Published:Updated:

``இந்தியன் 2-ல அதை பண்ணவே கூடாதுனு முடிவு பண்ணேன்!" - ஷங்கர் #15YearsofAnniyan - Part 2

ஷங்கர் மற்றும் ரஜினி ( Photo: Vikatan )

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் விகடனுக்கான ஸ்பெஷல் பேட்டி. இரண்டாவது பாகம்.

``இந்தியன் 2-ல அதை பண்ணவே கூடாதுனு முடிவு பண்ணேன்!" - ஷங்கர் #15YearsofAnniyan - Part 2

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் விகடனுக்கான ஸ்பெஷல் பேட்டி. இரண்டாவது பாகம்.

Published:Updated:
ஷங்கர் மற்றும் ரஜினி ( Photo: Vikatan )

``உங்களுடைய பெரும்பாலான படங்கள் `ன்' வரிசையில முடிய என்ன காரணம். அந்த வரிசையிலதான் `அந்நியன்' படமும் இணைந்ததா?"

``அது எதிர்பாராத விதமா நடந்த விஷயம்தான். `அதென்ன `ன்'ல முடியுற மாதிரியே டைட்டில் வெக்குற'ன்னு நானே என்னை கிண்டல் பண்ணியிருக்கேன். அதை உடைக்கணும்னுதான் `ஜீன்ஸ்'னு பெயர் வெச்சேன். அப்புறம் `ன்'னு டைட்டில் முடிஞ்சா என்ன இப்போ? இருந்தா இருக்கட்டுமே'னு தோணுச்சு. `பாய்ஸ்', `ஐ', `சிவாஜி'னு இப்ப எல்லாமே கலந்துதான் வருது."

``கமர்ஷியல் படங்கள்னா ஹீரோ, ஹீரோயினுக்கான இன்ட்ரோ சீன் ரொம்ப மாஸா இருக்கும். ஆனா, `அந்நியன்'ல அப்படி ஒரு மாஸ் ஓப்பனிங் வைக்கலையே ஏன்?''

Vikram in Anniyan movie photoshoot
Vikram in Anniyan movie photoshoot
Photo: Vikatan

``மாஸ் ஓப்பனிங்கை எல்லாம் கதைதான் தீர்மானிக்கும். அம்பி ரொம்ப சாஃப்டான கேரக்டர். அதனால அவனுக்கான இன்ட்ரோவும் சாஃப்டாதான் இருக்கும். அதனாலதான் அவன் காலையில எழுந்ததிலிருந்து என்ன பண்றான்னு சொல்லியிருப்பேன். அந்த கேரக்டருக்கு அதுதான் சரியா இருக்கும். ஆனா, `அந்நியன்' கேரக்டருக்கான இன்ட்ரோ `அந்நியன் அவதரித்துவிட்டான்'ங்கிற போஸ்ட் கார்ட் காட்டுறதுல இருந்து ஆரம்பிச்சு கொச்சின் ஹனீஃபாவை அடிச்சவுடன் கேமரா முன்னாடி அந்த தலைமுடி டக்குனு வந்து விழுற வரைக்கும் இருக்கும். அந்நியனுக்கு அந்த மாஸும் பில்டப்பும் தேவைப்பட்டது. அம்பிக்கு தேவைப்படலை. அதே மாதிரி நந்தினி ஒரு பாடகியாகணும்னு ஆசையிருக்கு. அதைக் காட்டணும்னு நிறைய குழந்தைகளுக்கு நந்தினி பாட்டு சொல்லிக்கொடுக்கிற மாதிரி எழுதினேன்."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பிரகாஷ்ராஜ் விக்ரமை விசாரிக்கிற சீன்தான் `அந்நியன்' படத்தின் மிக முக்கியமான காட்சி. இது உருவான விதம் சொல்லுங்க?''

``ஒரு ரூமுக்குள் ரெண்டே கேரக்டர்தான் அப்படிங்கிறதுனால எவ்ளோ சுவாரஸ்யமா எடுக்க முடியும்னு முன்னாடியே நிறைய பிளான் பண்ணோம். இவ்ளோ பெரிய படத்தோட க்ளைமேக்ஸ்ல ரெண்டே பேர்தான் இருக்காங்க அப்படிங்கிறதே ரொம்ப சவாலாவும் வித்தியாசமாவும் இருந்தது. கதை எழுதும்போது ஒரே ஷாட்ல அம்பி, அந்நியன்னு மாறி மாறி பேசுறது கிடையாது. ஃபைனல் டிராஃப்ட் எழுதும்போதுதான் இந்த ஐடியா தோணுச்சு. இதை எழுதிட்டு அசிஸ்டன்ட்ஸ்கிட்ட படிச்சு காட்டினவுடன் `சூப்பரா இருக்கு. செமயா வொர்க் அவுட்டாகும்'னு சொன்னாங்க. `டயலாக் பேப்பர்ல அம்பி பேசுறதை கறுப்பு கலர்லயும் அந்நியன் பேசுறதை சிவப்பு கலர்லயும் டைப் அடிச்சு வைங்க'ன்னு சொல்லிட்டேன். விக்ரமுக்கு அந்த போர்ஷன் மாறினது தெரியாது. அதைப் படிச்சுக்காட்டினவுடம் ரொம்ப எக்ஸைட் ஆகிட்டு மேக்கப் ரூம்ல இருந்து வேகமா வந்து என் கையப் பிடிச்சு `தேங்க்யூ சார்... தேங்க்யூ சார்'னு சொன்னார். `ரொம்ப நல்லாயிருக்கு. பர்ஃபார்ம் பண்ண செம இடம்'னு சொல்லி அவர் சந்தோஷப்பட்டார். விக்ரம் அதுல வேற லெவல்ல நடிச்சிருப்பார்."

