Published:Updated:

`` 'ஆதி'யில் என்ன தப்பு... 'திருமலை' பைக் எங்கே?" - ரமணா

நம் வீட்டில் எத்தனை பேரை கல்லறையாக்கிவிட்டு உன் தாஜ்மஹால் கற்பனைக் கல்லறையை கட்டப்போறே?’ என்று என் மனைவி கேட்டாள்

director ramana
director ramana

தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் விஜய்யின் சினிமா கரியரில், தொடர்ந்து ஆறு படங்கள் தோல்வியை சந்தித்தன. அப்போது, விஜய்யை வீறுகொண்டு எழச்செய்த வெற்றிப்படம், 'திருமலை' என்பது அவரது ரசிகர்களுக்கு அத்துபடி. 2003-ம் ஆண்டு ரிலீஸான 'திருமலை' படத்தை இயக்கிய ரமணாவுக்கு, கடந்த 10 வருடங்களாக வனவாசம். அடுத்து, புதிய அவதாரம் எடுத்துவந்து, 14 படங்களுக்கு வெவ்வேறு ஜானர்லில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாராக இருக்கும் ரமணாவிடம் பேசினோம்.

சினிமாவில் உங்கள் பயணம் எப்படிப்பட்டது..?

director ramana
director ramana

’’சினிமாவில் அடையாளம் வேறு, அங்கீகாரம் வேறு, பிரபலமானவர்கள் வேறு, மரியாதைக்குரியவர்கள் வேறு. இந்த உலகம், பிரபலமானவர்களையே கணக்கில் எடுத்துக்கொள்கிறது. மரியாதைக்குரிவர்களை மறந்துவிடுகிறது. சினிமாவில் சான்ஸ் தேடி அலைந்தபோது, 'டச் ல இருங்க' என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில், 'டச் வைத்து... டச் வைத்து' என் கையே மரத்துப்போய்விட்டது. சினிமாவைத் தாண்டி எனக்கும் குடும்பம் இருக்கிறது, மனைவி இருக்கிறார், என் குழந்தைக்கு பால் டப்பா வாங்கித்தரவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. முதலில், உயிரோடு இருக்கவேண்டும். நான் சோறு சாப்பிட்டால்தான் பாரதி, கண்ணதாசனைப் பற்றி சத்தமாய்ப் பேசமுடியும். ஒருநாள்,’என்ன செய்யப்போறீங்க?’ என்று என் மனைவி கேள்வி கேட்டாள். 'என்னுடைய படைப்பு தாஜ்மஹால் மாதிரி' என்று பெருமையாகச் சொன்னேன். 'நம் வீட்டில் எத்தனை பேரை கல்லறையாக்கிவிட்டு உன் தாஜ்மஹால் கற்பனைக் கல்லறையை கட்டப்போறே?’ என்று என் மனைவி கேட்டது என்னை செருப்பால் அடிப்பது போலிருந்தது. முதலில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் எல்லாம் கிடைத்தபிறகுதான், ஓவியன், கவிஞன், டைரக்டர் என்று இங்கு எல்லாருமே வருகிறார்கள். அப்படி ஆரம்பமானதுதான் என் பயணமும்.’’

விஜய்யின் முதல் ஆக்‌ஷன் படமான ' திருமலை' குறித்து?

’’என் அப்பாவின் மேல் எனக்கு இருந்த கோபம்தான், ' திருமலை'. காந்தி, நேரு, காமராஜ், கக்கன் எல்லாருமே உயிரோடு வாழ்ந்து, உலகம் முழுக்க தெரிந்து, இறந்துபோனவர்கள். என் அப்பாவைப் பற்றி பக்கத்து தெருவில் இருப்பவனுக்குக்கூட தெரியவில்லையே என்கிற கோபம் எனக்கு இருக்கிறது. சந்திரசேகர் என்ற என் அப்பாவின் பெயர், அம்மா, தம்பி, நான் என்ற உறவினர்கள் தவிர வேறு யாருக்குமே அவரது அடையாளம் தெரியவில்லையே என்று யோசித்திருக்கிறேன். நான் 'திருமலை' படத்தில் கமிட்டானதும், படத்தோட கதை என்னன்னு பலபேர் கேட்டார்கள். ’ 'ஆயிரத்தில் ஒருவன்', ' எங்க வீட்டு பிள்ளை', ' நல்லவனுக்கு நல்லவன்' இந்தப் படங்களோட கதைதான் ' திருமலை'. ஒரு ஏழை, பணக்கார வீட்டு பெண்ணைக் காதலிக்கிறான். அதற்கு, அவள் அப்பா தடையாக இருக்கிறார். இதைத் தாண்டி ஹீரோ, ஹீரோயின் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதுதான் கதை’ என்று சொல்லிவிட்டு, ’கேட்கும்போதே உங்களுக்கு காது புளிக்குதே, சொல்லும்போது எனக்கு எப்படி வாய்புளிக்கும்’ என்று பதில் சொன்னேன். முதலில் விஜய் சார் அப்பாவும், கே.பி-சார் மகளும் சேர்ந்து கதையைக் கேட்டனர். அதன்பிறகே, கே.பி சாரிடம் 63-சீன்கள் கொண்ட 'திருமலை' கதையைச் சொன்னேன். முழுவதுமாகக் கேட்டுவிட்டு, 'கவிதாலயா நிறுவனம் 'சர்வர் சுந்தரம்' படத்தையும் எடுக்கும். 'அண்ணாமலை' படத்தையும் தயாரிக்கும். நீ, கதையை, காட்சியை சொன்ன மாதிரியே படம் பிடிச்சா, 'திருமலை' மினிமம் 100 நாள் ஓடிடும்' என்று என்னிடம் சொன்னார். அது மாதிரியே நானும் படமெடுத்துக் கொடுத்தேன்.

