Published:Updated:

``ஓவியா `களவாணி' மகேசு ஆன பின்னணி... செம ட்விஸ்ட்!'' - இயக்குநர் சற்குணம் #10YearsofKalavani

களவாணி திரைப்படம் வெளிவந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. அத்திரைப்படத்தின் சுவாரஸ்யங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள அதன் இயக்குநர் சற்குணத்திடம் பேசினேன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``களவாணி' படத்தோட கதை விமலுக்கு முன்னாடி நிறைய பேர்கிட்ட சொன்னதா கேள்விப்பட்டோமே?"

விமல்
விமல்

`களவாணி' படம் வந்து 10 வருஷம் ஆகிருச்சு. ஆனா, இந்தப் படம் குறித்து இத்தனை வருஷத்துலயும் பேசிக்கிட்டுதான் இருக்கேன். ஏன்னா, 10 வருஷம் ஆகியும் இந்தப் படத்தைப் பற்றி பேசுறவங்க இன்னும் இருக்காங்க. இயக்குநரா என்னை அறிமுகப்படுத்துன படம் இது. என்னோட முதல் படமா `வாகை சூட வா' கதையை எழுதியிருந்தேன். இந்தக் கதையை சொன்னப்போ நிறைய நண்பர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கமர்ஷியல் ஸ்க்ரிப்ட் எதிர்பார்த்தாங்க. அப்போ என்கிட்ட `களவாணி' படத்தோட கதையும் ரெடியா இருந்தது. அதனால, இதை முதல் படமா பண்ணுனு நிறைய நலம் விரும்பிகள் சொன்னாங்க. அதனால, இதோட கதையை படமாக்கலாம்னு முடிவு பண்ணேன். `களவாணி' கதையை நிறைய தயாரிப்பு நிறுவனத்துக்கிட்ட சொல்லியிருப்பேன். கதையைக் கேட்டவங்க ஹீரோவா இளம் வயது பையன் இருக்கணும்னு ஒவ்வொரு கதாநாயகனையா பரிந்துரைப்பாங்க. சொல்லப்போனா விமல் கேரக்டருக்கு நடிகர் ஜெய் பேர் முதல்ல அடிபட்டது. அப்புறம் ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மனைவி நிதின் சத்யாவை வைத்து இந்தப் படத்தை புரொடியூஸ் பண்றதா இருந்தது. எஸ்.எஸ்.சக்ரவர்த்தி சார் சாந்தனுவை வெச்சு எடுக்குறதாகவும் இருந்தது. இந்தக் கதை பாக்யராஜ் சார்க்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆர்வமா இருந்தாங்க. ஆனா, அப்போ ஏ.ஆர்.ரஹ்மான் இசை மற்றும் தாணு சார் தயாரிப்புல பெரிய படத்தோட பேச்சு வார்த்தை போயிட்டு இருந்ததனால, இந்தப் படத்துல சாந்தனுவால நடிக்க முடியல. பிறகு, பி.வாசு சார் பையன் சக்தியை வைத்தும் படம் எடுக்க பேச்சு வார்த்தை நடந்தது. கார்த்திக் சார் பையன் கெளதம் கார்த்திக் வைத்து இந்தப் படத்தை தயாரிக்க ஆஸ்கார் நிறுவனம் ரெடியா இருந்தாங்க. இப்படி பல தயாரிப்பு நிறுவனங்கள்கிட்ட இந்தப் படத்தோட கதை டிஸ்கஷன்ல இருந்து.''

``ஓவியாவை படத்துல எப்படி கமிட் பண்ணீங்க?"

``விமல் என்னோட நண்பர். கதையோட ஒன்லைன் மட்டும் தெரியும். இந்தப் படத்தோட கதையைக்கூட கேட்காம நடிக்க ஓகே சொல்லிட்டார். மத்தபடி படத்துல எந்த மாதிரியான லுக்ல இருக்கணும். பாடி லாங்குவேஜ் எப்படியிருந்தா நல்லாயிருக்கும்னு மட்டும் சொன்னேன். தஞ்சாவூர் பையனா நடிச்சா போதும்னு சொல்லியிருந்தேன். ஹீரோயின் புதுமுகமா இருந்தா நல்லாயிருக்கும்னு யோசிச்சிட்டு இருந்தப்போ மாடல்ஸ் போட்டோ பார்த்தேன். அப்போ ஓவியா போட்டோ கையில கிடைச்சது. பார்த்தவுடனே மகேசு கேரக்டருக்கு சரியா இருக்கும்னு தோணுச்சு. கேரளாவுல இருந்து ஹெலனா வந்தாங்க. மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம். டயலாக் டெலிவரி சரியா பண்ணாங்க. படத்துக்கு ஓகேனு சொல்லி கமிட் பண்ணிட்டோம். `உங்க பேரை மாத்தணும்'னு சொன்னேன். எந்த ஆட்சேபனையும் இல்லைனு சொல்லிட்டாங்க. `ஓவியா'னு பேர் வெச்சேன். அதே மாதிரி படத்துல எல்லா பாடல்களும் நா.முத்துக்குமார் சார் எழுதியிருந்தார். ஏ.எல்.விஜய் சார்கிட்ட இணை இயக்குநரா நான் இருந்தப்போ, `கீரிடம்' படத்துக்கு வசனம், பாடல்களை முத்துக்குமார் எழுதியிருப்பார். அப்போ ஏற்பட்ட நட்பின் காரணமா முதல் படத்துல பாடல்கள் எழுதிக் கொடுத்தார் நா.முத்துகுமார்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``படத்தோட காமெடி டிராக் எப்படி டிசைன் பண்ணீங்க?"