`` `பாய்ஸ்'ல 60 கேமரா வெச்சு பண்ண டைம் ஸ்லைஸ் ஷாட்டை (Time Slice shot) இந்தப் படத்துல 120 கேமரா வெச்சு எடுத்த அனுபவம் எப்படியிருந்தது, அதை ஸ்டன்ட்ல பண்ணலாம்னு சொன்னது உங்க ஐடியாதானா?''

``ஆமா. படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இந்த டைம் ஸ்லைஸ் ஷாட் வைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். இந்த கான்செப்ட்டை கமல் சாரை வெச்சு `ரோபோ' பண்றதா இருந்ததுலயே பயன்படுத்தலாம்னு வெச்சிருந்தேன். ஏன்னா, நூறு பேரை அடிக்கிறது மனுஷனால முடியாது. ரோபோ அடிச்சா சரியா இருக்கும்ணு தோணுச்சு. ஆனா, இதுல அவனுக்குள்ள இருக்கிற வேகமும் வெறியும் வெளியே வரும்போது இந்த கான்செப்ட் இதுக்கு பொருத்தமா இருக்கும்னு நினைச்சேன். பீட்டர் ஹெய்ன் ரொம்ப பிரமாதமா பண்ணிக்கொடுத்தார். விக்ரம் சாரும் அந்த ஸ்டன்ட் சீன்ல கலக்கிட்டார்."

`` `இந்தியன் 2' ஆரம்பமாகி போய்ட்டு இருக்கு. இதேமாதிரி `அந்நியன் 2' எதிர்பார்க்கலாமா?''

Kamal Haasan and Shankar in Indian Movie shooting
Kamal Haasan and Shankar in Indian Movie shooting
Photo: Vikatan

``இப்போ வரைக்கும் அந்த ஐடியா இல்லை. சீக்வல் பண்ணணுமேனு பண்ணக்கூடாது. அதுக்குனு கதை உருவாகி வந்தால்தான் பண்ணணும். சீக்வல்ல என்ன ரிஸ்க்னா முதல் பாகத்துலயே படம் என்ன பேசுது, படத்துக்குள்ள என்ன இருக்குனு தெரிஞ்சுடும். அதை ரெண்டாவதா பண்றது ரொம்ப கஷ்டம். அப்புறம் ரெண்டு படங்களையும் ஒப்பிட்டு பேச ஆரம்பிச்சிடுவாங்க. அப்போ இதுல என்ன புதுசா இருக்குனு ரசிச்சு பார்க்கத் தவறிடுவாங்க. இல்லைனா பண்ணதையே பண்றாங்கன்னு சொல்லிடுவாங்க. ரொம்ப கவனமா பண்ணனும்."

``சீக்வல் படம் பண்றதுல இவ்ளோ சிரமம் இருக்குனு சொல்றீங்க. ஆனா, `இந்தியன் 2' பண்றீங்க. அதுக்கான லைன் எப்போ தோணுச்சு?''

`` `இந்தியன் 2' படத்துக்கான யோசனை `ஜீன்ஸ்' படத்தை முடிச்சதிலிருந்தே தோணிட்டு இருந்ததுதான். அப்போலயிருந்தே கதை வரும். ஆனா திருப்தியா வராது. அதனால அப்படியே விட்டுடுவேன். `இந்தியன் 2' பண்ணா என்னெல்லாம் நிச்சயமா பண்ணக்கூடாதுனு முதல்ல முடிவெடுத்தேன். இதை முடிவெடுக்கவே நிறைய நேரம் எடுத்தது. ஒவ்வொரு படம் முடியும்போதும் ஒரு கதை திரளும். அப்புறம் அதெல்லாம் பண்ணக்கூடாதுன்ற லிஸ்ட்ல அடிபட்டுடும். சமீபத்துலதான் ஒரு கிரிப் சரியா கிடைச்சது. அப்புறம்தான் திரைக்கதை எழுதி வொர்க் பண்ண ஆரம்பிச்சேன்."

``இப்போ நிறைய சீக்வல் படங்கள் வருது. ஆனா, நீங்க `ஜீன்ஸ்' நேரத்துலயே சீக்வல் பத்தி யோசிச்சிருக்கீங்க. அப்போவே இது எப்படி வரும்னு ஐடியா இருந்ததா?''