thirumalai vijay
thirumalai vijay

’திருமலை’ படம் தீபாவளிக்கு ரிலீஸ்னு ப்ளான் பண்ணிட்டோம். தீபாவளி கொண்டாடத்தோடு தியேட்டருக்கு வர்ற ஆடியன்ஸ், திரையிலும் தீபாவளியைத்தான் எதிர்பார்ப்பான். அந்த ஆடியன்ஸுக்காக சில விஷயங்களைச் சேர்த்தேன். அதுபோக, அதே தீபாவளிக்குத்தான் அஜித்தின் ’ஆஞ்சநேயா’, அர்ஜூனின் ’ஒற்றன்’, பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடித்த ’பிதாமகன்’னு பல ஸ்டார்ஸ் படம் ரிலீஸானது. இந்தக் கடுமையான ரேஸ்ல எங்க படம் ஜெயிக்கணும்னு சில விஷயங்களைச் சேர்த்தோம். இப்படி முழுக்க முழுக்க எங்க படம் ஜெயிக்கணும்கிற சுய நலத்தோடு எடுத்த படம்தான், ’திருமலை’.’’

'திருமலை'யில் விஜய், ரகுவரன் காம்பினேஷன் எப்படி?

’’நான் கையில் மாட்டியிருந்த வளையம் தொடங்கி, காலில் மாட்டியிருந்த சிவப்பு கலர் ஷூ வரைக்கும் எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு, ’திருமலை’ கேரக்டராகவே மாறிவிட்டார், விஜய்சார். ஒவ்வொரு காட்சியிலும் நான் சொன்ன மாதிரியே நடித்துக்காட்டி பக்காவாக ஒத்துழைச்சார். தினமும் படப்பிடிப்புக்கு தன்னுடைய 567 எண் கொண்ட காரில்தான் வருவார். 'திருமலை' படத்தில் இடம்பெற்ற மஞ்சள் நிற பல்சர் பைக் நம்பரை அதே 567 என்று வைத்திருந்தேன். அந்த பைக் இப்போதும் விஜய்சார் வீட்டில் பத்திரமாக இருக்கிறது. ரகுவரன் நடித்த 'தயா' படத்தில் நான்தான் அசோஸியேட் டைரக்டர். அவருக்கு வசனம் எல்லாம் சொல்லிக்கொடுப்பேன். 'திருமலை' படத்துக்கு ஒப்பந்தம் செய்தபோதும் டைரக்டர் வேறு யாரோ என்றும், என்னை அசோஸியேட் டைரக்டராகவே நினைத்து இருக்கிறார். படப்பிடிப்புக்கு வந்த மூன்று நாள்கள் என்னிடம் முகம்கொடுத்தே பேசவில்லை. ஒருநாள், விஜய்க்கு நான் டயலாக் சொல்லும் விதத்தைப் பார்த்து, தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, நெகிழ்ந்துபோய் என்னிடம் ஸாரி கேட்டுவிட்டு, பிரமாதமாக நடித்துக்கொடுத்தார்.’’

