சினிமா
தொடர்கள்
Published:Updated:

“ஆர்யாகிட்ட மற்ற ஹீரோக்கள் எச்சரிக்கையா இருக்கணும்!”

ஆர்யா -ஐஸ்வர்யலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்யா -ஐஸ்வர்யலட்சுமி

ஹைவேன்னு ஒண்ணு இருக்கும். அதில் பல நூறு கார்கள் போகும். ஒத்தையடிப் பாதைன்னு இருக்கும். அதில் நமக்கு முன்னாடி ஒருத்தனாவது போயிருப்பான்.

`கேப்டன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே அவ்வளவு வசீகரிக்கிறது. தமிழ் சினிமாவில் ஆர்யாவுக்கு கௌரவமான இடம் இருக்கிறது. `டிக் டிக் டிக்', `டெடி' என நம்பிக்கையூட்டிய இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனோடு அடுத்து கேப்டனாக களமிறங்குகிறார் ஆர்யா. எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கின்றன கண்கள்.

சக்தி சௌந்தர்ராஜன்
சக்தி சௌந்தர்ராஜன்

‘‘நிஜமாகவே ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும் போதும் ‘மக்களுக்கு என்ன பிடிக்கும், எப்படிச் சொல்லணும்'னு ஒரு சின்ன தயக்கத்திற்குப் பிறகுதான் தொடங்குவோம். இதிலே அந்தப் பிரச்னையே கிடையாது. கதை இதுதான்னு மனசுல வந்த உடனே டக்குனு டேக் ஆப் ஆச்சு. என்னோட ஒவ்வொரு பட முயற்சியும் புதுசா இருக்கிறது எனக்கே சந்தோஷம். என்கிட்ட இருக்கிற கதையும், அதோடு என்கிட்ட இருக்கிற டெக்னாலஜியும் சேரும்போது, படத்துக்குப் போட வேண்டிய பொருட்செலவும் எதிரணியில் நிற்கும். `டிக் டிக் டிக்', 'மிருதன்' எல்லாம் இங்கே பண்ணவே முடியாது என்ற நிலை இருந்து. ஆனால் பின்னாடி அருமையாக அமைஞ்சது. ‘கேப்டன்’ கிராபிக்ஸ் ரீதியாகவும், டெக்னாலஜியிலும் இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் பார்க்காத அளவுக்கு முக்கியமானதா இருக்கும். ஆர்யாவுக்கான சரியான பேக்கேஜ். தெறிக்கிற ஆக்‌ஷன், வேறுபட்ட கதைன்னு அவருக்கு ஏற்ற படம்தான்...” உற்சாகமாகப் பேசுகிறார், இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன்.

“ஆர்யாகிட்ட மற்ற ஹீரோக்கள் எச்சரிக்கையா இருக்கணும்!”
“ஆர்யாகிட்ட மற்ற ஹீரோக்கள் எச்சரிக்கையா இருக்கணும்!”

“இந்த ‘கேப்டனின்' கதை என்ன?”

“ஹைவேன்னு ஒண்ணு இருக்கும். அதில் பல நூறு கார்கள் போகும். ஒத்தையடிப் பாதைன்னு இருக்கும். அதில் நமக்கு முன்னாடி ஒருத்தனாவது போயிருப்பான். பாதையே இல்லாமல் திசைகாட்டியை உதவிக்கு வச்சுக்கிட்டு காட்டுக்குள்ளே போகுற மாதிரிதான் இந்தக் கதை. ராணுவ அடிப்படையில் அமைஞ்சிருக்கு. இதில் ஹீரோ கேரக்டர் ரொம்பப் புதுசு. ஆர்யாவின் கேப்டன் வெற்றிச்செல்வன் என்ற கேரக்டரின் தன்மைதான் முழுப்படமே. அவரைச் சுற்றித்தான் கதையம்சம் இருக்கும். அவரோட பர்சனல் போராட்டம், டூட்டியில் இருக்கிற பிரச்னைகள், இதோடு மட்டுமல்லாமல், கிராபிக்ஸ் மூலம் உருவாக்கிய சில விநோத உயிரினங்களுடன் பெரிய ஆக்‌ஷன் எல்லாம் இருக்கு. வழக்கமாகச் செய்கிற விஷயத்தை உடைச்சிட்டு வேற ஒரு புது ஸ்கிரிப்ட்டைக் கொண்டு வந்திருக்கேன். காடுகளிலும் பனியிடங்களிலும் படத்தை உருவாக்கியிருக்கோம். நிச்சயம் இந்த அனுபவம் புதுசா இருக்கும்.”

