Published:Updated:

``கர்ப்பமா இருக்கேன்; டயர்டா இருக்கு, ஆனாலும் பிரசாரத்துக்குப் போகணும்!" - செளந்தர்யாவின் கடைசி நாட்கள்

சௌந்தர்யா
சௌந்தர்யா

அவர் இறந்து 16 ஆண்டுகள் ஆனாலும் செளந்தர்யாவின் நினைவு அவர் ரசிகர்களைவிட்டு அகலவில்லை. செளந்தர்யாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும், செளந்தர்யாவின் வழிகாட்டியாக விளங்கியவருமான இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் பேசினேன்.

தென்னிந்தியா முழுக்க அனைத்து மொழி மக்களாலும் கொண்டாடப்படும் நடிகைகள் மிகவும் குறைவு. அந்த வகையில் சாவித்ரிக்கு அடுத்து தென்னிந்தியா முழுக்க சூப்பர் ஹிட் நாயகியக லைக்ஸ் அள்ளியவர் செளந்தர்யா. கர்நாடகாவில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிப்படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகையாகக் கொண்டாடப்பட்டவர். கரியரின் உச்சத்தில் இருந்தபோதே திடீரென இதே ஏப்ரல் 17-ம் தேதி 2004-ம் ஆண்டு விமான விபத்தில் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 31. அவர் இறந்து 16 ஆண்டுகள் ஆனாலும் செளந்தர்யாவின் நினைவு அவர் ரசிகர்களைவிட்டு அகலவில்லை. செளந்தர்யாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும், செளந்தர்யாவின் வழிகாட்டியாக விளங்கியவருமான இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் பேசினேன்.

`` `பொன்னுமணி' படத்துக்கான ஹீரோயின் செலக்‌ஷனுக்காக நாலு பொண்ணுங்க வந்திருந்தாங்க. அதில் பெங்களூரிலிருந்து வந்திருந்த ஒரு பொண்ணுதான் செளந்தர்யா. நாலு பேரையும் போட்டோ ப்ளஸ் வீடியோ ஷூட் பண்ணிட்டோம். ஆனா, ஹீரோயினை செலக்ட் பண்ணாமலேயே படத்துக்கு பூஜை போட்டுட்டு பொள்ளாச்சிக்கு ஷூட்டிங் போயிட்டோம். சென்னைக்குத் திரும்பிவந்து நாலு பொண்ணுங்களோட போட்டோ ஷூட், வீடியோ ஷூட்டை பார்த்தேன். நாலு பேர்ல செளந்தர்யாவோட எக்ஸ்பிரஷன்ஸ் கொஞ்சம் வெள்ளந்தியா இருக்கவே இவங்களையே ஹீரோயினா போட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

ஆர்.வி.உதயகுமார்
ஆர்.வி.உதயகுமார்

ஆனா, அண்ணன் சிவக்குமார், ஆச்சி மனோரமோ, கார்த்திக் இவங்களோட நடிக்கணுமேனு யோசிச்சதும் கொஞ்சம் பயம் வந்துடுச்சு. கொஞ்சம் சொதப்பினாலும் ஷூட்டிங் திட்டமிட்டபடி நடக்காதே, சீனியர்ஸோட கால்ஷீட் திரும்பக் கிடைக்காதேன்னு ஒரே கவலை.

