Published:Updated:

``வெற்றிமாறன், வினோத், லோகேஷ், அருண்பிரபு... அப்புறம் அந்த `மின்மினி' ஹலிதா!" - ஷங்கர் - Part 3

Shankar ( Photo: Vikatan / Saravanakumar.P )

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் விகடனுக்கான பிரத்யேக பேட்டி. 3-வது பகுதி. இன்றைய பகுதியில், `அந்நியன்' படத்துக்காக போடப்பட்ட திருவையாறு செட், இயக்குநர் ராஜமெளலி மற்றும் தனக்குப் பிடித்த இளம் இயக்குநர்கள் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார் ஷங்கர்.

``வெற்றிமாறன், வினோத், லோகேஷ், அருண்பிரபு... அப்புறம் அந்த `மின்மினி' ஹலிதா!" - ஷங்கர் - Part 3

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் விகடனுக்கான பிரத்யேக பேட்டி. 3-வது பகுதி. இன்றைய பகுதியில், `அந்நியன்' படத்துக்காக போடப்பட்ட திருவையாறு செட், இயக்குநர் ராஜமெளலி மற்றும் தனக்குப் பிடித்த இளம் இயக்குநர்கள் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார் ஷங்கர்.

Published:Updated:
Shankar ( Photo: Vikatan / Saravanakumar.P )

``நடிகர்கள்கிட்ட உங்களுடைய கதை சொல்லல் எப்படி இருக்கும், எவ்வளவு நேரம் கதை சொல்வீங்க?''

``ரெண்டு மணி நேரத்துல இருந்து மூணு மணி நேரம் வரை கதை சொல்லுவேன். பொறுமையா ஆரம்பிச்சு அப்படியே கதைக்குள்ளயே போயிடுவேன். அப்படி உள்ள போகும்போது என்னால உட்கார முடியாது. நடந்துகிட்டு சொல்ல ஆரம்பிப்பேன். சில இடங்கள்ல அவங்களுக்கு புரியணும்னு பர்ஃபார்ம் பண்ணி காட்டுவேன். கதை சொல்லி முடிச்சவுடன், `படம் பார்த்த மாதிரியே இருந்தது. நடிச்செல்லாம் காட்டுனீங்க'னு சொல்வாங்க. அப்படியானு கேட்பேன். அந்த அளவுக்கு கதைக்குள்ள ஆழமா போயிடுவேன்."

Vikram in Anniyan movie Photoshoot
Vikram in Anniyan movie Photoshoot
Photo: Vikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`` `தில்லானா மோகனாம்பாள்' படத்தோட ரெஃபரென்ஸ் `அந்நியன்'ல திருவையாறு போகும் சீன்ல இருந்த மாதிரி இருக்கே... இந்த ரயில் சீன் உருவானது எப்படி?''

``காதல் வயப்பட்ட கேரக்டருக்கு ஒரு பயணத்துல நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கும். `காதலன்' படத்துலயே பைக்ல சிதம்பரம் போவாங்க. அந்த பயணத்துல அவங்களுக்குள்ள மனதளவுல நெருக்கம் வர்றதுக்கான வாய்ப்பு அதிகம். காலேஜ் படிக்கும்போது டூர், கேம்ப் போகும்போது, நமக்கு ரொம்பப் பிடிச்சவங்களோ இல்ல லவ் பண்றவங்களோ கூட வரும்போது ரொம்ப பிரமாதமா இருக்கும். அதுவும் ட்ரெயின்ல போகும்போது எதிரெதிர் பர்த்னு வரும்போது சுவாரஸ்யமா இருக்கும். அந்த ஃபீல்ல எழுதினதுதான் அது. திருவையாறு கச்சேரிக்கு போறாங்க அப்படிங்கிறதுனால சங்கீதமும் கலந்துடுது. பார்க்கும்போது, `அட ஆமா தில்லானா மோகனாம்பாள் ஃபீல் வருதே'னு தோணுறது உண்மைதான். ஆனா, அதை வெச்சு இந்த சீனை எழுதலை."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அந்த திருவையாறு சீனை மகாபலிபுரத்துல செட் போட்டு எடுத்தீங்கன்னு கேள்விப்பட்டோமே?''

