Published:Updated:

``இந்த முரணுக்கான பதிலை தணிக்கைக் குழுதான் சொல்லணும்!" - `ஜிப்ஸி' ராஜு முருகன்

'ஜிப்ஸி'

`இது ஒரு காதல் படம். அதைச் சுத்திதான் அரசியல், மனிதம் எல்லாமே இருக்கும். பொதுவா, என்னுடைய ஆழ்ந்த ஈடுபாடு அன்பு மேலதான். அன்பைச் சொல்றதுக்காகத்தான் இந்தக் கலை, எழுத்து, சினிமா எல்லாமே.’

``இந்த முரணுக்கான பதிலை தணிக்கைக் குழுதான் சொல்லணும்!" - `ஜிப்ஸி' ராஜு முருகன்

`இது ஒரு காதல் படம். அதைச் சுத்திதான் அரசியல், மனிதம் எல்லாமே இருக்கும். பொதுவா, என்னுடைய ஆழ்ந்த ஈடுபாடு அன்பு மேலதான். அன்பைச் சொல்றதுக்காகத்தான் இந்தக் கலை, எழுத்து, சினிமா எல்லாமே.’

Published:Updated:
'ஜிப்ஸி'

``விகடன்ல நான் எழுதின `ஜிப்ஸி'க்கும் இந்த 'ஜிப்ஸி'க்கும் சம்பந்தமில்லை. அதுல இருக்கிற பயணத்தை மட்டும் எடுத்துக்கிட்டு, சினிமாவுக்காகக் கதை எழுதி, அதுக்குள்ள இன்றைய அரசியலையும் எப்போதும் நான் நம்புற காதலையும் மனிதத்தையும் பேசியிருக்கேன். `ஜோக்கர்' முடிஞ்ச பிறகு, இந்த தேசத்துல பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், இன்னிக்குச் சொல்லப்படுற ஆதார் கார்டுனு எந்த அடையாளமும் இல்லாத மனிதர்களைச் சம்பந்தப்படுத்தி இந்தியா முழுக்க ஒரு பயணம் போகணும்னு ஆசைப்பட்டுக் கிளம்பினோம். அப்ப கிடைச்ச நிறைய அனுபவத்தையும் இதுல சொல்லியிருக்கேன்" என்று பேசத் தொடங்குகிறார், இயக்குநர் ராஜுமுருகன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`ஜிப்ஸி'யாக நடிக்க ஜீவாதான் உங்களுடைய முதல் சாய்ஸா?

``எப்பவும் நான் கதையை முழுமையா எழுதிட்டு, அதுக்குப் பிறகுதான் யார் நடிக்கலாம்னு முடிவு பண்ணுவேன். தவிர, இது பிசினஸ் சம்பந்தப்பட்ட விஷயமும்கூட. `ஜிப்ஸி' பட்ஜெட்டா கொஞ்சம் பெரிய படம். அப்ப அதுக்கான ஹீரோவும் படத்துல வேணும். இந்தக் கதையை எழுதிட்டு நான் முதல்ல தனுஷ்கிட்ட கொடுத்தேன். அவருக்கும் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, சில காரணங்களால பண்ணமுடியலை. அப்புறம் என் மைண்டுக்கு வந்தவர்தான் ஜீவா. அவர் மேல எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவரால `சிவா மனசுல சக்தி' மாதிரியும் பண்ண முடியும்; `ஈ' மாதிரி படமும் பண்ணமுடியும். அவர்கிட்ட கதை சொன்னதும் உடனே ஓகே சொல்லிட்டார். இந்தப் படத்துக்காக ஜீவா நிறையவே மெனக்கெட்டிருக்கார். இந்தப் படத்துக்காக கிட்டார் கத்துக்கிட்டார். `ஜிப்ஸி'க்குள்ள அவர் வந்தது கிஃப்ட்தான். இந்தப் படத்தைத் தாண்டி எனக்கும் ஜீவாவுக்கும் இப்போ நல்ல நட்பு உருவாகியிருக்கு."

மாளவிகா நாயர், ரம்யா பாண்டியன் இப்போ நடாஷா சிங்... உங்களுடைய படங்கள்ல ஹீரோயினை எப்படித் தேர்ந்தெடுக்கிறீங்க?