“ஆர்யாகிட்ட மற்ற ஹீரோக்கள் எச்சரிக்கையா இருக்கணும்!”
“ஆர்யாகிட்ட மற்ற ஹீரோக்கள் எச்சரிக்கையா இருக்கணும்!”

“இறுக்கமான ஆர்யா, இன்னும் ராணுவப் பின்னணியோடு பயமுறுத்துறாரே!”

“எனக்கு ஆர்யாவைப் பார்த்தாலே அவ்வளவு பாசிட்டிவ் எனர்ஜி வரும். ஹீரோவிற்கான பெரிய இலக்கணமே ஃபிட்னஸ்தான். அதை முதலீடு என்றுகூடச் சொல்லலாம். என்னதான் நடிப்புத்திறன் இருந்தாலும் ஃபிட்னஸ், உணவுப் பழக்கங்களிலும் கட்டுப்பாடு இல்லாவிட்டால் ஆக்‌ஷன் படங்கள் செய்ய முடியாது. ஆர்யா ஃபிட்னஸ் வெறியர். அவருக்கு பார்ட்டி பாய்ன்னு பெயர் இருக்கே தவிர அவர்கிட்டே குடிப்பழக்கம், புகைன்னு ஒரு பழக்கமும் கிடையாது. எனக்கு எந்த நேரமும் கைவிடாத அவரோட ஃபிட்னஸ் ஆச்சரியமாக இருக்கும்.”

“ஆர்யாகிட்ட மற்ற ஹீரோக்கள் எச்சரிக்கையா இருக்கணும்!”
“ஆர்யாகிட்ட மற்ற ஹீரோக்கள் எச்சரிக்கையா இருக்கணும்!”

“இதில் ஆர்யா தயாரிப்பாளராக வந்தது எப்படி?”

“ ‘டெடி' படம் முடிக்கிறதுக்கு முன்னாடியே, அதுவும் கொரோனா காலத்தில் கிடைக்காத பெரிய தொகையை ஆர்யா இதுக்காகக் கொடுத்தார். அவரோடு சேர்ந்து சத்யம் தியேட்டர் சொரூப் ரெட்டியும் தயாரிக்கிறார். பிஸினஸ் ரீதியாக இவ்வளவு சம்பாதிக்கலாம்னுகூட சொன்னது கிடையாது. பட்ஜெட் எவ்வளவு கேட்டாலும் ஏன் எதற்குன்னு கேட்காமல் வந்து நிக்கும். நமக்கும் தன்னால அக்கறை வந்து சேர்ந்திடும். ‘சார்பட்டா'வுக்குப் பிறகு, சொல்லப்போனால் கல்யாணத்துக்குப் பிறகு ஆர்யாகிட்ட ஏதோ ரசாயன மாற்றம் நடந்திருக்கு. கல்யாணத்துக்குப் பிறகு ஆர்யா தொட்டதெல்லாம் ஹிட். அவரால் நிறைய மாற்றங்களை நடிப்பில் கொண்டுவர முடிந்தது. நல்ல பார்ம்ல வேற இருக்கார். எல்லா ஹீரோக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலைமை இருக்கு. நம்மகிட்ட ஜாலியா பேசிக்கிட்டு இருக்கிற மாதிரித்தான் இருக்கும். ஆனால், ஸ்பாட்டில் வந்து இறங்கிட்டார்னா கொடுக்குற எக்ஸ்பிரஷன்ஸ் அள்ளும். எல்லாத்துக்கும் மேலே அவர் என் மேல் வச்சிருக்கிற நம்பிக்கை அசாத்தியமானது.”

“ஆர்யாகிட்ட மற்ற ஹீரோக்கள் எச்சரிக்கையா இருக்கணும்!”
“ஆர்யாகிட்ட மற்ற ஹீரோக்கள் எச்சரிக்கையா இருக்கணும்!”

“சிம்ரன், ஐஸ்வர்யலட்சுமி, காவ்யான்னு இத்தனை பெண்கள்...’’

