Published:Updated:

``மொத்தம் 13 கடி... ஆனா முதல் கடி இருக்கே..!" - சக்தி சௌந்தர் ராஜன்  #5YearsOfNaaigalJaakirathai

`நாய்கள் ஜாக்கிரதை’ படம் வெளிவந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இப்படத்தின் அனுபவத்தை நம்மிடையே பகிர்கிறார், இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன்.

Naaigal Jaakirathai
Naaigal Jaakirathai

``'நாணயம்’ படத்தின் ரிசல்ட், ஹிட்லேயும் வரல... ஃப்ளாப்லேயும் வரல. `அபவ் ஆவரேஜ்'ங்கிற கொடுமையான ரிசல்ட் வந்ததால, அடுத்த படத்தை ஹிட் கொடுக்க வெச்சிடணும்னு நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். `நாணயம்’ படம் முடிச்சிட்டு 3 வருஷம் ஒரு கதையோடு பல தயாரிப்பாளர்களைச் சந்திச்சேன். ஆனால், எதுவுமே சரியா அமையலை.

திடீர்னு வீட்டுல எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கான வேலைகள்ல இறங்கிட்டாங்க. பொண்ணு பார்த்து நிச்சயமும் பண்ணிட்டு, 3 மாசத்துல கல்யாணம்னு சொல்லிட்டாங்க. கல்யாணம் ஆகப்போற சமயத்துல வேலை இல்லாம இருந்தா நல்லா இருக்காதேனு, உடனே `நாய்கள் ஜாக்கிரதை’ கதையை எழுதி, தயாரிப்பாளர்கிட்ட கமிட் பண்ணிட்டேன்...’’ - என `நாய்கள் ஜாக்கிரதை’ படத்தைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார், இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன்.

’’ `நாணயம்’ படம் பண்ணதுல இருந்தே நானும் சிபி-யும் நல்ல நண்பர்களாகிட்டோம். நான் வாய்ப்பு தேடி அலையும் போதெல்லாம், அடிக்கடி பேசிப்போம். ஆனா, `அடுத்து ஒரு படம் பண்ணலாம்’னு நாங்க பேசிக்கிட்டதே இல்லை. சத்யராஜ் சார் ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு, கதை கேட்டுட்டு இருக்கார்னு தெரிஞ்சதுக்கு அப்பறம்தான், நான் இந்தக் கதையை எழுத ஆரம்பிச்சேன். இந்தக் கதையை முழுக்கவே சிபி-க்காக எழுதினேன்.

ஏன்னா, சிபி ஒரு நாய்ப் பிரியர். படத்தைப் பார்த்தா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். கண்டிப்பா ஒரு நாய் பிரியர்களாலதான் இந்தப் படத்தில் நடிக்க முடியும். வேற யாராவது நடிச்சிருந்தா ரொம்பவே சிரமமா இருக்கும். ஏன்னா, படத்தோட ஷூட்டிங் சமயத்துல, மொத்தம் 13 முறை நாய்கிட்ட கடி வாங்கினார் சிபி. முதல் நாள் ஷூட்டிங்ல ரெண்டாவது ஷாட் எடுக்கும்போதே வயித்துல கடிச்சு ரொம்பவே ரத்தம் வந்துடுச்சு.

Naaigal Jaakirathai
Naaigal Jaakirathai

வேற ஆளா இருந்திருந்தா, முதல் நாள் ஷூட் முடிஞ்சதுமே 'நடிக்க மாட்டேன்'னு ஓடியிருப்பார். இந்தப் படத்துல நடிச்ச நாயும் சாதாரண வீட்டு நாய் இல்லை. போலீஸ்கிட்ட டிரெயினிங் எடுத்துகிட்ட நாய். இது கடியும் முதலை கடியும் ஒண்ணு. அத்தனை கடியையும் வாங்கிட்டுதான் படத்துல நடிச்சார்'' என்றவர், இந்தப் படத்தில் நாய் கமிட்டான கதையையும் சொன்னார்.

``மும்பை, கேரளா, ஆந்திரா, ராஜபாளையம்னு பல ஊர்கள்ல இருந்த பல நாய்களைப் பார்த்தோம். கடைசியா பெங்களூர்லதான் இந்த நாய் இருந்துச்சு. படத்துல நாய்க்கு ரொம்ப முக்கியமான ரோல் இருந்ததால, நாங்க நினைச்ச மாதிரியான நாய் கிடைக்கிற வரைக்கும் ஷூட்டிங் போக வேணாம்னு முன்னாடியே முடிவு பண்ணிட்டோம். ஒரு வழியா நாய் கிடைச்சதுக்கு அப்பறம்தான் ஷூட்டிங் கிளம்பினோம். 

Naaigal Jaakirathai
Naaigal Jaakirathai

எல்லா படத்துக்கும் ஸ்கிரிப்ட் எழுதுறதுல ஒரு மெனக்கெடல் இருக்கும். இல்லேனா அதைப் படமாக்குறதுல ஒரு மெனக்கெடல் இருக்கும். ஆனா, இதுல நாயை நடிக்க வெச்சதுக்குதான் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அரை மணி நேரத்துல எடுக்க வேண்டிய காட்சி அரை நாள் வரைக்கும் போகும். அதேசமயம், அரை நாள் எடுக்கவேண்டிய காட்சியை அரை மணி நேரத்துலேயும் முடிச்சிருக்கோம். அந்த நாய், எப்போ எப்படி ரியாக்ட் பண்ணும்னு யாருக்கும் தெரியாது. நாய் எத்தனை நாள் நடிக்கிதோ, அத்தனை நாள் எடுப்போம்னு சொல்லிட்டும் இருக்க முடியாது. 50 நாள்ல படத்தை முடிக்கணும்னு ப்ளான் பண்ணோம். ரொம்பவே சிரமப்பட்டுதான் படத்தை எடுத்து முடிச்சோம்’’ என்றவர், தொடர்ந்தார்.