'ஜிப்ஸி'
'ஜிப்ஸி'

``எந்தளவு ஆண் கதாபாத்திரம் மீது கவனம் செலுத்துறோமோ அதைவிட கூடுதலாகவே பெண் கதாபாத்திரம் மீது கவனம் செலுத்தணும்னு ரொம்பத் தெளிவா இருப்பேன். நம்ம வாழ்க்கையில பெண்களுக்கு என்ன ஸ்கோப் இருக்கோ, அதே அளவுக்குப் படத்துலயும் இருக்கணும்னு நினைச்சுதான் அந்த கேரக்டரை எழுதுவேன். `வஹிதா'ங்கிற இஸ்லாமியப் பெண் கேரக்டர்லதான் நடாஷா நடிச்சிருக்காங்க. இஸ்லாமியப் பெண்ணுடைய முகத்துக்காக நிறைய பேரைத் தேடினோம். அப்படி நடாஷாவைப் பார்க்கும்போதே இவங்கதான் `வஹிதா'வுக்குச் சரியா இருப்பாங்கன்னு தோணுச்சு. இந்தியில நிறைய ஆல்பம் பண்ணியிருக்காங்க. இதுதான் அவங்களுக்கு முதல் படம். ரொம்ப நல்ல பர்ஃபார்மர். இனி வரும் காலங்கள்ல தமிழ் சினிமாவுல முக்கியமான நடிகையா இருப்பாங்க."

ஜிப்ஸி - வஹிதாவுக்கான காதல் எப்படி இருக்கும்?

``இது ஒரு காதல் படம். அதைச் சுத்திதான் அரசியல், மனிதம் எல்லாமே இருக்கும். பொதுவா, என்னுடைய ஆழ்ந்த ஈடுபாடு அன்பு மேலதான். அன்பைச் சொல்றதுக்காகத்தான் இந்தக் கலை, எழுத்து, சினிமா எல்லாமே. அதைத்தான் `ஜிப்ஸி'யும் பேசுது. என்னுடைய முந்தைய படங்கள்ல வந்த காதலைவிட இதுல அதிகமா இருக்கும். உலகத்தையே தன்னுடைய வீடா நினைக்கிற ஒருவன், வீடுதான் உலகம்னு நினைக்கிற ஒரு பெண். இவங்களுக்குள்ள இருக்கிற காதல்தான் `ஜிப்ஸி'."

ஏற்கெனவே இந்தியா முழுக்க நிறைய பயணிச்சிருக்கீங்க. இருந்தாலும் `ஜிப்ஸி' படத்துடைய ஷூட்டிங்காகப் பயணிச்ச அனுபவம் எப்படி இருந்தது?

'ஜிப்ஸி'
'ஜிப்ஸி'

``ட்ரிப் மாதிரி போவோம். அப்படி கிடைக்கிற இடங்களை ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்னு கிளம்பினோம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் பழக்கவழக்கங்கள் மூலமாகவும் அரசியல் மூலமாகவும் வித்தியாசம் இருந்துட்டே இருக்கும். உதாரணத்துக்கு, காஷ்மீர்னாலே தீவிரவாதம், எப்பவும் கலவரமா இருக்கும்னு ஒரு பிம்பம் இருக்கு. நம்ம ஊர்ல மதுரைக்காரங்க ரொம்ப பாசமா இருப்பாங்கன்னு நம்ம பழக்கப்பட்டிருக்கோம்ல... அது மாதிரி இந்தியாவுக்கு காஷ்மீர்க்காரங்க. அவங்களுடைய உபசரிப்பு, நடந்துக்கிற விதம் எல்லாம் அவ்ளோ அன்பா இருக்கு. பஞ்சாப்ல எங்ககூட சுக்வீந்தர் சிங்னு ஒரு டிரைவர் வந்தார். நைட் ஒருமணி... கார்ல தூங்கிட்டு இருந்த எல்லோரும் முழிப்பு வந்து எங்க இருக்கோம்னு சுக்வீந்தர்கிட்ட கேட்டோம். இதோ போயிடலாம் போயிடலாம்னு சொன்னார். ஒரு செக் போஸ்ட் வந்ததும் ஒரு மிலிட்ரி ஆபீஸர் எங்களை யார், என்னனு விசாரிச்சார். அப்பதான் தெரிஞ்சது பாகிஸ்தானுக்கு வந்துட்டோம்னு. `இதுக்கு மேல போனா பிரச்னையாகிடும். திரும்பிப் போங்க'னு எங்களை பாகிஸ்தான் மிலிட்ரி ஆபீஸர் அனுப்பி வெச்சார். அப்புறம் கேட்டா, நடுவுல ரூட் மாறியிருக்கும்போல 120 கி.மீ தள்ளி வந்துட்டோம்னு சொன்னார், சுக்வீந்தர். அர்த்த ராத்திரில நம்மளை பத்திரமா அனுப்பி வைக்கிற மனநிலை எல்லா ஊர்லயும் இருக்கு; பாகிஸ்தான்லேயும் அது இருக்கு."