``இந்த சீனை திருவையாறுலயே எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். திருவையாறு உற்சவம் நடக்கும்போது நானே போய் அங்க அவங்களோட இருந்து என்ன நடக்குதுனு எல்லாமே கவனிச்சேன். 500 பேர் ஒரு இடத்துல உட்கார்ந்து, சேர்ந்து பாடுறது அவ்ளோ அருமையா இருந்தது. அந்த அனுபவத்தை ஆடியன்ஸுக்கு கொடுக்கணும்னு நினைச்சேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள்கிட்ட பேசினேன். அதுக்கு பல பேருடைய ஒப்புதல் தேவைப்பட்டது. ஆனா, அவங்க யோசிச்சாங்க. சரி அதை மட்டும் மான்டேஜா எடுத்துக்கிறேன்னு சொன்னேன். அதுக்கும் தயங்கினாங்க. அந்த ஃபீலை அப்படியே கொடுக்கணும்னு நினைச்சி லொக்கேஷன் தேடும்போது மகாபலிபுரம் சரியா இருந்தது. அதை சாபு சிரில்கிட்ட சொன்னவுடன் அவர் வெச்சிருந்த ஐடியா, நான் கொடுத்த சில ரெஃபரன்ஸ் எல்லாம் சேர்த்து சூப்பரா பண்ணிட்டார். அத்தனை இசைக் கலைஞர்களைக் கூட்டிட்டு வர்ற பொறுப்பை குன்னக்குடி வைத்யநாதன் சார் எடுத்துக்கிட்டார். ராஜம் ஐயர், உன்னிகிருஷ்ணன், சுதா ரகுநாதன், உமையாள்புரம் சிவராமன்னு நிறைய இசைக் கலைஞர்கள் வந்து சப்போர்ட் பண்ணாங்க. வந்தவங்க எல்லோரும் `திருவையாறுல இருக்க மாதிரி இருக்கே'னு சொன்னது சாபுவுக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது."

``இந்த சீனுக்கு இவ்ளோ மெனக்கெட்டிருக்கீங்க. இது மாதிரி உங்க படங்கள்ல நிறைய விஷயங்கள் இருக்கும். இதெல்லாம் மக்களுக்கு தெரிய மாட்டேங்குதேனு வருத்தம் இருந்திருக்கா?''

``பேட்டிகள்ல ஓரளவுக்கு அதைப் பத்தி பகிர்ந்துக்குறோம். படத்துல வர்ற ஒரு ஷாட்டுக்காக ஒரு வருஷம் உழைப்பை போட்டிருப்போம். அது நிறைய பேருக்கு தெரியுறதில்லை. அதனாலதான் மேக்கிங் வீடியோனு ஒண்ணு கொண்டுவந்தோம். அசிஸ்டன்ட் டைரக்டர் ஒருத்தரே அதை ஷூட் பண்ணுவார். ஆனா, அந்த வேலை டென்ஷன்ல `அந்த மேக்கிங்கை அப்புறம் பார்த்துக்கலாம். ஷாட்டுக்கு நேரமாகுது'னு சொன்னதுண்டு. அதனால, `எந்திரன்'ல இருந்து மேக்கிங் எடுக்கிறதுக்குன்னு மட்டுமே ஒருத்தரை நியமிச்சோம். அப்படியே மேக்கிங் எடுத்தாகூட, வருஷக்கணக்கான உழைப்பை உணர்வு ரீதியா பதிவு செய்ய முடியலை. அதனாலதான் `2.0' படத்துல ஒரு ரைட்டரை வெச்சிக்கிட்டேன். எல்லாத்தையும் புத்தகத்துல பதிவு பண்ணணும்னு நினைச்சேன். அந்தப் புத்தகமும் 2.0 ரிலீஸ் அப்போவே வந்திருக்கணும்; தாமதமாகிட்டே இருக்கு. நாம போடுற உழைப்பு நிச்சயம் மக்களுக்குத் தெரியணும்."

Shankar, AR Rahman, Vikram and PC Sriram
Shankar, AR Rahman, Vikram and PC Sriram

``நீங்க எழுதின வசனங்கள்ல சுஜாதா ரொம்ப பாராட்டினது?''