``நான், சிபி, கேமராமேன் நிஜார்னு இந்தப் படத்தில் வேலை பார்த்த பல பேர், இந்தப் படத்தை மட்டும்தான் நம்பிட்டிருந்தோம். `இந்தப் படத்துக்கு அப்பறம்தான், நம்ம கரியர் மாறப்போகுது’னு ரொம்பவே நம்பினோம். அதுக்காக எத்தனை பிரச்னை வந்தாலும், இதை சிறப்பா எடுத்து முடிக்கணும்னு வேலை பார்த்தோம். இன்னைக்கு அது நடந்திருக்குனு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. இந்தப் படத்தோட கேமராமேன் நிஜார், இப்போ தெலுங்குல பல ஹிட் படங்கள்ல வேலை பார்த்திட்டிருக்கார்’’ என்றவரிடம், படம் ரிலீஸானப்போ ரெஸ்பான்ஸ் எப்படி இருந்துச்சு எனக் கேட்டோம்.

Sibi raj and Shakti Soundar Rajan
Sibi raj and Shakti Soundar Rajan

``சிபி-யை நான் கலாய்க்க, என்னை அவர் கலாய்க்க-ன்னு எப்பவுமே கலாய்ச்சிட்டேதான் இருப்போம். `நாணயம்’ படம் முடிச்சதுக்கு அப்பறம், `எங்க கூட்டணி தோல்விக் கூட்டணி’னு நாங்களே கலாய்ச்சிக்கிட்டோம். இந்தப் படம் பண்ணும்போதும், `சத்யராஜ்கிட்ட நிறைய காசு இருக்கு, அதுனால அவர் பையனை வெச்சு, அவருடைய ஃபேமிலி மட்டும் பார்த்துக்க ஒரு படம் பண்ணிக்கிறாங்கனுதானே வெளிய பேசிப்பாங்க’ன்னு நாங்களே விளையாட்டா பேசிட்டிருந்தோம். இந்தப் படத்தோட டைட்டிலை அறிவிச்சதுல இருந்து நிறைய பாசிட்டிங் கமென்ட்ஸ் வந்துச்சு. டீசர் ரிலீஸானதும், சன் டி.வி படத்தை வாங்கிட்டாங்க. டிரெய்லர் ரிலீஸானதும் தமிழ்நாடு ரைட்ஸ் வித்துடுச்சு. படமும் ரிலீஸாகி நல்ல ரிசல்ட் வந்துச்சு. இதுக்காகத்தான் உழைச்சோம், இது நடந்திடுச்சுனு நினைக்கும்போது சந்தோஷமா இருந்துச்சு. எனக்கும் சிபி-க்குமான நட்பும் ரொம்பபே நெருக்கமாகிடுச்சு’’ என்றவரிடம், ``தமிழின் முதல்’ ஜாம்பீ படம், `முதல்’ ஸ்பேஸ் படம், டெடி பியர் நடிக்கும் `முதல்’ படம்னு நீங்க எடுக்குற படங்களில், அந்த `முதல்’ங்கிற வார்த்தை வந்துட்டே இருக்கே...'' எனக் கேட்டோம்.

’’எப்பவுமே ஒரு டிரெண்டுக்குப் பின்னால ஓடணும்ங்கிற எண்ணம் எனக்கு இருந்ததே இல்லை. என்னுடைய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர்ல இருக்கணும்; அதை மக்கள் பார்க்கிறதுக்கு ஆசைப்படணும்னுதான் நினைப்பேன். ஒரு பெரிய ஹீரோ படம்னா, கண்டிப்பா மக்கள் தியேட்டருக்கு வந்து பார்த்திடுவாங்க. ஆனா, சின்ன ஹீரோ படங்களை, `ஆன்லைன்ல பார்த்துக்கலாம்’னு நினைச்சிடுவாங்க. அந்த எண்ணத்தை மாத்தணும்னு நினைச்சேன்.

அவங்களை தியேட்டருக்கு வர வைக்கணும்னு புதுப்புது விஷயங்களை படத்துல வெச்சேன். அப்படித்தான் `நாணயம்’ படத்துல பேங்க் கொள்ளை, ’மிருதன்’ல ஜாம்பி, ’டிக் டிக் டிக்’ல விண்வெளி, இப்போ பண்ணிட்டு இருக்கிற `டெடி’ படத்துல கரடியை நடிக்க வெச்சிருக்கேன். படங்கள் வித்தியாசமான களத்தில் இருக்கணும்னுதான் ஆசைப்படுவேன்; மத்தபடி அந்த ‘முதல்’கிற வார்த்தை எனக்கு முக்கியமில்லை’’ என்றார்.

சூர்யாவில் தொடங்கி தனுஷ் வரை... `எனை நோக்கி பாயும் தோட்டா' டைம்லைன்!