லால் ஜோஸ், சன்னி வெய்ன்?

``ரெண்டு பேருக்கும் தமிழ்ல இதுதான் முதல் படம். லால் ஜோஸ் சார் அங்க பெரிய மாஸ்டர். அவரோட படங்கள் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்பத் தன்மையான மனிதர். சினிமா பத்தி அவருக்குத் தெரிஞ்ச விஷயங்களை நமக்குச் சொல்லித்தருவார். சன்னி வெய்ன் நம்ம என்ன பண்றோம்ங்கிற தெளிவு இருக்க ஆள். ஒரு படத்துக்கு எப்படி நீட்டா இருக்கணும்னு அவங்ககூட கேரளாவுல இருக்கும்போது கத்துக்கிட்டேன். தவிர, இந்தப் படம் நல்லாயிருக்குனு உங்களுக்குத் தோணுச்சுனா, அதுக்கு முக்கியக் காரணம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் செல்வகுமார், எடிட்டர் ரேமன்ட் இவங்க எல்லோரும்தான்."

சன்னி வெய்ன் படத்துல கம்யூனிஸ்ட்டா வர்றார். நீங்களும் ஒரு கம்யூனிஸ்ட். அதனால உங்களுடைய கேரக்டர் ஏதாவது அவர் கேரக்டருக்குள்ள புகுத்தியிருக்கீங்களா?

'ஜிப்ஸி'
'ஜிப்ஸி'

``கம்யூனிஸம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த ஐடியாலஜியிலதான் நான் வளர்ந்தேன். ரொம்ப சிம்பிளா சொன்னா, உலகத்துல இருக்கிற எல்லா உயிரும் ஒண்ணுதான்னு நினைக்கிறதுதான் கம்யூனிசம். சகமனிதனை நம்ம நேசிக்கணும். சக மனிதன் நம்மளை நேசிக்கணும்னு எல்லோரும் விரும்புறோம். அப்ப எல்லோருக்குள்ள ஒரு கம்யூனிஸ்ட் இருக்கான்ல? சன்னி வெய்ன் நடிச்சிருக்க கேரக்டர் என் கேரக்டர் மட்டுமல்ல. மனிதத்தை விரும்புற எல்லோருடைய பிரதிநிதிதான் அவர்."

தணிக்கை குழுவுல `ஜிப்ஸி'க்கு இவ்வளவு தடைகள் வர என்ன காரணம்?

``இந்தப் படம் ஒரு அரசியல் படம் மட்டுமல்ல. காதலுக்கு இடையில அறம் சார்ந்த அரசியலையும் பேசுற படம். தணிக்கை குழுவின் பார்வைக்கு என்னெல்லாம் தப்பா தெரிஞ்சதோ அதையெல்லாம் கட் பண்ணச் சொன்னாங்க; பண்ணிட்டோம். அவங்க வேலையை அவங்க செஞ்சாங்க. நம்ம அவங்க சொன்னதைக் கேட்டு படத்தை ரிலீஸ் பண்றோம். மத்தபடி நான் சொல்ல வர்றது என்னன்னா, என் சம்பந்தப்பட்ட விஷயத்துல நான் பாதிக்கப்பட்டேன்னா அதுக்காகக் குரல் கொடுப்பதிலோ, போராடுவதிலோ எனக்கு நம்பிக்கையில்லை. எனக்கு கூச்சமாதான் இருக்கும். சினிமா எடுக்கிறதுக்கு முன்னாடி இருந்தே நான் இதைப் பேசிட்டிருக்கேன். தணிக்கை குழுங்கிறது கலை தளத்தில் இயங்குற ஒரு அரசு அமைப்பு. கலை ஜனநாயகத்தின் முக்கிய வடிவம். ஒரு நாட்டுடைய பிரதிபலிப்புதான் கலை. அதனால தணிக்கைக் குழுவுல எந்தக் கட்சி ஆட்சிக்கு வருதோ அது சார்ந்தவங்களோ, அபிமானிகளோ இருக்கக் கூடாது. அப்படி இருந்தா அதுல ஜனநாயகம் இல்லைனு நினைக்கிறேன். இந்தச் சமூகத்துல இருக்கிற முக்கியமான எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அதுக்கான அதிகாரிகள் இப்படியானவர்களை வெச்சுதான் தணிக்கை குழு அமைக்கப்படணுமே, தவிர கட்சியைச் சார்ந்தவர்கள் இருக்கக்கூடாது."

