சினிமா
தொடர்கள்
Published:Updated:

“இப்படியொரு யோகிபாபுவை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!”

பொம்மை நாயகி படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
பொம்மை நாயகி படத்தில்...

“கதையோடு சில இடங்களுக்குச் சென்றேன். அப்போது ‘மண்டேலா’ கூட வரவில்லை. எழுதும்போதுகூட மனதில் யோகி இல்லை. அ

“எங்க அப்பா சமூக உணர்வுள்ள களப்பணியாளரா இருந்தார். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிரா அக்கறையோடு வேலைசெஞ்சவர். நான் அவர்கூட இருந்திருக்கேன். வலியும் வேதனையுமான நினைவுகளாக அது அப்படியே இருக்கு. அதனாலதான் அப்படி பாதிக்கப்பட்ட சிறு பெண்ணின் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கேன். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநிலையும் சமூகத்தின் மனநிலையும் எப்படி இருக்கு, சட்டம் எவ்வளவு தூரம் உறுதுணையா இருக்குன்னு ‘பொம்மை நாயகி'யோட கதை பயணமாகும். பார்வையாளனின் கவனத்தை முழுவதுமாக தனக்குள் கிரகித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் திரைக்கலையின் முதல் விதி. அதைப் பின்பற்றியிருக்கேன்”

தெளிவாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ஷான். நீலம் நிறுவனத்தின் படைப்பு இது.

“இப்படியொரு யோகிபாபுவை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!”

“முதல் படமே தீவிரமான பிரச்னையைக் கையில் எடுக்கிறீர்கள்?”

“அனேகம் பேர் இதில் குழந்தைகளின் தவறும் இருக்கிறது எனச் சொல்லிவிடுகிறார்கள். வன்முறைக்குப் பிறகு அதோடு குழந்தையின் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. அவர்களின் மீதான வன்முறைக்கு தண்டனை தரும் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அதை சரியாகப் பயன்படுத்துவது தவறு செய்தவர்கள் தான். குழந்தைகளின் மனநிலை தாண்டி, இதில் பெற்றோர் மனநிலையும் பார்க்கப்படுகிறது. குழந்தைகள்மீதான வன்முறையை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். நான் சொல்ல வந்தது அதற்கான சட்டங்கள், சமூகத்தின் பார்வை, குழந்தையை ஒரு சாமான்யன் எப்படி மீட்டெடுத்தான் என்பதுதான். இதுவே கதைக்களம்.

குழந்தை வன்முறைக்கு உள்ளான பிறகு அதைப் பெரும்பாலும் மறைக்கப் பார்க்கிறார்கள். ஏன் குழந்தை குற்றம் நடைபெற்ற இடத்துக்குப் போக வேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அப்பாவிகளான அவர்கள் ஏன் பாதிக்கப்படணும்? இதுவும் கதையோட அடிப்படை. அதுவும்போக, இது அப்பாவுக்கும் பெண்ணுக்குமான டிராவல். தண்டனை என்பது அந்தக் காலத்தில் காலம்கடந்து கிடைக்கும் என்பார்கள். இப்போதெல்லாம் கைமேல் பலன். ஒரு நல்ல தகப்பனின் பரிதவிப்பும் மேன்மையும் இதில் இருக்கிறது...”

“இப்படியொரு யோகிபாபுவை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!”

“இதில் எப்படி யோகிபாபு வந்தார்?”

“கதையோடு சில இடங்களுக்குச் சென்றேன். அப்போது ‘மண்டேலா’ கூட வரவில்லை. எழுதும்போதுகூட மனதில் யோகி இல்லை. அவரின் புகைப்படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த முகம் நகைச்சுவை தவிர பல பரிமாணங்களைக் கொண்டதாகத் தோன்றியது. அப்போது ‘பரியேறும் பெருமாளை’யும் பார்த்தேன். அந்த எண்ணம் உறுதிப்பட்டது. பா.இரஞ்சித்திடம் பேசிய பிறகு யோகியுடன் பேசினேன். அவரிடம் தேதிகள் இல்லை. பறந்து பறந்து இரவு பகல் பாராமல் நடித்துக்கொண்டிருந்தார். ‘கர்ணன்’ படப்பிடிப்பில் மாரி செல்வராஜ் உதவியோடு அவரைப் பிடித்தேன். நிச்சயம் அர்ப்பணிப்பான நடிப்பு. இப்படியொரு யோகிபாபுவை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அதை உணரமுடியும். குழந்தையின் அப்பாவாக யோகி வருகிறார். பெண்ணுக்குத் தன் காலடி நிழல்கூட சொந்தமில்லாதபோது ஆண் குழந்தைக்கு ஒரு மைதானத்தையே அளிக்கிறார்கள். பெண் மீதான வன்முறையும், அதன் பின்னான வாழ்க்கையும் இதில் அலசப்படுகிறது. யோகியின் மனைவியாக சுபத்திரா, ‘மெட்ராஸ்' ஹரி, ஜி.எம்.குமார், அருள்தாஸ், குழந்தையாக மதி நடித்திருக்கிறார்கள். கேமராமேன் அதிசயராஜ் உணர்வோடு எடுத்திருக்கிறார்.”

“இப்படியொரு யோகிபாபுவை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!”
“இப்படியொரு யோகிபாபுவை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!”

“சமூகத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை இம்மாதிரியான படங்களில் கொண்டுவர முடியும் என நினைக்கிறீர்கள்?”

“இங்கே வெளியில் நடப்பதை அப்படியே படமாகவும் எடுத்துவிட முடியாது. பத்திரிகைச் செய்திகளில் வருகிற குழந்தைகளின் பாலியல் வன்முறையெல்லாம் குறைத்து எழுதப்பட்டவை. மனஉளைச்சல்கள், வேதனைகள், உறவுச் சிக்கல்கள், பெற்றோர்களின் துயரம் என எதுவும் அதில் அடங்காது. வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கான ஒரு முகாமுக்குப் போயிருந்தேன். அவர்களின் கதைகளைப் சொல்லக் கேட்டபிறகு மனம் உடைந்து கதறி விட்டேன். இந்த போஸ்கோ சட்டம் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக்கூடச் சொல்ல வேண்டியிருக்கிறது. இதில் பல பிரச்னைகளுக்குத் தீர்வுகளோ, தீர்மானமான முடிவுகளோ இல்லை. அதைவிட சாமர்த்தியமாக நடந்ததை மூடிமறைத்துவிடுகிறார்கள். குழந்தைகளின் வன்முறைமீதான எனது வாழ்க்கைப் பார்வையும், எனது சமூகக் கண்ணோட்டமும் ஆழமானது என நம்புகிறேன். அது இந்த சினிமாவில் வெளிப்படுகிறது.”