செளந்தர்யாவைப் பொள்ளாச்சிக்கு வர வெச்சு முதல்நாள் கார்த்திக் - செளந்தர்யா காம்பினேஷன் காட்சிகள் எடுக்கிறேன். அதாவது வயற்காட்டில் கார்த்திக்கிடம் செளந்தர்யா முத்தம் கேட்கிற காட்சிதான் முதல் காட்சி. இப்போதுபோல அப்போது மானிட்டர் எதுவும் கிடையாது. அதனால ஷூட் பண்ண ஃபிலிம்களை சென்னைக்கு அனுப்பிவெச்சி, அவசர அவசரமா ஃபிலிம்சுருளைக் கழுவி எடுத்துட்டுவரச்சொல்லி பொள்ளாச்சில இருந்த ஒரு தியேட்டர்ல ரஷ் பார்த்தேன். செளந்தர்யா நடிச்ச காட்சிகளைப் பார்த்த பிறகுதான் எனக்கு உயிரே வந்தது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் ஒவ்வொரு காட்சியைப்பத்தி விளக்கும்போதும் அதைக் கற்பூரம் மாதிரி கப்புனு பிடிச்சுக்கிட்டு செளந்தர்யா நடிக்கிறதைப் பார்த்துட்டு சிவகுமார் அண்ணன் அசந்து போயிட்டார். `உதயகுமார் நீ வேணா பாரேன்... இவ சினிமாவுல பெரிய ரவுண்டு வருவா'னு அப்பவே ஆருடம் சொன்னார். அடுத்து ஆச்சி மனோரமா `தம்பி இந்தச் சின்னப்பொண்ணு லேசுப்பட்ட ஆளு கிடையாது சினிமாவுக்குக் கிடைச்ச சின்ன சாவித்திரி'னு சொன்னாங்க. `பொன்னுமணி' படத்துக்குக் கதை எழுதியது என்னோட மனைவி சுஜாதா. அதனால செளந்தர்யா அடிக்கடி போன்பண்ணி என் மனைவிகிட்ட பேசிட்டிருப்பாங்க. `பொன்னுமணி ' படத்தோட இமாலய வெற்றி ஆந்திரா வரை பரவிடுச்சு. அப்போ சிரஞ்சீவி ஹீரோவா நடிக்கிற படத்துக்குப் புதுசா ஹீரோயின் வேணும்னு தேடிக்கிட்டு இருந்தாங்க `பொன்னுமணி' பார்த்துட்டு ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியா நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு. அப்ப செளந்தர்யாவோட அப்பா, அம்மா ரெண்டுபேரும் ``சினிமாவுல புதுசா ஒரு படத்துல நடிக்கறதுக்கு முன்னாடி உதயகுமார் சார்கிட்டே அட்வைஸ் கேட்ட பிறகுதான் நடிக்கணும்''னு மகளுக்கு அன்புக்கட்டளையே போட்டிருந்தாங்க. அதனால ஒவ்வொரு படத்துல நடிக்க முடிவு பண்றதுக்கு முன்னாடியும் என்கிட்ட கேட்பாங்க. ரஜினிசார் நடிச்ச `அருணாச்சலம்' படத்துல அவருக்கு ஜோடியா நடிக்கிறதுக்கு செளந்தர்யாகிட்ட கேட்டிருக்காங்க. ஆனா, அப்போ செளந்தர்யா தெலுங்குல செம பிஸி. 95-97 காலகட்டத்துல தெலுங்கில வருஷத்துக்கு 10 படம் செளந்தர்யா நடிச்சி ரிலீஸாகும். அதனால ரஜினி படத்துக்கு கால்ஷீட் இல்லைனு சொல்லிட்டாங்க. `அருணாச்சலம்' ரஜினிசாரோட சொந்தப்படம். அதனால ஒருநாள் அவரே எனக்கு போன்பண்ணி `செளந்தர்யா கால்ஷீட் வேணும் உதய்'னு கேட்டார். அடுத்த நிமிஷமே செளந்தர்யாவுக்கு போன் போட்டேன். `நீ ரஜினிசார் படத்துக்கு கால்ஷீட் இல்லைனு சொன்னியாமே... அவர் எவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார்? அவங்க போன் பண்றதுக்கு முன்னாடி நீயே போன் பண்ணி கால்ஷீட் கொடுத்துடு'னு கொஞ்சம் சீரியஸாவே சொன்னேன். உடனே செளந்தர்யாவே போன் பண்ணி அருணாச்சலம் படத்துக்கு கால்ஷீட்டை கன்ஃபர்ம் பண்ணிடுச்சு.

