Published:Updated:

``விக் வாங்க காசில்ல... அப்ப வந்த ஐடியாதான் படத்தின் டைட்டிலுக்கே காரணம்!'' #6YearsOfMundasupatti

முண்டாசுப்பட்டி
முண்டாசுப்பட்டி

`முண்டாசுப்பட்டி' படம் வெளியாகி ஆறு வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இயக்குநர் ராம்குமாரிடம் பேசினேன்.

குறும்படமாக இருந்து சினிமாவாக மாறி நல்ல வெற்றி பெற்ற வெகுசில படங்களில் `முண்டாசுப்பட்டி' மிக முக்கியமானது. கோபி, கலைவாணி, அழகுமணி, முனீஷ்காந்த் என அனைத்து கேரக்டர்களுமே படத்தின் தூண்கள். தவிர, டெக்னிக்கலாகவும் படம் மிகவும் ஸ்ட்ராங். அந்தப் படம் வெளியாகி ஆறு வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இயக்குநர் ராம்குமாரிடம் பேசினேன்.

`` `நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில நிறைய குறும்படங்கள் பண்ணியிருப்பீங்க. அதுல `முண்டாசுப்பட்டி'யை படமாக்க என்ன காரணம்?"

``இந்த ஷார்ட் ஃபிலிம்ல ஒரு படத்துக்கான எல்லா விஷயமும் இருக்குனு நிறைய பேர் சொன்னாங்க. மதன் சாரும் அதைத்தான் சொன்னார். ஆனா, அந்தச் சமயத்துல இதைப் படமா பண்ணலாம்னு நான் யோசிக்கலை. `காதலில் சொதப்புவது எப்படி?' படத்தைப் பார்த்தவுடன் மதன் சார் சொன்னது ஞாபகம் வந்தது. அப்புறம்தான், `முண்டாசுப்பட்டி'யை படமா பண்ணலாம்னு முடிவெடுத்தோம். நான், `இன்று நேற்று நாளை' ரவிக்குமார், `மரகத நாணயம்' சரவணன், `ஆலம்பனா' விஜயகுமார்னு எல்லோரும் இந்தக் கதையை சினிமாவா மாத்துறதுக்காக நிறைய பேசினோம். அப்படி பேசிப்பேசி சின்ன சின்ன லேயர்கள், கேரக்டர்கள் உருவாக்கின பிறகுதான் பெரிய படத்துக்கான கதையா இது மாறியது."

``இது படமா வொர்க் அவுட் ஆகுங்கிற நம்பிக்கை எப்போ வந்தது?"

முண்டாசுப்பட்டி
முண்டாசுப்பட்டி

``ஷார்ட் ஃபிலிம்ல இருக்கிற க்ளைமாக்ஸ் சீன்தான். அதனால ஷார்ட் ஃபிலிமுடைய ஆரம்பத்தையும் முடிவையும் அப்படியே வெச்சுக்கிட்டு நடுவுல நிறைய லேயர்களை உருவாக்கலாம்னு பிளான் பண்ணோம். குறிப்பா சொல்லணும்னா அந்த `வானமுனி' விண்கல் கான்செப்ட், ஜமீன் கேரக்டர்... இதெல்லாம் கோர்வையா வந்தவுடன்தான் இது சினிமாவா ஜெயிக்கும்னு மிகப்பெரிய நம்பிக்கை வந்தது."

``விஷ்ணு விஷாலுக்கு முன்னாடி யார்கிட்டேயாவது கதையைச் சொன்னீங்களா?"