“ஆமாம். ‘ஜகமே தந்திரத்தில்' வந்த ஐஸ்வர்யாதான். இங்கேதான் அவங்க புதுசு. மலையாளத்தில் 20 படங்களுக்கு மேலே பண்ணிட்டாங்க. நல்லா தமிழ் தெரிஞ்ச பொண்ணு. அதனால் தமிழ் பேசி உணர வைக்கலாம். மலையாளத்தில் ஹிட் அடித்த ‘மாய நதி' பார்த்துட்டுதான் அவங்களைத் தேர்ந்தெடுத்தேன். அவங்களுக்கு நல்ல ரோல். பிரியத்தோட நடிச்சுக் கொடுத்தாங்க. அவங்களோட எக்ஸ்பிரஷன்ஸ் மக்களோட நல்லா கனெக்ட் ஆகும். இவ்வளவு ஆக்‌ஷன் அமர்க்களம் இருக்கிற படத்தில் அவங்க வந்து போற இடங்கள் எமோஷனலாக இருக்கும். சிம்ரனை இதில் கொண்டு வரத்தான் நான் பயந்தேன். காட்டுக்குள்ளே ஆக்‌ஷன் படம் எடுக்கிறோம். கேரவன், பாத்ரூம் வசதி எல்லாம் அவ்வளவு கச்சிதமாக எதிர்பார்க்க முடியாது. காட்டுக்குள்ள நிறைய நடந்து போகணும். மலையேற்றம் மாதிரி நிறைய இடங்கள் இருந்தது. ஹீரோயினாகவே நிறைய படங்கள் செய்தவங்க. அதனால் இந்தப் படம் செய்வாங்களான்னு சந்தேகம். கதை சொன்னதும் ‘கண்டிப்பாக செய்கிறேன்’னு வந்தாங்க. கடைசியில் பார்த்தால் முதலில் ஸ்பாட்டுக்கு வர்றது சிம்ரன் மேடமாகத்தான் இருக்கும். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வர்றதுக்கு முன்னாடி அவங்க வந்து நிற்கிறது ஆச்சரியமாக இருக்கும். அவங்க பெரிய ஆர்ட்டிஸ்ட்னு சட்டுனு சொல்லிடுறோம். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கிற சின்சியாரிட்டி இப்ப புரியுது.

போஸ்டரில் இன்னொரு பொண்ணைப் பார்த்திருப்பீங்க. அவங்க காவ்யா ஷெட்டி. கன்னடத்தில் பிரபலம். மேக்கப் போடாமல் 50 நாள் தொடர்ந்து காடு, பனிச்சரிவுன்னு வந்து நடிச்சாங்க. ஒரு நாள் அவங்களுக்குச் சேலை கட்டி மேக்கப்போடு இருக்கிற மாதிரி சீன். ஷூட்டிங் ஸ்பாட் வந்த எனக்கே அடையாளம் தெரியாமல் அவங்களைக் கடந்து போயிட்டேன். ‘சார் வணக்கம்’னு அவங்க சொன்னதும்தான் அடையாளம் தெரிந்தது. பாதிக்குமேல் கேரளாவின் அடர்த்தியான காடுகளிலும், மீதி குலுமணாலி பனிப்பாறைகளுக்கு மத்தியிலும் பயணம் செய்தோம். ஹரிஷ் உத்தமன் என்னோட கிளாஸ்மேட். என் முந்தைய ஐந்து படங்களிலும் அவரைப் பயன்படுத்திக்கவே முடியலை. இதில் நல்ல கேரக்டரில் அவர் பொருந்தினார்.’’

“ஆர்யாகிட்ட மற்ற ஹீரோக்கள் எச்சரிக்கையா இருக்கணும்!”

“எப்பவும் உங்களுக்கு இமான்தான் ஃபேவரிட்.”

“ஆமாம்... இரண்டே பாடல்கள்தான். ஆனால், பின்னணிக்கு அவ்வளவு இடங்கள் இருக்கு. பிரமாதப்படுத்தியிருக்கார். இது என் படம், நல்லபடியாக வெற்றிகள் பெறணும் என்ற ஆசைகள் போக சில சினிமாக்களில்தான் எல்லார் நடிப்பும் பிரமாதமாக இருக்கும். இசையும் நல்லா அமையும். அந்த மாதிரி இதில் இமான் உழைப்பு அபரிமிதமானது. ஆர்யா மாதிரி, தன்னை முழுசா ஒப்படைக்கிற மனசுக்கு ஒரு நல்ல இடத்தைத் தரணும்னு வேண்டி விரும்பி வேலை செய்திருக்கேன். யுவராஜின் கேமரா வியூ ஃபைண்டரில் பார்த்தால் காட்சிகள் ‘அடடா'ன்னு இருக்கு. நிச்சயம் ஸ்கிரீனில் பிரமாண்டமான ஃபீல் உங்களுக்குக் கிடைக்கும். எனக்கென்ன சந்தோஷம்னா, நான் வேலை செய்த ஒவ்வொரு ஹீரோவும் மறுபடியும் என்னோட வொர்க் பண்ண விரும்பியிருக்காங்க. அந்த அளவுக்கு அவர்களிடம் நம்பிக்கையாக இருந்திருக்கேன். அந்த உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைச்சிருக்கு. படத்தில் இவ்வளவு கடினமான பயணம், சிரமங்கள் இருந்தாலும் அதையும் ஆர்யா ரசிக்கிறார். அதுதான் இந்தப் படத்தோட பெரிய பலம்.”