கஞ்சா கருப்பு
கஞ்சா கருப்பு

``ஒரத்தநாடு மற்றும் மன்னார்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட தஞ்சை மாவட்ட பகுதிகள்ல படத்தை எடுத்திருந்தோம். இந்த இடங்கள்லாம் எனக்கு நல்ல பரிச்சயமான இடங்கள்தான். படத்தோட காமெடி டிராக், ரொம்ப பேர் வாங்கிக் கொடுத்தது. முதல்ல, கஞ்சா கருப்பு கேரக்டருக்கு வடிவேலு சார் வெச்சு எடுக்கலாம்னு இருந்தோம். ஆனா, அப்போ ரொம்ப பிஸியா இருந்தார் வடிவேல் சார். அவர்கிட்ட கதை சொன்னேன். கேட்டுட்டு, `ரொம்ப பிடிச்சிருக்கு. பண்ணலாம்'னு சொன்னார். அவரோட ஒருநாள் கால்ஷூட்டுக்கு 9 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டார். எங்களுக்காக 8 லட்சம் ரூபாய்க்கு நடிக்க வரேன்னு சொன்னார். இந்தத் தொகை எங்க பட்ஜெட்டுக்கு ஒத்து வரல. ரொம்ப பெரிய தொகையும்கூட. தயாரிப்பாளர்கிட்ட, `பத்து நாள் கால்ஷீட்ல வடிவேல் சார் போர்ஷனை முடிச்சிட்டாக்கூட பட்ஜெட்டுக்கு சரிப்படாது'னு சொன்னேன். அதனால, வடிவேல் சார்க்குப் பதிலா கஞ்சா கருப்பை கமிட் பண்ணோம். அதே மாதிரி சூரி நடிச்சிருப்பார். இவரும் நானும் ஊர் பக்கம் போடுற நாடகங்களுக்கு ஒண்ணா போவோம். பெரிய பழக்கமில்ல. இருந்தாலும், படத்துல நடிக்க ஓகே சொன்னார். `களவாணி' படத்துல இருந்து இப்போ வரைக்கும் நல்ல பழக்கத்துல இருக்கார். அதே மாதிரி, `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தோட ஹீரோ ஆண்டனியும் நடிச்சிருந்தார். இந்தப் படத்துல வந்த சரண்யா, இளவரசன் கேரக்டருக்கு எங்க அம்மாவும் அப்பாவும்தான் ரோல் மாடல். ஆனா, `களவாணி' கேரக்டர் ஒருத்தருடைய சாயல் கிடையாது. ஊர்ல பார்த்த பலரும் பண்ண களவாணி தனத்தை படத்துல காட்டியிருப்பேன். மொத்தம் 55 நாளுல படத்தோட ஷூட்டிங்கை முடிச்சிட்டோம்.''

``இந்தப் படத்தோட கன்னட ரீமேக்கை கெளதம் மேனன் வாங்கியிருந்தாரே?''

கிராதகா
கிராதகா

``கெளதம் மேனன் சார் படம் பார்த்திருக்கார். அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால, கன்னட ரீமேக் உரிமையை வாங்கியிருந்தார். கன்னடத்துல இந்தப் படம் `கிராதகா' என்கிற பேர்ல ரீமேக் ஆச்சு. அங்கே இருந்த மண்வாசனைக்கு ஏத்த மாதிரி படத்தை எடுத்திருந்தாங்க. படத்தோட ஹீரோவா `கே.ஜி.எஃப்' யஷ் நடிச்சிருப்பார். ஓவியாவே கன்னடத்துலயும் ஹீரோயினா நடிச்சிருந்தாங்க. இந்தப் படம் வர்றதுக்கு முன்னாடி யஷ் நடிச்சிருந்த சில படங்கள் தோல்வியடைஞ்சிருந்தது. அப்போ, இந்தப் படம் அவருக்கு மாஸ் ஹிட் கொடுத்தது. அதனால, ரொம்ப சந்தோஷமா யஷ் எனக்கு போன்ல பேசுனார். `பெங்களூர் வாங்க, ஒண்ணா வேலை பார்ப்போம்'னு சொன்னார். ஆனா, அடுத்து அடுத்து கமிட்மென்ட்னால சந்திக்க முடியாம போயிருச்சு. அதே மாதிரி இந்தப் படத்தோட மராத்தி உரிமையை சுசி கணேசன் சார் வாங்கியிருந்தார். தஞ்சாவூர்ல படம் எடுக்க எப்போவும் யோசிப்பாங்க. ஏன்னா, இங்கே எடுத்த படங்கள் சரியாப் போகமா இருந்ததுதான் காரணம். ஆனா, `களவாணி' ரிலீஸூக்குப் பிறகு நிறைய பேர் தஞ்சாவூர்ல படம் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.''

`களவாணி 2' படம் வசூல் ரீதியா ஹிட் அடித்ததா?

விமல்
விமல்

``இந்தப் படமும் நல்லாவே போச்சு. வசூல் ரீதியா நல்ல கலெக்ஷன் கிடைச்சது. முதல் ரெண்டு ஷோ மட்டும்தான் கொஞ்சம் சறுக்கலே தவிர மத்தபடி குறை சொல்ற மாதிரியான விஷயங்கள் எதுவும் அமையல. ஆனா, எப்பவும் ஒரு படத்தோட ரெண்டாவது பார்ட் எடுக்குறப்போ முதல் பார்ட்கூட ஒப்பிட்டு பார்க்குறது நம்ம மக்களின் வழக்கம்தான்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு