Published:Updated:

`` `இன்னுமாடா கமல்  அந்தக்  கோழி சாகலை'னு கேட்பார்  நாகேஷ் சார்!" - சரண்

இயக்குநர் சரண் - நாகேஷ்
இயக்குநர் சரண் - நாகேஷ்

காலம் கடந்தும் மனதில் நிற்கக்கூடிய நடிகர்கள் வெகு சிலர்தான். அதில் மிக மிக முக்கியமானாவர், நாகேஷ். நேற்று (31/1/2020) அவருடைய நினைவு நாள். `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் அவருடன் வேலைபார்த்த அனுபவம் குறித்து நம்மிடையே பகிர்கிறார், இயக்குநர் சரண்.

``சின்ன வயசுல இருந்தே நாகேஷ் சார் மேல அதிகமான ஈர்ப்பு இருந்தது. மனோரமா ஆச்சி, ஜெமினி கணேசன் சார், நாகேஷ் சார் இவங்களைப் பத்தின நிறைய விஷயங்களை என் அம்மா என்கிட்ட சொல்லிட்டே இருப்பாங்க. அம்மாவுடைய ஆசைக்காகவே இவங்க மூணு பேர்கூடவும் வேலை பார்த்திருக்கேன். இதுனால அம்மாவுக்கு கிடைச்ச சந்தோஷத்தை நான் ரொம்பப் பெருசா மதிக்கிறேன்."

நாகேஷ்
நாகேஷ்

``நான் கே.பி சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்திருக்கேன். டயலாக் பேப்பரை என் கையில கொடுத்துதான் ஆர்ட்டிஸ்ட்களுக்கு வசனங்களை சொல்லிக் கொடுக்கச் சொல்வார். எந்த மாதிரி வேணும்னுலாம் கே.பி சார் சொல்ல மாட்டார். ஆனா, நான் சொல்லிக்கொடுக்கிற மாடுலேஷன், பாடி லாங்குவேஜ்லாம் கேரக்டருக்கு சரியா இருக்கும். இதைக் கவனிச்ச கே.பி சார், `நான் எழுதிக்கொடுக்கிறதை, எனக்கு ஏத்த மாதிரியே நடிகர்களுக்கு எப்படிச் சொல்ற'னு கேட்டார். `நீங்க எந்த டயலாக் கொடுத்தாலும் அதை நாகேஷ் சார் பேசினா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிப்பார்ப்பேன். அதைத்தான் ஆர்ட்டிஸ்ட்களுக்கு அப்படியே சொல்லிக்கொடுப்பேன் சார்'னு சொன்னேன். ரசிச்சு சிரிச்சார். `அப்போ, நாகேஷோட எந்த டயலாக்கை கொடுத்தாலும் சரியா பண்ணிடுவ'னு சொல்லிட்டுப் போனார். இப்படிப் பல நேரங்கள்ல என்னோட மானசீக குருவா நாகேஷ் சார் இருந்திருக்கார். அவர்கூட இருக்கும்போது நம்மைச் சுத்தி பாசிடிவ் வைப்ரேஷன் இருந்துட்டே இருக்கும். அவர் பேசுறது, நிக்கிறதுனு எல்லாமே நல்லா இருக்கும்."

`` 'நாகேஷ், அவரோட பையனை உன்கிட்ட உதவி இயக்குநரா சேர்த்துக்கச் சொல்றார்'னு கே.பி சார் ஒரு நாள் போன்ல கூப்பிட்டுச் சொன்னார். `நாகேஷ் சார் பையன்தான் ஏற்கெனவே ஹீரோவாகிட்டாரே... யாரா இருக்கும்'னு யோசிச்சேன். அப்புறம்தான் ஆனந்த்பாபுவைச் சொல்லியிருக்கார்னு தெரிஞ்சது. எனக்கு அப்போ ஆச்சர்யமா இருந்தது. ஏன்னா, ஆனந்த்பாபு ஹீரோவா நடிச்ச `வானமே எல்லை' படத்துக்கு நான் உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். `ஷாட் ரெடி'னு ஆனந்த்பாபுவை நான் பல முறை கூப்பிட்டிருக்கேன். கே.பி சார்கிட்டயே இதைப் பத்தி கேட்டேன். `நடுவுல அவர் எந்தப் படமும் பண்ணலை. அவர் கிரியேட்டிவா வரணும்னுதான் உன்கிட்ட வேலை பார்க்க நாகேஷ் கேட்டிருக்கார்'னு சொன்னார். அப்போ, சொல்ல முடியாத மனநிலையில இருந்தேன். அப்புறம், `இதயத்திருடன்' படத்துல 2-வது ஷெட்யூல் என்கூட ரொம்ப ஆர்வமா வேலைபார்த்தார். நாகேஷ் சார் என்னை நம்பி அவரோட பையனை அனுப்பிவெச்சிருக்கார். இப்போ நினைச்சாலும் ரொம்ப சந்தோஷமா இருக்கு."

`` `இன்னுமாடா கமல்  அந்தக்  கோழி சாகலை'னு கேட்பார்  நாகேஷ் சார்!" - சரண்

``கமல் சார், நாகேஷ் சார்னு ரெண்டு லெஜென்ட்டுகள் `வசூல் ராஜா' படத்தப்போ என்கூட இருந்தாங்க. அதனால, பெரும்பாலான இடங்கள்ல நான்தான் இயக்குநர்ங்கிறதையே மறந்துடுவேன். நாகேஷ் சாரை இந்தப் படத்துக்காக நடிக்கக் கேட்கும்போது, `அதுக்கு என்ன, நடிச்சிட்டா போகுது'னு சொல்லிட்டு வந்துட்டார். ஷாட் அப்போ நம்ம எது சொன்னாலும், `இப்படிப் பேசட்டுமா, இது ஓகேவா இருக்குமா'னு கேட்டுக் கேட்டு நடிச்சுக் கொடுத்தார். நானும் அவர் பக்கத்துல நின்னு ரசிச்சுகிட்டே இருந்தேன். அவர் எப்போ என் பக்கத்துல இருந்தாலும் அவர் கையைப் பிடிச்சிட்டுதான் நிப்பேன். இதைப் பெரிய பாக்கியமாவும், சந்தோஷமாவும் நினைக்கிறேன். அவர் கையில இருக்கிற பவர், கே.பி சாரே என் பக்கத்துல நிக்கிற மாதிரி உணர்வைக் கொடுக்கும். ஒரு நாள், ஷூட்டிங் ஸ்பாட்ல ஃபோர்க்கை வெச்சு கமல் சார் சிக்கனை குத்தி சாப்பிட்டுட்டிருந்தார். `இன்னுமாடா கமல் அந்தக் கோழி சாகாம இருக்கு'னு கேட்டார். இப்படி அவர் உடல் முழுக்க நகைச்சுவை உணர்வு இருக்கும்."

``நாகேஷ் சாரோட இறப்பு எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. மொத்த மக்களுக்குமே அது பெரும் துயரம்தான். இப்போ அவரை நினைச்சாக்கூட, அவரோட காமெடி காட்சிகளை எடுத்துப் பார்க்க ஆரம்பிச்சிடுவேன். இவங்களுடைய சாகா வரமே அதுதான். நாகேஷ் சார் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டவர்'' என்று நெகிழ்ந்தார் இயக்குநர் சரண்.

அடுத்த கட்டுரைக்கு