறுவனங்கள்கிட்ட இருந்து படம் பண்ண சொல்லி வாய்ப்புகள் வந்தன. அப்போ நான் ஒரு ஸ்கிரிப்ட் பண்ணி வெச்சிருந்தேன். அதனுடைய பட்ஜெட் ரொம்ப பெருசா வந்து நின்னுச்சு. அந்த பட்ஜெட்ல சில ஹீரோக்கள்தான் பண்ண முடியும்னு இருந்துச்சு. அப்போதையா சூழல்ல அவங்களுடைய கால்ஷீட்டும் ஃப்ரீயா இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒரு படம் நடக்க பட்ஜெட், சரியான தயாரிப்பு நிறுவனம், பிசினஸ் இருக்க ஹீரோனு நாலஞ்சு விஷயங்கள் கூடி வரணும். நான் ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். ஆனா, இந்தப் படம் இப்போதைக்கு நடக்காதுனு புரிஞ்சுக்க ஒன்றரை வருஷமாகிடுச்சு. சரி, வேறொரு ஸ்கிரிப்ட் பண்ணலாம்னு ஆரம்பிச்சேன். அப்போ 'ரங்கூன்' தயாரிப்பாளர் ஃபாக்ஸ் ஸ்டூடியோஸ் மூலமா கேள்விப்பட்டு சோனி பிக்சர்ஸ் டீம்ல இருந்து பேசினாங்க. 'ரங்கூன்' படமும் அவங்க பார்த்திருக்காங்க. என் நண்பர் வேக்கி மூலமா இந்த மீட்டிங் நடந்தது. அப்போ நான் பண்ணிக்கிட்டிருந்த ஸ்கிரிப்டை முடிச்சு அவங்கக்கிட்ட சொன்னேன். அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இதெல்லாம் நடந்தது 2019 இறுதியில். 2020 ஆரம்பத்திலேயே கோவிட், லாக்டெளன் வந்திடுச்சு. இந்தப் ப்ராஜெக்ட்டுக்கான பேச்சுவார்த்தை அப்படியே தற்காலிகமா நின்னுடுச்சு.
அந்த சமயத்துல நான் பிக் பாஸ் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போ கமல் சார் என்கிட்ட 'ஏதாவது கதையிருந்தா சொல்லுங்க. நம்ம கம்பெனியில பண்ணலாம்'னு சொன்னார். அப்போ அவர்கிட்ட வேறொரு கதை சொன்னேன். சின்ன பட்ஜெட்தான். அந்தக் கதையை தயாரிக்கிறேன்னு சொல்லிட்டார். அதுக்கான வேலைகள் ஆரம்பிக்கிற நேரத்துல சோனி பிக்சர்ஸ் டீம்ல இருந்து திரும்ப பேசினாங்க. நான் கமல் சார்கிட்ட, 'இந்த மாதிரி கொஞ்ச நாளுக்கு முன்னாடி சோனிக்கு ஒரு படம் பண்றேன்னு சொல்லிருந்தேன். அது வேற கதை. லாக்டெளனுக்கு பிறகு, இப்போ மீண்டும் என்னை ரீச் பண்ணி பேசினாங்க'னு சொன்னேன். 'அது என்ன கதை சொல்லுங்க பார்ப்போம்'னு கேட்டார். அதையும் சொன்னேன். கேட்டுட்டு, 'இதை நம்ம சேர்ந்து பண்ணலாம்'னு சொன்னார்.
சோனி நிறுவனத்துல கமல் சார் சொன்னதை சொன்னவுடன், அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். அப்புறம், மீண்டும் அடுத்த லாக்டெளன் வந்திடுச்சு. ஹீரோ யார்னு பெரிய டிஸ்கஷன் நடந்தது. நான் சிவகார்த்திகேயன்கிட்ட இந்தக் கதையை சொன்னேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. கமல் சார்கிட்ட சிவா பெயரை சொன்னதும் 'ஏன் இப்படி தயங்கிச் சொல்றீங்க. ரொம்ப பர்ஃபெக்டான சாய்ஸ். அவர் ரொம்ப ஷார்ப். யார் இந்தக் கேரக்டருக்குனு யோசிச்சிக்கிட்டே இருந்தேன். நீங்க சரியான நபரை பிடிச்சுட்டீங்க. நான் அவரை சந்திக்கிறேன்'னு சொன்னார். சிவா கமல் சாரை பார்த்து பேசினார். சோனி நிறுவனத்துக்கிட்ட சொன்னதும் அவங்களும் ஹேப்பி. இப்படிதான் இந்தப் படம் ஆரம்பமானது. என்னை முருகதாஸ் சார்கிட்ட உதவி இயக்குநரா சேர்த்துவிட்டதிலிருந்து இப்போ இந்தப் படத்துக்கு இணை தயாரிப்பாளராவும் எனக்கு வழிகாட்டியாவும் இருக்க மகேந்திரன் சாருக்கு ரொம்பப் பெரிய நன்றி. சிவாவுக்கு பெரிய லைன் அப் இருக்கு. இந்த வருஷத்துல ஷூட் ஆரம்பிச்சிடும். அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். '' என்றார் மகிழ்ச்சியாக!