Published:Updated:

`` `அந்நியனுக்காக' ரொம்பவே கஷ்டப்பட்டேன்!'' - இயக்குநர் ஷங்கர் #15YearsofAnniyan - Part 1

அந்நியன் திரைப்பட போட்டோஷூட் ( Photo: Vikatan )

25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இயக்குநர் ஷங்கர் இயக்கிய `அந்நியன்' படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது.

`` `அந்நியனுக்காக' ரொம்பவே கஷ்டப்பட்டேன்!'' - இயக்குநர் ஷங்கர் #15YearsofAnniyan - Part 1

25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இயக்குநர் ஷங்கர் இயக்கிய `அந்நியன்' படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது.

Published:Updated:
அந்நியன் திரைப்பட போட்டோஷூட் ( Photo: Vikatan )

உலக அளவில் இந்த இந்தியனுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. `பெரிதினும் பெரிது கேள்' என்பதுதான் இவர் வாழ்வின் தத்துவம். கற்பனைகளைப் பிரமாண்ட காட்சிகளாக நம் கண்முன் கொண்டுவரும் மாயக்காரர். இவரின் கனவுகள் பெரியது. கதைகள் எளியது. காட்சிகள் வியப்புக்குரியது.

தன் அசாத்திய திறமையாலும் அசராத உழைப்பினாலும் தமிழ் சினிமாவை உலகெங்கும் எடுத்துச் சென்ற இயக்குநர் ஷங்கரிடம் பேசுவது என்பது வாழ்வின் தங்கத் தருணங்களாகத்தான் இருக்கமுடியும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இயக்குநர் ஷங்கர் இயக்கிய `அந்நியன்' படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. இயக்குநரிடம் பேசினோம்.

``உங்களுடைய படங்கள் வெளியாகி 15 , 20 வருடங்கள் ஆனபிறகும் பேசப்படும்போது உங்கள் மனதில் என்ன தோன்றும்?''

``நாள்கள் எவ்வளவு வேகமா போகுதுனு ஆச்சர்யமா இருக்கும். அதே சமயம், இத்தனை வருஷங்கள் கழிச்சும் நான் எடுத்த அந்தப் படங்கள் பத்தி எல்லோரும் பேசுறாங்கன்னு நினைக்கும்போது அதைவிட சந்தோஷம் வேறேன்ன இருக்க முடியும்."

``அந்நியன் படத்தின் டைட்டில் கார்டில் இருந்து ஆரம்பிப்போம். டைட்டிலிலேயே படம் எப்படிப்பட்டதுனு ஒரு கதை சொல்லல் இருக்கும். பொதுவா, உங்களுடைய படங்களுக்கான டைட்டில் ஃபான்ட் எப்படி முடிவாகுது?''

Anniyan Movie Title
Anniyan Movie Title

``அந்தப் படத்தோட கதையை டைட்டில்லயே சொல்ல முடியுமா, அதுல மக்களை ஈர்க்க முடியுமானு நிறைய வொர்க் பண்ணுவேன். அம்பி ரொம்ப சின்சியர். அதுக்குத் தகுந்த ரொம்ப ஜென்டிலா ஒரு ஃபான்ட், அந்நியன் கேரக்டர் ரொம்ப பவர்ஃபுல். அதுக்கு ஆக்ரோஷமான ஃபான்ட், ரெமோ கேரக்டருக்கு ரொம்ப ஸ்டைலிஷான எழுத்துன்னு இது மூணும் கலந்து ஒண்ணு வேணும்னு டிசைனர்கிட்ட சொன்னேன். அவங்களும் நிறைய வொர்க் பண்ணிக்கொடுத்தாங்க. அதுல நான் தேர்ந்தெடுத்ததுதான் நீங்க பார்த்தது."

Shankar and Vikram
Shankar and Vikram
Photo: Vikatan / Rajasekaran.K

``வழக்கமா ஒவ்வொரு படத்துக்கும் வருட கணக்குல நேரம் எடுத்துக்கிறது உங்களுடைய வழக்கம். அந்த வகையில `அந்நியன்' படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷனுக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது?''

``என் படங்களுக்கு ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் ஆறு மாசத்துல இருந்து ஒரு வருஷம் வரை தேவைப்படும். அதுவரைக்கும் நான் இயக்கிய படங்கள்லயே, திரைக்கதை எழுத ரொம்ப கஷ்டப்பட்டது `அந்நியன்' படத்துக்குத்தான். காரணம், இந்தப் படத்துல எல்லா ஜானரும் இருக்கும். எழுதின கேரக்டர்கள், திரைக்கதை எல்லாத்தையும் சரியா கொண்டுவந்து மிகச்சரியா முடிக்கிறது பெரிய சிரமமாவும், சவாலாவும் இருந்தது."

``விக்ரமுக்கு நீங்க `அந்நியன்' கதையைச் சொன்ன தருணம் ஞாபகமிருக்கா... முதல்முறை கதை கேட்கும்போது அவருடைய ரியாக்‌ஷன் என்னவா இருந்தது?''

