Published:Updated:

ஷங்கரின் `எந்திரன்’ கதை யாருடையது... `நோ கமென்ட்ஸ்' சொன்னாரா ரஜினி? #Endhiran

ஷங்கரின் `எந்திரன்’
ஷங்கரின் `எந்திரன்’

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து ஷங்கர் தரப்பு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கவே தற்போது பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவு வெளியாகியிருக்கிறது.

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ’எந்திரன்’ படத்தின் கதை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. `எந்திரன்' வெளியாகி 11 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இந்த வழக்கு ஏன் இப்போது சூடுபிடிக்கிறது?! அதற்கு முன்பு இந்த வழக்கின் ஆரம்பத்தைப் பார்க்கலாம்!

1996 ஏப்ரல் மாதம் ‘இனிய உதயம்’ இதழில் வெளியாகிறது ‘ஜூகிபா’ சிறுகதை. கதையை எழுதியவர் பத்திரிகையாளரான ஆரூர் தமிழ்நாடன். 2007-ல் நக்கீரன் பதிப்பகத்தில் தமிழ்நாடனின் புத்தகம் வெளிவந்த போது அதில் ஒரு கதையாகவும் இடம் பெறுகிறது `ஜூகிபா'.

ஜூகிபாவின் கதை என்ன?!

எந்திரன்
எந்திரன்

ஜூகிபா ஓர் அதி அற்புத கம்ப்யூட்டர். உருளும் நியான் விழிகளால் பார்க்கும் காட்சிகளைத் தனக்குள் பதிவு செய்து கொள்ளும். கேள்விகளுக்கு மெட்டாலிக் வாய்ஸில் பதில் சொல்லும். எந்திர மூட்டசைத்து அதிராமல் நடக்கும். உலோகக் கைகளைக் கண்டபடி கண்ட திசைகளிலும் சுழற்றி, கொடுத்த வேலையைக் கச்சிதமாய்ச் செய்யும். எல்லாவற்றிற்கும் மேலாக சூழலைப் புரிந்து கொள்ளும் உணர்வுத்திறனும், சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுத்து இயங்கும் சுய செயல்திறனும் அதனுள் புகட்டப்பட்டிருக்கும்.

இப்படியாகப் போகும் கதையில் கடைசியில் ஜூகிபா தன்னை உருவாக்கிய விஞ்ஞானியின் காதலியிடமே காதல் வயப்படும். அந்தக் காதலி கிடைக்க மாட்டாள் எனத் தெரிந்ததும் தற்கொலை செய்து கொள்ளும். இதுதான் கதை!

வழக்கின் டைம்லைன்!

2010-ல் எந்திரன் படம் வெளியாகிறது. படத்தைப் பார்த்த ஆரூர் தமிழ்நாடன் ஷங்கருக்கும் படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறனுக்கும் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்புகிறார். அவர்களின் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வராததால் வழக்கு தொடுக்கிறார்.

"வழக்கு விசாரணைக்கு உகந்ததே" என்ற சென்னை நீதிமன்றம், படத்தின் தயாரிப்பாளரை மட்டும் விடுவித்து தீர்ப்பு வழங்குகிறது. இன்னொருபுறம் ஷங்கர் தரப்பில் உச்சநீதிமன்றத்தை நாடி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோருகிறார்கள். உச்சநீதிமன்றமோ வழக்கைத் தள்ளூபடி செய்ய மறுத்ததுடன் கீழ் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளச் சொல்கிறது.

ஷங்கர்
ஷங்கர்

ஷங்கர் தரப்பில் தொடர்ந்து வழக்கின் விசாரணைக்கு ஆஜராகமலேயே இருக்க, அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

ஜூன் 6, 2019-ல் உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி அதிரடியாக ஒரு தீர்ப்பை வழங்குகிறார். அதில், "தமிழ்நாடனின் கதைக்கும் `எந்திரன்' படத்துக்கும் 16 விஷயங்கள் வெகுவாகப் பொருந்திப் போகின்றன. எனவே இந்த வழக்கை மனுதாரர் நடத்த முகாந்திரம் இருக்கிறது'' என்கிறார். தமிழ்நாடன் தரப்பில் 29 விஷயங்கள் பொருந்திப் போவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

கடைசியாக இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து ஷங்கர் தரப்பு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கவே தற்போது பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவு வெளியாகியிருக்கிறது.

ஆரூர் தமிழ்நாடன்
ஆரூர் தமிழ்நாடன்

முதன்முதலில் இந்தக் கதை மோசடி தொடர்பான செய்திகள் வெளியான போது ரஜினியிடம் ‘ஜூகிபா’ கதை கொடுக்கப்பட்டதாகவும், அவர் அதை வாசித்துவிட்டு சிரித்தபடியே ‘நோ கமென்ட்ஸ்’ சொன்னதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

கதை விவகாரம் தொடர்பாக ஆரூர் தமிழ்நாடனைத் தொடர்பு கொண்டபோது, "வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது பேசுவது முறையாகாது" என்றார்.

ஷங்கர் தரப்பிலும், "டிஸ்கஸ் பண்ணிட்டுச் சொல்றோம்" என்றவர்கள் பிறகு பேசவே இல்லை!

அடுத்த கட்டுரைக்கு