``கமல் சார்தான் அப்பவே, நாம பார்ட் -2 பண்ணலாம்னு சொன்னார். `என்கிட்ட கதை இல்லை சார். அதுக்குனு உட்கார்ந்து கதை பண்ணா உற்பத்தி பண்ண மாதிரி ஆகிடும். கதை தானா உருவாகி வரும்போது பண்ணலாம் சார்'னு சொன்னேன். அப்புறம் அதை மறந்துட்டு அடுத்தடுத்த படங்கள்ல வொர்க் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அப்புறம் பத்திரிகைகள்ல நிறைய செய்திகள் பார்க்கும்போதும் நிறைய விஷயங்கள் கேள்விப்படும்போதும் இந்தியன் தாத்தா மறுபடியும் வரணும்னு தோணிக்கிட்டே இருக்கும். எதுக்கு வர்றார், என்ன பண்ணப்போறார்னு யோசிக்கும்போது முன்னாடியே சொன்ன மாதிரி பண்ணக்கூடாதுன்ற லிஸ்ட்ல அது அடிபட்டுடும். To Do list ரெடியான பிறகு, கதை ஒரு வடிவத்துக்கு வந்தது. இப்போ படம் எடுத்துட்டு இருக்கோம்."

``உங்க படங்கள்ல ஹீரோக்கள் ஓகே... ஹீரோயின்களை எப்படி செலெக்ட் பண்ணுவீங்க?'''

`` `சிவாஜி' படத்துல தமிழ்ச்செல்வி கேரக்டருக்கு சினேகாவைதான் முதல்ல நடிக்கவைக்க நினைச்சேன். அப்புறம்தான் ஸ்ரேயா வந்தாங்க. `ஜென்டில்மேன்' படத்துல ரேவதி அவங்களைத்தான் முதல்ல நடிக்க பிளான் பண்ணியிருந்தேன். `ஐ' படத்துலகூட சமந்தாதான் முதல் சாய்ஸ். அப்புறம்தான் ஏமி ஜாக்சன் நடிச்சாங்க. முதல்ல அந்த கதாபாத்திரத்துக்கு யார் சரியா இருப்பாங்கன்னு முதல் சாய்ஸ் போகும். டேட்ஸ் செட்டாகலைனு வரும்போது அடுத்தடுத்த சாய்ஸ் போவோம். சரியா பொருந்தி வர்றவங்களை அந்த கேரக்டரா மாத்திடுவோம்."

``இயக்குநர் ஷங்கரின் படம் முழுக்க முழுக்க தியேட்டர் அனுபவத்துக்கானது. ஓ.டி.டி-யில் ஷங்கர் களமிறங்கினால் அந்தப் படம் எப்படி இருக்கும்னு நினைச்சுப்பார்க்கவே முடியலை. நீங்களே சொல்லிடுங்களேன்?''

``தியேட்டர் அனுபவத்துல இருக்கிற எனர்ஜி, சந்தோஷம் ஓ.டி.டி -யில நிச்சயமா கிடைக்காது. ஆனா, எந்த கட்டாயமும் இல்லாமல் நாம நினைச்ச விஷயங்களை, கமர்ஷியல் சினிமாவுல சொல்ல முடியாத பல விஷயங்களை சொல்றதுக்கான வாய்ப்பு ஓ.டி.டி -யில் இருக்கு. அப்படி நான் ஓ.டி.டி-யில் படம் பண்ற மாதிரி சூழல் அமைஞ்சா, அதை எவ்ளோ என்ஜாய் பண்ணி பண்ண முடியுமோ, உற்சாகமா பண்ணமுடியுமோ அப்படி பண்ணுவேன். நிச்சயமா அதுவும் மக்களுக்கு பிடிக்கிற மாதிரிதான் இருக்கும்."

``இன்றைய சூழலில் ஓ.டி.டி-யில் இறங்கிப்பார்த்திடுவோம்னு தோணியிருக்கா?"

``இதுவரைக்கும் அப்படி தோணலை. ஏன்னா, என் முழு கவனமும் இப்போ `இந்தியன் 2' படத்துலதான் இருக்கு. ஆனா, நாளைக்கு நாமளும் இதுல படம் பண்ணவேண்டியது வருமோனு ஓ.டி.டி-யை கவனிச்சிட்டு இருக்கேன். வரும்போது பார்த்துக்கலாம்."

``நீங்கள் எழுதிய வசனங்களில் சுஜாதா பாராட்டியது'', `` `வைரமுத்து மாதிரி நடக்கிறதை பாரு'னு கலாய்க்கிற மாதிரி ஒரு வசனம் வருமே?'', ``ரஹ்மான் - ஹாரிஸ் ஜெயராஜ் இசை அனுபவம்?'', ``இன்றைய இளம் இயக்குநர்களில் உங்களின் கவனம் ஈர்த்த இயக்குநர்கள் யார்?''... இயக்குநர் ஷங்கர் பேட்டியின் மூன்றாவது பகுதி நாளை காலை விகடன் இணையதளத்தில்!