சௌந்தர்யா
சௌந்தர்யா

கொஞ்சம் பிரேக்குக்குப் பிறகு தமிழ்ல நான் பண்ண படம் `கற்க கசடற'. விஜய் தம்பி விக்ராந்த், லட்சுமிராய் அறிமுகமான இந்தப் படத்தோட கதையவே முதல்ல வேறுமாதிரி அமைச்சிருந்தேன் அதாவது நான் புரொபஸராவும், செளந்தர்யா அஸிஸ்டென்ட் புரொபஸராவும் நடிக்கிறதா எழுதியிருந்தேன். `கற்க கசடற' படத்தில் நடிக்கறதுக்கு செளந்தர்யா சந்தோஷமா ஓகே சொல்லியிருந்துச்சு. வீட்ல அம்மா, அப்பா விருப்பப்படியே 2003-ல சொந்தக்காரப் பையனையே கல்யாணம் பண்ணுச்சு. ஆனா, கல்யாணத்துக்கு அப்போ எங்களால போக முடியல.

2004-ம் வருஷம் ஏப்ரல் மாசம் 15-ம் தேதி என் மனைவி சுஜாதாக்கு செளந்தர்யாகிட்ட இருந்து போன் வந்துச்சு. `அண்ணி, இப்பத்தான் வாசு சாரோட `ஆப்தமித்ரா' படத்துல நடிச்சு முடிச்சேன். இப்போ ரெண்டு மாசம் கர்ப்பமா இருக்கேன். உடம்பு ரொம்ப டயர்டா இருக்கு. ஆனா, எலெக்‌ஷன் வந்துடுச்சு. அண்ணன் கட்சி பிரசாரத்துக்குக் கூப்பிடுறார். போய்தான் ஆகணும். ஆனா, அதுக்கப்புறம் ரெஸ்ட்தான். உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். நிச்சயமா சென்னைக்கு வந்து உங்க வீட்ல தங்குவேன்'னு ரொம்ப நேரம் மனம் விட்டுப் பேசியிருக்கு. போன்ல பேசி முடிச்சதும் இந்த விஷயங்களை என் மனைவி சொன்னாங்க. அடுத்தநாள், ஏப்ரல் 16-ம் தேதி திரும்ப செளந்தர்யாகிட்ட இருந்து எனக்கு போன். `சார், உங்களை என் வாழ்க்கைல மறக்க மாட்டேன். சினிமால நீங்க எனக்குக் கொடுத்த வாய்ப்பை எப்பவும் நினைச்சுக்கிட்டே இருப்பேன்'னு ரொம்ப நேரம் என்னென்னவோ பேசிட்டிருந்துச்சு. `உனக்கு என்ன ஆச்சுமா... ஏன் இப்படிலாம் பேசுற'னு நானும் எப்பவும்போல் பேசிமுடிச்சு போனை வெச்சுட்டேன். மறுநாள் `கற்க கசடற' படத்தோட பூஜை அழைப்பிதழ் கொடுக்க சத்யராஜ் சார் வீட்டுக்குப் போனேன். என்னை வாசலில் பார்த்தவுடனே பதறிப்போய் ஓடிவந்து என் கையைப் பிடிச்சுக்கிட்டுக் கலங்கி நின்னார்.

சௌந்தர்யா
சௌந்தர்யா

'`ஏங்க என்னாச்சு'னு நான் கேட்கறதுக்கு முன்னாடியே `என்னங்க செளந்தர்யா செத்துப் போச்சுங்க...'னு சொன்னவுடனே நான் அப்படியே நொறுங்கிப் போயிட்டேன். சின்னப் பொண்ணா இருந்த செளந்தர்யாவை `பொன்னுமணி' படத்துல அறிமுகம் செஞ்சது, தெலுங்கு சினிமால அந்தப் பொண்ணு ஜெயிச்சது, அம்மா சொன்ன பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுனு இப்படி ஒவ்வொரு நினைவும் மாறிமாறி என் கண் முன்னாடி வந்துடுச்சு. 1993-ம் வருஷம் ஏப்ரல் 16-ம் தேதி `பொன்னுமணி' ரிலீஸாகி செளந்தர்யா புகழ் கொடிகட்டிப் பறந்தது. 2004-ம் வருஷம் ஏப்ரல் மாசம் 17-ம்தேதி அன்னிக்கு செளந்தர்யா உடம்பில் இருந்து உயிர் பிரிஞ்சிடுச்சு" என மிகவும் எமோஷனல் ஆனார் ஆர்.வி.உதயகுமார்.

அடுத்த கட்டுரைக்கு