``இதை முதன்முதல்ல மிர்ச்சி சிவாவுக்குதான் சொன்னேன். காளி வெங்கட் சிவாகூட `கலகலப்பு' படத்துல நடிச்சுகிட்டு இருந்தார். அப்போ அவர்கிட்ட `முண்டாசுப்பட்டி' ஷார்ட் ஃபிலிம் பத்தி பேசியிருக்கார். அந்தப் படத்துக்கான ஷூட்டிங்காக கோபிசெட்டிபாளையம் வந்தபோது அவரை சந்திச்சு, `அந்தக் கதையை சினிமாவுக்கான கதையா மாத்திக்கிட்டு இருக்கேன். நீங்க பண்ணா நல்லா இருக்கும்னு தோணுது'னு சொன்னேன். அப்போ கதையை முழுமையா எழுதலை. எந்தத் தயாரிப்பாளரையும் அணுகலை. ஆனா, சிவா ரொம்ப ஆர்வமா இருந்தார். அப்புறம் வழக்கம்போல ப்ரீ புரொடக்‌ஷனுக்கு அதிக நேரம் தேவைப்பட்டுச்சு. சிவாவும் அடுத்தடுத்து படங்கள் பண்ணிக்கிட்டு இருந்தார். அதனால பண்ண முடியாமல் போயிடுச்சு."

``போட்டோ எடுத்தா இறந்துடுவாங்கன்னு ஊருக்குள்ள மூடநம்பிக்கை இருக்கு ஓகே. அந்த ஊருக்கு `முண்டாசுப்பட்டி'னு ஏன் பெயர் வெச்சீங்க?"

முண்டாசுப்பட்டி
முண்டாசுப்பட்டி

``80-களில் நடக்கிற கதை. அதுக்கு கேமரா, டிரஸ், வண்டினு அந்தக் காலத்துல பயன்படுத்தின பொருள்கள் வேணும். அதைவிட முக்கியமானது விக். கோபி, அழகுமணி இந்தக் கேரக்டருக்கு விக் வாங்குறதுக்கே ஒரு நாளுக்கு 600 ரூபாய் ஆகும். அப்போ அந்த ஊர் மக்களுக்கும் விக் வைக்கணும்னா 50 விக் வாங்கணும். அதுக்கு ஷார்ட் ஃபிலிம் பண்ணும்போது பட்ஜெட் இல்லை. அதனால எல்லோருக்கும் முண்டாசு கட்டிவிட்டு ஊருக்கே `முண்டாசுப்பட்டி'னு பெயர் வெச்சுட்டேன். இது சினிமாவா மாறும்போது வானமுனி சாமிக்கே முண்டாசு கட்டிவிட்டு, அதனால ஊர்ல இருக்கிற எல்லோரும் முண்டாசு கட்டுறாங்கன்னு செட் பண்ணிட்டேன்."

``கோபி, கலைவாணி கேரக்டர்கள், வசனங்கள் பெரிய அளவுல கவனிக்கப்பட்டுச்சே..."

முண்டாசுப்பட்டி
முண்டாசுப்பட்டி

``விஷ்ணு, நந்திதா ரெண்டு பேரும் சூப்பரா அந்தக் கேரக்டரை வெளிக்கொண்டுவந்தாங்க. யார்கிட்டேயும் அசிஸ்டென்ட்டா வேலை செய்யாததுனால எங்களுக்கு என்ன ஈஸியோ அதுதான் ஃபிலிம் மேக்கிங். அது விஷ்ணுவுக்கு செட்டாக ஒரு வாரமாச்சு. இந்தப் படத்துல ஏற்பட்ட ஒரு புரிதல்தான் எங்களுக்குள்ள `ராட்சசன்'ல வொர்க் அவுட்டாச்சு. நந்திதா அந்தக் கிராமத்து பொண்ணாவே இருந்தாங்க. எனக்குப் பெரிசா எந்த வேலையும் வைக்கலை. வசனங்கள் பேசப்பட்டதுக்கு காரணம் கவுண்டமணி சாரும் மணிவண்ணன் சாரும்தான். அவங்க ரெண்டு பேருடைய பெரிய ரசிகன் நான். அந்தத் தாக்கம்தான் வசனங்கள்ல இருக்கும்."