`ஜோக்கர்' பெரிய அரசியலை பேசிய படம். அதுக்கு தேசிய விருது கிடைச்சது. அதே இயக்குநருடைய அடுத்த படத்துக்கு இவ்வளவு பிரச்னை. இந்த முரணை எப்படிப் பார்க்கிறீங்க?

'ஜிப்ஸி'
'ஜிப்ஸி'

``அப்படி நடந்ததுக்காக மகிழ்ச்சி அடையவும் இல்லை. இப்படி நடந்ததுக்காக வருத்தப்படவும் இல்லை. ஏன்னா, நமக்கு நடக்கிற விஷயத்தை மட்டும் வெச்சு இந்த நாட்டைப் பார்க்கிறது தப்பு. `ஜோக்கர்'காகத் தணிக்கைக் குழுவுக்கு நன்றி சொன்னேன். இப்ப `ஜிப்ஸி' ரிலீஸாகப்போகுது. அதுக்காகவும் நன்றி சொல்றேன். எப்பவும் தணிக்கைக் குழுவுல கட்சியைச் சார்ந்தவங்க இருக்கக் கூடாதுங்கிறதுதான் என் கருத்து. `ஜோக்கர்' படத்தை விட்டதும் `ஜிப்ஸி'க்குப் பிரச்னை பண்ணதும் அவங்கதான். அதனால இந்த முரணுக்கான பதிலை அவங்கதான் சொல்லணும்."

ஒரு மாநிலத்துடைய தற்போதைய முதல்வர் மாதிரி ஒருத்தரை நெகடிவ் சாயல்ல காட்டினதுதான் இந்தப் படத்துக்கான பெரிய பிரச்னையா பார்க்கப்பட்டதா?

``அப்படில்லாம் இல்லை. ஒட்டுமொத்தமாவே படம் பேசக்கூடிய கருத்துகள் மேல அவங்களுக்குச் சில பிரச்னைகள் இருந்தது. மதம் பற்றியோ மதத்தின் வழிபாடுகளை ஒரு மனிதன் பின்பற்றுவது அவனுடைய விருப்பம். அந்த மதத்தை வைத்து ஒரு மனிதனை ஒதுக்குவதோ, அரசியல் செய்வதோ அதிகாரத்தைக் கைப்பற்ற அதைப் பயன்படுத்துவதோ, பழைமையான கருத்துகளை மனிதச் சமூகத்தின் மேல புகுத்துவதோ தவறு. இதை இந்தப் படம் சின்னதா பேசும், அவ்ளோதான். அதுல அவங்களுக்கு உடன்பாடில்லை."

தணிக்கைக் குழுவுல சொல்லி சில விஷயங்களை படத்தில இருந்து எடுத்திருக்கீங்க. அது உங்களுக்குத் திருப்தியா இருக்கா?

``என்னுடைய எழுத்து, சினிமா மூலமா மக்களுக்கு ஏதாவது சொல்லணும்னு நினைக்கிறேன். தியேட்டர்ங்கிறது என்டர்டெயின்மென்டுக்கான ஏரியாதான். அதுக்குள்ள நான் சொல்லணும்னு நினைக்கிற விஷயத்தை மக்களுக்கு போர் அடிக்காமல் சொல்லிடணும். இவங்க சொன்ன `கட்'டுக்குப் பிறகும் படம் எனக்கு திருப்தியாதான் இருக்கு. கதையைச் சிதையாம எடுத்துட்டு வந்துட்டேன். நேரடியா பேசின விஷயங்களை அவங்க எடுக்கச் சொல்லிட்டாங்க. அதனால நான் சொல்லணும்னு நினைச்ச விஷயங்களை மறைமுகமா சொல்லியிருக்கேன். இதுல ஏழு நிமிஷ ஃபுட்டேஜ்ல இருக்கிற கலரைக் காட்டக்கூடாதுனு சொன்னாங்க. அதை ப்ளாக் அண்ட் வொயிட்ல மாத்தியிருக்கோம். ஆனா, படம் பார்க்கும்போது நான் என்ன சொல்றேன்னு மக்களுக்குப் புரியும்."

பத்திரிகையாளரா இருந்து இயக்குநரானதுல என்ன ப்ளஸ்னு நினைக்கிறீங்க?