``கதை எழுதும்போதே சில முக்கியமான வசனங்கள் வந்துடும். அப்புறம் சுஜாதா சார் எழுதிக் கொடுப்பார். திரைக்கதைக்கும் ஒரு ஃப்ளோவுக்கும் சில விஷயங்களை அப்படியே பயன்படுத்த முடியாத சமயத்துல நான் எழுதி அனுப்புவேன். அதுல பெருசா திருத்த மாட்டார். எழுத்துப் பிழை இருந்தால் அதை சரி பண்ணி அனுப்புவார். அவர் எதையும் அடிக்கலைனாவே அதை நாம பாராட்டா எடுத்துக்க வேண்டியதுதான். அவர் எழுதிட்டு படிச்சுக்காட்டுறது ரொம்ப அழகாவும் சுவாரஸ்யமாவும் இருக்கும். எந்த எக்ஸ்பிரஷனும் இல்லாமல் எல்லா எமோஷனையும் ஒரே மாதிரி கூலா படிப்பார். ஆனா, எழுத்துல அந்த எமோஷன் இருக்கும். சில நேரங்கள்ல அவர் படிக்கிறப்போ சிரிப்பு வந்திடும். எல்லாம் முடிச்சுட்டு `ஷங்கர், இந்த நெஞ்ச நக்குற சமாசாரத்தை எல்லாம் நீங்க பார்த்துக்கோங்க'னு சொல்வார் (சென்டிமென்ட் விஷயங்கள்). ரொம்ப நல்ல அனுபவம். இப்போ சுஜாதா சாரை ரொம்பவே மிஸ் பண்றேன்."

```பண்றது எல்லாம் பண்ணிட்டு வைரமுத்து மாதிரி நடக்கிறதை பாரு'னு படத்துல ஒரு வசனம் வரும். வைரமுத்து படம் பார்த்துட்டு ஏதாவது சொன்னாரா?''

``அந்த சீனுக்காக விக்ரம் சாருக்கு ஒரு ஜிப்பா தைச்சோம். அந்த ஜிப்பாவை பார்த்துட்டு நான் டென்ஷனாகிட்டேன். வைரமுத்து சாரோட ஜிப்பா எப்பவும் மொடமொடனு இருக்கும். ஆனா, இந்த ஜிப்பா தொளதொளனு இருந்தது. திருப்பி அந்த ஜிப்பாவை கஞ்சி எல்லாம் போட்டு எடுத்துட்டு வரச் சொன்னேன். அந்த சீனைப் பார்த்துட்டு வைரமுத்து சார் போன் பண்ணி ரொம்ப சந்தோஷப்பட்டார்."

``ஹாரிஸ் ஜெயராஜ் கூட நீங்க பண்ண முதல் படம் `அந்நியன்'. படத்தோட ஆல்பமே சூப்பர் ஹிட். அந்த அனுபவம் பத்தி சொல்லுங்க?''

``ஹாரிஸ் பேக்கிரவுண்ட் மியூசிக் போட்ட காலத்தில் இருந்தே எனக்குத் தெரியும். அவருக்காக எல்லோரும் வெயிட் பண்ணுவாங்க. அவர் வொர்க் ரொம்ப பிரமாதமா இருக்கும். புது கூட்டணியில ஒரு படம் பண்ணணும்னு வரும்போது எங்க ரெண்டு பேருக்குமே பெரிய சவாலா இருந்தது. ரஹ்மான் கூட வொர்க் பண்ணி அவ்ளோ ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கோம். அப்போ, அதே அளவு மக்கள் எதிர்பார்ப்பாங்க. அந்த எதிர்பார்ப்பை திருப்திப்படுத்தணும்னு ரெண்டு பேருமே ரொம்ப கவனம் செலுத்தினோம். அவரும் ரொம்ப மெனக்கெட்டார். அதுக்கு ஏத்த மாதிரி பாடல்களுக்கான சூழலும் சரியா வந்தது. அம்பிக்கு கர்னாடக சங்கீதம், தியாகராஜ கீர்த்தனை, `குமாரி...', `ஐயங்காரு வீட்டு அழகே..'. ரெமோவுக்கு வெஸ்டர்ன் மியூசிக்ல `கண்ணும் கண்ணும் நோக்கியா...', `காதல் யானை...' ஃபோக் பாட்டுக்கு `அண்டங்காக்கா...'னு எல்லா வகையான மியூசிக்கும் வந்திடுச்சு. தவிர, அந்நியனுக்கான தீம் மியூசிக், ரெமோவுக்கான தீம் மியூசிக்னு பேக்கிரவுண்ட் ஸ்கோர்லயும் கலக்கிட்டார். சவுண்டுக்காக சில வார்த்தைகள் சொல்லுங்கன்னு சொல்லுவார். அவரே சில வார்த்தைகளைப் போட்டு கம்போஸ் பண்ணுவார். கோரஸ் சிங்கர்ஸ்கூட உட்கார்ந்து ரொம்ப மெனக்கெட்டு ஒரு பாட்டை கம்போஸ் பண்ற மாதிரியே தீம் மியூசிக்லயும் வொர்க் பண்ணார்."

Rajnikanth and Shankar
Rajnikanth and Shankar

`` `அந்நியன்' படத்துல இந்த விஷயம் இருந்திருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்குமேனு நீங்க நினைக்கிற விஷயம்?''