`முண்டாசுப்பட்டி'னு சொன்னவுடன் முதல்ல ஞாபகத்துக்கு வர்றது ராமதாஸுடைய முனீஷ்காந்த் கேரக்டர்தான். அதுவே அவர் அடையாளமா மாறியிருக்கு. அதை எப்படிப் பார்க்குறீங்க?"

``ஷார்ட் ஃபிலிம்ல நடிச்சவரை டப்பிங் கொடுக்கிறதுக்கு சென்னை வரவைக்க முடியலை. அந்தக் கேரக்டருக்கு டப்பிங் கொடுக்க ஒருத்தர் வேணும்னு சொன்னவுடன் ராமதாஸை அறிமுகப்படுத்தி வெச்சார், காளி வெங்கட். டப்பிங் கொடுக்கும்போது முனீஷ்காந்த் கேரக்டருக்கு உயிர் கொடுத்தார் ராமதாஸ். நான் எழுதினதை சூப்பரா தன்னுடைய குரல் மூலமா கொண்டுவந்துட்டார். டப்பிங்ல செமயா என்ஜாய் பண்ணோம். படமா பண்ணும்போது அந்தக் கேரக்டருக்கு நிறைய பேரை ஆடிஷன் பண்ணிப் பார்த்தோம். ஆனா செட்டாகலை; இவரும் ஞாபகத்துக்கு வரலை. சரி ஷார்ட் ஃபிலிம்ல நடிச்சவரையே நடிக்க வைக்கலாம். டப்பிங் ராமதாஸை கொடுக்க வைக்கலாம்னு நினைச்சோம். ராமதாஸ்கிட்ட நாளைக்கு ஆபீஸ் வாங்க. உங்க குரலை நாம எப்படிப் பயன்படுத்தலாம்னு பார்ப்போம்'னு சொன்னேன். மறுநாள் அவரை வாய்ஸ் கொடுக்க சொன்னா நடிச்சே காட்டிட்டார். சூப்பரா பண்ணிட்டார். இவரே சரியா இருப்பார் போலனு அந்தக் கேரக்டருடைய எல்லா சீனையும் கொடுத்து ஆடிஷன் பண்ணோம். கலக்கிட்டார். அப்போவே `நீங்கதான் முனீஷ்காந்த்'னு ராமதாஸ்கிட்ட சொல்லிட்டேன். சினிமாவுக்கு வரணும்னு ஆசையோட இருக்கிறவங்களுக்கு டைட்டில் கார்டுல அவங்க பெயரை பார்க்கும்போது வர்ற சந்தோஷத்துக்கு அளவேயில்லை. அப்படி நாம உருவாக்கின ஒரு கேரக்டர் ஒருத்தருடைய அடையாளமா மாறும்போது உண்மையிலேயே ரொம்ப சந்தோஷம். ராமதாஸ் நடிச்ச மத்த படங்களுடைய டைட்டில் கார்டுல முனீஷ்காந்த்னு வரும்போது ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கும். அந்தப் பெயரைப் பார்த்து நாம பெருமைப்பட்டாலும் அதுக்கு முழு கிரெடிட்டும் அவருக்குதான்."

``யார்கிட்டயும் உதவி இயக்குநரா வேலை செய்யாததுனால ஸ்பாட்ல நடிகர்களை கையாளுறது எவ்ளோ சிரமமா இருந்தது?"