'ஜிப்ஸி'
'ஜிப்ஸி'

``நிறைய மனிதர்களைப் பார்க்க முடியும், பயணப்பட முடியும். காலையில ஸ்டார் ஹோட்டல்ல ஒருத்தரைப் பார்த்துப் பேசிட்டு வருவோம், சாயந்தரம் டாஸ்மாக்ல ஒருத்தரைப் பார்ப்போம். இந்த அனுபவம் ரொம்ப முக்கியமானது. அந்தப் பத்திரிகையாளர் வாழ்க்கைதான் `குக்கூ', `ஜோக்கர்', `ஜிப்ஸி'னு எல்லாத்தையும் கொடுத்தது. இந்த மனிதர்களுக்குள்ள ட்ராவல் பண்ணி படம் எடுக்கணுங்கிற விருப்பத்தை உண்டாக்கியது பத்திரிகை வாழ்க்கைதான். உலகம் முழுக்கவே பத்திரிகையாளரா இருந்து சினிமாங்கிற கலைக்குள்ள வர்றவங்களுக்கு அந்தத் தன்மை இருக்கு. நிறைய பார்த்தனால அடுத்தவங்களுடைய வாழ்க்கையைச் சொல்லணும், சொல்லணும்னு நினைக்கிற தாகம் இருந்துட்டே இருக்கும். அது பெரிய ப்ளஸ்."

நீங்க எழுதி உங்க அண்ணன் இயக்கின `மெஹந்தி சர்க்கஸ்' படத்துக்கான வரவேற்பு திருப்தியா இருந்ததா?

``சரவணன் அண்ணன், யுகபாரதி அண்ணன் இவங்க ரெண்டு பேரையும் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன். சரவணன் அண்ணனுடைய சிந்தனையில இருந்து கொஞ்சம்தான் நான். அவர் எப்பவோ நிறைய விஷயங்களைப் பண்ணியிருக்கணும். ஆனா, சூழ்நிலை காரணமா தாமதமாகிடுச்சு. `மெஹந்தி சர்க்கஸ்' ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டா எழுதின கதைதான். அந்தப் படம், பாடல்களுக்கான வரவேற்பு நல்லா இருந்தது. இன்னும் கூடுதலா கிடைச்சிருக்கலாம்னு தோணுச்சு. அடுத்த படத்துக்கான வேலைகள்லதான் அண்ணன் இப்போ இருக்கார். கதை ரெடி."

ராஜுமுருகன் ரொம்ப ஹ்யூமர் சென்ஸுடைய நபர்னு தெரியும். அதுக்குத் தகுந்த மாதிரி முழுக்க முழுக்க ஹ்யூமரா ஒரு படத்தை உங்ககிட்ட இருந்து எப்போ எதிர்பார்க்கலாம்?

'ஜிப்ஸி'
'ஜிப்ஸி'

``எல்லா ஜானர்லயும் படம் எடுக்கணும்னு ஆசையிருக்கு. இனிமேல் குறுகிய காலத்துல படங்கள் எடுக்கணும்னு நினைசிருக்கேன். எந்த ஜானர் படம் பண்ணாலும் அதுல அறம் சார்ந்த ஒரு அரசியலும் இருக்கும். முழுக்க முழுக்க ஒரு ஹ்யூமர் படத்தையும் சீக்கிரமே எதிர்பார்க்கலாம்."

ஒரு படைப்பாளியுடைய கருத்து சுதந்திரம் இப்போ எந்தளவுக்கு இருக்குனு நினைக்கிறீங்க?

``கருத்து சுதந்திரத்தைத் தீர்மானிக்கிறது கருத்துக்கு உரியவனும் அதை மறுப்பதற்கு உரியவனும்தான். இவங்க ரெண்டு பேருக்குமிடையே நடக்கிற விஷயம்தான் அது. கருத்தை மறுப்பவர் அதிகாரத்துல இருந்தார்னா அது நம்மளை கொஞ்சம் கஷ்டப்படுத்தும் அவ்ளோதான்."

`வட்டியும் முதலும்' மாதிரியான படைப்பை மறுபடியும் எப்போ எதிர்ப்பார்க்கலாம்?

``எழுதும்போதுதான் நம்மை நம்மளே தேடிக் கண்டுபிடிக்க முடியும். இந்த வேலைகளுக்கு நடுவுல அதைப் பண்ண முடியல. திரும்ப `வட்டியும் முதலும்' மாதிரியான ஒரு பயணமோ, ஒரு அனுபவமோ, ஒரு நாவலோ எழுதணும்னு ஆசை இருக்கு. கூடிய சீக்கிரமே நடக்கும்."