``விசாரணை சீன்ல அம்பியும் அந்நியனும் மாறி மாறி வருவாங்கள்ல. அது மாதிரி அம்பி, ரெமோ, அந்நியன்னு மூணு கேரக்டரும் ஒரே ஷாட்ல மாறி மாறி வந்துட்டு போனா நல்லாயிருக்கும்னு நினைச்சு விக்ரம் சார்கிட்ட சொன்னேன். அவரும் ரொம்ப எக்ஸைட்டடா இருந்தார். ஆனா, அதை எங்கே வைக்கிறதுனு தெரியலை. திணிச்ச மாதிரியும் இருக்கக்கூடாது. அதனால அந்த சீனை வெக்கலை. இப்போகூட அந்த சீன் சரியா அமைஞ்சிருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்குமேனு தோணுறது உண்டு."

``2005-ல விகடனுக்கு கொடுத்த பேட்டியில, உங்களை இம்ப்ரஸ் பண்ண இளம் இயக்குநர்கள் யாருங்கிற கேள்விக்கு பாலா, கெளதம், முருகதாஸ், லிங்குசாமி, தரணினு சொல்லியிருப்பீங்க. 15 வருஷம் ஆகிடுச்சு... இப்போ அந்த கேள்விக்கு உங்களுடைய பதில் என்ன?"

``வெற்றிமாறன் ரொம்ப பிரமாதமா பண்றார். லோகேஷ் கனகராஜ், `அருவி' டைரக்டர் அருண்பிரபு ரொம்ப நல்லா பண்றார், `சதுரங்க வேட்டை', `தீரன் அதிகாரம் ஒன்று' எடுத்த வினோத்தோட வொர்க் நல்லாயிருக்கு. `சில்லுக்கருப்பட்டி' பண்ணாங்களே ஹலிதா ஷமீம். அவங்க வொர்க்கும் சூப்பரா இருந்தது. இப்போ சின்ன பசங்களை ஒரு குறிப்பிட்ட வயசுல ஷூட் பண்ணிட்டு, கதைக்கு அவங்க வளர்ந்திருக்கணும்னு உண்மையாவே அவங்க வளர்ற வரைக்கும் அஞ்சு வருஷமா வெயிட் பண்றாங்கனு ஒரு பேட்டில சொல்லியிருந்தாங்க. அது ரொம்ப சுவராஸ்யமாவும் புதுசாவும் இருந்தது. படத்தோட பேர்கூட `மின்மினி'னு நினைக்கிறேன். அந்தப் படத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்."

Shankar and Team
Shankar and Team

``இந்திய சினிமாவின் பெருமைனு உங்களையும் ராஜமெளலியையும் ஒப்பிடுறாங்க. அதை எப்படி பார்க்குறீங்க?''

``இதை ஒரு பயணமாதான் பார்க்குறேன். அவர் ஒரு சக பயணி. ரொம்ப நல்லா பண்ணிட்டு இருக்கார். நான் அவருடைய ரசிகன். இந்த அளவுக்கு அவருடைய படங்கள் எல்லாம் உலகம் முழுக்க பேசப்படும்போது, ஒரு சக பயணியா எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு."

``இத்தனை வருஷ பயணத்துல நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்கா?''

``அப்படியெல்லாம் இல்லை. நான் நினைச்சதைவிட அதிகமாதான் நடந்திருக்கு. நான் நினைக்காத விஷயங்கள் எல்லாம் நிறைவேறியிருக்கு."

``அப்படி நீங்க நினைக்காமல் நிறைவேறின விஷயங்கள்ல எது உங்களை ரொம்ப சந்தோஷப்படுத்துது?''

``லெகஸி எஃபெக்ட்ஸ் கம்பெனியோட வொர்க் பண்ணதுதான். நாம தியேட்டர்ல பார்த்து வியந்த படங்கள்ல வொர்க் பண்ண ஸ்டூடியோ கூட வொர்க் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவங்க நம்மளுடைய கான்செப்ட் எல்லாம் கேட்டு பிடிச்சுப்போய் `ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. நாங்க பண்றோம்'னு சொன்னது எல்லாம் நினைக்காமல் நிறைவேறின லிஸ்ட்தான்."

``சுஜாதாவை பிரமிச்சு பார்த்தத் தருணம்", ``பிரகாஷ்ராஜ் நடிப்பு'', ``ஏன் `அந்நியன்'ல ரெண்டு கேமராமேன்'', உங்க படங்கள்ல வர்ற ஹீரோக்களுக்குள்ள ஒரு வில்லனத்தம் இருக்கே''... ஷங்கரின் பதில்கள் தொடரும்... நாளை காலை 11 மணிக்கு விகடன் இணையதளத்தில்!