``பாம்குரோவ் ஹோட்டல்ல வெச்சுதான் அவருக்கு இந்தக் கதையை சொன்னேன். மூணு கேரக்டர்கள்ல எப்படி நடிக்கிறது, முடி, உடம்பு எல்லாம் ஒவ்வொரு கேரக்டருக்கும் எப்படி வித்தியாசமா பண்றதுனு நிறைய கேள்விகள் அவருக்கு தோணிக்கிட்டே இருந்தது. ஆனால், படம் எடுக்க எடுக்க எல்லாமே அவருக்கு தெளிவாகிடுச்சு. நம்ம மனசுக்குள்ள ஒரு விஷுவல் இருக்கும். அதே சமயம் நிறைய கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கும். ஆனா, அது நம்முடைய அந்த புராசஸ்ல சரியா அமைஞ்சுடும்."

Vikram in Anniyan Movie Photoshoot
Vikram in Anniyan Movie Photoshoot
Photo: Vikatan

`` `நான் கஞ்சா கலந்து வெத்தலை போடுவேன்', `கொன்னக்கோல் மாமா, ஜம்போ மாமி...' இந்த சின்னச்சின்ன விஷயங்கள் எல்லாம் எழுதும்போதே இருக்குமா அல்லது ஸ்பாட்ல திட்டமிடுறதா?''

``பேப்பர்ல எல்லாமே எழுதிடுவேன். சில விஷயங்கள் ஆர்டிஸ்ட்கிட்ட இருந்து வரும்போது நமக்கு சிரிப்பு வந்திடுச்சுனா அதை அப்படியே வெச்சுடுவேன். `கஞ்சா கலந்து போடுவேன்'னு சொன்னதெல்லாம் விவேக்கோட ஐடியாதான்."

``குடுமி போட்டிருந்தா அம்பி, முகத்தை மறைக்கிற அளவுக்கு முடி வெச்சிருந்தா அந்நியன், ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைல்னா ரெமோ... இப்படி ஹேர் ஸ்டைல்லயே ஒரு கனெக்ட் இருக்கும். இதை எப்படி யோசிச்சீங்க?''

`` `2.0' படத்துல அந்த மொபைல் எல்லாம் ஆறு மாதிரி வர்ற விஷுவல்தான் எனக்கு முதல்ல தோணுச்சு. அதே மாதிரி `அந்நியன்' கதையில கேமரா முன்னாடி நீளமான முடி விழுறதுதான் எனக்கு தோணுன முதல் காட்சி. நீளமான முடி ஐயர்கள், ஐயங்கார்கள், சர்தார்ஜிகள்... இவங்களுக்குத்தான் இருக்கும். ஐயர் கேரக்டர் `ஜென்டில்மேன்'ல வெச்சுட்டேன். சர்தார்ஜி கேரக்டர் நம்ம மக்களை கனெக்ட் பண்ணாது. அதனாலதான் `அந்நியன்'ல ஹீரோ கேரக்டரை ஐயங்காரா வெச்சேன்.''

Vikram in Anniyan Movie Photoshoot
Vikram in Anniyan Movie Photoshoot
Photo: Vikatan

``இந்தப் படத்துக்காக விக்ரமுக்கு என்னென்ன ஹோம் வொர்க்லாம் கொடுத்தீங்க?''

``நான் வேறொரு படம் பண்ணிட்டு இருக்கும்போதே விக்ரம்கிட்ட `நல்ல ஸ்கிரிப்ட் ஒண்ணு தயாராகிட்டு இருக்கு. முடி வளர்க்க ஆரம்பிச்சுடுங்க'னு சொல்லிட்டேன். அவரும் வளர்க்க ஆரம்பிச்சிட்டார். ஆனா, அப்போ அவர் பண்ணிட்டு இருந்த படத்துக்காக கொஞ்சம் குறைக்கவேண்டியதா போயிடுச்சு. அதனால நான் நினைச்ச நீளமான முடி இல்லை. முடி வளர்றதுக்கு வெயிட் பண்ணமுடியாதுனு கொஞ்ச போர்ஷன் விக் வெச்சு எடுத்தோம். கொஞ்ச நாள்ல முடியும் வளர்ந்துடுச்சு. முடி வளர்ந்தவுடன் ஒரிஜினல் முடியிலேயே எடுத்தோம். அப்புறம் அவரே என்கிட்ட 'அந்நியன்' கேரக்டருக்கு பல் வெச்சுக்கிறேன்னு சொன்னார். அந்நியனா மாறும்போது கண் ஆடுறது வேணும்னு சொன்னேன். அதை ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டார். உடம்புல சேஞ்ச் ஓவர் காட்டினது எல்லாமே அவர் ஐடியாதான். ஒவ்வொரு கேரக்டர் ஷூட்டுக்கும் ஒவ்வொரு மாதிரி வருவார். அந்த நாள் அம்பியா நடிக்கப்போறார்னா கொஞ்சம் தொய்வா இருக்கணும்னு வொர்க் அவுட் பண்ணாம வருவார். அந்நியனா நடிக்கும்போது ஃபுல்லா வொர்க் அவுட் பண்ணிட்டு ஃபிட்டா வருவார். அந்த விசாரணை சீன் எடுக்குறது பயங்கர சவாலா இருந்தது. ஸ்பாட்லயே ஜிம் கிட்டை எடுத்துட்டு வந்து வொர்க் அவுட் பண்ணி, உடம்பை ஏத்திக்கிட்டு அந்நியனா நடிப்பார். அம்பியா நடிக்கும்போது வயிறு தொப்பை தெரியணும்னு நிறைய தண்ணி குடிச்சுட்டு நடிப்பார். மறுபடியும் அந்நியன் போர்ஷனுக்கு ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்து பயங்கரமா வெயிட்ஸ் தூக்கி வொர்க் அவுட் பண்ணிட்டு திரும்பவும் நடிப்பார். இந்தப் படத்துக்காக அவர் ரொம்ப கஷ்டப்பட்டார். உயிரைக் கொடுத்து நடிச்சார்னு சொல்லலாம். திறமையான கலைஞன். விக்ரம் ரியலி அமேஸிங்."