’ஆதி' திரைப்படம் கற்றுக்கொடுத்த பாடம்?

vijay and ramana
vijay and ramana

’’முதலில் தெலுங்கு படத்தை ரீ-மேக் செய்ய ஒப்புக்கொண்டது தப்பு. ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது, ஒரிஜினல் படத்தைப் போலவே அச்சு அசலாக ஒரே காட்சியைப் படமாக்க வேண்டும் என்பதுதான் ஃபார்முலா. நான் அதைத் தாண்டி, எனக்கு கிரியேட்டிவ்வாகத் தோன்றிய சில விஷயங்களை 'ஆதி'யில் படமாக்கினேன். விஜய்யின் ' ஆதி' படமும் அஜித்தின் 'பரமசிவம்' படமும் ஒரே நாளில் ரிலீஸானது. 'ஆதி' விஜய்யின் சொந்த பேனர் படமென்றாலும் இரண்டு படத்துக்கும் ஒரே இசையமைப்பாளர், ஒரே கேமரா மேன், ஒரே குழு என்கிற விஷயத்திலும் தவறு நடந்தது. 'கில்லி', 'திருப்பாச்சி' போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்பு, 'ஆதி' படத்துக்கு இருந்தது. ஏற்கெனவே, 'ஆதி' படத்துக்கு தமிழகம் முழுக்க உள்ள தியேட்டர்களில் டிக்கெட் ரிசர்வ் செய்யப்பட்டிருந்த நேரத்தில், 12 மணி நேரம் தாமதமாக வெளிவந்ததால், தவறான பரப்புரை செய்யப்பட்டது. ' ஆதி' படத்தை ரிலீஸுக்கு முன்பு பார்த்தபோது, கடைசி ஆறு ரீல்களில் டப்பிங் பேசிய வார்த்தைகளுக்கும், உதட்டசைவுக்கும் வித்தியாசம் தெரிந்ததால், அதைச் சரிசெய்ய 12 மணிநேரம் தாமதமாக வெளியானது.’’

தனுஷ் நடித்த' சுள்ளான்' தோல்வி அடைந்தது ஏன்?

dhanush
dhanush

‘’சினிமா உலகத்தில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், ஒரு வெற்றியைத் தாங்க முடியாது. ஏனென்றால், உதவி இயக்குநராக இருந்தபோதும், கோ- டைரக்டராக வேலைபார்த்தபோதும் ஏகப்பட்ட ஏமாற்றங்களைச் சந்தித்து பழக்கப்பட்டிருப்பார்கள். வெற்றியை சந்தித்தே பழக்கப்படாததால், அதை தாங்கிக்கொள்ளும் திறன் இல்லாமல் தவிக்க நேரிடுகிறது. ' திருமலை' வெற்றி எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஏற்கெனவே, 'திருடா திருடி', 'காதல் கொண்டேன்' படங்களில் தனுஷ் நடிப்பு பிடித்திருந்தது. அதன்பிறகு, 'புதுக்கோட்டை சரவணன்' படப்பிடிப்பில் தனுஷைப் பார்த்தேன். புரூஸ்லி ஸ்டைலில் இருந்த அவரது உடல்வாகைப் பார்த்தவுடன்,' சுள்ளான்' படத்தில் ஒப்பந்தம்செய்தேன். 'திருமலை' வெற்றிக்கு எப்படி சொந்தம் கொண்டாடினேனோ அதுபோல 'சுள்ளான்' படத் தோல்விக்கு 100 சதவிகிதம் ரமணாவே காரணம். தனுஷோ, தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரோ எந்த விதத்திலும் காரணமல்ல. எனக்கு கேன்சருக்கு சிகிச்சை கொடுத்த டாக்டர், 'மனுஷனுக்கு நம்பிக்கை தேவைதான். ஆனால், அதீத நம்பிக்கை கூடவே கூடாது' என்று சொன்னார். அதுபோல, ' சுள்ளான்' தோல்விக்கு அந்தப் படத்தின்மீது நான் வைத்திருந்த அதீத நம்பிகையே காரணம்.’’

உங்கள் வீட்டிற்கு வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் விஜய் வந்தாராமே..?

’’2007-ம் ஆண்டு நாசர் சார், கமீலா நாசர் தயாரித்த 'குதிரை' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டி ருந்தேன். ஒருநாள், க்ளைமாக்ஸ் காட்சி எடுத்துக்கொண்டி ருந்தபோது, என் குரலில் மாற்றம் ஏற்பட்டது. அப்போலோவில் சோதித்தபோது, குரல்வளையில் சத்தம்வரும் இடத்தில் கேன்சர் என்று சொல்லி என்னுடைய டெத் சர்டிஃபிகேட்டை தேதி குறிக்காமல் கையில் கொடுத்தனர். எனக்கு மனசே வெறுத்துவிட்டது. என்னுடைய காரை நீலாங்கரையில் இருந்து ஒரு சிக்னலிலும் நிற்காமல் வேகமாக ஓட்டிவந்தேன். 140 கி.மீ வேகத்தில் ஜெமினி மேம்பாலத்தின் அடியில் உள்ள குதிரை சிலையில் மோதும் திட்டத்தோடு காரை ஓட்டிவந்த நான், திடீரென திட்டத்தை மாற்றி வீட்டுக்குப் போனேன். அடுத்து பிரகாஷ்ராஜ், தரணி, ராதாமோகன், விஜி என்று நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினேன். அதன்பின்னர், சாந்தோமில் பயங்கர மழை பெய்து வெள்ளக்காடாக இருந்தது. என் வீட்டுக்குப் போனேன்; திடீரென விஜய்சார் போன்செய்தார்.