முண்டாசுப்பட்டி
முண்டாசுப்பட்டி

``மொத்தம் 57 நாள் ஷூட்டிங். அதுல முதல் வாரம் முழுக்க செம பயமா இருந்தது. ஷார்ட் ஃபிலிம் பண்ணும்போது நடிகர்களோட சேர்த்து மொத்தமே 10 பேர்தான் இருப்போம். ஆனா, சினிமா ஷூட்டிங்ல அப்படியில்லை. 100 பேர் இருப்பாங்க. பிரசாத் யூனிட் வண்டி, கிரேன், லைட், கட்டர்னு எல்லாத்தையும் முதன்முதல்ல அப்போதான் பார்த்தேன். நான் மட்டுமல்ல கேமராமேன், ஆர்ட் டைரக்டர் எல்லோருமே புதுசுதான். பயத்துல `யார்கிட்டாவது வொர்க் பண்ணிட்டு வந்திருக்கலாமோ'னுகூட தோணுச்சு. ஒரு வாரத்துக்குப் பிறகு பழகிடுச்சு. ஒளிப்பதிவாளர் ஷங்கர், ஆர்ட் டைரக்டர் கோபினு எல்லோரும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க."

``மறக்கமுடியாத சம்பவம்?"

``கோபியுடைய ஸ்டூடியோவுக்கு எதிர்ல இருக்கிற ஒரு வீடு 2013-ல இருக்கிற மாதிரி கட்டின புது வீடு. ஆனா, கதை 80-களில் நடக்குது. பெரிய தப்பா தெரியுமேன்னு டென்ஷனாகிடுச்சு. கேமராமேன் ஷங்கருடைய சொந்த ஊர் அது. அவர்கிட்ட சொல்லி அந்த வீட்டுக்காரங்கக்கிட்ட பேசி அதை நாலு நாள்ல 1950, 1960ல கட்டின பழைய வீடு மாதிரி மாத்திட்டார் கோபி. வேற இடத்துல ஷூட்டிங் முடிச்சுட்டு இந்த ஏரியாவுக்கு வந்தா எனக்கு அடையாளமே தெரியலை."

``ஹாலிவுட் ஸ்டூடியோ ஓகே. அதுக்கு ஶ்ரீ சேர்க்கணும்னு எப்படி தோணுச்சு?"

முண்டாசுப்பட்டி
முண்டாசுப்பட்டி

``மொக்கை ஸ்டூடியோ. ஆனா, அதுக்கு பெயர் ஹாலிவுட். அதுல ஶ்ரீ சேர்த்து `ஶ்ரீ ஹாலிவுட் ஸ்டூடியோ'னு நக்கலா வைக்கலாம்னு சும்மா தோணுன ஐடியாதான் அது. இப்போதான் ஊர் பெயரெல்லாம் மாத்திட்டு இருக்கிறதுக்கு ஶ்ரீரங்கத்தை திருவரங்கம்னு மாத்தணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. அதைப் பார்த்தவுடன் எங்களுடைய `ஶ்ரீ ஹாலிவுட் ஸ்டூடியோ' ஞாபகத்துக்கு வந்தது."

``தனுஷ் உங்ககிட்ட `முண்டாசுப்பட்டி' பத்தி பேசியிருக்காரா, தனுஷுக்கு நீங்க பண்ற படம் எந்தளவுல இருக்கு?"

``தனுஷ் சார்கிட்ட புது படத்தோட கதையை கமிட் பண்றவரைக்கும் அவர் `முண்டாசுப்பட்டி', `ராட்சசன்' ரெண்டு படத்தையும் பார்க்கலை. என் படங்களைப் பார்க்காமல் நான் சொன்ன கதையை மட்டுமே நம்பி தனுஷ் சார் ஓகே சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. ரெண்டு படத்தையும் பார்த்துவிட்டு ஒருநாள் `உங்களுடைய ரெண்டு படத்தையும் பார்த்தேன். சூப்பரா இருந்தது. குறிப்பா, `முண்டாசுப்பட்டி' ஹியூமர் செம'னு எனக்கு மெசேஜ் பண்ணார். அந்தப் படத்துடைய ஸ்கிரிப்ட்டை எழுதிக்கிட்டே இருக்கேன். நல்லா வந்துகிட்டு இருக்கு. நிச்சயம் முக்கியமான படமா இருக்கும்."

அடுத்த கட்டுரைக்கு