`` `சில இயக்குநர்கள் பிரமாண்டம்னு சொல்லி தயாரிப்பாளருடைய பணத்தை வீணடிப்பாங்க. ஆனா, ஷங்கர் என்னதான் பிரமாண்டம் காட்டினாலும் ஃபைனான்ஸியல் மேனேஜ்மென்ட்ல சரியா இருப்பார்' - தயாரிப்பாளர்கள் எல்லோரும் உங்களைப் பற்றி புகழ்ந்து சொல்லும் ஸ்டேட்மென்ட் இது. நீங்கள் இந்தக் கருத்தை எப்படி பார்க்குறீங்க?''

``செலவுல பிரமாண்டம் காட்டுறதுனு சொல்லி எந்தப் படமும் எடுக்குறதில்லை. போன படம் 50 கோடியா அப்போ இந்தப் படத்தை 100 கோடியில எடுக்கலாம்னு நினைச்சு நான் எடுக்குறதில்லை. இதுக்கு முன்னாடி பண்ண படத்துக்கு வந்த உற்சாகம் குறையாம என்ன ஸ்கிரிப்ட் வருதுனு பார்க்கணும். போன படம் மாதிரியே இருக்கக்கூடாது. அதை எல்லா வகையிலயும் எப்படி அழகுபடுத்தணும்னு யோசிக்கும்போது, அதுக்கு என்ன செலவோ அதைப் பண்றதுதான் என்னோட வழக்கம். அப்படித்தான் நான் படம் பண்றேனே தவிர, செலவு வைக்கணும்னு பண்றதில்லை. ஃப்ரேம்ல பிரமாண்டம் காட்டுறது என்னன்னா செலவு பண்ற காசு படம் பார்க்குறவங்களுக்குத் தெரியணும். எந்த கேமராவுல எந்த லென்ஸ் போட்டு எங்க கேமராவை வெச்சா நம்ம பண்ண மொத்த செலவும் வரும்னு பார்க்கணும். பண்ற செலவெல்லாம் ஸ்கிரீன்ல வர்றதுக்கு டீமா ரொம்ப மெனக்கெடுவோம். அதே நேரம் திரைக்கு பின்னாடி இருக்கிற செலவை எல்லாம் கட் பண்ணிடுவேன். ஏன்னா, அங்க எவ்வளவு செலவு பண்ணாலும் திரையில தெரியப்போறதில்லை. `பாய்ஸ்'ல `பிரேக் தி ரூல்ஸ்' பாட்டுக்கு எல்லோருக்கும் ஒரே காஸ்ட்யூம். டி-ஷர்ட், பிளாஸ்டிக் பக்கெட், பலூன்கள்னு செலவு குறைவு. ஆனா, பார்க்க பிரமாண்டமா இருக்கும். கொஞ்சம் ஸ்மார்ட்டா வேலை செய்யணும். அவ்வளவுதான்."

``இந்த லாக்டெளன் நாட்கள்ல நீங்க பார்த்த படங்கள்?''

`` `Come and See'னு ரஷ்யப் படம் பார்த்தேன். பஸ்டர் கீடனுடைய படங்கள், `Stalker', `It happened in one night' இந்த மாதிரி நிறைய படங்கள் பார்த்தேன். இன்னும் பார்க்கணும்."

`` `இந்தியன் -2' ஐடியா எப்போது வந்தது?'', ``ஹீரோக்கள் ஓகே... ஹீரோயின்களை எப்படி செலக்ட் பண்றீங்க'', ``ஓ.டி.டி-க்காக படம் பண்ற ஐடியா இருக்கா?'' , ``இயக்குநர் ராஜமெளலியை எப்படிப் பார்க்குறீங்க?''... இயக்குநர் ஷங்கரின் பேட்டியின் இரண்டாவது பார்ட்... நாளை காலை 11 மணிக்கு விகடன் இணையதளத்தில்.