ramana and vijay
ramana and vijay

எதிர்முனையில் பேசிய என் குரலைக் கேட்டுவிட்டு, 'என்ன ரமணா எஸ்.ஜே.சூர்யா மாதிரி மிமிக்ரி பண்றீங்களா' என்று கேட்டார். ‘சார், எனக்கு கேன்சர்னு டாக்டர் சொல்லியிருக்கார்' என்று சொல்ல, ' உனக்கென்ன லூஸா...' என்று திட்டிவிட்டு, 'இப்போ எங்கே இருக்கே' எனக்கேட்டுவிட்டு போனை துண்டித்துவிட்டார். அடுத்த 40 நிமிஷத்தில் சங்கீதாவோடு வீட்டுக்கு வந்துவிட்டார். கேன்சர் ட்ரீட்மென்ட் செய்ய லண்டனுக்கு போகச்சொல்லி வற்புறுத்தினார்; நான்தான் மறுத்துவிட்டேன்.

ramana family
ramana family
Photo: Rajasekhar

என் உலகமே சூன்யமானது. அப்போது, என் பெரிய மகள் ஆறாம் வகுப்பும், இளையவர் முதல் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தனர். தினசரி வீட்டைவிட்டு கிளம்பும்போது, வாசலிலேயே எமன் பாசக்கயிற்றோடு காத்துக்கொண்டிருப்பதை நான் பார்த்துக்கொண்டே சென்றேன். இதோ, இப்போது என் பெரிய மகள் ஜர்னலிஸம் முதல் வகுப்பில் தேர்வாகி, பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் வேலைபார்த்துக்கொண்டிருக்கிறார். சின்னப்பெண் 10-ம் வகுப்பு பாஸாகி இருக்கிறார்.’’

உங்களது இந்த பத்தாண்டு கால இடைவெளி எப்படி?

’’எனக்கு கேன்சர் ஆபரேஷன் செய்தபோதே, 'இனிமேல் உங்களால் பேசமுடியாது' என்று சொன்னபோது உடைந்துபோனேன். நான் இரண்டரை வருஷம் பேசாமலே இருந்தேன். நான் பழைய நிலைமைக்கு வருவதற்கு ஐந்து ஆண்டுகளானது. இப்போது, என்னால் முன்புபோல ஆறு மணிநேரம் தொடர்ந்து பேசமுடியும். என் வாழ்க்கையை கே.மு.ரமணா, கே.பி.ரமணா என்று பகுத்திருக்கிறேன்.’’

அடுத்து விஜய், அஜித்தை வைத்து இயக்குவீர்களா?

ajith and vijay
ajith and vijay

‘’இது ரொம்ப கஷ்டமான கேள்வி. இதற்கு இரண்டு விதமான பதில்கள் சொல்ல வேண்டும். உங்கள் கேள்விக்கு பொய் சொல்லட்டுமா? உண்மை சொல்லட்டுமா? முதலில் பொய் சொல்கிறேன். என்னிடம் அவர்களுக்கு என்று ஒரு கதையும் இல்லை. இப்போது உண்மையைச் சொல்கிறேன். ரஜினி சார், மம்முட்டி சார் சேர்ந்து நடித்த 'தளபதி' மாதிரி, விஜய்சார், அஜித்சார் இருவரும் இணைந்து நடிக்கும் படத்துக்கான கதை பக்காவாக ரெடியாக இருக்கிறது. இருவருக்கும் ஒரு சீன்கூட விஞ்சாமல் இணையான கதாபாத்திரத்தை உருவாக்கி அதற்கு ' துருவங்கள்' என்று பெயர் சூட்டி இருக்கிறேன். விஜய் சாருக்கு தனியாகவும், அஜித் சாருக்கு தனியாகவும் கதைகள் தயாராக இருக்கிறது. எனக்கு கேட்கத் தெரியும், கெஞ்சத் தெரியாது. அதுதான் என்னுடைய பலவீனம். கடந்த 8 ஆண்டுகளில், 14 கதைகள் எழுதி பைண்டிங் செய்து புத்தகமாக ஆஃபீஸ் அலமாரியில் வைத்திருக்கிறேன். 'திருமலை' இயக்கியபோது என்ன உற்சாகத்தோடு ரமணா இருந்தானோ அதே தெம்போடு, புத்துணர்ச்சியோடு வந்துவிட்டான்.’’